“சொல்லடி, உன்ர வீட்டில என்னவோ நடந்திருக்கு. உன்ர சித்தி, நல்லாப் பேசிப்போட்டுத்தான் வர விட்டாவோ! அதான் முகம் ஒருமாதிரிக் கிடக்கா?” அன்பாகக் கேட்டாள் அவள்.
“அப்படியெல்லாம் ஒண்டுமில்லடி.” இறங்கிய குரலில் சொன்ன என் பார்வை, மெல்லிய ஆர்ப்பரிப்போடு அசைந்தாடிய கடலில்.
“உன்னட்ட ஒண்டு சொல்லத்தான் வேணுமடி…” மெல்ல உச்சரித்த உதடுகள், “எனக்கு…எனக்குச் சித்தி கலியாணம் பேசி இருக்கிறா!” வார்த்தைகளை உதிர்த்தன.
அதைக் கேட்டதும் நர்மதாவிற்கோ மட்டற்ற மகிழ்ச்சி! அதைப் பளிச்சென்று முகத்தில் காட்டினாள்.
“என்னடி சொல்லுற?” என்னை இறுகக் கட்டிக் கொண்டாள்.
அடுத்த நொடியே, “பச்… விடடி!” விடுவித்துக் கொண்டேன்.
‘இந்தளவுக்குச் சந்தோசப்பட அப்பிடி என்னதான் நடந்திருக்கு?’
மனத்தில் வெறுமையோடு இந்தக் கேள்விதான் ஓடிற்று. இதையெல்லாம் கவனியாது நான் சொன்ன விசயத்திலேயே நின்றாள் அவள்.
“உண்மையாவாடி? அம்மாளாண(அம்மாவின் மேல் ஆணையாக) கொஞ்சமும் நம்பவே முடியேல்ல. உன்ர சித்திக்கு உன்னக் கண்ணிலும் காட்டக் கூடாதே! நீ வேலைக்குப் போய் உழைச்சிக் குடுக்க வாங்கிக்கொண்டு இப்பிடியே இருக்க விட்டிருவாவோ எண்ட சந்தேகத்தில இருந்தன் நான்.
‘அவளுக்கு நாமதான் நல்ல மாப்பிள்ளையாப் பார்க்க வேணும்மா’ எண்டு வீட்டிலும் சொல்லிக்கொண்டு இருந்தன் தெரியுமா?
அது பார்த்தால், உன்னில அக்கறை இருக்கப் போய்த்தானே கலியாணம் எல்லாம் பேசி இருக்கிறார். அது சரி, மாப்பிள்ள எந்த இடம் டி? யார்? பேரென்ன? ஃபோட்டொ வச்சிருக்கிறியா? சொல்லு சொல்லு!”
வியப்போடு பரபரத்தவளுக்கு, அப்போதும் நான் சொன்னதை நம்ப முடியவில்லை.
நர்மதாவின் மகிழ்வையும் வியப்பையும் எவ்விதப் பாவனையுமின்றிப் பார்த்திருந்தேன் நான். இருந்தும் மாப்பிள்ளை யார் என்ற கேள்விக்குப் பதில் சொல்லத்தானே வேண்டும்? அப்பவும் இதே மகிழ்வோடு கேட்பாளா? நிச்சயம் இல்லை.
‘உன் மகிழ்வுக்கு ஆயுள் அற்பம் டி!’ மனதுள் முணுமுணுத்துக்கொண்டேன்.
“நர்மதா! இங்க பாரன்!”
எனது இடக்கையை மெல்லத் தூக்கி அவள் முன்னால் நீட்டிக் காட்டினேன்.
பார்த்தவள் விழிகள் தெறித்துவிடுமளவிற்கு விரிந்தன.
“ஏய் உதயா! இது என்னடி?”
என் மோதிர விரலைத் தனியாகப் பற்றிப் பிடித்தபடி கேட்டாள்.
“நான் எப்பிடி இவ்வளவு நேரத்துக்கு இதைக் கவனிக்காமல் விட்டன்!” அந்த மோதிரத்தை அப்படியும் இப்படியும் உருட்டிப் பார்த்தபடி சொன்னாள்.
நான் சட்டென்று பதில் சொல்லவில்லை. சத்தியமாய்த் தொண்டைக்குள் பெரிய பந்தாய் அழுத்தியது. அது என்ன என்ற கேள்வி வருமே! அது துக்கப்பந்து என்று ஒரே வரியில் சொல்ல மாட்டேன்.
