“அதில்ல காயு…எனக்கு உண்மையா இப்ப…” சமாதானமாகச் சொல்ல வர, “நீர் ஒண்டும் சொல்ல வேணாம் கயல்விழி. நாங்க ஆர், உம்மட சொந்த விசயங்களில தலையிட? விடும்!” இறுக்கமாகச் சொல்லிவிட்டு, “இனி இது சம்பந்தமா ஒரு வார்த்த கதைக்கிறேல்ல காயு!” என்று விட்டான், பூபாலன்.
“பச்! நான் சொல்லுறது உங்களுக்கு விளங்கேல்ல.” தொடங்கியவளைக் கதைக்கவும் விடவில்லை.
“வேணாம் கயல்விழி, ஒண்ணுமே சொல்ல வேணாம். உம்மட வாழ்க்க உம்மட விருப்பம். விட்டிரும். நாங்க இனி உம்மட நிம்மதியக் குலைக்கிறது போல கதைக்கப் போறது இல்ல, இரவு நீர் உம்மட தங்கச்சியோட கதைச்சது வெளில இருந்த எங்களுக்கும் கேட்டிச்சு. இங்க எங்களோட வந்து நிக்கச் சொன்னது எல்லாம் இந்தக் கலியாணத்த நினைச்சு இல்ல. தெரிஞ்ச பிள்ள எண்ட பாசத்தில. அக்கறையில. அது உம்மக் கரைச்சல்படுத்தியிருந்தா மன்னிச்சுக் கொள்ளும்!” அவன் படபடவென்று தொடர, முகம் சுண்டிப் போயிற்று, கயல்விழிக்கு.
“நான் உங்கள ஒண்டுமே சொல்லேல்லையே! வீட்டாக்களோடதானே கதச்சன். அவையள் இங்க போயிருக்கச் சொன்னதுக்குப் பின்னால இதா விசயம் எண்டுதான் சொன்ன நினைவு.”
“ப்ளீஸ் கயல் விடும். நானே பிரணவ்ட்ட சொல்லி விடுறன், இனி இந்தக் கதை வேணாம்.” என்று பூபாலன் சொன்ன விதம் காயுவுக்கே ஒரு மாதிரியாக இருந்தது. அப்போ அவனையே பார்த்திருந்த கயலுக்கு?
“என்ன பூபாலன் நீங்க?” குறுக்கிட்டாள், காயு.
“லாதி எழும்பிட்டாளா எண்டு பாக்கப் போறன்.” தேநீர் கோப்பையோடு எழுந்தாள், கயல்விழி. இவள் இங்க வந்து தங்கும் நாட்களில் காலைத் தேநீர் நேரத்தை மூவருமாக வெகு கலகலப்பாகக் கடந்து செல்வார்கள். இன்றோ? இதிலிருந்து கதைத்து இன்னும் அந்தச் சுமுகத்தைக் குலைக்க விரும்பாது எழுந்து நகர்ந்தவள், “எல்லாம் சரி, லாதி சும்மாவே பிடிவாதம், அதுக்க நீரும் சேர்ந்து உம்மைப் போல, தான் பிடிச்சதுக்கு மூண்டு கால் எண்டு இருக்கப் பழக்கி விட்டிராதேயும். ஏனெண்டா இப்ப எல்லாம் எதுக்கு எடுத்தாலும் அவள்ட வாயில வாறது ஸ்வீட்டி தான்.” கலைத்து வந்த பூபாலனின் வார்த்தைகளில் சரேலென்று திரும்பியிருந்தாள்.
“டேய் ஏன்டாப்பா?” காயு.
“பச் விடு! பின்ன என்ன?” விசுக்கென்று எழுந்து கொண்டவன், “ஏதோ இவவ பாழும் கிணத்துக்க தள்ளுறதே எங்கட வேலை போல கதைச்சா!” விறுவிறுவென்று அப்பால் நகர்ந்து விட்டான். இதுவரை அறியாத வகையில் விழிகள் நிறைந்து போகத் தடுமாறிப் போனாள், கயல்விழி.
