“முப்பத்தியொன்று முடிய கயல்விழியோட கதைச்சு ரெஜிஸ்டர் சரி செய்திர வேணும் தம்பி. நம்மட வீட்டில வந்திருந்து கொண்டும் அந்தப் பிள்ளைகள அப்ப அப்பப் போய்ப் பாக்கலாம்.” என்றிருந்தார், பிரணவ் அன்னை. அவளுக்குத் தன்மீது விருப்பம் உண்டு என்பதை அறிந்திருந்தவன் வீட்டிலும் நம்பிக்கையோடு சொல்லிவிட்டான். அதன் எதிரொலியே இது. அவனுக்கும் அதே எண்ணம் தான்.
மகனிடம் சொன்னதையே வேதாவிடமும் சொல்லியிருந்தார், பிரணவ் அன்னை. திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்து விட்டாளே என்று மனவருத்தத்தில் இருந்த கயல்விழி வீட்டினருக்குப் பெரும் மகிழ்ச்சி. அந்த மகிழ்வை, பூபாலனின் அன்னை சாந்தாவிடமும் பகிர்ந்து கொண்டார், கயல்விழியின் அம்மம்மா.
பூபாலன் வீட்டினர் தானே ஆரம்பத்தில் பிரணவ், கயல்விழி திருமணத்தில் முனைப்போடு செயல்பட்டவர்கள். ஆனால், இப்போது கேட்கையில், காயு இல்லா வீட்டில் குழந்தைகளைப் பொறுப்பாகப் பார்த்திருப்பவள் எண்ணிச் சிலநாட்களில் பிரணவ் வீடு போய்விடுவாள் என்றதில் அதிர்ந்து போனார், சாந்தா.
பூபாலன் வீட்டில் வந்து நிற்கின்ர தமக்கை மகள் விமலாவிடம் அரற்றியும் இருந்தார்.
“கயல்விழி எத்தின நாட்களுக்குச் சித்தி? இண்டைக்குப் பிள்ளைகளப் பாத்துக் கொள்ளுறாவே எண்டு நாம அப்பிடியே இருந்திர முடியுமா என்ன?”
“அதுவும் சரிதான். இப்ப நாடு என்ன உலகம் கிடக்கிற கிடைக்கு நான் அங்க வரவும் முடியாதே! காயுட அம்மா வந்து நிண்டாலும் அவாவால குழந்தையைப் பாக்க ஏலுமா என்ன? பாலன் பிள்ளைகளைப் பாப்பானா தொழிலக் கவனிப்பனா?” தொடர்ந்து அரற்றினார், சாந்தா.
“அதத்தான் நானும் சொல்ல வாறன் சித்தி.” என்ற விமலா, “பேசாம பூபாலனுக்கு இன்னொரு பொம்பள பாப்பமா?” சொல்லி முடிக்கவில்லை, அதிர்ந்து போனார் சாந்தா.
“உனக்கென்ன விசரே! இப்பிடி ஏதும் அங்க அவனுக்கு முன்னால கதைச்சிராத? அந்தப் பிள்ள போய்…” சொல்லி முடிக்காது விம்மினார்.
“சித்தி…எனக்கும் காயுவ சரியாப் பிடிக்கும். அருமையான பிள்ளை எண்டு நானே சொல்லி இருக்கிறன் தானே? இப்ப அது இல்ல பிரச்சின. இங்க வெளிநாட்டில நீங்க ஆரும் பக்கத்தில துணையா இல்லாத இடத்தில குழந்தைப் பிள்ளையையும் வளருற பொம்பளப் பிள்ளையையும் வச்சுக்கொண்டு பூபாலன் எப்பிடிச் சமாளிப்பான் சொல்லுங்க?” பதிலிருந்தால் சொல்லுங்க, என்ற கணக்கில் சொல்லி நிதானித்தார்.
என்ன பதில் சொல்வார் சாந்தா? கண்ணீர் சிந்தினார்.
