“முப்பத்தியஞ்சு வயசு எண்டாக் கிழடாடி? வெளிய சொல்லாத எல்லாரும் சேர்ந்து கும்மிப் போடுவீனம்” இலகுவாகச் சிரிக்க முயன்றேன். அது முழுமையாக முடிந்தால் தானே!
“உனக்கென்ன விசரே எரும? அவா சொன்னா நீயும் தலையாட்டுவியோ! கலியாணமாம் கலியாணமாம். கண்டறியாத கலியாணம்! இப்பிடி ஒரு கலியாணம் யாருக்கு வேணும்? இதைவிட நீ கலியாணமே செய்யாமல் இருந்திரலாம்.
இப்ப உன்ர அப்பா மட்டும் இருந்தா ஓமெண்டு சொல்லுவாராடி? உன்ர சித்தியும் தான் வாய் திறந்து கேட்டிருப்பாவா?
கடவுளே! பெற்ற பாசம் தான் இருக்கச் சாத்தியம் இல்ல. இத்தின நாட்கள் வளர்த்தவர் தானே? அவாட்டையும் ரெண்டு மகள்கள் இருக்கினமே, ச்சே! பாழும் கிணற்றுக்குள்ள தள்ள முடிவு செய்திருக்கிறாரே!” கோபத்தில் பட்டாசாக வெடித்தாள்.
“விடு நர்மதா, சித்தியும் பாவம்.” கரத்தைப் பற்றி அவள் கவனத்தைத் திசைதிருப்ப முயன்ற நான், அவளின் நெருப்புப் பார்வையில் அமைதியானேன்.
“அன்பும், பொறுமையும், விடாமுயற்சியும் உதயாவோடு கூடப்பிறந்தது எண்டு சொல்லலாம். எல்லாம் அவள்ட அம்மாட அன்புப் பரிசு!” என்று புனிதம் ஆன்ட்டி அடிக்கடிச் சொல்லுவார். அப்ப எல்லாம் சந்தோசமா இருக்கும். ஆனா இப்ப? அதுவே, உன்ர வாழ்க்கைக்கு எமனாகீட்டு!” திட்டித் தீர்த்தாள். அவளுக்கு அழுகையும் வந்திட்டு!
“நர்மதா!” அன்போடு கரம் பற்றி ஆறுதல் சொல்ல வேண்டியளானேன்.
“ச்சு!” என் கரத்தை உதறிவிட்டாள்.
“அன்பைத் தகுதியானவேக்குத்தான் காட்டவேணும். பொறுமை பொறுமை எண்டு அமைதியா இருந்தியோ எருமை மேய்க்க விட்டிருவீனம்.
அதுமட்டும் இல்ல, வெற்றி நிச்சயமாக் கிடைக்கும் எண்டு தெரிஞ்சதுக்குத்தான் திரும்பத் திரும்பப் பொறுமையா முயற்சி செய்ய வேணும்.
நீயும் இத்தின வருசங்களா எவ்வளவு பொறுமையாவும் அன்பாவும் நடந்தும் என்ன பிரயோசம் சொல்லு பார்ப்பம்? உன்ர சித்தியை இம்மியளவு சரி மாற்ற முடிஞ்சுதா? அப்பிடி மாறியிருந்தால், அவவின்ட குடிச்சுக் குடிச்சுக் குடல் எரிஞ்ச தொம்பியை உன்ர தலையில கட்டத் திட்டம் போடுவாவோ?”
ஒரு கட்டத்துக்கு மேல், நர்மதாவின் கண்டிப்புக்கும் கோபத்துக்கும் என்னிடமிருப்பதோ ஒன்றே ஒன்றுதான்.
மௌனம்!
“நீ வாய் திறக்க மாட்ட என்ன? இப்பிடித்தான் அங்கயும் இருந்தியாடி? லூசி!
இங்க பாரு உதயா, நீ வாய்திறவாம இருக்கிற எண்டதுக்காக என்னாலையும் அப்பிடி இருக்கேலாது.
கண்டறியாத நிச்சயமும் மண்ணாங்கட்டியும்.
நீ இனி யாழ்ப்பாணம் போக வேணாம்; இங்கயே இரு! அந்தக் குடிமகனை யாராவது ஒரு குடிமகள் கட்டட்டும்.” உறுமலாக முடிவெடுத்தாள்.
“விசர்க்கதை கதைக்கிற நர்மதா.” சட்டென்று மௌனம் கலைத்தேன்.
