பிரணவ் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் விருப்பப்படியே கயல்விழியின் செவிகளில் மோதின. அவற்றில் ஒட்டி நின்ற ஏமாற்றமும் கோபமும் இவள் மனதைக் கடுமையாகத் தைத்தன. வாய்விட்டுச் சொன்னால் தானா? செய்கைகள் சிலதே மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்து விடுமே! அவள், அவனுக்கு அதைக் கொடுத்திருக்கிறாள். குற்றவுணர்வு வதைக்க விழிகள் கசிந்தன.
எப்படியாவது அவனைச் சமாதானம் செய்துவிடவேண்டும் என்றெழுந்த ஊந்துதல், அவளை, அறைவாயிலை நோக்கி இழுத்துச் சென்றது என்றால் அதற்கு முன்னரே கதவு திறந்து கொண்டது.
உள்ளே ஓரடி எடுத்து வைத்துவிட்டு நிதானித்து நின்றான், பிரணவ். பார்வை கயல்விழியின் விழிகளில் தீர்க்கமாகப் படிந்திட்டு.
அவள் இதயத்துடிப்புத் தடுமாறியது. நாவை அசைக்க முயன்றாள். முன்னால் நிற்பவன் கோபத்தை அக்கணமே அழித்துவிடவேண்டும் என்ற பேராவல் மனதுள் முதன்மையாக நின்றும், பார்வையால் கூட தன் மனதைத் தெள்ளத் தெளிவுறத் தெரிவிக்க முடியவில்லை. கண்ணீர் நிறைந்து நின்று சதி செய்தது.
அவள் புறமிருந்து சிறு முயற்சியேனும் எழ முதல், “இப்ப, இந்த நிமிசத்தில இருந்து…” என்று ஆரம்பித்த பிரணவ் பேச்சு பட்டென்று நின்றது.
அழுதுகொண்டே கயலிடமிருந்து பிரிந்த லாதி, பாய்ந்து வந்து தன்னைக் கட்டிக் கொண்டதும் சிறுமியின் தலையைப் பரிவோடு வருடியவனுக்குத் தொண்டை அடைத்திட்டு.
“எங்கட குட்டிம்மா ஏன் அழுகிறீங்க? அழக் கூடாது செல்லம்.” தன்னைச் சமாளித்துவிட்டவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, நிமிர்ந்து பார்த்தாள், லாதி.
“எங்கட செல்லம் எல்லா!” விழிகள் இரண்டையும் பரிவோடு துடைத்து விட்டான், பிரணவ்.
“பிரணவ் அங்கிள்…ப்ளீஸ்…ஸ்வீட்டிய கூட்டிக்கொண்டு போக வேணாம். ப்ளீஸ் அங்கிள்…ப்ளீஸ்!” விக்கி அழுதாள், லாதி.
கேட்டவனோ திகைத்துப் போனான். கயல் கூட திகைத்துத்தான் நின்றாள்.
சிறுமியையே பார்த்திருந்த பிரணவ் விழிகளில் நீர்த்திரை. நிமிர்ந்து கயல் முகத்தைப் பார்த்தவனுக்கு சற்று முன்னர் மனதிலிருந்த கோபத்தை மீறிய துக்கம். தொண்டை விடைத்தது. உள்ளிருந்து எழுந்த துயரை படாதபாடுபட்டு விழுங்கியவன் இரு கைகளாலும் தன் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான்.
மீண்டும் கயலைத்தான் பார்த்தான். அவனுள் இருந்த எரிச்சல் கோபம் எல்லாம் கடந்து ஒரு நப்பாசை. லாதியில் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவள் அவள். இதற்கும் பதில் சொல்லலாமே! ‘நானும் உன்ர பிரணவ் அங்கிளும் எப்பவும் உங்கட பார்வையில் இருப்பம் எண்டு சமாதானம் செய்விக்கலாமே!’ மனதின் பலத்த எதிர்பார்ப்பு அவள் அமைதியில் ஏறுக்கு மாறாக அடிவாங்கி சுக்கு நூறாகிற்று.
“ப்ளீஸ் அங்கிள்!” லாதியின் பிடி இறுகியது. விம்மல் அதிகரித்தது. “அம்மாவும் இல்ல ஸ்வீட்டியும் இல்லாட்டி இல்லாட்டி…தம்பிப் பாப்பாவும் நானும்…” சொல்லி முடிக்காது விம்மினாள். சிலநாட்கள் முதல் சாந்தாவும் விமலாவும் கதைக்கையில் இந்த வகையில் கதைத்ததைக் கேட்டிருந்தாள்.
அவள் தலையில் அழுந்தப் படிந்தது, பிரணவ் கரம்.
“நான்… உங்கட…ஸ்வீட்டிய எங்கயும் கூட்டிக்கொண்டு போகேல்ல. உங்கட ஸ்வீட்டி உங்களோடதான் இருப்பா! போதுமா? அழக்கூடாது! எப்பவும் அழக்கூடாது!” சிறுமியின் விழிகளை துடைத்தபடி சொன்னவன் குரலில் கயல் தந்த ஏமாற்றம் விதைத்த கோபத்தின் சாயல். அவள் தான் வேண்டும் என்று நின்ற தன் மீதோ எக்கச்சக்க வெறுப்பு.