என் அநாதரவான நிலையா? பயமா? வேண்டாம் சரிவராது என்று திட்டவட்டமாகத் தெரிந்தும் எதிர்த்து நிற்கவோ, மறுக்கவோ முடியாது தலையாட்டிய என் கோழைத்தனத்தில் ஏற்பட்ட கோபமா? வரையறுக்க முடியவில்லை. ஏன் வரையறுப்பான்? எல்லாமே கலந்து நின்று ஆட்டி வைத்தன.
“எரும! வாய்க்க என்னக் கொழுக்கட்டையா? கேக்கிறதுக்குப் பதிலச் சொல்லன். இது…இது…அப்ப உனக்கு எழுத்து முடிஞ்சிட்டா என்ன? ஒரு வார்த்த சொல்ல இல்லயே! எப்ப டி நடந்திச்சு? புனிதம் ஆன்ட்டிக்குத் தெரியாதா? அதெப்பிடிப் பக்கத்து வீட்டில இருக்கிற அவவுக்குத் தெரியாமல் இருக்கும்? அதைத்தான் விடு, எங்களுக்குச் சொல்ல வேணும் எண்டு நீ நினைக்கேல்லப் பாத்தியா?” விழிகள் கலங்கப் படபடத்தாள்.
உண்மை நட்பில் சிறு ஒதுக்கம், மறுப்பு வந்தாலும் தாங்க முடியாதே!
இங்கு, என் விசயத்தில் எனக்கே உரிமை இல்லாத பொழுது நட்புக்கு எங்கேயிருக்காம்?
பதிவுத் திருமணம் எப்போது நடந்தது என்று சொன்னேன், நர்மதாவை நேருக்கு நேராகப் பார்க்க முடியாததால் அசைந்தாடும் கடலையே பார்த்தபடிதான்.
“கலியாணத்துக்கு எல்லாருக்கும் சொல்லலாம் எண்டது சித்திண்ட முடிவு!” கசப்போடு சொல்ல, ஒரு மாதிரிப் பார்த்தவள், “ஓ! சரி, யாரு மாப்பிள்ள?” என்றவள் குரலில் கோபம் எக்கச்சக்கமாய்.
“முதல் என்னைப் பாத்துக் கத(பேசு) உதயா!”
முகத்தைப் பிடித்துத் தன்புறம் திருப்பியவள், என் விழிகளுள் உற்றுப்பார்த்தாள்.
அந்தப் பார்வையைத் தாங்க முடியாது தவிர்த்து விலகின என் நயனங்கள். அதேநேரம் அவளுக்கான பதிலை உதிர்த்தன உதடுகள்.
“சூர்யா…சித்திண்ட தம்பி.”
“என்னடி சொல்லுற?” என்று கூவியபடி எழுந்த நர்மதாவிற்கோ அவ்வளவு ஆத்திரம்.
சுற்றிலும் நின்றவர்கள், நடந்தவர்களின் பார்வை எங்களில் பட்டு விலகியது. அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை அவள்.
“இங்க பாரடி, பகிடி சேட்டைக்கு இது நேரம் இல்ல சரியோ! மாப்பிள்ள யார் எண்டு கேட்டன்.” திரும்பவும் சீறினாள்.
“இதென்னடி வம்பாப் போச்சு! அதான் சொன்னனே!” நான் இப்பொழுது அமைதியாகிவிட்டேன்.
“லூசாடி நீ? அவன்…அந்த மொடாக்குடியன் உனக்கா? என்ன? கட்டாயப்படுத்தி யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் நடத்தி வைச்சிட்டா போல! அவா மட்டும் என்ர கையில கிடைச்சாவோ சட்னி தான்!” பற்களை நறநறத்தாள்.
“அதுக்கு முதல், இதெல்லாம் செல்லாது; இதைக் கழற்றிச் சுழற்றி ஏறி!”
என் விரலிலிருந்த மோதிரத்தைக் கழட்ட எத்தனிக்க, “பச்… விடடி!” எழுந்து விட்டேன்.
“ஏன்? அந்தாளை உனக்குப் பிடிச்சிருக்கா என்ன? எப்பிடி டி ? முதல் உன்ன விட பத்து வயதுக்குக் கிட்ட வித்தியாசம். உனக்கு என்னக் கொள்ளையா? ஒரு கிழட்டுக் குடிகாரனக் கட்ட நிக்கிற.” சீறினாள்.
சட்டென்று சிரித்துவிட்டேன்.