“சித்தியை விடு, தங்கச்சிகள் பாவம் எல்லோ. அப்பாவும் இல்ல, நான்தானே பார்க்க வேணும்? அவர்களுக்காகத்தான் நான் எல்லாத்துக்கும் வாய மூடிக்கொண்டு இருக்கிறன்.”
“ஐயோ! அதுக்காக? அவே உன்ர தங்கச்சிகள் எண்டு நீ இவ்வளவு யோசிக்கிற தானே? அவே?
இப்ப அந்த வெறிக்குட்டியக் கலியாணம் செய்துதான் உன்ர பாசமலர்களப் பார்க்க வேணுமா என்ன? அந்தாளக் கட்டினா இப்ப நீ உழைகிறதும் குடிக்கே சரியா இருக்கும்.”
கோபமும் அருவருப்பும் அவளுக்கு.
“இங்க பார் உதயா, அந்தாள் நல்ல ஆஜானுபாகுவான ஆம்பிள தான். யார் இல்ல எண்டது? அதுமட்டும் ஒரு ஆம்பளைக்கு அடையாளமாகுமா சொல்லு?
ராஸ்கல்! காதலிச்சாராம், காதலி செத்துப் போனதும் குடிச்சுக் குடிச்சுக் கவலையைப் போக்குறாராம்; பொறுப்பில்லாத தறுதலைகள்.
இவனுகள் எப்பிடி வேணுமெண்டாலும் அலைஞ்சு திரிஞ்சிட்டு வருவான்கள்; கலியாணம் செய்து வாழ்க்கை குடுக்கிறதுதான் பொம்பளையாப் பிறந்தவளின்ட தலையாய கடமையா?”
தொடர்ந்து திட்டியவளுக்கு என்ன சொல்லிச் சமாதானம் செய்வது? பரிதவித்தேன்.
“சித்தி பற்றி, அவவின்ட தம்பி பற்றி எல்லாம் தெரிஞ்ச விசயம் தானே நர்மதா? எனக்குத் தங்கச்சிகள் முக்கியம். அவையளை வச்சுத்தான் எதையும் செய்வன். அது அப்பாக்கு நான் செய்யிற கடமை நர்மதா.
இப்பவே எனக்கு ஏன் கலியாணம் பேசேல்ல எண்டு பார்க்கிறவே எல்லாரும் கேட்கீனமாம். வெளியில மாப்பிள்ளை தேடுறது எவ்வளவு சிரமம் எண்டு சித்தி சொல்லுறதும் பொய் இல்லயே! அதுதான்…இவரை…”
சித்தியின் சகோதரனைக் கல்யாணம் கட்ட இருப்பவளாகவே தொடர்ந்தேன்.
“இப்ப என்னதான் முடிவாச் சொல்லுற?” கோபம் தெறித்தது நர்மதாவின் குரலில்.
“இனி என்னடி சொல்லுறது? எனக்கு எழுத்து முடிஞ்சிட்டு. இன்னும் ரெண்டு கிழமையிலக் கலியாணம். நீ…நீ வருவ தானே? கெளதம் அண்ணாவையும் கூட்டிக்கொண்டு கட்டாயம் வாடி!” என்ற போது என் கண்கள் கலங்கின.
தோழியின் கோபத்தின் முன்னால் என் உள்ளத்தில் உள்ள குழப்பத்தைக் காட்ட விரும்பவில்லை. அவள் இன்னும் கோபம் கொள்வாளே.
என் முடிவை மாற்றி, கொழும்பில் இருத்திவிட மிகையாக முயன்று தோற்றதில் மிகுந்த கோபம் கொண்டிருந்தாள் நர்மதா. அப்படியிருக்க ‘கலியாணத்து வா’ என்றதும் கொதி பார்வை பார்த்தவள், கொஞ்ச நேரம் எதுவும் கதைக்கவில்லை.
பின், என்னை ஏறிட்டவள் விழிகளில் தீப்பொறி பறக்க, போட்டியாக வார்த்தைகளும் உதிர்ந்தன.
“கண்ணத் திறந்து வச்சிக்கொண்டே, பாழும் கிணறு எண்டு தெரிஞ்சே அதுக்குள்ள பல்ல இளிச்சிக்கொண்டே குதிக்கப் போறனெண்டு சொல்லுற! உனக்கு உண்மையாவே மற கழண்டு போயிற்று!
