அத்தியாயம் 4 – 2

கராஜின் பின்புறம் நீளவாக்கில் தாழ்வாரம் இருந்தது. அதுதான் எங்களின் சாப்பாட்டறை, ஓய்வறை எல்லாம்

  பின்புறமிறங்கிச் சுவரோரமாக இருந்த தண்ணீர் குழாயில் முகம் கைகால் அலம்பிவிட்டு, காலையில் அம்மா செய்து தந்திருந்த சாப்பாட்டோடு வந்தமர்ந்தேன்.

  “புட்டுப் பிரட்டல் வச்சிருக்கிறன்என்று சொன்னதாக ஞாபகம்.

   இவ்வளவு நேரமாகத் தெரியாத பசியுணர்வு வயிற்றைப் போட்டுப் பிராண்டியது.

   நாவூறியது! ஒருவித அவசரத்தோடு சாப்பாட்டுப் பார்சலைப் பிரிக்க முனைய, என் கவனத்தைக் கலைத்தது, பக்கத்துவீட்டின் பின்புறத்தில் எழுந்த கூக்குரல்.

   சண்டையோ! நிமிர்ந்து பார்த்த நான், அங்கு கண்ட காட்சியில் சட்டென்று எழுந்துவிட்டேன்.  ‘என்ன பிள்ளைகள் இவையள்?’ என்றுதான் இருந்தது

  அப்போது எனக்கு இருபது வயதுதான். ஆனாலும், ‘தங்கைகள், அக்காக்கள் உன்ர பொறுப்பு!’ அப்படி இப்படிச் சின்ன வயதிலிருந்தே சொல்லிச் சொல்லி  வளர்க்கப்பட்டதாலோ என்னவோ, என் வயதைவிட பத்து வயது முதிர்ந்தவன் போலவேதான் என் நடவடிக்கைகள் இருக்கும்.

    “ஏய் தம்பி! ஏன் இப்பிடிச் சண்டை போடுறீங்க? முதல் அக்காண்ட தலைமயிரை விடு தம்பி!”  அதட்டி விட்டேன் தான்.

  சண்டையிட்ட இருவரும் சட்டென்று விலகிவிட்டார்கள். என் இடையீட்டைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் நின்ற தோரணையே சொல்லீற்று

   இருவருமே பள்ளிச்சீருடையில் இருந்தார்கள். அவன் பிடித்திழுத்ததில் அவளின் இரட்டைப் பின்னல்களும் குலைந்திருந்தன. ஒரு பக்க ரிப்பன் அவிழ்ந்து தொங்கியது. இன்னொன்று அவளருகில் நின்றவன் கரத்தில்.

  என்னை நன்றாகவே முறைத்துப் பார்த்தாள் அவள்

  ‘நீ யாரய்யா எங்களைக் கண்டிக்க?’ பார்வையே கேள்வி கேட்டது.

   அருகில் நின்றவனும் மூச்சு வாங்க நன்றாகவே முறைத்தான்.

   “சும்மா இரு சூர்யா! விடிஞ்சாப்  பொழுதுபட்டா அதுகள் ரெண்டும் இப்படித்தான், எந்த நேரமும் நாய்கடி பூனை கடிதான்; கொஞ்சநேரத்தில  கைகோர்த்துக்கொண்டு திரியுங்கள்.” என்னருகில் இருந்தவன்  முணுமுணுத்தான்

  அவன் இரண்டு வருடங்களாக இங்குதானே வேலை செய்கிறான். அதனால், இதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்றான்.

  “அதில்லசகோதரங்களுக்குள்ள இதென்ன இப்பிடி அடிபிடி?”

  என் வீட்டில் சகோதரிகளோடு இருப்பவன் ஆச்சே! திரும்பவும் கண்டிக்கும் பாணியில் ஆரம்பித்தேன். அவர்களுக்கும் கேட்கட்டும் என்று சத்தமாகவேதான் சொன்னேன்

   அவ்வளவும் தான். விறுவிறுவென்று வேலியோரத்தை நெருங்கினாள் அந்தப் பெண்பிள்ளை.

   “இங்க பாருங்க! இப்ப நாங்க சண்டை பிடிச்சா உங்களுக்கு என்ன வந்தது? நீங்க உங்கட வேலைய மட்டும் பாருங்க சரியா

  வேலி அடைக்காமக் கிடக்கு எண்டோன்ன இங்க இங்கப் பார்த்து வழியிறதுக்கு வேற ஆளப் பார்க்க வேணும்

  நானும் கவனிச்சுக்கொண்டுதான் வாறன். வந்திட்டீனம் சொல்ல. அவ்வளவு அக்கறை!” 

   படபடவென்று பொரிந்துவிட்டுச் சரேலென்று திரும்பி, “நீ வாடா சந்துரு.” இதுவரை சண்டைபோட்டவன் கரத்தைப் பிடித்திழுத்தபடி வீட்டினுள் சென்று மறைந்தாள்.

   “என்னடா இது?” நான் அருகிலிருந்தவனை அதிர்வோடு பார்த்தேன்.

   “இதுக்குத்தான் சொன்னன்.” தன் உணவில் கவனமிருக்கச் சொன்னான் அவன்.

