அத்தியாயம் 2 – 2

‘அந்த அக்கா எவ்வளவு அழுத்திருக்கிறா. கடைசில  அவேட அண்ணா அவன்ட வீட்ட போய் நல்லாக் கிழிச்ச பிறகுதான் ஐய்யா அடங்கினவர். அதோட வெளிநாட்டுக்கும்  ஓடிட்டார்.’ மனதுள் சொல்லிக் கொண்டவளுக்கு, “இளவயதில ஆம்பளப் பெடியள் அப்பிடித்தான் மா. இப்ப அந்தப்பெடி கலியாணம் கட்டி அஞ்சு வயசில மகளும் இருக்கு. ரியல் எஸ்டேட் பிசினெஸ் அது இது எண்டு நல்ல வசதியா இருக்கிறார்.” என்று, அவள் அம்மம்மா தாத்தாவே சொல்லும் வகையில் இருக்கிறாராமே!

எண்ணம் அப்படிப் போக, விரல்களோ, தந்தை அனுப்பிய தொலைபேசி எண்ணை அழிப்பதில் வெற்றி கண்டிருந்தது. அதன் பின்னரே, அதை ஒதுக்கிவிட்டுப் பயணத்தை இரசித்தாள், அவள்.

எவ்விதமான சிக்கல்களுமின்றித் தொடர்ந்த பயணத்தில், இலண்டனில்  இறங்கி, அடுத்து நியூயோர் ‘John F Kennedy International Airport’ இல் வந்து இறங்குகையில் வெள்ளிக்கிழமை  அதிகாலை புலர்ந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட இருபத்தியொரு மணித்தியாலப்  பயணம், ஆனாலும் துளியும் அலுப்பாக இருக்கவில்லை.

கண்ணாடிகளுக்கப்பால் தெரிந்த வெளியுலகு கும்மிருட்டாக இருந்தது. மாசி மாதத்திற்கேயுரிய வகையில் பனிப்போர்வைக்குள் அடங்கிக் கிடந்தது, நகரம்.

விமானத்தில் வைத்தே கைக்கடிகாரத்தில் நேரம் மாற்றி விட்டுவிட்டாள். விடிகாலை நான்காகப்  போகிறதென்றதது. 

முதல் முதல் இந்நாட்டுக்குள் வருகிறாள். கடவுச்சீட்டையும்   பிடித்தபடி வரிசையில் நிற்கையில் ‘அப்பா! இதுக்கு நம்மட ஊர் பரவாயில்லையே!’ என்றளவு கெடுபிடியான பார்வையோடு சோதனைகளிருந்தன. 

‘கொஞ்சம் கூட மலர்வின்றி ரோபோ போல வேலை செய்யிறது எப்பிடி?’ மனதில் இந்த எண்ணம் தான் ஓடிற்று. நீண்ட வரிசை நெளிந்து வளைந்து நிற்கின்றதே என்ற ஆரவாரம் ஏதுமின்றி பொறுமையாகத் தம் வேலையைப் பார்த்தார்கள், பணியாளர்கள். சிறுவர், குழந்தைகள் நிலத்தில் உருண்டு பிரண்டு தம் காத்திருப்பின் சுமையைச்  சொன்னதையும் அமைதியாகப்  பார்த்து நின்றார்கள். ‘எங்கட நாட்டுக்கு ஆரையும் வரச் சொல்லி கெஞ்சிக் கூப்பிடேல்ல.  அதையும் தான்டி வாறியோ? நாங்க இப்பிடித்தான்.’ என்ற வகையில் அவர்களின் போக்கு இருப்பதாகப்பட்டது.

கால்மாற்றி மாற்றி நின்று ஒருவழியாக அனைத்துச் சோதனைகளும் முடிய வந்து பயணப்பையை எடுத்துத் தள்ளு வண்டிலில் வைத்துவிட்டு, ‘ஒரு டக்சி பிடிப்பம்.’ நிதானித்து நின்றாள். கரங்களிரண்டையும் தேய்த்துக் கொண்டவள் பார்வையோ சுற்றத்தை அலசியது. வெளியில் கொட்டிக்கிடக்கும் பனி, அவளைப் பயமுறுத்தியது போல் அங்கு யாரையும் பாதிக்கவில்லை போலும். விறுவிறுவென்று நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

கம்பளிச் சட்டையை நன்றாக மூடி, கழுத்தைச் சுற்றியிருந்த கம்பளிச் சால்வையை இறுக்கினாள். கைப்பைக்குள் வைத்திருந்த கையுறைகளை அணிந்து கொண்டு மெல்ல வெளியில் வந்தவள் பார்வை, ‘டாக்சி’கள் பக்கமாகச் சென்றிட்டு. 

