அத்தியாயம் 6-3

இருவரையும் முறைத்த பூபாலனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும் அவனோடு இனி கதைப்பதில்லை என்ற கயல்விழியின் முடிவில் மாற்றமில்லை.

“சாப்பிட்டுட்டுப் பாப்பம் காயு!” கயல்விழி.

“அம்மா எனக்குப் பசியில்லை.” தானும் அங்கேதான் இருக்கிறேன் என்றாள், லாதி.

“அதெல்லாம் பசிக்கும், நீ கவலைப்பட வேணாம்.” மகளை முறைத்துவிட்டு, “எங்க எனக்கு வாங்கினது?” கரத்தை நீட்டியவள், “முதல் வாங்கினீரா?” கண்ணைச் சிமிட்டினாள்.

“காயுவுக்கு இல்லாமலா?”

அவளுக்கென்று வாங்கிய உதட்டுச் சாயம், நகச் சாயம் என, அலங்காரப் பொருட்கள் சிலவற்றைக் கொண்ட சிறு பையைக் கொடுக்க, “அப்ப எனக்கு?” எழுந்து வந்தான், பூபாலன். சட்டென்று ஒரு மாதிரிப் போயிற்று, அவளுக்கு. உண்மையில் அவனுக்கு எதையாவது வாங்க வேண்டும் என்ற நினைப்பே வரவில்லையே!

“கோவக்காரருக்கு எல்லாம் ஒண்டும் வாங்கிக் குடுக்கிற வழக்கம் நம்மட்ட இல்ல என்ன கயல்?” உதவிக்கு வந்தாள், காயு.

“அதானே! எனக்கு வேற வேல இல்லையா என்ன?” பைகளை சேகரித்துக் கொண்டு, “அறையில் வச்சிட்டு வாறன் சாப்பிடலாம்.” நகர்ந்து விட்டாள், கயல்விழி.

“இந்தக் காரமிளகாய் இப்பிடி எல்லாம் கோவம் சாதிக்கும் எண்டு நான் நினைக்கேல்ல காயு. எங்களுக்கும் கோவம் சாதிக்கத் தெரியும். உம்மட ஃபிரெண்டோட இனி நான் ஒரு வார்த்த கதைக்கிறேல்ல சொல்லிட்டன்.” அவள் காதுகளில் வந்து மோதிய குரலில் முறுவலோடு நகர்ந்தவள், பொருட்களை வைத்துவிட்டு வருகையில் சாப்பாட்டு மேசைக்கு வந்திருந்தார்கள். எட்னா பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள், லாதி. அதில் ‘விச்’ இடம்பெற்றிருந்தது.

“லாதிம்மா அப்பிடி ஆரையும் சொல்லக் கூடாது எண்டு சொன்னன் தானே?” சிறுமியின் தலையை செல்லமாக ஆட்டுவது போலிருந்தாலும் கயல்விழியின் குரலில் கண்டிப்பு.

“ம்ம்ம்” வாயைச் சுழித்தாள் சிறுமி. அவளையே பார்த்திருந்தாள், கயல்விழி.

“சொறி ஸ்வீட்டி! இனிச் சொல்ல மாட்டன்.” சின்னக் குரலில் சொன்னாள்.

“சின்ன வயசிலயே, இங்க ஒவ்வொரு வீடுகளிலும் நடக்கிறதுகள், தாய் தகப்பன் பிரிவு எண்டு எல்லாமே ஒண்டாப் படிக்கிற பிள்ளைகளுக்குத் தெரிய வருது கயல். அதில ஸ்டெப் மதர், ஃபாதர் எண்டா இப்பிடி ஒரு தோற்றம் இருக்கு. தோற்றம் எண்டு முழுசாச் சொல்லவும் ஏலாது, பெரும்பாலும் உண்மையும் தான். அங்க ஒண்டு இங்க ஒண்டு நல்லதா நடக்கும். மற்றும் படி ஏதோவொரு விதத்தில இப்படியொரு நிலைக்கு வாற பிள்ளைகள் பாவம் தான். உடல் ரீதியான தாக்குதல் தான் நடக்க வேணும் எண்டும் இல்லையே, எனக்கு என்ன வந்தது எண்டு விட்டேத்தியா இருக்கிறதும் அந்தப் பிள்ளைகளுக்குப் பாதிப்புத்தானே! அதை எல்லாம் கடந்து சொந்தப்பிள்ளை போல கவனிப்புக் கிடைக்கிறது குறைவானவேக்குத்தான்.” மகளுக்காகக் விளக்கம் கொடுத்தாள், காயு.

கொடுமைகள் என்று அனுபவிக்காவிட்டாலும் உற்ற உறவென்று இருப்பவரால் நாம் வேறாக்கப்பட்டோம் என்றுணர்கையில் ஏற்படும் தாக்கம் பற்றி கயல்விழியை விட வேறு ஆரறிவார்!

“அது பிள்ளைகளைப் பெற்றவேன்ட பிழை காயு. அப்பிடிப் பாத்தா அவையள் தான் ‘விச்’. அவே சுயநலமா அவ்வளவு ஈஸியா பிரியிறதால, தங்கட கடமை பொறுப்புகள உதறி மற்றவேட தலையில சுமத்திறதால தான் முக்கால் வாசிப் பிள்ளைகள் துன்பப்பட வேண்டி வருது. ஸ்டெப் மதர் பாதர் பிறகுதான்.” என்று, லாதியின் மனப்போக்கை மாற்றும் விதமாகக் கதைத்த கயல்விழியை, சீண்டலாகப் பார்த்தபடி உணவைச் சுவைத்தான் பூபாலன். அதிலும் கயல்விழி சொல்லி முடிக்கவும், அவனிலிருந்து எழுந்த அசட்டையான சிரிப்புச் செருமல் காயுவை அவன் புறமாகத் திருப்பியிருந்தது.

