அத்தியாயம் 4 – 2

அதனிடையில், இப்படிச் சந்திப்பாளென்று எதிர்பார்த்திருக்கவில்லை.

கையில் துவண்டிருந்த காயுவின் முகத்தில் சில்லென்ற நீரைத் தெளித்தெழுப்பி, பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் பெண் கொண்டுவந்து போட்ட பிளாஸ்டிக் கதிரையில் இருத்தினாள்.

“கயல்விழி, நீங்களா?!”

“நானேதான். கொஞ்ச நேரத்தில் பயப்படுத்திப் போட்டிங்க. லாதி நல்லாப் பயந்து போனா!” தன்னுடைய கைப்பையை நெஞ்சோடு இறுகப் பற்றிக்கொண்டு தள்ளி நின்றிருந்த மகளை அழைத்து அணைத்துக் கொண்டாள், காயு. தாய் தலை சுற்றி விழப்போக நன்றாகப் பயந்து விட்டாள் சிறுமி. நல்ல வேளையாக அப்போது இவர்களைக் கண்டுவிட்டு வந்த கயல்விழி ஓடி வந்து தாங்கி விட்டிருந்தாள்.

“அம்மாக்கு ஒண்ணுமில்ல குஞ்சு!” மகள் தலையை வருடினாள், காயு. 

“லேசான தலைசுத்து. எனக்கு லோ பிரஷர் இருக்கு.” மென்மையாகச் சிரித்தவள், கதிரை போட்ட பெண் நீட்டிய குளிர்பாணத்தை நன்றி சொல்லி வாங்கி உறிஞ்சினாள். அவளுக்கு ஒன்றுமில்லை என்றதும் அங்காங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நகர்ந்து சென்றார்கள். அதேநேரம்,  அங்காடிக்குள் நுழைந்தது, பூபாலன் கார்.

“அப்பா!” தாயின் அணைப்பிலிருந்து விடுபட்டு ஓடிய மகளை அணைத்துப் பிடித்தபடி மனைவியை நோக்கி வந்தவன் முகத்தில் பதற்றத்தை மேவிய கண்டிப்பு.

“ஏசப்போகுது ஆள். இப்ப இவருக்கு ஆர் சொன்னது?”

“நான்தான் அப்பாக்கு சொன்னனான்.” மீண்டும் வந்து தாயோடு அணைந்து கொண்டாள், லாதி.

“பெரிசா ஒண்டுமில்ல, லேசான தலை சுத்து. அதுக்குள்ள உங்களுக்கு அடிச்சு இருக்கிறா.” மகள் தலையை அப்படியும் இப்படியும் ஆட்டியவள் தலையை, ஆட்டினான் பூபாலன்.

“நீ சொன்னா கேட்க மாட்டியா காயு? இப்ப என்ன அவசரமா இங்க வந்தனி?” கடிந்து கொண்டவன், “அடடா நீர் எங்க இங்க? அப்போதுதான் கயல்விழியைக் கண்டான்.

“கயல்விழி ஓடி வந்து பிடிக்கேல்லையோ உங்கட மனிசிட மண்டை உடைஞ்சிருக்கும்.” அபிநயித்த காயுவின் தோளில் அதட்டல் பார்வையோடு தட்டினாள், கயல்விழி.

“உண்மைதானே?” 

“ஓம் அப்பா, ஸ்வீட்டி ஒடி வந்து பிடிச்சிருக்காட்டி அம்மா விழுந்து இருப்பா!” லாதி. மனைவியை முறைத்தான் பூபாலன். “காலமையே ஏதாவது வாங்க வேணுமா எண்டு கேட்டன் தானே? இதான் கடைசியா இருக்கட்டும். இனி நான் இல்லாமல் இப்படி எல்லாம் வெளிக்கிடுறதில்ல!” அன்போடு கண்டித்தவனை பார்வையாலேயே சாமாதானம் செய்வித்தாள், காயு.

“ஒரு சின்ன விசயம் பா விடுங்கோ!” கணவன் கரத்தைப் பற்றியபடியே, “ஒரு மாதமா வாறன் வாறன் எண்டு போக்குக் காட்டின ஒராள் இண்டைக்கு வசமா பிடிபட்டு இருக்கிறா!” கயல்விழியின் பக்கம் பேச்சை மாற்றி விட்டாள். அதுவே, “நீங்க இப்பவே எங்களோட வர வேணும்!” லாதியை ஒரே பிடியில் நிற்க வைத்திட்டு.

