அத்தியாயம் – 5 (4)

இதுவரை மப்பும் மந்தாரமுமாக இருந்த என் மனவானில் பளீரென்று ஒளி வெள்ளம் பாச்சினாள். வைத்த விழி எடுக்காது அப்படியே பார்த்திருந்தேன் நான்

   “தேத்தண்ணி போடப் போறன் உங்களுக்கும் வேணுமா? ஆறு பேருக்கும் போட்டுத் தரட்டா?” என்று கேட்டாள்இப்பிடி அப்பப்போ நடப்பதுதான்இந்நிமிடம் எனக்குத் தேநீர் தேவையாக இருக்கவில்லை. இனியும் பொறுமையும் இல்லை.

    “தனியாவா நிக்கிறீர்?”

    “ம்ம்நான் உள்ளவரத்தான் ஆன்ட்டி கடைக்குப் போறா. இவங்கள் வெளியில…” அவள் சொல்லி முடியவில்லை, இடையிட்டேன்.

     “உம்மோட கொஞ்சம் கதைக்க வேணும் கல்யாணி, அங்க வாறன்.” என்றுவிட்டுப் பதிலுக்கெல்லாம் காத்திருக்காது அவர்கள் வீட்டுக்குச் சென்றேன்.

   இதற்குமுன் அங்கு நான் சென்றதில்லை. வாசலில் வந்து நின்று வரவேற்றாள்.

   “உள்ள வாங்க.” என்ற வேகத்தில்,  “தேத்தண்ணி…” விறாந்தையில் கிடந்த கதிரையில் அமர முன்னே நீட்டினாள்

  ‘போட்டு வைத்துவிட்டுத்தான் வேணுமோ எண்டு கேட்டாள் போலிருக்கு!’ வாங்கிக் கொண்டேஅவள் முகத்தை ஒருகணம் உற்றுப் பார்த்தேன்

   ‘உன்ன விரும்புறன் எண்டு சொல்லி ஒருமாதம் முடிஞ்சிட்டு. உன்ர  ஆன்ட்டி உன்னட்டச்  சொல்லியும் இருப்பார். அதுக்கு ஒரு பதில் சொல்ல வேணுமெண்டு நீ நினைக்கேல்லையா?’ 

  நாக்கு நுனியில் வார்த்தைகள் துருத்தி நின்றன. அவள் வதனமோ என் வரவு ஏற்படுத்திய சந்தோசத்தை ஒரு பதற்றத்தோடு வெளிப்படுத்தி நின்றதுஅந்த முகத்துக்கு நேர வார்த்தைகளை விட முடியவில்லை. கையிலிருந்த சுடு தேநீரை விழுங்கி, துருத்தி நின்ற வார்த்தைகளை உள்ளே அனுப்பிவிட்டேன்.

    பிறகு எதற்காக இவ்வளவு அவசரமாக ஓடி வந்தேன்? தேநீரைக் குடித்தபடி இவளை அருகிலிருந்து இரசித்துவிட்டுப் போகவா?

   என் பார்வையில் தடுமாறி நின்றவளை, “நீரும் இருமன், எங்க உம்மட தேத்தண்ணி? எடுத்துக்கொண்டு வாரும்.” என்றேன்.

   தேநீரோடு வந்தவள் என்னருகில் கிடந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள்.

   நானாகக் கதைக்கத் தொடங்கவில்லை. அதற்கென்று சும்மாவும் இருக்கவில்லை. என் விழிகள் அவள் வதனத்தைச் சுற்றிச்  சுற்றி வந்தது.

   அவள் நயனங்களில் அதே நேர் பார்வை. நான் வந்ததும் சற்றே தடுமாறி நின்றவள் சுதாரித்துக் கொண்டுவிட்டாள் என்பதைப் பறைசாற்றியது அவள் கதைத்த விதம்இயல்பாக என் வீட்டினரை நலம் விசாரித்தாள்.

   “சுகிக்கா கலியாண  விசயம் எந்தளவில நிக்குது?” 

  என் பெரிய தங்கையின் திருமணம் பற்றியெல்லாம் விசாரித்தாள். ஆனால், ‘உன்ன விரும்புறன்என்று சொன்னவனுக்குப் பதிலில்லை

   சுறு சுறுவென்று  கோபம் சுரந்தது. நன்றாக முறைத்தேன்

   அதைக் கண்டுகொண்டுவிட்டாள் என்பதை அவளின், “என்?” என்பதே வெளிக்காட்டியது. அவள் வதனமும் குழப்பத்தைப் பூசிக்கொண்டது.

    “இல்ல கல்யாணி, உம்மட ஆன்ட்டி ஒண்டும் சொல்லேல்லையா?” 

