“ம்ம்ம்…நாம பஸ்சில போவமா?”
“ஐஐஐ ஜொலி! போவம் போவம்!” துள்ளினாள், லாதி. இருவரும் வெளியில் வர, “அப்பாடா இப்பச் சரி வர வேணும் எண்டு நினைச்சிங்களே!” நக்கலோடு எதிர்கொண்டான், பூபாலன்.
“இது தெரிஞ்சுதான் என்ர மனிசி வரேல்ல எண்டு சொல்லிட்டா போல!” சீண்டயபடி, “அய்… அப்பா!” என்று ஓடிவந்த மகளை இலாவகமாகத் தூக்கிக்கொண்டான்.
அவன் வந்து நிற்பான் என்று எதிர்பாராதவளுக்கு ஒரு மாதிரியாகிற்று. ‘எவ்வளவு நேரமா நிக்கிறாரோ!’ அந்தரமாக இருந்தது. அவன் நக்கலை காதில் வாங்காத பாவனையில், “சொறி, நீங்க வந்து நிப்பீங்க எண்டு தெரியா!” முணுமுணுத்தாள். அதைக் காதில் வாங்காத பாவனையில், “இவ்வளவு நேரமா நீயும் ஸ்வீட்டியும் கடைகளையே வாங்கிட்டிங்க போல!” என்றபடி நடக்கத் தொடங்க, “அப்பா நாங்க பஸ்சில வரப் போறம்.” சிணுங்கினாள் லாதி.
“ஆங்! அது தெரிஞ்சுதான் அரைமணித்தியாலமா இங்க நிக்கிறன். இவ்வளவு பைகளையும் கொண்டு சின்னப் பிள்ளையோட…” கண்டிப்பாக கயலைப் பார்த்துவிட்டு, ஒரு கரத்தை நீட்டினான், அவள் பாரத்தைக் குறைக்கவெண்ணி.
அவளோ, ஏதும் சொல்லாது மறுபுறம் திருப்பிக் கொண்டாள். வாதாடாது நடந்தவன் வீடு வரும் வரை மகளோடு கலகலத்துக்கொண்டே வந்தான். அவள் தான் சிடுசிடுப்போடு அமர்ந்திருந்தாள்.
“என்ன ரெண்டு பேருமாச் சேர்ந்து மோலயே வாங்கியாச்சோ!” என்றபடிதான் வரவேற்றாள் காயு.
“மனுசனும் மனிசியும் ஒரே மாதிரிக் கேட்டுக் கண் வைக்காதீங்க!” அவளுக்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுத்தாள், கயல்விழி.
“பின்ன! சமைச்சிப்போட்டு பசிக்க பசிக்கப் பாத்திருந்தது நாங்க தானே. பிரெஷ் அப் செய்திட்டு வாங்கோ சாப்பிட!” என்றவளை இருத்தி, வாங்கி வந்தவைகளை ஒன்று ஒன்றாக எடுத்துக் காட்டினார்கள், இருவரும்.
“இதென்ன கயல் உம்மட வேலை? லாதிக்கு என்னத்துக்கு இத்தின வாங்கினிங்க?”
“அதெல்லாம் நீங்க கேட்கக் கூடாது; இங்க வந்தோன்ன கிடைச்ச முதல் சம்பளத்தில என்ர குட்டிம்மாவுக்கு வாங்காமல் ஆருக்கு வாங்கிறது?”
“இதெல்லாம் உங்கட தங்கச்சிக்கோ!”
“ஓம் காயு, பார்சல் போடலாம் எண்டு இருக்கிறன்.”
“அப்ப உங்கட குட்டிம்மாக்கள் ரெண்டு பேருக்கும் மட்டும் வாங்கி இருக்கிறீங்க! அப்ப நாங்க ஆர் உங்களுக்கு?” மிக மரியாதையாகக் கேட்ட காயு முகத்தில் பொய்க்கோபம்!
“ஹா…ஹா…உண்மையச் சொல்லப்போனா நாம சந்திச்சுக் கொஞ்ச நாட்கள் தான் எண்டா நம்ப ஏலாமல் இருக்கு! சுடர் போலத்தான் நீங்களும்.” உணர்ந்து சொன்னாள், கயல்விழி.
“ம்க்கும்!” பலமாகச் செருமினான் பூபாலன். “ஆடு பகை குட்டி உறவு எண்டு இதத் தான் சொல்லுறது!” தள்ளிக் கிடந்த ஒற்றைச் சொகுசு இருக்கையிலிருந்தவன் கண்கள் கைபேசியிலிருந்தாலும் காதுகள் இங்கேயென்றான்.
