அத்தியாயம் 12 – 3

இன்று முழுநாளும் அவள் கைபடாத மனச் சுணக்கத்தில் இருந்ததது. தங்கை கூட, பூபாலனின் தாயார் வீட்டில் நின்றபடியால் அவர் கதைக்கையில் கதைத்துவிட்டாள். ‘ரூயி எடுத்திருப்பாள்…’ எண்ணமோட, எட்டி எடுத்து உயிர்ப்பித்தாள்.

அவள் நினைத்தபடியே ரூயி அழைத்திருந்தாள். குறுஞ்செய்தியும் போட்டிருந்தாள். அதற்குப் போகமுதலே காயு அனுப்பிய குறுஞ்செய்தி என்றிருந்த குறிப்பு கவர்ந்திழுத்திட்டு.

‘காயுவா!? பின்னேரம் ஆறுமணிபோல பாக்கேக்கையும் ஒட்ஸிசன் ஏற அசையாமல் இருந்தவா, மெசேஜ் போட்டிருக்கிறாவோ!’ பதற்றம் தொற்றிக்கொண்டது. தாமதியாது அதைத் தட்டியது, வலக்கை ஆட்காட்டி விரல். வேகமாக எத்தனை மணிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றதை ஆராய்ந்த பார்வை, அதே அவசரத்துடன் அதிலிருந்த சில சொற்களில் மேய்ந்தது.

முடிவில், விழிகள் குளமாகிட எழுந்தமர்ந்துவிட்டாள், கயல்விழி.

‘கயல் பிள்ளைகள் பத்திரம் 

நான் வர்ற வரைக்கும்’ 

‘இதை நீர் சொல்லவா வேணும் காயு?’ மனம் சொல்ல, விழிகள் சுரக்க அடுத்த வரிக்குப் பார்வை போயிற்று. 

முதல் குறுஞ்செய்தி அனுப்பிச் சில நிமிடங்களுக்குப் பிறகு அது வந்திருந்தது. மூன்றே மூன்று சொற்கள் தாம்; அவை… கயல் உள்ளத்தைக் கிடுகிடுக்க வைத்தது. 

‘எப்பவும்  பத்திரம் கயல்’ 

மீண்டும் மீண்டும் வாசித்தவள் விழிகள் சரசரவென்று உடைப்பெடுத்து வழிந்தன.

“விசரா உமக்கு, உமக்குச் சுகம் வந்திரும் காயு. கெதியாவே வீட்ட வந்திருவீர். எனக்கு…எனக்கு உண்மையாவே என்ர கண்ணே உங்களில பட்டுட்டோ எண்டு பயமா இருக்கு காயு. நான் பாத்து இரசிச்ச குடும்பம் உங்கட! எப்பவும் அதே சந்தோசமாக நீங்க இருக்க வேணும், நாலு பேருமா!” கேவலோடு வாய்விட்டே சொன்னவள் பட்டென்று ஒளிர்ந்த அறை விளக்கில் திடுக்கிட்டுப் பார்த்தாள்.

“கயல்…என்ன? ஏன் அழுகிறீர்?” கேட்டபடி அவளருகில் வந்து நின்ற பூபாலனுள் என்னவோ ஏதோவென்ற பதற்றம்.

நித்திரையண்டாது புரண்டு கொண்டிருந்தவன், “இவா  ஆரோட கதைக்கிறா, அழுகிறாவோ!’ என்று பதற்றத்தோடு எழுந்து வந்திருந்தான். 

அவனை நிமிர்ந்து பார்த்த கயல் விம்மல் அதிகரித்தது. நடுங்கும் கரத்தால் பேசியை அவனிடம் நீட்டினாள்.

நெற்றி சுருங்க வாங்கியவன் பார்வை மின்னலாக அந்த வரிகளில்!

முதல் நாள் மாலையில் ஓரளவு குணமடைந்தது போலிருந்தாள் காயு. நித்திரையும் கொண்டிருந்தாள். திடீரென்று கேட்ட சத்தத்தில் விழித்திருந்தான், அவள் அறையின் வாயிலோரமாகப் படுத்திருந்த பூபாலன்.

 காயுவோ, மூச்செடுக்க முடியாது போராடிக் கொண்டிருந்தாள். இவன் தாமதிக்கவில்லை. அப்போதும் அவள் “வேணாம்..பாலன்…வேணாம்…” என்று அரட்ட அரட்ட, வைத்தியசாலை அவசரப் பிரிவுக்கு அழைத்திருந்தான்.  சில நிமிடங்களில் அம்புலன்ஸ் வந்துவிட்டது. அதற்கிடையில் இதை அனுப்பி இருக்கிறாள். அவளை விட்டு முன்வாயில் கதவைத்திறக்க ஓடியிருந்தான். அப்போது அனுப்பியிருக்கிறாள்.  

பூபாலனால் நெஞ்சை அழுத்திய வேதனையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கயல் முன்னால் திடமாக நடமாடுவதுபோல் நடித்துக்கொண்டிருந்தவன் அதை மறந்தான்.  கண்கள் விடாது கசிய மனைவியின் செய்தியையே பார்த்திருந்தவனுள் அழுத்திய பயப்பந்து மேலும் மேலும் ஊதியதாக உணர்ந்தான். 

அவனைப் பார்த்த கயல் விம்மல் அதிகரித்தது. அப்போதுதான் சுதாகரித்தவன், “அவள் இப்பிடித்தான் சின்னன் எண்டாலும் பயந்திருவாள் கயல். அதையெல்லாம் பெரிசா எடுத்து அழுறீர்! ஒண்டையும் நினைச்சுக் குழம்பாமல் தூங்கும்.” 

மிகவும் முயன்று தேறுதல் கூறியவன் கரம் அவள் உச்சியில் படிந்து பாசத்தோடு  வருடியது. மறுநொடி வெளியேறிவிட்டான். அவளுக்குத் தேறுதல் சொல்லிவிட்டுத் தான் கலங்கி நிற்பதா? விறுவிறுவென்று மகள் அருகில் சரிந்தவன் பார்வை நிச்சலனமாய் உறங்கும் மகளில். 

‘இவையளுக்காக…உன்ர பிள்ளைகளுக்கு நீ இருக்க ஆரும் பார்க்கவா வேணும் சொல்லு? சுகமாகி வந்திரு காயு!’ மனம் மட்டும் அரட்டியபடியிருந்தது.

error: Alert: Content selection is disabled!!