    சட்டென்று நெற்றி சுருக்கினாள். “என்ன? எதப்பற்றி? அப்பிடி ஒண்டும் சொல்லேல்லயே!” என்றதும், எனக்குள் ஏப்படி உணர்ந்தேன் என்று வரையறுக்க முடியவில்லை.

  இவள் என்னைத் தவிக்கவிடவில்லை என்ற மகிழ்வு உடனடியாகத் தாக்கினாலும், ‘ஆன்ட்டி ஏன் அப்பிடிச் செய்தார்? நானாக் கேட்டன் எண்டதும் கருத்தில் எடுக்கேல்லயோ!’ உண்மையாகவே  அவமானமாக இருந்தது

  என் முன்னால் இருப்பவளுக்காக அதைத் துடைத்தெறிந்துவிட்டு அவளை ஏறிட்டேன்.

    “கல்யாணி, உன்ன எனக்குப் பிடிச்சிருக்கு; கலியாணம் செய்ய விரும்புறன்; உங்கட விருப்பம் என்ன எண்டு ஒருமாசத்துக்கு முதலே உன்ர ஆன்ட்டியிட்ட கேட்டிருந்தன்; உன்னோட கதைச்சிட்டுச் சொல்லுறதாச் சொன்னவர் இது மட்டும் ஒரு வார்த்த கதைக்கேல்ல.” படபடத்துவிட்டேன்.

   விசுக்கென்று எழுந்தவள் விழிகள் குபுக்கென்று முட்டி நின்றன.

   “நீங்க? என்னையா?” தழுதழுத்தாள்.

   “ஏன் கல்யாணி? உனக்கு என்னப் பிடிக்கேல்லயா?” நானும் எழுந்துவிட்டேன்

   “இல்ல இல்ல.அப்படியெல்லாம் இல்ல.” என்றவள், “உங்களிட்ட வந்து என்ர விருப்பத்தச் சொல்லுற தைரியம் எனக்கு இருக்கேல்ல.” என்று கண்ணீர் விட்டவள், மறுநொடி என் கைச்சிறைக்குள் இருந்தாள்.

 

    “டி கல்யாணி!“ சற்றே உரத்துத்தான் அழைத்து விட்டேன்

   மறுநொடி, திரும்ப மறுத்த உடலை வெகுவாய் முயன்று திருப்பிப் போட்டு நிமிர்ந்து படுத்தேன். என் கரமிரண்டும் கண் முன்னால் அந்தரத்தில் எழுந்து நின்றன.

    “வாஎன்ர கைவளைக்குள்ள ஓடி வந்திரடி!” அரட்டினேன்

    அன்றிலிருந்து, காதலர்கள் என்ற முத்திரையோடு கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் சுற்றித் திரிந்தோமே! என்  மனத்தோடு போட்டிபோட்டுக்கொண்டுஅவளை அதிகம் உணர்ந்து பாக்கியம் பெற்ற கரங்களை அப்படியே என் முகத்தில் போட்டுக் கொண்டேன்.

    “ஏன்டிஏன்? உனக்கு அவ்வளவு அவசரம் ஏன்?” அரட்டியபடி அன்றைய நாளுக்குத் தாவியது உள்ளம்.

    அதன் பின் என்ன

   “கலியாணம் எண்டால் சும்மாவா தம்பி? உங்களுக்கு ரெண்டு தங்கச்சிகள் இருக்கீனம். அவையளுக்குச் சீதனம் குடுத்துக் கட்டிக் குடுக்கிற நீங்க, சீதனம் எண்டு எதிர்பார்க்கிறதில எந்தத் தப்பும் இல்ல. ஆனா, எங்கட நிலையில யோசிச்சும் பார்க்கேலாது. அதுதான் நீங்க கதைச்சத இவளிட்டச் சொல்லவே யோசிச்சிக் கொண்டிருந்தன்.” என்றார், அவளின் ஆன்ட்டி.

    “என்ன ஆன்ட்டி நீங்க? உங்களுக்கு இதில குழப்பமே வேணாம். நான் விரும்பியது இவள மட்டும் தான். எங்களுக்கு ஒத்த சதம் வேணாம். கலியாணச்செலவு கூட நாங்களே பார்த்துக் கொள்ளுறம்.” என்றுவிட்டேன் நான்.

    கண்கலங்கப் பார்த்திருந்தாள் கல்யாணி.

    “ஆனா ஒன்று…” அவளையே ஊடுருவும் பார்வை பார்த்தபடி ஆரம்பித்தேன்.

    “தங்கச்சிகள் கலியாணத்துக்குப் பிறகுதான் நமக்கு.” என்று சொல்ல, சட்டென்று இடையிட்டார் அவளின் ஆன்ட்டி.