“முதல், ஊரில போல இல்ல, சின்னன் எண்டாலும் கவனிப்புச் சரி இல்ல எண்டு சொல்லி பொலிஸ் கூட்டிக்கொண்டு போயிருவாங்கள் சித்தி. பிறகு அவங்களுக்கிள்ளாள பிள்ளைகள வெளில கூட்டிக்கொண்டு வாறது எல்லாம் லேசுப்பட்ட விசயம் இல்லத் தெரியுமா?” உள்ள நிலையை விளக்கினார், விமலா.
வாய்விட்டே அழுதார், சாந்தா.
“இண்டையான் நிலைக்குக் கயல்விழி மட்டும் இல்லையோ இந்த வீட்டு நிலை படு மோசமா இருந்திருக்கும்.” தொடர்ந்தார், விமலா.
“இப்பிடி எல்லாம் என்ர மகன் குடும்பத்தில நடக்கும் எண்டு ஆர் கண்டது!? கடவுளே நாங்க ஆருக்கு என்ன அநியாயம் செய்தம்!? மனசறிஞ்சு ஆருக்கும் கெட்டது செய்யேல்லையே!” புலம்பினார் சாந்தா.
“நாம இப்பிடி அழுறதால ஒரு பிரயோசனமும் இல்ல சித்தி. அண்டைக்குத் தாய்க்கு இப்பிடி எண்டு தெரிஞ்சோன்ன லாதி கத்தி அழ, பக்கத்து வீட்டுச் சனம் சொல்லி பொலிஸ் வந்திருக்கு. அதுக்குப் பிறகும் இந்த ஒரு மாசத்தில நிறையத் தடவை வந்து எப்பிடிப் பிள்ளைகள் இருக்கினம் எண்டு விசாரிச்சிட்டினம்.” என்று அவர் சொல்ல சொல்ல, பூபாலன் அன்னை மனதில் கிலி.
“அதோட சித்தி…” என்று இழுத்தவர், “பிள்ளைகள் அந்தப் பிள்ள கயலோட மட்டும் தான் சேருகினம். சின்னவன் சும்மா கூட என்னட்ட வாறான் இல்ல. லாதி கேட்கவே வேணாம், தகப்பனும் அந்தப் பிள்ள கயலும் தான் வீட்டில் இருக்கிறது போலத்தான் நடக்கிறா. இது தொடருறது எனக்குச் சரியாப் படேல்ல!” என்றவர், “பிறகு அந்தப் பிள்ளேட வாழ்க்கை நம்மளால பிரச்சினைக்குள்ளாகக் கூடாது எல்லோ? சின்னப் பிள்ள.” என்றார், யோசனையாக.
“இப்ப என்ன செய்யிறது பிள்ள. நீ…நீ கொஞ்ச நாளைக்கு நில்லன்.” சாந்தாவுக்கு வேறு வழி தெரியவில்லை.
“ரெண்டு அல்லது மூண்டு மாசங்களுக்கு நிப்பன் சித்தி, அதுக்குப் பிறகு? இப்பப் பூபாலனுக்கு ஒரு துணை தேவையில்லாமல் இருக்கலாம், பிள்ளைகளுக்கு ஒரு தாய் தேவை சித்தி.”
“அதுக்கு… பிள்ளைகளைப் பார்க்க எண்டா ஆர் வருவினம் சொல்லு? அது அவன்ட வாழ்க்கைய நரகமாக்கிரும்.”
“உள்ள நிலையைச் சொல்லித் தேட வேணும் சித்தி. இப்ப ஊரில இருந்து ஆரையும் எடுப்பிக்கறது சரிவராது. நான் இங்க பார்க்கிறன்.” என்றவர், “நீங்க கொஞ்சம் கொஞ்சமா பூபாலனுக்கு உள்ள நிலைய விளக்கிச் சொல்லுங்க. மிச்சம் நான் இங்க பார்க்கிறன்.” என்றிருந்தார்.
பூபாலன் வீட்டினருக்கும் அதுவே சரியென்று பட்டது.
காயுவின் முப்பதியொன்று முடிந்திருந்தது.
