அத்தியாயம் 14 – 1

லாதியின் சிறு கரங்களிரண்டும் கயல் கழுத்தை இறுக அணைந்திருந்தன. வாயை உரசிய மறுநொடி தட்டிவிடும் தாயின் கரம் இல்லாமல் போனதை உணராது, சிணுக்கத்தோடு பெருவிரலை சப்புக்கொட்டியபடி கயல் நெஞ்சில் சாய்ந்து கொண்ட குழந்தையின் கண்கள் மெல்ல மெல்ல சொருகின.

அவள் அணைப்பின் இறுக்கம் உறைத்தாலும் அசையாதிருந்தாள், கயல்விழி. பாரிய அதிர்வின் பிடியில் நெரிந்து நின்றவள் விழிகள் மட்டும் கண்ணீரைச் சொரிந்தன. அந்நிலையிலும் சிறுமியின் எக்குத்தப்பான இதய அசைவை அவளால் உணர முடிந்தது.

 

நொடிகள் நிமிடங்களாக கரைந்திருந்தன. பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள், லாதி.

“ஸ்வீட்டி, அம்மா…அம்மாக்குச் சீரியஸா? சுகம் வந்திரும் தானே? எப்ப வீட்ட வருவா? அப்பா…அப்பா ஏன் கோவப்பட்டு…” முடிக்கவில்லை. கண்ணீரில் தத்தளிக்கும் அவள் விழிகள் சமாதானமாகவோ சாதகமாவோ பதிலை எதிர்பார்த்து ஏங்கி நிற்பதாகப் பட்டது, கயலுக்கு.  

“ஒண்டும் இல்லம்மா.  கண்ணைத் துடையுங்கோ! ஒண்டும் இல்ல குஞ்சம்மா!” இதைத் தவிர்த்துப் பதில் சொல்லவியலா நிலையில் நின்று தடுமாறினாள், கயல். 

இரு கரங்களாலும் கண்ணீரைத் துடைத்தபடி விம்மினாள், லாதி.

“எனக்குச் சரியான  பயமா இருக்கு ஸ்வீட்டி. அப்பாக்கு… இப்பிடி…ஒருக்காலும் கோவம் வராது. கத்தி எல்லாம் கதைக்க மாட்டார். அம்மா அம்மா வேணும் எனக்கு!” மீண்டும் கயல் கழுத்தை இறுகவே கட்டிப் பிடித்தபடி தோள்வளைவில் முகம் புதைத்துவிட்டாள்.

கயல்விழியின் விழிகளும் உடைப்பெடுத்தன. லாதியின் முன்னால் அழுதுவிடக்கூடாது என்று எவ்வளவோ முயன்று பார்த்தாள், முடியவே இல்லை. விம்மல் வெடித்துக் கசிந்தது. கரங்கள் இரண்டுமே பிள்ளைகளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டன.

மறுநொடியே திமிறி நிமிர்ந்தாள், லாதி. தன்னிரு பிஞ்சுக் கைகளாலும் கயல்விழியின் விழிகளை அழுத்தமாகவே துடைத்து  விட்டாள்.

“அம்மா… அம்மா… இஸ் ஷி டெட்?” கேட்டு முடியமுதலே கயல் அழுகைக் குரல் அவள் கட்டுப்பாட்டை மீறியிருந்தது. கண்ணயர்ந்து போன குழந்தை சிணுங்கி வசதியாகப்படுக்க முனைந்து, தமக்கையில் மோதி, மீண்டும் கயல் தோளோரம் ஒன்றினான்.

கிரீச்சிட்டு அழுதாள், லாதி.

“அம்மா! அம்மாஆஆஆ! அம்மா வேணும் எனக்கு. இப்பவே!”  கயலோடு சேர்ந்து குறுக்கி மடக்கியிருந்த கால்கள் விறைப்பாக நீள, பட்டென்று கயல் பிடியிலிருந்து விடுபட்டு, “அப்பா…அம்மா” அலறலோடு வெளியே ஓடினாள்.

“லாதிம்மா…” தானும் எழ முயன்றாள் கயல். அதற்குள், சென்ற வேகத்தைவிடவும் விரைவாகத் திரும்பி வந்து கயலில் மோதி அவளோடு ஒன்றினாள், சிறுமி. முன்னை விடவும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். வீட்டினுள் இருந்து பெரும் சத்தமாக எழும் தந்தையின் கதறல் அவள் சிறு உடலை பயத்தில் சில்லிட வைத்தது. அதுவே, அன்புத் தகப்பனை நாடியோடியவளை அவனை  நெருங்கவிடாது துரத்தியோட வைத்திருந்தது.   

குமுறி அழுத குழந்தையைச் சமாதானப்படுத்தும் வழி தெரியவில்லை, கயலுக்கு. தமக்கையின் அழுகைச் சத்தத்திலும் கயலில் லாதி வந்து மோதிய வேகத்திலும் குழந்தை அருண்டு சிணுங்கத் தொடங்கியும் விட்டான்.

