அத்தியாயம் 16 – 2

‘அய்யோ இந்த அம்மா அவ்வளவு கெதியா அங்க கதைச்சு அது இப்பிடியா இவனுக்குத் தெரியவர வேணும்?’ பிரணவ் நினைத்து முடிக்கவில்லை, திரும்பியிருந்தான் பூபாலன்.

“உங்கட கல்யாணம் நடக்க வேணும் எண்டு காயு எவ்வளவு ஆவலா இருந்தாள் எண்டு உனக்கே தெரியும் பிரணவ். அப்படியிருக்க இதெல்லாம் என்ன கதை? அதென்ன காயு இல்லாத வீடு எத்தனைக்கு இங்க இருக்கேலும் எண்டு கதைக்கிறது? அந்தக் கதேட அர்த்தம் என்ன?” விழிகளிடுங்க அவன் கேட்ட விதத்தில் திகைத்துவிட்டான், பிரணவ். 

“அய்யோ அப்பிடியெல்லாம் குறையா நினைச்சு எல்லாம் அம்மா சொல்லி இருக்க மாட்டா பூபாலன். ஆருமே சொல்லாயினம். கயல் இந்த வீட்டுப் பிள்ள. ஆன்ட்டி ஏதோ கதையோட கதையா சொல்லுறா…அதப் போய்ப் பெரிசா எடுக்கிறதா சொல்லு?” நண்பனைச் சமாதானப்படுத்தும் வகையில் கதைத்தான் பிரணவ். 

“அதுதானே? நான் என்ன சொல்ல வாறன், அவன் எதத் தூக்கிப் பிடிக்கிறான் பாருங்க.” என்ற சாந்தா, சுறு சுறுவென்று அவனுள் எழத் தொடங்கியிருந்த கோபத்தில் சிலவார்த்தைகள் மூலமே  எரி திரவத்தைக் கவிழ்த்துக் கொட்டினார். 

“அதனாலதான் நிரந்தரமான தீர்வா இன்னொரு கலியாணம் பாக்கலாம் எண்டு முடிவெடுத்துப்… பாத்தம்… தம்பி.” தாயின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் செவிவழி நுழைந்து பிரளயத்தைக் கிளப்பி விட்டன. குபீரென்று எழுந்த கோபாக்கினி விழிகளால் தெறித்தது.

மகன் முகத்தில் பார்வையிருக்க,  தட்டுத் தடுமாறிச் சொன்ன சாந்தா கண்ணீரோடு இறைஞ்சலாகப் பார்த்தார். “உனக்கு மட்டுமா ராசா எங்களுக்கும் தானே இழப்பு, வருத்தம் எல்லாம்?” அழுதபடி கேட்டார். அந்தக் கண்ணீரும் பார்வையும் கூட அவன் கோபத்துக்கு மருந்தாகவில்லை. 

பூபாலன் விழிகள் தாயை வெறித்தன. அப்போதும் தன் காதுகளில் விழுந்ததை நம்பவே முடியவில்லை.. ‘நீங்களா அம்மா இதைச் சொன்னது?!’ கோபத்தோடு செய்தியைக் கசியவிட்டன அவன் விழிகள்.

“என்ர ராசன்…குஞ்சப்பன் கோவப்படாத ராசா. உள்ள நிலைய கொஞ்சம் யோசிச்சுப்பார். என்ர இடத்தில ஆர் இருந்தாலும் ஏன் உன்ர மனிசி இருந்தாலுமே…” தன்னை விளக்கிவிடும் எண்ணத்தில் அவசரம் அவசரமாகச் சொல்லத் தொடங்கியவர் கதைப்பதை நிறுத்தினார். விசுக்கென்று எழுந்த பூபாலன் கை நிறுத்தியிருந்தது.

“நீங்க நீங்க… உங்களால எப்பிடி இப்பிடி எல்லாம் கதைக்க ஏலுமா இருக்கு? ஆருக்கு ஆர் நிரந்தரத் தீர்வு தாறது?” உச்ச குரலில் கேட்டு, கயல் பிள்ளைகளை பதறி வர வைத்துமிருந்தான்.

அதோடு நிற்கவில்லை, அவன் கை விசுக்கிய வேகத்தில் ஐபாட் சிதறிற்று. 

அதேவேகத்தில் திரும்பியவன் பார்வை பிரணவை உரசியது, உக்கிரமாக. அடுத்து கயலிடம் பாய்ந்தது. ஒருகையால் குழந்தையை அணைத்துப் பிடித்திருந்தவள் மறுகையால் லாதியைத் தன்னோடு சேர்த்து அணைத்திருந்தாள். கல்யாணம் என்ற ஒரு சொல்லில் அவன் பட்ட கோபம், பதறிய விதம் அவள் இதயத்துக்கு சற்றே ஆறுதலாக இருந்தது. ஆனாலும் எல்லாமே தற்காலிகம் தானே! இந்தக் குழந்தைகளுக்கும் ‘சித்தி’ என்று சொல்லிக்கொண்டு இன்னொருத்தி வரத்தான் போகிறாள்! அந்த எண்ணமே இதயத்தை இறுக்கியது. அவள் உள்ளப் போராட்டம் அறியாது, இதோ இதோ என்று அழுகையில் வெடித்துவிடும் நிலையில் நின்றவள் முகத்தில் உக்கிரமாகத் தரித்து நின்றது, பூபாலன் பார்வை.

