“அத்தானும் அப்பாவும் வந்து முன்னுக்குக் கதைச்சுக்கொண்டு நிக்கினம். நீங்க அங்க வந்து இருங்க. சின்ன விசயத்துக்கும் நாம இடம் குடுத்திரக் கூடாது கயல். அதுவும் பூபாலன் இப்ப இருக்கிற நிலைக்கு, பிள்ளைகளப் பத்திரமாப் பார்க்க நம்மால ஏலாது எண்டு போலிஸ் சொல்லிட்டா ஒண்ணும் செய்யேலா. பிறகு நாம இருந்து பலனில்ல. என்ன ஏதெண்டு அவைக்கு விளங்க வைக்க முதல் பிள்ளைகளப் பராமரிக்கிறம் இல்ல எண்டு கூட்டிக்கொண்டு போயிருவினம்” சொன்னவன், திமிறத் திமிற லாதியை தூக்கிக்கொண்டான்.
முதலில் மறுத்தாலும், “அங்கிள் அம்மா வேணும். அம்மாவப் பாக்கப் போறன்.” அவன் தோளில் சரிந்து அழத் தொடங்கிவிட்டாள், லாதி.
“ஒண்ணும் இல்ல லாதிம்மா. நீங்க அழுதா அம்மாக்குப் பிடிக்காது அப்பாவும் கவலைப்படுவார். எங்கட செல்லம் வெரி ஸ்ட்ரோங் எல்லா. அழக்குடாது. பிறகு தம்பி, உங்கட ஸ்வீட்டி எண்டு எல்லாரும் அழுவினம்.” முதுகில் தட்டி தட்டிச் சொன்னபடி நகர்ந்தவன், குழந்தையோடு எழ முயன்று விறைத்துவிட்ட கால்கள் துணைசெய்யாததில் தடுமாறிய கயலை தோளோடு அணைத்துப் பிடித்து நிறுத்தி இருந்தான்.
சிலகணங்கள் தான், விழிகள் நான்கும் ஒரே பிடியில் தரித்து நின்றன. அதுவரை, பிரணவ் மனதிலிருந்த தவிப்புக்கு, வெள்ளைத் தாளில் பளிச்சென்ற வர்ணங்களால் அழகாகத் தீட்டிய சித்திரமென விடை சொன்ன கணங்கள் அவை! அது தந்த மகிழ்வுணர்வைச் சிறிதும் அனுபவிக்கக் கூடிய சூழ்நிலை இல்லையெனிலும் மனம் நிம்மதியை ஆழ இழுத்துச் சுவாசித்ததையும் மறுக்கான் அவன்.
கயல் விழிகள் தடுமாற்றத்தோடு விலகின. அதேநேரம், “நீங்க போங்க, வாறன்.” மீண்டும் அமர்ந்துவிட்டாள்.
“ம்ம்…கெதியா வாரும். அக்காவும் அம்மாவும் இப்ப வருவினம்.” தலையில் ஒரு பரிவான தடவலோடு நகர்ந்துவிட்டான், அவன்.
*****
டார்க் பிரவுண் வார்னிஷில் பளபளக்கும் பெட்டிக்குள், வெள்ளை வெளேரென்ற மெத்தென்ற சாட்டின் விரிப்பில், திருமணக் கூரைச்சேலையில் ஆழ்துயிலில் கிடந்தாள், காயு.
எண்ணிச் சிலநாட்கள் முன் அவன் கைக்குள் இருந்தவள், இன்றோ, குறுக்கேயிருந்த கண்ணாடிக்கப்பால்…
‘வந்திரு வந்திரு எண்ட விடாத கெஞ்சலையோ, நெஞ்சு வலிக்க வலிக்க இறைஞ்சினதையோ கொஞ்சமும் கவனிக்கேல்லையே நீ! என்னை விட்டுப் பிரிஞ்சு போறது அவ்வளவு லேசானதா உனக்கு!’ மணம் முடித்த இத்தனை வருடங்களில் அவளில் இப்படியொரு கோபம் வந்ததில்லை, பூபாலனுக்கு. இன்று நெஞ்சம் முழுதும் கோபத்தில் நடுநடுங்கியது.