   “அது பொல்லாத பெட்டை; வாய் எண்டாத் தாங்க மாட்ட; தாய் தகப்பன் இல்ல; பிரச்சனையில செத்துப் போய்ட்டீனம்; இவையள் சொந்தக்காரரோ பழக்கமோ என்னவோ ஒண்டு.”அவள் பற்றிச் சொன்னான்

   “! நான் அந்த ஆன்ட்டின்ட  பிள்ளைகள் எண்டு நினச்சன்.” 

   “இல்ல இல்ல, அந்தம்மா வன்னிக்க இருந்துதானே வந்திருக்கிறா. அவவக்கு இரண்டு ஆம்பிளப்பிள்ளைகள் மட்டும்தான். அவாவின்ட மனிசனும் இந்தப் பிள்ளயின்ட அப்பா அம்மாவும் ஒரேநேரத்திலதான் செத்தவையாம்.” என்றவனோடு கதைத்தபடி நானும் சாப்பிடத் தொடங்கியிருந்தேன்.

  ‘வேலி அடைக்காமக் கிடக்கு என்றோன்ன இங்க இங்கப் பார்த்து வழியிறதுக்கு வேற ஆளைப் பார்க்க வேணும்என்று அந்தப்பிள்ளை சொன்னது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. மிகுந்த மனக்கசப்போடு தான் சொல்லிச் சென்றாள். அப்படியென்றால் என்ன அர்த்தம்?

  கராஜில் ஐந்து ஆம்பளைகள் வேலை செய்கிறார்கள். அந்த வீட்டுக் கிணற்றடி கூட ஒழுங்கான மறைப்போடு இருக்கவில்லை. வருடங்கள் உருண்டோடினாலும் நாட்டில் நடந்த பிரச்சனையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டின, அந்த வீடும் வளவும்

   இதில் வேலி மறைப்பும் இல்லையென்றால் எப்படியிருக்கும்?

   “நானும் பார்த்துக் கொண்டுதான் வாறன்…” என்று வேறு சொன்னாளே!

   ‘இங்க இருந்து யாராவது…’ எண்ணிக்கொண்டே, என் அருகிலிருந்து சாப்பிடும் பெடியனைப் பார்த்துவிட்டு அவர்கள் வீட்டைப் பார்க்க, சமையலறை என்று நினைக்கிறேன், அந்த யன்னலில் நின்று எங்களைத்தான் முறைத்தாள், அவள்.

   தொடர்ந்து வந்த நாட்களில் தற்செயலாகக் கூட நான் அந்த வீட்டைப் பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    காரணம், அந்தப் பிள்ளையின் பார்வையில் இருந்த குற்றச்சாட்டை என்னால் மறக்கவே முடியவில்லை

    அந்த வீட்டைப் பார்க்கவில்லையேயொழிய என் கராஜில் வேலை செய்யும் சக பெடியள் மீது என் பார்வை கூர்மையாக இருக்கத் தொடங்கியது. அதன் பயனாக, அந்தப் பிள்ளையின் குற்றச்சாட்டில் முழுமையாகப் பொய்யில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகவே அறிந்து கொண்டேன்.

    யாரில் பிழை சொல்வது?

   ‘அலைபாய்வதும் சபலமும் ஹோர்மொன்களின் வேலைமிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு, மனம் இழுத்த இழுப்புக்கெல்லாம் அலைந்து திரியும் ஆண்களில் சிலரையா? அல்லது, ‘பெண் எனும் பிறப்பு, பொத்திப் பொத்திப் பாதுக்காக்கப்பட வேண்டியதாகும். வலிமையான ஆண்களின் முன்னால் தன்னைக்காக்க அதுவே மிகச் சிறந்தவழிஎன்று, வழி வழியாக வரும் எம் நம்பிக்கைச் செயற்பாடுகளையா

   இவற்றிலிருந்து தவறுகையில் அங்கே பெண் என்னும் உயிர் ஏதோ ஒருவழியில் பாதிப்புறுகிறாள்.

   தங்கைகள், அக்காக்கள் உள்ள வீடு என்று பார்த்துப்  பார்த்து நான் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் நினைவில் வந்து சென்றன.

   ‘திறந்தவெளியாக இருக்கையில் வாறவன் போறவன் எல்லாருமே பார்க்கத்தான் செய்வான்…’ என்று எளிதாகக் கடந்து விடவும் முடியவில்லை.

   காராஜ்  உரிமையாளரிடம் மெல்ல மெல்லச் சொல்லி வேலி போடச் சம்மதம் வாங்கி, தாமதமின்றி  அதன் பணிகளையும் ஆரம்பித்துவிட்டேன்.

  அன்று ஒரு சனிக்கிழமை. காலையிலேயே வேலி போடும் வேலையை முடித்துவிடுவோம் என்று திட்டமிட்டிருந்தோம்

   அந்த ஆன்ட்டிக்கோ அவ்வளவு சந்தோசம்.

   “எப்படிச் சொல்லுறது எண்டு தவிச்சுக்கொண்டிருந்தன் அண்ணே! அன்றாடச் செலவுகள், படிப்புச் செலவுகள் எண்டு பார்த்திட்டு இப்படியெல்லாம் செய்ய ஏலாமக் கிடக்கு. நீங்களே அடைக்கிறது பெரிய உதவி.” 

Tagged:
error: Alert: Content selection is disabled!!