    “என்ன தம்பி சொல்லுறீங்க? பெரிய தங்கச்சிக்குக் கலியாணம் முற்றாக்கி இருந்தாலும் இன்னும் நடக்கேல்ல. சின்னவளுக்கு இனித்தானே பார்க்க வேணும்! அப்ப அவ்வளவு நாட்களுக்கு…” இழுத்தவர், நான் பதில் சொல்ல முதலே, “சரி, அப்ப எழுத்தை (பதிவுத் திருமணம்) மட்டும் சரி இப்பச் செய்து விடுவம்.” என்றார், அவசரமாக.

 

அது சரிவராது ஆன்ட்டி. எழுத்து  எண்டாலும் கலியாணம் எண்டாலும் பெரிசா என்ன வித்தியாசம்? சின்னத் தங்கச்சிக்குக் கல்யாணியை விட வயசு கூட. அதையும் விட, என்னில அந்தளவுக்கு நம்பிக்கை இல்லையா என்ன?” என்ற என் பார்வை கல்யாணியிடம்.

   “ஆன்ட்டி, இவர் சொல்லுறதுதான் சரியா வரும். என்ர நேர்சிங் படிப்பும் முடிய வேணும். அதுக்கே இன்னும் ஒன்றரை வருசங்கள் கிடக்கு.” என்றுவிட்டு என்னிடம் திரும்பியவள், “முதல், உங்கட தங்கச்சிகள்ட கலியாணம் முடியட்டும்; பிறகு நாங்க செய்வம்எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல.” பட்டென்று சொல்லிவிட்டாள்.

   “நம்பிக்கை எல்லாம் இல்லாமல் இல்லத் தம்பி. நல்ல விசயங்களை ஏன் இழுப்பான் எண்டுதான்.” என்றார் ஆன்ட்டி.

   அதோடு, “சரி, இவளே சொல்லீட்டாள், வேற என்ன?” தானும் சம்மதம் சொல்லிவிட்டார்.

   விசயம் அறிந்த என் வீட்டாரும் கல்யாணியை மருமகளாக, மைத்துனியாக அன்போடு ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

    அவளை யாருக்குத்தான் பிடிக்காது? அவள் உருவத்தில் அப்படியெல்லாம் பேரழகி இல்லை. ஆனால், நேர் பார்வையிலும் நிமிர்விலும் கதைத்துப் பழகும் பாங்கிலும் அவள் மன அழகை வெளிப்படுத்திவிடுவாள். அவளுக்கு நிகர் அவளேதான்

  அவளுடனான என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் பொன்னெனக் கழியும் என்ற கனாவில் மிதந்திருக்க, நடந்ததுவோ

   பெரிய தங்கையின் கல்யாணத்துக்கெனக் குடும்பமாக இந்தியா சென்றிருந்தோம். அவளின் மாப்பிள்ளை வெளிநாடு. இலங்கைக்கு வர முடியவில்லை. அதனால், இந்தியாவில் கல்யாணத்தை வைத்திருந்தோம்.

    “நீயும் வாவன் கல்யாணிஆசையாசையாக எத்தனை தரங்கள் கேட்டிருப்பன் . வீட்டில அம்மா, சகோதரிகள் எல்லாருமே கேட்டார்கள்.

     “முக்கியமான ஒரு நேர்முகத் தேர்வு இருக்கு சூர்யா. இல்லையோ வந்திருவன். எனக்கு மட்டும் ஆசை இல்லையா?” என்றிருந்தாள்

 அவளுக்கும் ஆசைதான். இருதலைக்கொள்ளி எறும்பெனத் தவித்தவள், சிரமப்பட்டுப் படித்ததற்கு அது சம்பந்தமான தேர்வு, கருத்தரங்கு முக்கியம் என்று எங்களோடு வரவில்லை என்று சொன்னாள்

  அதுவும் சரியென்று நாங்களும் வற்புறுத்தவில்லை.

   அந்த நாட்களில் அவளின் பிறந்தநாளும் வரவே அவளை ஆச்சரியபடுத்தும் வகையில் அவள் வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த ஸ்கூட்டியை பிறந்தநாள் பரிசாகக் கிடைக்க ஏற்பாடும் செய்துவிட்டே இந்தியா சென்றிருந்தேன்.

   இன்றும் அது என் கராஜில் இருக்கு. அப்படியே அவள் கை படாது. அவள்தான் இல்லை

     “கல்யாணி…” பெரிதாக அலறிவிட்டேன்.

     “டேய்ய்ய்சூர்யாகதவத் திற!” 

     தடதடவென்று கதவில் தட்டினார் அம்மா.

 

error: Alert: Content selection is disabled!!