அத்தியாயம் – 5 (2)

 ‘கிரீச்ச்ச்…’ நான் விழுந்த வேகத்தில் முனகியது கட்டில். என் நெஞ்சினுள் அமிழ்ந்துபோன தலையனையின் அழுத்தம் நெஞ்சாங்கூட்டை மெல்ல அழுத்தியது. அதுவே போதும், என்  கல்யாணியுடனான நினைவுகள் ஒன்றையொன்று போட்டிபோட்டுக்கொண்டு பொங்கித் தெறித்தன.

    கராஜை வாங்கியிருந்தேன் என்று சொல்லியிருந்தேனே!

   அந்நிகழ்வு எங்கள் வீட்டில் பார்த்துப் பாராது மகிழ்வைத் தூவியிருந்தது. அப்பா இருக்கையில் பெரிய அக்காமார் இருவரினதும் திருமணம்  நடந்து முடிந்திருந்தது. இரண்டாவது அக்கா வெளிநாட்டில்.

    மூன்றாவது அக்காவினது காதல் திருமணம்; உள்ளூர் தான், அவரோடு படிப்பிக்கும் ஆசிரியர் தான் மாப்பிள்ளை; நல்ல வசதியுடையவர்கள், ஒத்தசதம் சீதனம் வாங்கவில்லை; மணநாள் செலவுகளிலும் பெரும்பகுதியை அவர்களே செய்தார்கள்

  அதனால் கையில் கொஞ்சக் காசு இருக்க, கராஜை வாங்க முடிவு செய்துவிட்ட நான் மிகுதிக்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.   என்னை அங்க இங்க என்று அலையவிடவில்லை பெரியத்தார், உதயாவின் அப்பா. பெரிய சீட்டு ஒன்றை எடுத்து மொத்தமாக மகள்களின் பெயரில் போட்டு வைக்க இருந்தவர் என் தேவை அறிந்து தந்துதவினார்.

   “எவ்வளவு விரைவாக முடியுமோ திருப்பித் தந்திருவன் அத்தார்.” என்று சொல்லி வாங்கினாலும், வெளியில் கடனுக்கு என்று அலைந்து வட்டி கட்டி என்ற சிரமங்கள் எதையும் வைக்காது பணத்தைத் தந்துவிட்டு, “எனக்கு இப்ப அவசரம் ஒண்டுமில்ல; உன்ர பொறுப்புகள் எல்லாம் முடிய ஆறுதலாத் தா சூர்யா!” என்றிருந்தார் அவர்.

   அதன்பின்னர் சுலபமாகவே  காரஜை வாங்க முடிந்தது. இன்னும் இரு தங்கைகள் தானே? அமோகமாகத் திருமணம் செய்து குடுக்கலாம். என் நினைவெல்லாம் அவர்கள்தான்.

    பெரிதாக இல்லாவிட்டாலும் திறப்புவிழா என்று செய்தே ஆகவேண்டும் என்றார்கள், அக்கா தங்கைகள்

   “அதெல்லாம் தேவையில்ல. வீண் செலவும். ஐஞ்சு வருசங்களா நான் வேலை செய்த இடம் தானே? பிறகு என்ன? எப்பவும் போல வேலை நடக்கட்டும்என்று, நான் சொன்னது வீட்டில் எடுபடவே இல்லை

   “இந்த விசயத்தில நீ சத்தம் போடாமல் இரு!” அம்மாவும் சகோதரிகளும் என் வாயை மூடிவிட்டார்கள்

    “சரி சரி, என்னத்தையாவது செய்யுங்கோ!” என்று விட்டுவிட்டேன்

    திறப்புவிழாவுக்கென ஒவ்வொன்றையும் பார்த்துப்  பார்த்து அவர்களே தான் ஆயத்தம் செய்தார்கள்.

   அப்படித்தான் மீண்டும் பக்கத்து வீட்டுக்காரரின் தொடர்பு ஏற்பட்டது.

   ஐந்து வருடங்களில் பிள்ளைகள் மூவரும் நன்றாகவே வளர்ந்திருந்தார்கள்.

   அதுவும் கல்யாணி பெரிய பெண்ணாகி இருந்தாள். எல்(+2) எல்லாம் எடுத்துவிட்டாளாம். திறப்புவிழாவின் போது என் கடைசித்  தங்கையோடு நின்று எல்லா வேலைகளையும் பார்த்தது அவள் தான்.