நினைவு தெரிந்ததில் இருந்தே வாழ்க்கையை மிக மிக இலகுவாக எதிர்கொண்டவன், அவன்; ஒவ்வொரு நிமிடத்துளியையும் தனக்குப் பிடித்தவகையில் சந்தோசமாகக் கழிக்க நினைத்தவன்; பகிடி, சேட்டைகள் என்று, இப்படித்தான் இருக்க வேண்டும் என்றில்லாது அந்நேர மகிழ்வுக்காக வாழ்ந்து வந்த இளைஞன்! அப்படிப்பட்டவனுக்கு, வாழ்வு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டி உணர்த்தியவள், அவனுள் தென்றல் வீசிடும் வசந்தமாகக் கலந்துவிட்டவள், அவள்.
குடுகுடு கிழவன் கிழவியாகினாலும் இப்படியே கலகலவென்று அடிபட்டு சிரித்துப் பேசி தம் வாழ்க்கையை கழிக்க எத்தனை எத்தனையோ கனவுகள் திட்டங்கள் அவர்களிடையே உண்டு. மனதளவில் மட்டுமன்றி, அவைபற்றிக் கதைத்துப் பேசிச் சிரித்து ஆரவாரித்தும் இருக்கிறார்களே! அவையெல்லாம் தொடங்கிய வேகத்தில் இப்படியா முடிவுக்கு வந்துவிடும்!
லாதியின் இறுகிய பிடியில் அவன் கால்களிரண்டும் நெரிந்தன. அழுகையில் குலுங்கும் அவளுக்கு தலைவருடலில் ஏனும் ஆறுதல் சொல்லிட முடியாது தன்னிலை தொலைத்து நின்றான், பூபாலன். அப்போதும் அவன் மனைவி இனி தம்மோடு இருக்கமாட்டாள் என்பதை நம்பிட முடியவில்லை.
“காயு…” வாய் அரற்ற, விடாது வழிந்த கண்ணீர் மனைவியை விழிகளில் நிரப்பிக் கொள்ள விடாது அழிச்சாட்டியம் பண்ணியது. அவனுடனான இத்தனை வருட வாழ்வில் மனதுள் நிரந்திரமாக ஒட்டி நிற்கும் அழகிய உருவங்கள், பாவங்கள் எல்லாம் இருக்க இதையா பத்திரப்படுத்த நினைக்கிறாய் என்று எண்ணினவோ அவன் விழிகள்? துடைக்கத் துடைக்க சுரந்திட்டு, அவள் அன்பு போலவே!
ஆதரவாகத் தோளோடு இறுக அணைத்துக் கொண்டான், பிரணவ். லாதியின் தலை கோதியது, நடுங்கிக் கொண்டிருந்த கயல் கரம். அவள் அளவுக்கு முழங்காலில் இருந்து அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டு விம்மலை அடக்கப் பாடுபட்டாள் அவள்.
கொரோனா என்ற கொடுமை, உடலாலும் உள்ளத்தாலும் இரண்டறக் கலந்தவளை எட்ட வைத்தே அவனிடம் இருந்து பிரித்துச் சென்றது. பெற்றெடுத்தவள் அண்மையை ஒருதரமேனும் அடைந்திட எண்ணித் துடித்த சிறுமியின் ஆசையை நிராசையாகி, மகள் கதறலோடு பார்வையை விட்டு மறைந்து போனாள், காயு.
அவள் அன்பில் நனைத்த பிரணவ், கயல் இருவருமே சுற்றம் மறந்து விம்ம, லொக் டவுனிலும் பதறித் துடித்து வந்திருந்த காயுவின் சகோதரனும் பூபாலனின் ஒன்றுவிட்ட தமக்கையும் வாய் பொத்தி அழ, மிகச் சுருக்கமாக விடைபெற்றிருந்தாள், காயு.