பக்கத்திலிருந்த சப்பாத்துப் பெட்டியை அவன் தலைக்குக் குறிவைத்து வீசினாள், காயு. வாகாக விலகிக் கொண்டானவன். “இப்ப வர வர உனக்குப் பழக்கவழக்கம் சரியில்லாமல் போகுது காயு, எல்லாம் புதுச் சிநேகிதம் செய்யிற வேலை!” சொல்லி முடிக்க முதலே விசுக்கென்று திரும்பியிருந்தாள், கயல்விழி. லாதியும் இருக்கையில் அவனோடு வீண் வார்த்தையாடல் ஏனென்று அமைதியாகவே இருந்தால்…
அவள் வாய் திறக்க முதல் எழுந்து சென்றிருந்தாள், காயு. போனவேகத்தில் அவன் முதுகிலொன்று படீரென்று போட்டாள். “எலும்பில்லா நாக்கை உங்கட விருப்பத்துக்கு வளைக்க வேண்டியது, பிறகு இருந்து வழிய வேண்டியது.” மீண்டும் ஒரு தட்டு.
“ஐயோ விடடி. வர வர ரவுடியா மாறிக்கொண்டு இருக்கிற நீ! இண்டைக்கு உன்ர அம்மாவும் தங்கச்சியும் எடுக்கட்டும் சொல்லித்தாறன். அப்பிடியே உன்ர தம்பிக்குப் ஃபோன போட்டு நியாயம் கேக்கிறன்!” இராகம் இழுத்தான்.
“அத முதல் செய்யுங்க, பிறகு நடக்கிறதப் பாப்பம்.” நக்கலாகச் சொல்லிவிட்டு நகர்ந்தாள், அவள்.
“நீ இப்ப சாப்பிட வாறியோ இல்ல நான் தனியாச் சாப்பிடவோ! கிடைக்கிற லீவு நாளில ஒருத்தன் மாஞ்சு மாஞ்சு வாய்க்கு ருசியா சமைச்சுப்போட்டு சாப்பிட இத்தின பாடு படவேண்டிக் கிடக்கு!” சொன்னவன், கயல்விழியை தான் முறைத்தான். அவர்களைப் பார்த்திருந்ததில் செய்த கொத்து ரொட்டியும் ஆட்டிறைச்சிக் கறியும் ஆறிப் போயிருக்குமே! மத்தியானம் இரண்டு மணியாகப் போகுது.
“பிள்ளைத்தாச்சி, நேர காலத்துக்குப் பாத்துப் பாத்துச் சாப்பிட வையுங்க எண்டு வாயோயாமல் சொல்லுற உன்ர அம்மாக்கும் மாமிக்கும் நீயே இனிப் பதில் சொல்லு! எல்லா அலுவலயும் முடிச்சிட்டு உன்ர அருமையான திக்குகளோட இருந்து சாப்பிடு!” படபடத்தபடி, சமையலறை நோக்கி நகர்ந்தவனை இறுகப் பிடித்து நிறுத்தியிருந்தாள், காயு.
“இப்பிடி இருங்கப்பா, ஒரு நாளைக்குத்தானே!” பிடித்து இருத்தி விட்டு, “பத்தே பத்து நிமிசம் மிச்சத்தையும் பாத்திட்டு வாறன்.” அவன் நாடியைப் பிடித்து ஆட்டியவள் மீண்டும் சென்றமர முனைய, எழுந்திருந்தாள் கயல்விழி.
“முதல் சாப்பிடுவம் காயு, நாங்க ஐஸ், டோனட் எண்டு சாப்பிட்டதால பசி தெரியேல்ல!” என்றவள் குரலில் குற்றவுணர்வு.
“நீங்க சாப்பிட்டிருக்கலாம் எல்லா? இனி இப்பிடி ஒருநாளும் இருக்கக் கூடாது சொல்லிட்டன். இல்லையோ …”
“அவா இந்தப் பக்கம் வந்து போறது பற்றி யோசிக்க வேண்டி வருமாம்.” முடித்தான் பூபாலன்.
“வா வா எண்டு கூப்பிட்டது போய் இப்ப ஏன் வருறாவோ எண்ட நிலைல வந்து நிக்குதோ!” முறைத்தாள் கயல்விழி.
“ஹா..ஹா…என்ர மனுசனப் பார்த்தா எனக்குப் பாவமா இருக்கு! அப்பிடி அவர் நினைச்சாலும், ‘இந்த வீடு என்ர சிநேகிதி காயுவுக்கும் எல்லா உரிமை? அதனால நீர் வாய மூடிட்டுப் போம்!’ எண்டு சொல்ல மாட்டீரா என்ன?” கலீரென்ற சிரிப்போடு சொன்ன காயுவைப் பார்த்த கயலுள்ளும் நகைப்பே! அது வெளியிலும் கசிந்திட்டு.