அத்தியாயம் 11- 2

“பிள்ள எழும்பிருவான் லாதி. நோ செல்லம்!” இரண்டு மூன்று தடவைகள் கயல் மறுப்புச் சொல்லியிருந்ததில் அவ்வெண்ணத்தைக் கைவிட்டுவிட்டு மெல்ல நகர்ந்தாள்.

கண்களைக் கசக்கி முன்னால் விழுந்த முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டபடி நகர்ந்தவளுக்கு கயல், பேஸ் மேன்ட்டுக்குள் இல்லையென்று புரிந்திட்டு.

பரபரப்போடு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

“ஸ்வீட்டி, அம்மா ஆக்களிட்டப் போயிட்டாவோ! நானும் போகப் போறன்.’ 

இன்னும் சிலநாட்களே என்று நித்தமும் கணக்கில் வைத்திருந்தவளாச்சே!  அவள் மனதுள் பெரும் பரபரப்பு. ஐந்து நிமிடம் கூடச் செலவழிக்கவில்லை, முகத்தை அவசரம் அவசரமாகத் துடைத்தபடி வெளியில் வந்தவள், மீண்டும் ஒருதடவை சகோதரனைப் பார்த்துவிட்டு மேலே செல்லும் படிகளில் ஏறினாள்.

“ஸ்வீட்டீ, அப்பா, அம்மா நானும் மேல வாறன்.” 

லாதியின் குரலில் திடுக்கிட்டுவிட்டாள் கயல். அதேபோல், இருந்த இடம் விட்டுப் பட்டென்று எழுந்தான், பூபாலன்.

‘மகள் தன்னை இப்பிடிப் பார்த்தால்’ அவன் மனதில் அதுதான் தோன்றிற்று. சட்டென்று வாயிலுக்குத் தெரியாவண்ணம் மறைந்து கொண்டான், கண்ணீரோடு.

“கயல், லாதிய இங்க வர விட வேணாம். இப்ப நீரும் கீழ போம்!” பிரணவ் சொல்ல, இவள் பார்வை பூபாலனை நாடிற்று!

“பிள்ளைக்குத் தெரிய வேணாம் கயல்; பயந்து போனாலும் போவாள்.” என்றவன், “நேற்று இரவும் அம்மா அப்பாட்ட வரப் போறன் எண்டவள் எல்லா? இன்னும் மூண்டு நாள் கிடக்கு எண்டு எண்ணிக்கொண்டு இருந்த பிள்ளைக்கு இப்ப நான் என்ன சொல்லுறது?”   அரற்றலோடு  தளர்ந்து நிலத்தில் அமர்ந்துவிட்டான்.

கயலுக்கும் அந்த நினைவுதான். கண்கள் கலங்கின. “நிப்பீங்க எல்லா?” நகர்ந்து கொண்டே பிரணவ்விடம் கேட்டாள்.

“ஓம் ஓம், ஒண்டுக்கும் யோசியாம உங்கட அலுவல்களப் பாருங்க.” என்றவன், “தேத்தண்ணி குடிக்கேல்ல கயல்.” என்றான்,   இவள் கதவைத் திறக்கையில்.

வெகு நட்போடு மட்டுமல்ல ஒருவித உரிமையும் அவன் குரலில் இருந்தது. அதை அவளாலும் உணர முடிந்தது. அங்கிருந்த சுடுநீர்ப்போத்தலைக்  காட்டி, ‘எடுத்துக் குடியுங்க’ என்று சொல்லவும் ஒரு மாதிரியாக இருக்கவே, அதைத்  தானே எடுத்துக்கொண்டவள், “கொண்டு வாறன்” கதவைத் திறக்க, இரண்டு படி கீழே வந்து கொண்டிருந்தாள், லாதி.

“ஒண்ணும் அவசரம் இல்ல, லாதியைக் கவனிச்சிட்டு கொண்டு வாரும்.” என்றான், பிரணவ். 

தலையாட்டிவிட்டு உள்ளே இறங்கி கதவைச் சாத்தவும், பட்டென்று சிறுமியின் முகத்தில் ஏமாற்றம் திரையாகப் படிந்திட்டு.

“நோ ஸ்வீட்டி நானும் மேல வரப் போறன். அம்மாட்ட…ப்ளீஸ்!”

பிடிவாதம் கலந்த அழுகைக் குரல். குனிந்து அணைத்துக் கொண்ட கயல்  அப்படியே படியில் அமர்ந்துவிட்டாள். மனதுள் இருந்த நடுக்கமும் பயமும் அதிகரித்தது போலுணர்ந்தாள். அதுவரை, அவளுக்குப் பிரத்தியேக அன்பைக் காட்டிய பூபாலன் குடும்பமும்  அந்த வீடும் கணத்தில் அவளை மிரட்டிப்  போயிற்று.