அக்கணம், தன் தாயை இழந்த நாளில் சென்று மோதி நின்றிட்டு, கயல் நினைவுகள். அவசியம் உணர்ந்து அழுகையை அடக்க முயன்று வெற்றி கண்டுவிட்டாள். குழந்தையை ஒரு கை அணைத்திருக்க மற்றக் கையால் லாதியை அணைத்தவள், “காயு…அம்மா எங்கயும் போகேல்ல செல்லம்; இங்க தான் நம்மளோட இருக்கிறா!” மெல்ல முணுமுணுத்தாள்.

“எப்பவும் இங்கதான்…பிள்ளைகளோட இருப்பா, கண்ணுக்குத் தெரியாட்டியும். செல்லம் அழக் கூடாது. பிள்ளேட அம்மாக்கு அது பிடிக்காதெல்லா?” ஒவ்வொரு வார்த்தைகளாகத் தேடி தேடி சொல்லித் தேற்ற முயன்றாள். அவற்றை லாதி  செவிமடுத்தாள் போல் தெரியவில்லை. விடாது அழுதாள்.

யுகம் என உணர வைத்த பத்து நிமிடங்களும் கடந்திராது, “கயல்!” என்றபடி ஓடிவந்தான், பிரணவ்.

திரும்பி நோக்கிய கயல் விழிகளில் அவனுரு மங்கலாகத்தான் தெரிருந்திட்டு. 

“லாதி…லாதி…” அவள் தலையை வருடியவன், “அழுதாவோ?” இவளிடம் தாழ்ந்த குரலில் கேட்டான்.

“முதல் எழும்பும், வீட்டுக்க வந்து இருங்க.” லாதியைத் தூக்க முயன்றான்.

அவள் அழுகை வலுக்க கயலோடு ஒட்டிக்கொண்டாள். 

“விடுங்கோ இருக்கட்டும்.” 

“இங்க இருக்க வேணாம் கயல், உள்ள வாங்க.”

“நான்…நாங்க இங்க கொஞ்ச நேரம்…” கயலால் கதைக்க முடியவில்லை. 

“கயல்…” அவள் தலையில் பிரணவ் கரம் ஆதரவாகப் படிந்தது.

“நடந்தத ஆராலும் மாத்த ஏலாது, இனிமேல் தேவையில்லாத பிரச்சினைகள் வராமல் பார்க்க வேணும்.” என்றவன், விழிநீரைச் சிமிட்டிவிட்டுப் பார்த்தவளுக்கு வாயசைவில், “போலிஸ் வந்திருக்கு.” என்றான்.

“ஏன்?” என்றாள் அவள் விளங்காது.

முதல் அதில் பிரணவ் அளவுக்குப் பதற்றமடைய என்ன இருக்கு. ஒருவேளை, ‘பிரணவ் இங்க வந்தத ஆராவது சொல்லியிருப்பார்களோ?’ என்றுதான் அவள் சிந்தனை சென்றது.

“லாதி அழுதா எண்டு…பக்கத்து வீட்டுச் சப்பட்ட மனுசன்  அடிச்சுச் சொல்லிட்டார் போல!” வார்த்தைகள் பாதி சைகை மீதியாகச் சொன்னவன், “நம்மட வீட்டு நிலைமைய விளங்க வைக்க முதல் கூட்டிக்கொண்டு போயிருவாங்கள். அதும் காயுவும் இல்ல.” பிள்ளைகளைக் காட்டிச் சொல்ல விதிர்விதிர்த்துப் போனாள் கயல்விழி. 

“இது என்ன அநியாயம்? இங்க என்ன நடந்திருக்கு அழவும் சுதந்திரம் இல்லையோ!?” கண்ணீரோடு பார்த்தவளுக்கு பார்வையில் ஆறுதல் சொன்னவன் பாவனையில் நெருக்கம், நேசம் எல்லாமே  இருந்தது. அந்நிலையிலும் அதை அவளால் உணர முடிந்தது. 

கடந்த சிலநாட்களாகவே மிகப்பெரிய இக்கட்டான நிலை, அதில் இவளும் பிணைக்கப்பட்டிருக்கிறாள். அந்நிலையில், எந்நேரமெண்டாலும் ‘கூப்பிட்ட  குரலுக்கு நானிருக்கிறன்’ என்று உணர வைத்திருக்கிறான், பிரணவ். இப்போதும் அப்படியே இந்த இக்கட்டை எதிர்நோக்க அருகில் நிற்பவன் பெருந்துணையாகத் தெரிந்தான், தெள்ளத்தெளிவாகவே உணர்ந்தாள், கயல்.

 

error: Alert: Content selection is disabled!!