“என்னப்பா நீங்க?” அதட்டியபடி முழங்கையால் இடித்தாள்.

“ஹா…ஹா…” வாய்விட்டே சிரித்தபடி, “சாத்தான் வேதம் ஓதுறது’ எண்டு சொல்லக் கேட்டிருக்கிறன், இண்டைக்குத்தான் காயு பார்க்கிறன்!” என்றுவிட்டான் அவன்.

“ஏனப்பா இப்ப உங்களுக்கு என்ன பிரச்சின?” கயலின் முறைப்புக்கு வார்த்தை வடிவம் கொடுத்திருந்தாள், காயு.

“ஆங்! எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல, வேதா ஆன்ட்டிய நினைச்சன்.” என்றவன் பார்வை கூர்மையாக கயல்விழியில் படிந்தது; அதில் குற்றச்சாட்டும் ஒட்டிக் கிடந்தது.

“பாவம் ஆன்ட்டி, சில மரமண்டைகளுக்கு அதெல்லாம் விளங்காது. விடு, கதைச்சுப் பிரயோசனம் இல்ல.”

“கடவுளே! சாப்பிடுற இடத்தில தேவையில்லாத கதை வேணாம், சாப்பிடுங்க!” அதட்டல் போட்ட காயு, கணவனை நெருப்பாகச் சுட்டாள். முகம் இறுகிப் போனாலும் ஒற்றைவார்த்தை கதைக்காது சாப்பிட்டாள், கயல்விழி. கொத்துரொட்டி மிகவும் ருசியாக இருந்தது. அதைச் சொல்ல இருந்தவள் சொல்லவில்லை.

பெரியவர்கள் மூவரையும் மாறி மாறி பார்த்தபடியிருந்த லாதிதான், “ப்ராமிஸ் ஸ்வீட்டி, இனி ஆரையும் ‘விச்’ எண்டு சொல்ல மாட்டன்!” என்றாள், அழுத்தமாக. அப்படிச் சொல்லப் போய்த்தான் பெரியவர்களிடையே ஏதோ வாக்குவாதம் என்றளவில் விளங்கியிருந்தது அச்சிறு உள்ளம்.

“பிரணவ்க்கு நீர் மாட்டன் சொன்னது, உங்கட சித்திக்கும் சொந்தம் எண்டோ எண்டும் பூபாலனுக்குச் சந்தேகம் கயல். அதோட, அண்டைக்கு எடுத்துக் கதைக்கேக்க வேதா ஆன்ட்டி அழுதிட்டா! தனக்கு நீயும் சுடரும் ஒண்டு எண்டா. இவர்தான் நிறைய நேரம் கதைச்சவர், அதுதான் அப்பிடிச் சொல்லிப் போட்டார். குறை நினையாதீர் பா! மனசில வச்சிருந்து இங்க வராமல் இருந்திர மாட்டிரே!” சுற்றி சுற்றி விளக்கம் தந்திருந்தாள், காயு.

“உம்மட மனுசன் சொல்லுறதுகள நான் காதில வாங்கிறது இல்ல எண்டு முடிவு செய்திருக்கிறன், விடும்.” என்று சொன்னவள், பூபாலனோடு தேவையில்லாது ஒரு வார்த்தை கதைத்துக்கொள்ளவில்லை, கிடைக்கும் நேரங்களில் இங்கு வருவதையும் நிறுத்தவில்லை.

மேடாகிக் கொண்டிருந்த காயுவின் வயிறு, மெல்லத் துடிக்கத் தொடங்கியிருந்த குட்டிக் குழந்தை; ஆண் மகவாம், அவளைக் கண்டுவிட்டால் போதும் மலர்வில் துள்ளும் லாதி என, அவள் வரவுக்கு எத்தனையோ காரணங்களிருக்கையில், காண்கையில் எரிச்சல் வரவைக்க முனையும் பூபாலனைக் கருத்திலெடுப்பான் ஏன்? வேலை, மாதத்தில் இரு தடவைகளேனும் லாதி வீடென்று பறந்தன, கயல்விழியின் பொழுதுகள். அதோடு, இளவேனில் கால அறிமுகமும் அது காட்டிய அந்நிய நாட்டுக் கொள்ளை வடிவும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்த கோடையின் வெம்மையுமென்று, அங்கு இங்கு என்று ரூயியோடு சுற்றுதலில் அவள் பொழுதுகள் கலகலப்பைச் சேர்த்துக்கொண்டன. இவற்றினிடையே சில தடவைகள் பிரணவ்வை சந்திக்கும் சந்தர்ப்பங்களும் வந்து போயின. உன் மறுப்பை, விருப்பைப் புரிந்து ஏற்றுக்கொண்டேன் என்றவகையில், மரியாதையாக, சிலவார்த்தைகளில் நல விசாரிப்பில் அவன் விலகிட இவள் மனதுக்கும் நிம்மதி.

error: Alert: Content selection is disabled!!