Skip to content
“என்ன குஞ்சு?” தகப்பன் குரலைச் செவிமடுத்தாள் போலில்லாது அவன் பிடியை உதறிவிட்டு, அறைக்குள் புகுந்து கொண்டாள், லாதி.
“லாதிம்மா! என்ன நடந்திட்டு?” மகள் பின்னால் செல்ல முனைந்த பூபாலன் திரும்பினான்.
“கயல் என்ன நடந்தது?”
அவன் கேள்விக்குப் பதிலாக கண்ணீர் வழிய, கூர்மையாகப் பார்த்தாள் கயல்.
‘ஒரே ஒரு மாதத்தில் காயுவை மறந்திட்டு இன்னொருத்தியோடு வாழ உன்னால் முடியுமா?’ நா சுழன்றிட முனைந்தது. அதைக் கட்டுப்படுத்தப் பெரும் பாடுபட்டவள் பட்டென்று அவனைத் தாண்டி அடுத்த பகுதியிலிருந்த வரவேற்பறை நோக்கிச் சென்றாள்.
அவள் தாய் முகம் பளிச்சென்று மனதில் வந்து போயிற்று. கூடவே தந்தை முகமும் தான். ‘இண்டைக்கு இல்லையோ ஒண்டோ ரெண்டோ வருசங்கள் கழிச்சு இந்த வீட்டுக்கும் இன்னொரு பொம்பள வரப்போறது உறுதி!’ உண்மை நிலையறிந்த உள்ளம் கொந்தளித்தது. கோபமா வருத்தமா இயலாமையா அவளுக்கு உண்மையாகவே தெரியவில்லை.
இங்கோ, அப்போதுதான் கீழே சிந்தியிருந்த நீரும் சில்லுச் சில்லாகச் சிதறிக் கிடந்த தண்ணீர்க் கூசாவும் பூபாலன் பார்வையில் பதிந்திட்டு.
“சின்னப் பிள்ள பிளங்கிற வீடு காயு, உடைஞ்சிரும்.” என்று சொன்ன பிறகும் ஆசைப்பட்டு வாங்கியிருந்தாள். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக சாப்பாட்டு மேசையில் தனக்கென்று நிரந்திர இடம் பிடித்திருந்த ‘கிறிஸ்டல் கூசா’ இன்று இல்லை, அவன் மனைவியைப் போலவே!
கண்கள் கலங்க தமக்கையைப் பார்த்தான். அவரோ, “என்னதான் சொல்லு பூபாலன், உன்ர மகளிட போக்குச் சரியில்ல. நானும் இந்த ஒரு மாதமாப் பாக்கிறன் தானே! இப்பவே கண்டிக்கேல்லையோ பிறகு உனக்குத்தான் கரைச்சல். அதென்ன அப்பிடி ஒரு ராங்கியும் கோவமும்?” படபடத்தார்.
“என்ன… என்ன நடந்தது?”
“அவள் தான் தட்டி உடைச்சவள்.”
“லாதியா? ஏன்? அவள் அப்பிடியெல்லாம் ஒருக்காலும் செய்ததில்ல.” என்றவன், “ஃபோனில ஆர் அம்மாவே?” என்றான், நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்த ஐபாட் திரையில் தெரிந்த உருவம் பார்த்து.
“ஓம் ஓம் கதை…நான் இதக் கிளின் பண்ணுறன்.”
“இல்ல இல்ல, நீங்க அங்கால தள்ளி நில்லுங்கோ! நான் கிளின் பண்ணி விடுறன்.” அவ்விடத்தைச் சுத்தம் செய்தவனுள், ‘லாதி ஏன் அப்பிடி அழுதபடி ஓடினாள், அதுவும் இப்பிடி ஒரு வேல செய்திட்டு!’ என்ற எண்ணமே.
‘ஐ ஹேட் யூ அப்பம்மா!’ என்று சொன்னாளா என்ன? கையில் கூட்டி அள்ளிய கண்ணாடித் துண்டுகளோடு தாயைப் பார்த்தான்.
“எப்பிடி ராசா இருக்கிற? சாப்பிட்டியா என்ன?” அடக்கி அடக்கி முடியாது கண்ணீர் விட்டார், அவன் அன்னை.
“கன்னம் எல்லாம் ஒட்டி, தலை மயிரும் தாடியும் காடா வளர்ந்து… என்ர மகன இப்பிடிப் பாக்க வேணும் எண்டு எனக்கு விதிச்சிருக்கே!” அவரின் அழுகை, அவன் கண்களை சிவப்படிக்க வைத்தது. பார்வையை மறைத்த கண்ணீரை உள்ளிளுத்து மறைக்க முயன்றவன் மேற்கையை உயர்த்தி கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டான்.
“ஏன் அம்மா லாதி உங்களிட்ட அப்பிடிச் சொல்லிப்போட்டுப் போறா? என்ன சொன்னீங்க? பிள்ளைக்கு உங்களில நல்ல விருப்பமே. ஒருக்காலும் இப்பிடியெல்லாம் கதைச்சதில்ல!” என்ற மகனுக்கு என்னவென்று சொல்வார்? வார்த்தை வரவில்லை.
இவனுக்கு நெற்றி சுருங்கியது.
“கையில உள்ளத இதுக்க போடு பூபாலன். ஒருக்கா வாக்கியூம் பிடிச்சிர வேணும். எங்க எங்க பறந்து கிடக்கோ!” குப்பைப் பையோடு வந்தவரிடம், “என்ன விமலாக்கா நடந்தது?” என்றான், கண்ணாடித் துண்டுகளைப் பையில் போட்டபடி.
