Skip to content
மின்னல் வேகத்தில் மனித நடமாட்டமுள்ள இடங்களைக் கடந்து, கனத்துத் துவளும் உடலை ஆளில்லா பிராந்தியத்தில் மண்டியிட வைத்துவிட்டு, வாய்விட்டுக் கத்தவேண்டும் போலொரு ஆவேசம் அவனுள்.
அதை அப்படியே அடக்கும் வழி தெரியாது ஸ்டியரிங்கில் தலை கவிழ்த்தவன் சிறிது நேரம் அசைவின்றியிருந்தான்.
‘எல்லாம் முடிஞ்சிட்டு! இனித் திரும்பிப் பாக்கிறேல்ல!’ மனம் கல்லாகி முடிவெடுத்தாலும் தன் விருப்பு உரிய அங்கீகாரம் கிடைக்காது மூக்குடைபட்டுப் போன வருத்தம் ஆறேன் என்றது. ஆழ மூச்செடுத்து நிலைப்படுத்திக் கொண்டவன், காரைக் கிளப்பினான்.
பாதையில் இறங்கி நிதானமாகச் செல்லும் அவன் காரை தன்னறையின் யன்னாலோரமாக நின்று கண்ணீரோடு பார்த்து நின்றாள், கயல்விழி.
‘இந்த வீடு இருக்கிற நிலையில உங்களுக்கு…’ மனதுள் அவனுக்கு ஏச்சுக்குடுத்தாள். அந்த வழியில் தொடர்ந்து செல்லவிடாது, சப்பு சப்பு என்று கைசூப்பும் குழந்தையில் கவனம் சென்றிட்டு.
“குட்டியனுக்குப் பசிக்குதோ? பால் குடிப்பம் என்ன?” என்று திரும்பி அவனைப் ‘பிளே பென்’னுள் விட்டுவிட்டு நிமிர, ஒட்டிக்கொண்டு நின்ற லாதி கட்டிப்பிடித்தாள்.
சற்று முன்னர் என்னமாதிரி கோபமும் அழுகையுமாக நின்றாள். சித்தி என்ற உறவில் அவளுக்கு மிகுந்த பயம், அப்படியும் இல்லாமல் கோபமும் வெறுப்பும் இருப்பது தெரிந்தே இருந்தாலும் அதற்காகத் தண்ணீர்க் கூசாவைத் தட்டிவிட்ட செயலை ஏற்கவா முடியும்? காயு மட்டும் இருந்திருக்க அந்த இடத்தில் வைத்தே கண்டித்திருப்பாளே! என எண்ணியவளுக்கு, ‘காயு இருந்திருக்க இந்தப் பிரச்சினையே வந்திராதே!’ என்ற எண்ணமும் குறுக்கிட்டது.
“லாதி!” அவள் அழைப்பில் இவள் வயிற்றில் புதைந்திருந்த சிறுமியின் முகம் நிமிர்ந்தது.
“கீழ அந்தத் தண்ணிக் கூசாவத் தட்டிவிட்டது மாதிரி இனி எப்பவும் செய்யிறேல்ல! அதில ஸ்வீட்டிக்கு உங்களில சரியான கோவம்.”
அவள் நெற்றியில் கலைந்து விழுந்து கிடந்த சிகைக் கற்றைகளை பின்னுக்கு ஒதுக்கி விட்டு, கண்களைத் துடைத்து விட்டுக்கொண்டே நிறுத்தி நிதானித்து, சிறுமி உள்வாங்கிக் கொள்ளும் வகையில் இவள் சொல்ல, சிறுமியின் விழிகள் நிறைந்து போயிற்று. அதுமட்டுமின்றி, விசுக்கென்று விலகிவிட்டாள். முறைப்போடு கயல்விழியைப் பார்க்கவும் செய்தாள். நெற்றி சுருங்க நின்றாள், கயல்.
“அப்ப அப்பம்மா சொன்னதுக்கு உங்களுக்குக் கோவம் வரேல்லையா?” கேட்டவள் நின்ற தோரணையும் குரலும் அவள் முதல் முதல் கண்ட சிறுமி லாதி போலிருக்கவில்லை.
“ஓ லாதிம்மா, அப்பம்மா சும்மா ஒரு கதைக்குச் சொன்னது. உங்கட அப்பா அப்பம்மாவக் கோவமா பேசேல்லையா? சரி அப்பிடியே உங்களுக்குப் பிடிக்காட்டி வாயைத் திறந்து சொல்லுறது. அதவிட்டிட்டுச் சாமான்களைப்போட்டு உடைகிறதே? அது சரியான கெட்ட பழக்கம்! ஏதாவது ஒண்டு பிடிக்காட்டி விறுவிறுவென்று வந்து கதவை அடித்துச் சாத்தினாலே காயு…அம்மா என்ன சொல்லுறவா?” தன்னையும் மீறி காயுவை உரையாடலுள் இழுத்து விட்டுவிட்டாள்.
சிறுமி விம்மி வெடித்து அழவே தொடங்கிவிட்டாள்.
“அம்மா அம்மா அம்மா வேணும்.” என்று அரற்றியவளைச் சமாதானம் செய்விக்க பெரும்பாடு பட்டுவிட்டாள், கயல்விழி.