அந்நேரம், “கயல்…விழி!” பின்னால் கேட்ட குரல் திடுக்கிட்டுத் திரும்ப வைத்திட்டு.

மின்னலென யோசனை ஓடியது; அதன் அறிகுறியாக நெற்றி சுருங்கியது. நீள் காத்திருப்போ தேடலோ அவசியமிருக்கவில்லை. அவனைக் கண்டுகொண்டதன் அறிகுறியாக முகம் இயல்பாகிற்று.

‘கெட்டாரக் கெட்டக் கொசப்பன்’ என, மீண்டும் முத்திரை குத்திவிட்டல்லவா தொலைபேசி இலக்கத்தையே அழித்தாள். ‘காணவே கூடாது எண்டு நினைச்சா கால் வச்ச மறுநிமிசம் வந்து நிற்கிறாரே!’ கட்டுப்பாட்டிலிருந்து தப்பிய விழிகள், மனதின் முணுமுணுப்பைப் பிரதிபலித்து நின்றன.

அவன் இதையெதையுமே கவனில்லை போலும்! அவளைக் கண்ட சந்தோசத்தை மறைக்கவும் இல்லை. முறுவலோடு வரவேற்பாகக்  கைநீட்டினான். 

“நான் பூபாலன், நினைவிருக்கா? யோசிக்கிறதப்  பாத்தா மறந்தாச்சுப் போல! உங்கட  பின் வீட்டுச் சாந்தா ஆன்ட்டிட மகன்.” 

முகத்துக்கு நேரே நின்று முறுவலோடு அறிமுகம் செய்தால் ‘உன்ன ஆர் எண்டே தெரியாது, தெரிஞ்சு கொள்ளுற ஆர்வமும் இல்ல’ என்றுவிட்டுப் போவதெப்படி?

கணம் தடுமாறி நின்றவள் சமாளித்துக்கொண்டாள். 

“தெரி…யும் …நீங்க …” ஆரம்பித்தவளுக்கு,  அவன் தன்னை அழைக்க வந்திருப்பான் என்று தோன்றவில்லை. அவனோடு நின்று கதை வளர்ப்பது தேவையா என்ற எண்ணம் தான் மீண்டும் எழுந்திட்டு. 

அவன் நீட்டிய கரம் அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டுத்  தொய்ந்தது. அவள் கரம் தராததை எல்லாம் பெரிதுபடுத்தவில்லை. 

“தெரியும் எண்டு வாய் சொன்னாலும் யோசிக்கிறதப் பாத்தா நினைவே இல்லப் போல!” முறுவல் மாறாது தொடர்ந்தான். 

“இல்ல இல்ல நல்லாவே நினைவிருக்கு. பயணம் போறீங்களா? நான் இப்பத்தான் வந்தனான், போயிட்டு வாறன்.” நகரத் தொடங்கியிருந்தாள், கயல்விழி.

“ஹேய்…ஹேய்…” எட்டி அவள் வண்டிலில் பற்றி நிறுத்தியிருந்தான், பூபாலன்.

“உம்மட அம்மம்மா என்ன எண்டா அறியாத தெரியாத ஊரில பிள்ள எப்பிடிச் சமாளிக்கப் போறாவோ தெரியா எண்டு அப்பிடிப் பதறுறா! நீர் எல்லாம் தெரியும் எண்ட கணக்கில இந்த வேகத்தில போறீர்!” 

அவள் முகம் சிவந்திட்டு. நிச்சயம் எரிச்சலில். ‘இந்த அம்மம்மாவுக்கு ஏனிந்த வேலை!’ 

“விடியவெள்ளன குளிருக்க உங்களுக்கு வேல வச்சிருக்கிறா என்ன! சமாளிப்பன் எண்டு எவ்வளவோ சொல்லியும் அவேக்கு நம்பிக்க இல்ல. பரவாயில்லை, நானே போய்க்கொள்ளுறன்.” மீண்டும் நகர முனைந்தவளை, ‘என்ன நீ?’ என்பதாகப் பார்த்தான், அவன்.

“அதுதான் வந்திட்டனே, வாரும் போகலாம்.” அவள் வண்டிலைத் தனதாக்கி மறுபுறமாக நடந்தவனைப் பின்தொடர்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை, அவளுக்கு.  

“பிள்ளைக்கு ஆரிட்டையும் கடமைப்படுறது சுத்தமாப் பிடிக்காது எண்டு உங்கட அம்மம்மா சொன்னது சரிதான் போல!” சொன்னபடி, அவள் பயணப்பையை எடுத்துக் காரின் ட்ரங்கில் வைத்தவனுக்குப் பதில் சொல்லவில்லை, அவள்.