“கயல்… அவர் சும்மா!” காயு எழுந்து வர, விறுவிறு என்று நகர்ந்து தன் அறைக்குள் புகுந்து லொக் பண்ணிவிட்டாள். தான் அழுது உடைந்து நிற்பதை அடுத்தவருக்குக் காட்டுவதில் எப்போதுமே அவளுக்கு விருப்பம் இல்லை.
“கயல், கதவத் திறவும். அவர் ஏதோ எரிச்சலில ப்பா. நேற்று நீர் சொன்னதக் கேட்ட நேரம் தொடக்கம் அவருக்குக் கவலை. இங்க வந்து நிக்கச் சொன்னதுக்கு பின்னால் இந்தக் கலியாணமோ எண்ட மாதிரி சொன்னீர் எல்லா? அதுதான். நீர் திறவும். பூபாலன் இங்க வாங்க!” அந்தரப்பட்டுப் போனாள், காயு.
“நான் குளிச்சிட்டு வாறன் காயு.” குரல் கொடுத்தவள், அதன்பிறகு, “ஸ்வீட்டி என்ன செய்யிறீங்க?” லாதி கதவைத் தட்டவும் தான் திறந்தாள்.
சிவந்திருந்த விழிகளைப் பார்த்த காயுவும் மகள் முன்னால் எதுவும் சொல்லவில்லை.
அன்று பூங்காவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்கள். அதுவும் பிரணவ்வும் வருவதாக. இப்போது எப்படியும் அவனை தடுத்து நிறுத்த வேண்டுமே. “இண்டைக்குப் பார்க் போக வேணாம்; இன்னொரு நாள் பார்க்கலாம்.” முடித்திருந்தான் பூபாலன்.
“ஸ்வீட்டி நான் ரெடி, நீங்களும் ரெடியோ?” கேட்டபடி அணைத்துக்கொண்டாள், லாதி.
“நானும் ரெடி செல்லக் குட்டி. வடிவாத் தூங்கினிங்களா?” அவளை அணைத்து நெற்றியில் சிலிப்பிக்கொண்டு நின்ற தலைமுடிகளை ஒதுக்கிவிட்டபடி கேட்டவள், தம்மையே பார்த்தபடி வந்த பூபாலனை முறைத்தாள். “இவர் மட்டும் இனிமேல் பட்டு என்னோட ஒரு வார்த்த கதைச்சுக்கொண்டு வரோணும் அப்ப இருக்கு!” அவள் முணுமுணுத்ததைக் கேட்ட காயு கலீரென்று சிரித்தாள்.
“பால் குடிச்சிட்டு வாறன்.” லாதி நகர, “சொறி கயல்விழி! நான் அப்பிடிச் சொல்லி இருக்கக் கூடாது. மனசில இருந்து சொல்லேல்ல. இவ்வளவு நாள் பழகினதில உமக்கே தெரிய வேணும்.” கெஞ்சலாக அவன் ஆரம்பிக்க, கையுயர்த்தித் தடுத்துவிட்டாள்.
“இனி நீங்க ஒருவார்த்த என்னோட கதைக்கிறது இல்ல.” அவன் முகம் பார்த்துச் சொன்னவள், “சொல்லி வையும் காயு! இல்லையோ நான் உண்மையா இந்த வீட்டுப் பக்கம் வரவே மாட்டன். அதோட, இவர் சொல்லுறார் எண்டு…பச்! லாதி உமக்கும் தானே மகள்? நீரும் பிடிகேல்லையோ சொல்லும், நான் இனி இங்க வரேல்ல. அதோட என்ர பொல்லாத குணம் உங்கட மகளுக்கு வராமல் கவனமா பார்த்து நடக்கிறன்.” சொல்லிவிட்டு விருட்டென்று நகர்ந்து விட்டாள்.
“நான் எதுக்கு என்ன சொன்னன், இவா என்ன கதை கதைக்கிறா காயு? சரியான மெண்டல் கேஸ்!” தலையில் அடித்துக்கொண்டான், பூபாலன்.