“உங்களுக்கு ஒண்டு பிடிக்கேல்லையோ, விருப்பம் இல்லையோ அதை அமைதியா அழுத்தமா சொல்ல வேணும். அதைவிட்டுட்டு இண்டைக்குப் போல எண்டைக்குமே செய்யக்கூடாது! நான் இங்க இல்லாட்டியும் கூட இப்ப சொல்லுறது இந்தக் குட்டித்தலைக்குள்ள எப்பவும் இருக்க வேணும்.” பகிடிபோல சொல்லிக்கொண்டே அவளை அணைத்துக் கொண்டாள், கயல்.
திமிறி விடுபட்டாள் லாதி.
“என்னம்மா?” என்று கேட்ட கயலுக்கோ, மீண்டும் அழத்தொடங்கப் போகின்றாளோ என்ற கலக்கம்.
“அப்ப…நீங்க… எங்கள விட்டுட்டுப் போகப் போறீங்களோ?” விக்கலிடையே கேட்டவள், “பிரணவ் அங்கிள் சொன்னவர் இங்கயே இருப்பீங்க எண்டு. ப்ளீஸ் ஸ்வீட்டி போக வேணாம்.” பரிதாபமாக அழுதபடி கண்ணீர் விட்டவளுக்குப் போட்டியாக மளமளவென்று தளம்பி வழிந்தன, கயல் விழிகள்.
சற்று முன்னர் பிரணவ், உதறிச் சென்ற நினைவும் காயுவின் மறைவும் சேர்த்து அவள் விழிநீரை வேகமாகத் தளம்பச் செய்தன. சிறுமியை இழுத்துத் தன்னுள் அடக்கிக் கொண்டவள் மனமோ, ‘பிரணவுக்கு எடுக்க வேணும்,’ கால் புள்ளியிட்டு, ‘முதல் ஆறுதலா மனம் விட்டுக் கதைக்க வேணும்.’ தம்மிடையேயான பிணக்கை தீர்த்திட வேண்டும் என்ற அவாவில் முணுமுணுத்தது.
இருந்தாலும், “வேலை முடிஞ்சு இலங்கை போக மட்டும் என்ர குட்டிகளோட தான் இருப்பன்.” தன்னையும் அறியாதே இலங்கை போவது பற்றித்தான் சொன்னாள்.
“நோ…உங்கள நான் இலங்கைக்குப் போகவே விடமாட்டன்.” என்ற லாதி, கயல் முகம் பார்த்தாள். அப்போதுதான் தான் சொன்னது என்ன என்று உறைத்தது, கயலுக்கு.
‘இலங்கை எல்லாம் போகேல்ல, பிரணவ் அங்கிளும் நானும் பக்கத்தில தான் இருக்கப் போறம்.’ மனதுள் சொன்னவள், இப்பவே வெளியில் சொல்லி மீண்டும் லாதியைக் கலங்கடிக்க முயலவில்லை.
விரைவாகத் தன் கண்களைத் துடைத்துவிட்டு அவள் விழிகளைத் துடைத்துவிட்டாள்.
“ஸ்வீட்டி!” அழைத்த லாதியின் உதடுகள் துடித்தன. மீண்டும் கண்கள் நிறைந்தன.
“எங்கட லாதி பெரிய பிள்ளை எல்லா? பாருங்க தம்பியனுக்குப் பசிக்குது நல்லா கை சூப்புறார். நான் போய்…” சொல்லிக்கொண்டு வந்தவளை லாதியின் பேச்சு நிறுத்தியது.
“எனக்கு… ஸ்டெப் மதர் வேணாம் ஸ்வீட்டி; தம்பிக்கும் வேணாம்.” சின்னக்குரலில் சொல்லிவிட்டு மீண்டும் முகம் புதைத்து விம்மியவள் அழுகை வலுத்தது.
சிறுமியின் இந்தப் பயத்துக்கு இவளால் எந்தளவு உத்தரவாதம் கொடுக்க முடியும்!
“அப்பம்மா பிள்ளைகளைப் பார்க்க ஆரும் இல்லையே எண்ட கவலையில தான் அப்பிடிச் சொல்லிப்போட்டா. அதுக்கு உங்கட அப்பாவும் பதில் சொல்லிட்டார் தானே? இனி அந்தக் கதை வேணாம் சரியோ!” சொல்லிக் கொண்டிருக்கையில், குழந்தை சத்தமாக இராகம் இழுக்கத் தொடங்கியிருந்தான்.
“தம்பிக்கு நல்ல பசி வந்திட்டு! நித்திரையால எழும்பி கனநேரமாச்சு, இன்னும் பால் குடிக்கேல்ல எல்லா?” என்றபடி, லாதியின் கண்ணீரைத் துடைத்துவிட்டு கன்னம் இரண்டிலும் கொஞ்சினாள், கயல்விழி. சிறுமியோ, திருப்பி கயலின் இரு கன்னங்களிலும் மாறி மாறி கொஞ்சிவிட்டு வேகமாகக் கழுத்தை இறுகக் கட்டியபடி அவள் தோள் வளைவில் முகம் பதித்தாள்.
“ஏன் சின்னவன் அழுகிறான்?” என்று வந்த விமலா, அந்தக் காட்சியைக் கண்டுவிட்டு கதவோரம் அப்படியே நின்றுவிட்டார். அவர் செவிகளுள் பிரணவ் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
“அவருக்குப் பசி அதான்.” என்றுவிட்டு லாதியை மெல்ல விலக்கி, “தம்பிய பாத்துக்கொண்டு இதில இருங்கோ லாதி, பால் எடுத்துக் கொண்டு வாறன்.” வெளியில் வந்தாள், கயல்விழி.
error: Alert: Content selection is disabled!!