“என்ன யோசன? ஏறுமன்!” கதவைத் திறந்துவிட, வேண்டா வெறுப்பாக ஏறியமர்ந்தவளில் ஒரு கணம் படிந்து விலகிய பார்வையோடு சுற்றி வந்து ஏறினான், பூபாலன். அதேவேகத்தில், “பெல்ட்…போட்டுட்டு…” தான் போட்டுக்கொண்டே சொன்னவன், அவள் போட்டுவிட்டதைப் பார்த்துச் சின்னதாகச் சிரித்தான். 

‘இது கூடத் தெரியாத பட்டிக்காட்டில இருந்துதானே வாறம்!’ மனதின் சீறலை அப்படியே வெளியே தள்ள முயன்றது நா! உதடுகளை அப்படியும் இப்படியும் சுழித்து உள்ளே தள்ளிவிட்டு அமர்ந்திருந்தாள், அவள். முகத்தில் மருந்துக்கும் சிநேகம் இல்லை. 

மறுநொடி, உயிர் பெற்ற காரைப் பாதையில் செலுத்தியவன், “நீர் இன்னும் பதினைஞ்சு வருசத்துக்கு முதல், இருபது வயசில இருந்த பூபாலன மறக்கேல்ல போல!” வாய்விட்டே சிரித்தான்.

அவளுக்குத்தான் அவனை ஏறிடவும் முடியவில்லை. மிகுந்த சங்கடமாக உணர்ந்தாள். அமைதியாக இருந்து அவன் சொல்வது உண்மை என்று காட்டவும் முடியாதிருந்தது. அதேவேளை, ‘இல்ல இல்ல…அப்பிடி எல்லாம் நினைக்கேல்ல!’ என, பொய் சொல்லவும் பிடிக்கவில்லை. 

அவன் பார்வை அவள் முகத்தில் படிந்து விலகியதை உணர்ந்துவிட்டு மெல்லத் திரும்பியவள் இதழ்களில் கீற்றென முறுவல் வந்து போயிற்று.

“so… நான் சொன்னதுதான் சரி!”

“அதில பிழையும் இல்லையே!” இப்படிச் சொல்வதில் அவளுக்கென்ன தயக்கம். ‘என்ன ஆட்டம் போட்டிச்சு இந்தாள்! ம்க்கும்’ 

“நான் அப்பிடிச் சொல்லவும் இல்ல. ஹா…ஹா…” தன் இளம்பாராயம் நினைத்துத் தானே சிரித்தானவன்.

‘பெரிய கெட்டித்தனமான செயல், தன்னையே தான் பாராட்டிச் சிரிக்கிறார், நாம சொல்ல என்ன கிடக்கு!’ மனம் எள்ளினாலும் எதுவும் சொல்லாது பக்கவாட்டில் திரும்பிக் கொண்டாள்.  வெள்ளொளியில் தேவலோகமாகவிருந்த பனிப்போர்வை போர்த்திய சுற்றத்தை இரசிக்கத் தொடங்கியிருந்தன, விழிகளும் மனமும்.

“அதெல்லாம் ஒரு வயசு கயல்விழி. அந்த நேரம் அது ஒண்ணும் பிழையாத் தெரியேல்ல. இப்ப எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். யோசிச்சுப் பாத்தா கொஞ்சம் ஓவராத்தான் ஆடியிருக்கிறன் எண்டு விளங்குது.” நகைக்கும் குரலில் சொன்னவன் உண்மையாகவே உணர்ந்துதான்  சொல்கிறானா, தன்னைக் கிண்டல் செய்கிறானா என்று உணர முடியவில்லை. அமைதியாகவே இருந்தாள்.

“ஆனா, நீர் ஒண்டுக்கும் பயப்படத் தேவையில்லை. இங்க இருக்கிற வரைக்கும் உமக்கு என்ன உதவி தேவை எண்டாலும் தயங்காமல் கேட்கலாம் சரியா? என்னைவிட காயுவையும் லாதியையும் உமக்குப்  பிடிக்கும்.” என்றவன் குரல் உண்மையாகத்தான் இருக்குமோ என்று உணர வைக்க, “உங்கட மகளும் வைஃபுமா?” திரும்பிக் கேட்டாள்.

தலையாட்டியவன் முகமும் பார்வையுமே ‘மனிசி பிள்ளையில ஆளுக்குப்  பே விருப்பம் போல!’ என்ற எண்ணத்தை உருவாக்கீற்று!

error: Alert: Content selection is disabled!!