உன்ன எங்கட வீட்டுப்பிள்ளையா நினைச்சுச் சொல்ல வேண்டியதைச் சொல்லீட்டன் உதயா. கேட்க மாட்டன் எண்டால் நான் என்னத்தச் சொல்லச் சொல்லு பார்ப்பம்?
என்னவோ செய்திட்டுப் போ! உனக்குச் சரி எண்டு தெரியிறத நீ தாராளமாச் செய் ராசாத்தி!” என்றபடி, விருட்டென்று அந்த இடத்தை விட்டெழுந்து செல்ல முனைந்தாள்.
அவளின் கைகளை எட்டிப் பிடித்திழுத்து மீண்டும் அமர்த்தினேன்.
” ப்ளீஸ்! ப்ளீஸ்! கலியாணப் பொம்பளைக்கு இப்பிடிக் கோபம் வரலாமா சொல்லு பார்ப்பம்? என்ர கதை இப்பிடித்தான் இன்னாரோட எண்டு முடிவானதடி. என்ர தலையில என்ன எழுதி இருக்கோ அப்பிடியே நடக்கட்டும்.” என்ற பிறகும் அவள் நிறுத்தவில்லை.
“எனக்கும் அவரைத் தெரியும் தானே டீ? அதுவும் சின்ன வயசில இருந்தே! அவரும் இப்பக் கொஞ்ச காலமாத் தானே இப்பிடி. எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. அவரை எப்பிடியும் மாத்தீரலாம். அதனால, நீ கண்டபடி யோசியாத!” என்று சொல்லிவிட்டேன்.
அடங்காத கோபத்தோடு இடைமறித்தாள் நர்மதா.
“அதுதான்…உனக்குப் புத்தி சொல்ல நான் எல்லாம் யாரு? ஆனாப்பாரு உதயா, காலம் கடந்து கண்ணைக் கசக்கிக்கொண்டு நிண்டு ஒரு பிரயோசனமும் இல்ல. அத நல்லா ஞாபகம் வச்சிக் கொள்ளு!” சீறினாள்.
என்னிலுள்ள அக்கறையும் அன்புமே அதற்குக் காரணம். கலங்கிய விழிகளைத் தாழ்த்தி என் கைவிரலில் புதிதாக வந்திருந்த அந்த அரைப்பவுண் மோதிரத்தைப் பாத்தேன்.
“பார்பம் டீ…என்னால அவ்வளவு லேசில சித்தி, தங்கச்சிகள விட்டுட்டு வெளிய வர முடியாது. நான் கும்பிடுற கடவுள் என்னக் கைவிட மாட்டார் எண்டு எனக்குத் தெரியும். அதால இனி இந்தக் கதையை விடு!” வழமையான திடத்தோடு சொல்லிவிட்டேன்.
அந்தக் கணம், எப்படியாவது என் திருமணவாழ்வு நன்றாக இருக்கும், சீராக அமைத்துக்கொள்ள என்னால் முடியும் என்ற நம்பிக்கை என்னுள் வந்திருந்ததே அதற்குக் காரணம்.
‘கலியாணமே வேணாமெண்டு சொல்லியிருந்தவர் சம்மதிச்சிருக்கிறார் எண்டால்…நிச்சயம் மாற்றலாம்.’ குருட்டு நம்பிக்கையாக இருந்தாலும் இருக்கலாம், என்றாலும், அப்படியே என் மனம் நினைத்தது.
‘இவன் தான் மாப்பிள்ளை’ என்று கை காட்டிய பின்னர், தங்கச்சிகள் தொடர்ந்து அழுது கொண்டிருக்க, ‘அவன் இப்பக் குடிய விட்டுட்டு கராஜுக்கு ஒழுங்காப் போறான்’ என்றும், ‘என்ர தம்பியைக் கட்ட உங்கட கொக்காக்குக் குடுத்து வச்சிருக்க வேணும்’ என்றும் சித்தி சொன்னாரே.
எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.
என்னதான் என்றாலும், பதிவுத் திருமணத்தன்று, வந்த சொற்ப நேரத்தினுள் மோதிரம் ஒன்றை விரலில் மாட்டிவிட்டுவிட்டு மாயமாகியவருடனான மிகுதி வாழ்க்கை, இப்படித்தான் இருக்கப் போகின்றதெனத் துளியும் வரையறுக்க முடியவில்லை என்பதே, என் நெஞ்சறிந்த உண்மை.