அதுவே லாதியோடு கதைக்கையில் கயலை மறந்தும் ஏறிட விடவில்லை. அவள் விழிகளால் வழிந்த கண்ணீரையோ இதழ்கள் துடிக்க, மனதில் சொல்ல நினைப்பதைக் கொட்டிடத் திண்டாடி நிற்பதையோ கண்டுணரவும் இல்லை. ஒருவேளை கண்டிருக்க, முடிவை மாற்றியிருப்பானோ என்னவோ! லாதிக்குப் பிரமானமாகச் சொன்னவன் கணம் கூட தாமதிக்கவில்லை. விருட்டென்று வெளியேறிவிட்டான்.
கடந்த ஒருமாதமாக இங்கேயே தங்கியிருந்தவன், காயுவின் இறப்பின் பின் மட்டுமல்ல கொரோனா வந்த நேரத்திலும் பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்தவன், எல்லாவற்றுக்கும் மேலாக பூபாலன் குடும்பத்தில் அன்பும் அக்கறையும் கொண்டவன் என்று நன்கறிந்திருந்தார், விமலா. அதுவே, மனம் நோகச் செல்லும் பிரணவ்வைச் சமாதானம் செய்விக்கும் எண்ணத்தில் மாடியிலிருந்து இறங்கி வந்தவனை நோக்கிச் சென்றவர், அவன், கயல் தங்கியிருக்கும் அறைக்கதவை திறக்கவும் தயங்கி நின்றிருந்தார்.
அங்கோ, லாதி கேட்டதும் அதற்கு அவன் சொன்ன பதிலும் அவர் கண்களையும் கலங்கடித்திட்டு.
‘கயலும் பிரணவ்வும் அருமையான பிள்ளைகள், அவேட வாழ்க்கையில இந்தக் குடும்பத்தால சின்னதாகவும் சிக்கல் வந்திரக் கூடாது’ அக்கணம், இப்படித்தான் அவர் மனதில் தோன்றிற்று.
அது பார்த்தால், விறுவிறுவென்று வந்து இவரைக் கடக்கையில் நின்றான், பிரணவ்.
“தம்பி, இப்பப் போக வேணாம், வாங்க சாப்பிடலாம். போகத்தான் வேணும் எண்டாலும் பின்னேரமாப் போகலாம். பூபாலன் தாயில உள்ள கோவத்தில ஏதோ சொன்னா அதைப் பெரிசா எடுக்கிறதா? அவனப் பற்றி உங்களுக்கு நானா சொல்ல வேணும்?” அவசரமாகச் சமாதானம் செய்விக்க முனைந்தார்.
அவரைப் பார்த்தவன் தன் கலங்கிய விழிகளை மறைக்க முயலவில்லை. அவன் உதடுகளில் ஒரு சிறு முறுவல் வந்து போனது. விமலாவால் அதில் பொதிந்திருந்த வருத்தத்தை உணர முடிந்தது.
“விடுங்கோ தம்பி, பூபாலன் இப்ப இருக்கிற நிலை பற்றி நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்ல. பிள்ளைகளுமே… லாதிக்கு விபரம் தெரியிறதில, தாய் இல்ல இனி வரவே வர மாட்டா எண்டு அவளுமே கலங்கிப் போய் இருக்கிறாள். ஏதாவது உங்கட மனம் நோகிற மாதிரி நடந்திருந்தா பெரிசா எடுக்காதிங்கோ!” கெஞ்சலாகச் சொன்னார்.
‘இல்லை’ என்றவாறு தலையசைத்தான் பிரணவ்.
“நான் கோவிச்சிட்டு எல்லாம் போகேல்ல. எப்பிடியும் ரெண்டு ஒரு நாளில வீட்ட போகத்தான் இருந்தனான். அத விடுங்கோ!” என்றவன், “லாதிக்கும் குட்டியனுக்கும் தாய வெளில தேடத் தேவையில்ல. இங்க நடக்கிறதக் கவனிச்சா நான்…என்ன சொல்லுறன் எண்டு உங்களுக்கு விளங்கும்.” இறுகிக் கிடந்த குரலில் சொன்ன வேகத்தில் நகர்ந்து விட்டான். கேட்ட விமலாதான் அதிகப்படியான திகைப்பில் வேரோடி நின்றிருந்தார்.
என்னதான் கயல்விழியோடு மனச் சுணக்கம் இருந்தாலும் ‘இப்பிடிச் சொல்லுறது எண்டா!” அவர் மனதுள் குழப்பம் குவியத் தொடங்கிற்று.
இது எதுவும் அறியாதிருந்தாள் கயல்விழி. அவன் விசிறலாக சென்ற விதம் பார்த்தவள் இதயத்தில் படீரென்று மோதியது, பலத்த வலி. ஓடிவந்து கட்டிப் பிடித்த லாதியோடு சேர்ந்து தடுமாறி பின்னால் நகர்ந்து அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.
பிரணவ் முன் வாயில் நோக்கிச் செல்கையில் பெரிய வரவேற்பறையிலிருந்த காயுவின் படத்தின் முன்னால் நிலத்தில் அமர்ந்திருந்தான், பூபாலன்.
“நான் அவ்வளவு சொன்ன பிறகும் போற என்ன?” பிரணவ்வைத் திரும்பிப் பார்க்காதே சொல்ல, தயங்கி நிற்கவோ அவனுக்குப் பதில் சொல்லவோ முனையவில்லை, பிரணவ். விறுவிறுவென்று கணமும் தாமதியாது வெளியேறி காருக்குள் தன்னை அடைத்துக் கொண்டவனால் அதேவேகத்தில், காரைக் கிளப்பிச் சீறவிட முடியவில்லை