 

‘ஒரு நாளோ ரெண்டோ இவள எப்பிடிச் சமாதானம் செய்வது? அதோட பூபாலன் அண்ணா இருக்கும் கோலம்… விசயம் ஒண்டு ரெண்டு நாளில் முடியும் போலவும் இல்ல. காயு ஒரு கிழமை அப்பிடி ஹொஸ்பிட்டலில இருக்க வேண்டி வந்தா?’ அடுத்து என்ன என்று புரியவில்லை, கயலுக்கு.

“ஸ்வீட்டி!” அவள் கனத்தைக் கரமிரண்டாலும் அழுந்தப் பற்றி விழிகளுள் உற்றுப் பார்த்தாள், லாதி. அவள் பார்வையில் கண்ணீரும் பிடிவாதமும்.

“எனக்கு இப்பவே அம்மா அப்பாவப் பாக்கோணும். நீங்க வீட்டுக்குள்ளதானே போயிட்டு வந்தீங்க?  நானும் போகப் போறன்.”

சின்னக் குரல் தான், அதில் தீர்க்கம் இருந்தது. அவளையே பார்த்திருந்தது கயல் பார்வை. தகப்பனின் சாயல் அதிகமிருந்தாலும், கண்களும் நிற்கும் தோரணையும் அப்படியே காயுவின் மகள் நான் என்றது. அவளையும் மீறி உதடுகளில் முறுவல். அக்கணம் காயு விரைவில் குணமாகி வந்துவிடுவாள் என்ற  நம்பிக்கை எழுந்திட்டு. தன்னிடம் ஒப்படைத்த அவள் குழந்தைகளை ஒரு குறையோ மனச் சுணக்கமோ இன்றிப் பார்த்திட வேண்டும் என்றும் உறுதி கொண்டது, அவளுள்ளம்.

மீண்டும் இறுக அணைத்துக்கொண்டாள்.

“செல்லகுட்டி, அம்மாக்கு இன்னும் நல்லா சுகம் வரேல்ல தானே? கொரோனா டெஸ்ட் செய்து அதில நெகடிவ் எண்டு வந்தப் பிறகுதான் நாங்க அங்க போகலாம். நான் இப்ப தோட்டத்துக்குத்தான் போயிட்டு வந்தனான்; சிலிப்பர் எடுக்க.” வாய்க்கு வந்ததைச் சொல்லி அவளை ஒருவழியாக பேஸ்மென்ட்டுக்கே கூட்டிக்கொண்டு வந்தாள்.

எதிர்பார்ப்பும் ஆசையுமாக படியேறிய லாதியின் உள்ளம் போலவே முகமும் சோர்ந்திட்டு. இருந்தாலும் அன்போடு அரவணைத்து கயல் ஒன்றைச் சொல்கையில் மீற மனம் வருவதில்லை. அவள் கைப்பிடியில் உள்ளே வந்தவள் சகோதரன் அருகில் சென்று படுத்து விட்டாள்.

கடைக்கண்ணால் அவளைப் பார்த்தபடி, “லாதிம்மா பிள்ளைக்கு என்ன சாப்பிட வேணும்?” கேட்டுக்கொண்டே பிரணவ், பூபாலனுக்கு டோஸ்ட் செய்தாள். சுடுநீர்ப்போத்தலில் ஊற்றிய தேநீரை வைத்துவிட்டு பூபாலனுக்குத் தேநீரும், “பிரணவ் அண்ணா கோப்பிதான் குடிப்பார்.” என்று காயு சொன்ன நினைவில் அவனுக்கென்று கோப்பியும் போட்டு மக்கில் ஊற்றி வைத்துவிட்டு, மீண்டும் லாதியைப் பார்க்க, நெஞ்சில் ஐபாட்டை வைத்துக் கொண்டு இவளையே பார்த்தபடியிருந்தாள்.

பேஸ்மென்ட் வந்ததில் இருந்து காலை வேலைகள் முடிய காயுவுக்கும் பூபாலனுக்கும் அழைப்பது வழக்கம். ஆரம்பத்தில், லாதி தானே அழைத்துவிடுவாள். அங்கு காயு எழுந்தும் இராள். அதனால், “நாம காலம சாப்பிட்டுட்டு எடுக்க, அம்மாவும் எழும்பி இருப்பா. சுகமில்லை தானே.” என்று சொல்லி வைத்திருந்தாள்.

error: Alert: Content selection is disabled!!