   அப்போதுதான் முதல் முதல் என்னோடு கதைத்தாள்.

   அதுவும் கதைத்த முதல் வார்த்தை என்ன தெரியுமா

   “சாரிஎன்னை மன்னிச்சுக் கொள்ளுங்க!” என்றதுதான்.

    ‘சாரியா? ஏன்? என்ன திடீரென்று?’ என் மனம் முணுமுணுத்தது. எனக்கு உண்மையாகவே ஒன்றும் விளங்கவில்லை. அதை வாயால் கேட்காது புருவம் உயர, கேள்வியாகப் பார்த்தேன்.

   கையில் வைத்திருந்த பூந்தி லட்டுத் தட்டை என் முன்னால் நீட்டினாள்.

   “இல்ல வேணாம்.” நகர முயன்றேன். சட்டென்று பாதையை மறித்தபடி நகர்ந்து நின்று கொண்டாள்

   சட்டென்று மோதிய ஆச்சரியத்தோடு ஏறிட்டேன்.

  “இல்லஎடுங்க ப்ளீஸ்! உங்கட கராஜ் திறப்புக்கு வந்திட்டு இவள் என்ன என்னை உபசரிக்கிறது எண்டு எல்லாம் நினைக்க வேணாம். ஒண்டு  மட்டும் எடுங்கோவன். ப்ளீஸ்!” என்று, அவள் சொன்ன மறுநொடி எடுத்துவிட்டேன்.

   “அது! சாப்பிடுங்க! நல்லா இருக்கும், நானே செய்தது.” விழிகள் சுருங்கச் சிரித்தாள்.

   சத்தியமாக, அப்போதுதான் அவளை அத்தனை ஊன்றிப் பார்த்தேன். முதலில் அவள் முகத்தை. அந்தப் பார்வை மெல்லத் தடுமாறி நகர்ந்து அவள் உருவத்தை வலம் வந்து திரும்பவும் முகத்தில் தஞ்சம் கொண்டது. அவளோ முகம் சிவக்க நின்றிருந்தாள். இருந்தும்  நேர் பார்வையோடு தான் நின்றாள்.

    “சாரி சொன்னனே…” மீண்டும் ஆரம்பித்தாள்

    “என்ன திடீரெண்டு? முதல் எதுக்கு?”

    “உங்களுக்கு உண்மையாவே நினைவில்லையா? அஞ்சு வருசங்களுக்கு முதல் உங்கள முதல் முதல் கண்டபோது நல்லாப் பேசிட்டன்.(திட்டிவிட்டேன்) அதுக்குச் சாரி சொல்ல வேணும் எண்டு  எப்பவும் நினைப்பன், இண்டைக்குத் தான் சந்தர்ப்பம் கிடைச்சுது.” படபடவென்று சொன்னாள். விழிகள் இலேசாகக் கலங்கிக் கிடந்தன.

    ‘! அதுவா?’ அந்தச் சம்பவத்தை நான் கொஞ்சமும் மறக்கவில்லை. அதேநேரம், அன்றைய அந்த பள்ளிச்சிறுமியின் கோபத்துக்கு மன்னிப்பையும் எதிர்பார்க்கவில்லை. அன்றைய இவள் கோபத்தில் பிழை கண்டிருந்தால் அல்லவா பிரச்சனையே!

    “அதெல்லாம் நான் ஒண்டும் பிழையா நினைக்கேல்ல.” சிறு முறுவலோடு பதில் சொன்னேன்

   நாங்கள் நின்றது கராஜின் பின் விறாந்தையில். அங்கிருந்து பார்க்கையில் முன்புறம் நன்றாகவே தெரிந்தது. குட்டி, அவள்தான் என் கடைசித் தங்கை எங்களை நோக்கி வரத் திரும்பினாள்.

    அதற்கு மேலும் நான் அங்கு நிற்கவில்லை. சட்டென்று நகர்ந்தேன்.

    “அப்பத் தாங்க்ஸ்!” என்றாள், அவளும் நகர்ந்தபடி

   “இது எதுக்கு?” நேராகவே கேட்டேன்.

   “இது எதுக்கெண்டா அண்டைக்கு நான் ஏசினதப்(திட்டியதை) பிழையா எடுக்காம, விசயம் என்ன எண்டு விளங்கி வேலியும் போட்டு, கிணற்றடியும் அடைச்சுத்  தந்ததுக்குத்தான்.” மூச்சுவிடாது சொன்னாள்.

error: Alert: Content selection is disabled!!