ஓரெட்டில் அவளை நெருங்கியிருந்தான்.

“இனி நீ இங்க…இந்த வீட்டில இருக்க வேணாம்; இங்க வரவும் வேணாம்; போயிரு!” சொல்லிக்கொண்டே மகனைப் பிடுங்கி தன்னோடு சேர்த்தணைத்துக்கொண்டான்.

குழந்தையோ வீரிட்டு அழுதான். குட்டிக் கால்களை அடித்துக் கை ஒன்றால் தகப்பன் முகத்தில் வைத்துத் தள்ளி வளைந்து நெளிந்து கயலை நோக்கித் தாவினான்.

“பூபாலன் என்ன இது? பிள்ளையைக் குடு! எங்க உள்ள கோவத்த எங்க காட்டுற?” பிரணவ்.

“இதுதான் நான் சரியோ! கூட்டிக்கொண்டு போயிரு இவள. நானும் அவளும்…” என்றவன் கை உயர்ந்து சுவரில் தொங்கிய காயுவைக் காட்டியது. அவன் கண்களால் கண்ணீர் வடிந்தது. 

“இவா இங்க வந்த நாளில இருந்து… எங்களில ஒருத்தியாத் தான் பார்த்தம். பிறத்தியாளா… ஒரு கணம் நினைக்கேல்ல. நடத்தேல்ல.” என்றவன், பார்வை மீண்டும் அவள் முகத்தில்.

 

“இனி இங்க இருந்தா அந்த நினைப்பில நீங்களே சேறு அடிச்சிருவீங்க!” சாடலோடு குற்றம் சாட்டினான். அவளோ விளங்காது தடுமாறினாள். கவனம் எல்லாம் குழந்தையில்.

“அவனைத் தாங்க, அழுகிறான் எல்லா? ஆன்ட்டி ஏதோ சொன்னா அதுக்கு ஏன் என்னில பாயுறீங்க?” வாங்க முனைந்தாள்.

அவள் கரத்தைப் பிடித்துத் தட்டிவிட்ட வேகத்தில், “இங்க வா லாதி!” மகளைத் தன்நோக்கி ஒரே இழுவையில் இழுத்துக் கொண்டவன், அவள், “பா விடுங்க. ஸ்வீட்டி!” என்று அழுவதைக் கவனிக்கவேயில்லை.

“கூட்டிக்கொண்டு போ பிரணவ், கலியாணம் செய்து சந்தோசமா இருங்க. அதுதான் எனக்கும் அவளுக்கும் விருப்பம். இப்பவே போயிருங்க!” கத்தினான்.

“உங்களுக்கு என்ன விசர் பிடிச்சிட்டா. முதல் கத்துறத நிப்பாட்டுங்க. விடுங்க அவன!” கயலுக்கு எங்க இருந்து அப்படி ஒரு ஆவேசம் வந்ததோ, குழந்தையை ஒரே பிடுங்கலாகப் பிடிங்கிவிட்டுப் பூபாலனைத் தள்ளிவிட்டாள். எதிர்பாராது அவள் செய்த வேலையில் தடுமாறி பிரணவில் மோதி நின்றவன், தன்னை உதறிவிட்டு “ஸ்வீட்டி!” என்று பாய்ந்து கட்டிக்கொண்ட லாதியைப் பார்த்துவிட்டு அப்படியே தொப்பென்று நிலத்தில் அமர்ந்துவிட்டான்.

நிமிர்வும் துடிதுடிப்புமாக இருப்பவன் மிகப் பரிதாபகரமான கோலத்தில் அமர்ந்திருந்தான். அவனிடம் குனிந்த பிரணவ், கயல் கதைக்கவும் அவளைப் பார்த்தான்.

“இங்க பாருங்க, உங்கட அம்மா உங்களுக்குக் கலியாணம் பேசினா, பொம்பள பார்த்திருக்கு எண்டு சொன்னா, விருப்பம் எண்டா செய்யுங்க. இல்லையோ, அங்க சொல்ல வேணும். அத விட்டுப் போட்டு இங்க என்னட்டக்  கத்துற வேலை இனி வேணாம் சரியோ! அதோட, இங்க…இந்த வீட்டுக்கு நான் வந்தது உங்களிட்ட கேட்டுட்டு இல்ல. பிள்ளையள என்னட்ட இருந்து இப்பிடிப் பறிக்கிற வேலையும் இனி வேணாம் சொல்லிட்டன். காயு..காயு..” என்றுவிட்டு வாய்விட்டு அழுதுவிட்டாள். 

பூபாலன் பறித்தெடுத்த விதத்தில் பயந்து அழுத குழந்தை இவளிடம் வந்து சற்றே சிணுங்கலை குறைத்திருந்தவன் மீண்டும் பெருங்குரலில் அழ, லாதியும் சேர்ந்தழுதாள். 

“கயல் என்ன நீர்…பிள்ளைகளும் அழுகினம் பாரும்.” என்று பட்டென்று அவளருகில் சென்ற பிரணவ்வை, விசுக்கென்று திரும்பிப் பார்த்த பார்வையில் அவன் முகம் சுருங்க நிதானித்தான். அந்தளவுக்கு, குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள், கயல்விழி.

error: Alert: Content selection is disabled!!