“கட்டாயமா வீக் எண்ட் இல்லாட்டி ஃபிரைடே இவினிங் வாறன்.” என்றதைக் காதில் வாங்காது, பல்பொருள் அங்காடியிலிருந்து அவள் அறைக்குச் சென்று சில நாட்களுக்கான ஆடைகளோடு  கூட்டிச் செல்லவும் வைத்திருந்தது.

“இண்டைக்கு வசமா பிடிபட்டாச்சு போல!” நக்கலாகச் சொன்னபடி, அவர்களை வீட்டில் விட்டுவிட்டு, “வரேக்க உன்ர கார எடுத்திட்டு வாறன்.” விடைபெற்றான் பூபாலன்.

“நானே ஓடிக்கொண்டு வந்திருப்பன். இப்ப வீண் அலைச்சல்! இவர் இப்பிடித்தான், சின்னதையும் பெரிசாக்கிக்கொண்டு!” சலித்துக் கொண்டாலும் கணவனின் சிறு சிறு அக்கறையும் கரிசனையும் கசக்கவா போகுது!

அவன் சென்று மறையும் வரை பார்த்திருந்துவிட்டு உள்ளே வந்தவள், “உங்கட அறை அப்பிடியே இருக்கு.” கயலை அவள் அறைக்கு அழைத்துச் செல்கையில், “குட்டிம்மா போய் பிரஷ்அப் செய்திட்டு வாங்கோ!” மகளை அனுப்பிவிட்டுச் சொன்ன செய்தியில் கயல்விழி முகம் மலர்ந்திட்டு.

“ஹேய் கங்ராட்ஸ்!” காயுவை அணைத்துக்கொண்டாள். 

“இப்பதான் இரண்டு மாசம். லாதிய கன்சீவ் ஆகி இருக்கேக்கையும் லோ  பிரஷர், லைட்டா டயபட்டிஸ் எண்டு இருந்தது. இப்பவும் இருக்கு, அதான் பூபாலனுக்கு ஒரே பயம்.” முறுவலித்தபடி அமர்ந்துகொண்டாள்,   காயு.

“அவர் சொல்லுறதில பிழை இல்லையே காயு, கார் ஓடுறது எல்லாம் தவிர்க்கலாம், ஓடிக்கொண்டு இருக்கேக்க தலை சுற்றி இருந்தா!” கண்டித்தாள் கயல்விழி.

“லாதியை மியுசிக், டான்ஸ் கிளாசுக்கு கூட்டிக்கொண்டு போயிற்று வரேக்க சில சமான்கள வாங்க அங்க வந்தன் கயல், பெரிசா ஓடுறது இல்லத்தான். அதுக்கெண்டு எல்லாத்துக்கும் பாலன எதிர் பாக்கிறதும் ஏலாதல்லோ!” என்றவளிடம் அவள் குடும்பம் பற்றிக் கேட்டாள், கயல்.

“அம்மா தங்கச்சியோட ‘கனடா’வில இருக்கிறா; தம்பி இங்கதான் ‘சான்பிரான்சிஸ்கோ’வில இருக்கிறான்; எனக்குப் பதினைஞ்சு  வயசில அப்பா இறந்திட்டார்.”

“ஓ! சரி சரி.”

“பிள்ள பிறந்த பிறகு மாமியக் கூப்பிட இருக்கிறம். லாதிக்கும் 6 மாசம் வந்து நிண்டவா. அம்மா கொஞ்ச முதலே வந்திருவா. பிள்ள பிறக்கேக்க என்னோட நிப்பா. அதுவரைக்கும் நாங்க சமாளிக்க வேணும்.” களைப்பாக முறுவலித்தாள்.

அன்று தொடங்கி கயல்விழியின் வார இறுதிகள் இவர்கள் வீட்டில் என்றாயிற்று. அப்படி ஒரு வார இறுதி வந்தவளை, புதியவனொருவன் மலர்வோடு வரவேற்றான். அதுமட்டுமின்றி வெளிப்படையாகவே ஆவலும் ஆர்வமுமாகப் பார்க்கவும் செய்தான்.

error: Alert: Content selection is disabled!!