லொக் டவுன் மட்டுமில்லாது காயுவின் சகோதரன் குடும்பமும் கொரோனாவின் பிடியில் அகப்பட்டதில் அவனாலும் வரமுடியவில்லை. “நல்லகாலம் லாதியைக் கூட்டிக்கொண்டு போகேல்ல!” என்று நிம்மதியுற்றனர், காயு வீட்டில்.
முப்பதொன்று முடிந்த மறுநாள், ஃபேஸ் டைமில் கதைத்துக் கொண்டிருந்தார், சாந்தா.
காயுவோடும் விமலாவோடும் மாறி மாறிக் கதைத்தவர், “எப்ப உங்கள்ட ரெஜிஸ்ட்ரேசன் கயல்? நாள் குறிச்சாச்சா?” என்று கேட்டுவிட்டார். கயல்விழியோ முழித்தாள்.
“ரெஜிஸ்ட்ரேசனா!? எனக்கா?”
“இல்லம்மா, அம்மம்மா சொன்னவா. பிரணவ்ட அம்மா கதைச்சவாவாம். அதான் கேட்டன்.” என்றவர், “நீ பிரணவ் வீட்டுக்குப் போய்ட்டா பிள்ளைகள் அந்தரிக்கப் போகினம் கயல். அதான்…அதான்” சொல்ல முடியாது தடுமாறினார்.
கயலோ முகம் இறுக நின்றிருந்தாள். திரும்பவும் அவளிடம் ஒரு வார்த்தை கேட்காது தாமாகவே முடிவு செய்கிறார்களே! மனதுள் எரிச்சல் சுரந்திட்டு. இருந்தாலும் இச்சில கிழமைகளாக பிரணவ் காட்டிய கவனிப்பும் பரிவும் முழுமையாகக் கோபம் கொள்ளவும் விடவில்லை.
சட்டென்று அமைதியாகிவிட்டவளைப் பார்த்திருந்த சாந்தா மெல்ல ஆரம்பித்தார்.
“அதான் பூபாலனுக்கு ஒரு கலியாணத்தச் செய்து வைக்கலாம் எண்டு நினைக்கிறம் கயல்.” என்றவர், அவள் அதிர்ந்து விழிப்பதைப் பார்த்துக்கொண்டே தொடர்ந்தார்.
“இங்க இருந்து பொம்பள அனுப்பிறது எல்லாம் சரிவராது. அங்க ஒரு பொம்பள இருக்கிறா. டிவோர்சி தான். லாதி வயசில ஒரு மகன் இருக்கு. எண்டாலும் நல்ல பிள்ள, சொந்தமும்.” தயங்கியே என்றாலும் சொல்லிவிட்டார்.
‘இவேக்கு விசர் கிசர் பிடிச்சிட்டோ! காயு இறந்து நேற்றுத்தான் ஒருமாதம், அதுக்குள்ள மகனுக்குக் கலியாணம் எண்டு சொல்லினமே!’
பூபாலனின் அன்னையில் அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டு நிற்கும் விமலாவில் என்று எக்கச்சமாகவே கோபம் வந்திட்டு. அதோடு, அந்த வீட்டில் சிட்டாகச் சுற்றிய காயுவின் நினைவில் கண்கள் நிறைந்திட்டு.
“எங்களுக்கும் இத இப்ப கதைக்க விருப்பம் இல்லத்தான் கயல். பூபாலன் கேட்டாலே கத்துவான். ஆனா, பிள்ளைகளப் பாக்க எடுக்க ஒரு தாய் வேணும் தானே?”
அவர் சொல்லிக் கொண்டிருக்கையில், “நோ நோ நோ…ஸ்டெப் மதர் எனக்கு வேணாம்!” பெருங்குரலில் கத்தியபடி, மேசையில் இருந்த கண்ணாடியிலான தண்ணீர்க் கூசாவைத் தள்ளிவிட்டிருந்தாள், லாதி.
அதே வேகத்தில், “ஐ ஹேட் யூ அப்பம்மா!” அழுதபடி ஓடியவள், சத்தம் கேட்டு அறைக்குள்ளிருந்து ஓடிவந்த தகப்பனில் மோதியிருந்தாள்.