அவரோ அவன் தாயைப் பார்த்தார்.
கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்ற முடிவில் ஒரு விசயம் தொடங்கியாச்சு. அதில் முக்கியமாகத் தொடர்புபட்டவன் இவன். தெரியத்தானே வேண்டும்?
“அது ஒண்ணும் இல்ல தம்பி, நான் கயலோடதான் கதைச்சுக் கொண்டு நிண்டனான். சின்னவள் வந்து கேட்டுப் போட்டாள் போல. அவாக்குப் பிடிக்கேல்ல… பெரிய மனிசி பார்!” என்று ஆரம்பித்தவர், தயங்கினார். காயுவின் முகம் தான் தயக்கத்தைக் கொடுத்தது.
‘நீ இப்பிடி இடையில விட்டுப் போட்டுப் போகப் போய்த்தானே ஆச்சி இந்த வேதனை எல்லாம்!’ மனதுள் அரற்றினார். கலங்கிவிட்ட விழிகளோடுதான் மகனைப் பார்த்தார்.
“என்னம்மா?” என்றவன் பார்வை மகளின் அழுகைக் குரலில் திரும்பியது. அங்கிருந்து பார்க்கையில் கயல் தெரிந்தாள். சன்னமான குரலில் கயல் எதுவோ சொல்லிக் கொண்டிருந்தாள். மாடியறையில் குழந்தை வேறு சிணுங்கினான்.
“இல்ல ஐயா…” தாயிடம் திரும்பினான்.
அதேநேரம், “ஏன் எங்கட குட்டியர் அழுகிறார்?” தன்னறைக்குள்ளிருந்து தொழில் தொடர்பான கலந்துரையாடலை முடித்துவிட்டு வந்த பிரணவ்வுக்குக் கீழே நடந்தது தெரியாது. குழந்தையைத் தூக்கிக்கொண்டு இறங்கி வந்தான்.
கயல் ஓடிவந்து அவனை வாங்கிக்கொண்டு, “சாந்தா ஆன்ட்டி விசர்க்கதை கதைக்கிறா…மெல்ல ஃபோனைக்கட் பண்ணிவிடுங்கோ!” என்றுவிட்டுச் சென்றுவிட, பூபாலனை நோக்கி வந்தான், பிரணவ்.
“இப்ப கயல் இருக்கப் போய் சின்னாக்களப் பத்தி உனக்குக் கவலை இல்ல. அதுவும் கைக்குழந்தையப் பாக்கிறது எல்லாம் என்ன அவ்வளவு லேசுப்பட்ட காரியமே தம்பி! நான் உண்மையாவே கயல் இந்தளவுக்குக் கவனிப்பா எண்டு ஒருக்காலும் நினைக்கேல்ல. ஆனா அது எத்தின நாட்களுக்குச் சொல்லு?”
தாய் சொல்ல சொல்ல, பூபாலன் உண்மையில் அதிர்ந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த ஒரு மாதமும் அவன் சிந்தை முழுதும் மனைவியின் இழப்பு மட்டுமே. அப்பப்போ குழந்தைகள் நினைவு குறுக்கிட்டாலும் கூட அதிலிருந்து சற்றும் மீண்டு வரமுடியவில்லை. அதிலும் கயல் தன் சொந்த வீட்டுப் பிள்ளை போலவே பிள்ளைகளைக் கவனிப்பதில் வேறு எந்த சிந்தனையும் வரவில்லை.
இப்போ?
“என்னம்மா திடீரெண்டு?” என்றவனுள்ளும், பிரணவ் கயல் திருமணம் நடக்கும் என்றளவுக்கு நம்பிக்கை உருவாகியிருந்தது. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கு கயல் நிரந்தரத் தீர்வல்ல என்றும் தான்.
இந்த லொக் டவுனில கல்யாணம் நடக்காது. அதுவரை கயல் துணை தன் குழந்தைகளுக்கு இருக்கும் என்ற பெரும் நம்பிக்கை அவனுள் இருந்தது. அதுக்குப் பிறகு… என்றளவுக்கு எல்லாம் சிந்திக்கவே இல்லை.
“என்ன ‘என்ன திடீரெண்டு’ எண்டு கேக்கிற? பின்ன அந்தப் பிள்ளையே எப்பவும் உன்ர பிள்ளைகளப் பாத்துக்கொண்டு இருப்பாவே! அவா தன்ர வாழ்க்கையப் பாக்க வேணாமா தம்பி? அதோட காயுவும் இல்லாத வீடு, எத்தினைக்கு இங்க அவா இருக்கிறது சொல்லு? பிரணவ்ட அம்மா கெதியா ரெஜிஸ்ட்ரேசன் செய்து அவவ அங்க கூப்பிட்டிர வேணும் எண்டு சொன்னவா. அதுக்குப் பிறகு ஆர் உன்ர பிள்ளைகளப் பாக்கிறது? உன்னால ஏலுமா சொல்லு? நானோ காயுட அம்மாவோ வந்து நிக்கிற நிலையும் இல்ல எல்லா? அப்பிடியே வந்து நிண்டாலும் எத்தனைக்குத் தம்பி?” அழுகையோடு என்றாலும் மூச்சுவிடாது அவர் சொல்ல சொல்ல, முகம் இறுக நின்றான் பூபாலன்.
error: Alert: Content selection is disabled!!