“உண்மையைச் சொன்னா எனக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தாப் பொறாமையா இருக்கு! இந்தச் சின்னக்குட்டி எங்களோட இந்தளவுக்குச் சேர மாட்டா. பெரிய லெவல் காட்டுவா!” சொன்னபடி வந்து, கயலை இலேசாக அணைத்துவிட்டு வாழ்த்தினாள், காயுவின் தங்கை.
“ஓமடி. சிலநேரங்கள் எங்களுக்கே பொறாமையா இருக்கும். அதுவும் பாலன்ட வயிறு எரியிற மணம் வீடெல்லாம் அடிக்கும்.” கேலியாகச் சொன்னபடி கயலை இழுத்துச் சென்ற காயு, “லாதிம்மா இனி இறங்குங்க!” சொல்லியும் அவள் இறங்கவில்லை.
கயல்விழியும், “இருக்கட்டும் காயு!” என்றபடி லாதியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள். அக்கணம் அவள் வாழ்வில் இன்றியமையாதளவு மலர்வைச் சேர்த்தவளாகத் தெரிந்தாள், அச்சிறுமி. அவள் முகத்தை, நிர்மலமான அன்பைப் பொழியும் அச்சிறு விழிகளைப் பார்க்கையில் மனம் பஞ்சு போலாயிற்று!
“க்கும்! போதும் போதும். ரெண்டு பேரும் பிறகு இருந்து செல்லம் கொஞ்சலாம், இப்ப வாங்க கேக் வெட்ட. உருகுது அது.” பூபாலன் தான்.
“ஹா…ஹா… நான் சொன்னன்.” என்ற காயுவை முறைத்தானவன்.
“அங்க பாரும் கேக் உருகுதப்பா!” என்றவன், “என்னதான் சொல்லும் நம்மட மகளுக்குக் கயல் இருந்தா நாம ரெண்டாம் பட்சம் தான்.” முறைப்பாகச் சொன்னாலும் விழிகள் பாசத்தோடு இருவரிலும் படிந்தது.
மற்றவர்களின் கவனத்தைக் கவராது பிரணவ்வைப் பார்த்துக் கண்காட்ட, தள்ளி நின்றிருந்தவன் முன்னால் வந்து, “ஹாப்பி பெர்த் டே கயல்விழி!” கை நீட்டியபடி சொன்னான். ஒரு கணம் தடுமாறிப்போனாள், கயல். முடிவு சொல்லி முற்றுப்புள்ளியிட்ட விடயமாச்சே! எக்காரணம் கொண்டும் தொடரும் எண்ணமும் இல்லை. மனம் தயங்கினாலும் நட்போடு வாழ்த்துகிறானே!
முறுவலோடு வாழ்த்தைப் பெற்றுக்கொண்டவள், அடுத்தடுத்து, நாங்கள் எல்லாரும் உன் குடும்பம் என்றவகையில் வாழ்த்திய காயு வீட்டினரின் அன்பில் கண்கலங்கிப் போனாள். போதாதுக்கு, இலங்கையிலிருந்து சுடர், வேதா, தகப்பன் என்று எல்லாரும் அழைத்து வாழ்த்த உண்மையில் மறக்க முடியாத பிறந்தநாள் ஆகியதது.
“சுடர் அப்பிடியே லைனில இருங்கோ, கேக்க வெட்டீரலாம்.” காயு சொல்ல, “இதெல்லாம் என்ன காயு?” ஆட்சேபித்தாள், கயல்விழி.
“ம்ம்… பாத்தாத் தெரியேல்லையா? பிறந்தநாள் கொண்டாடுறம்.” என்ற பூபாலன், “அப்ப வேதா ஆன்ட்டி, உங்கட மூத்த மகளுக்கு என்ன பரிசு வாங்கி அனுப்பினீங்க?” தொடர, முறைக்க ஆரம்பித்துவிட்டுப் பார்வையைத் திருப்பிவிட்டாள், கயல்விழி.
“வேணுமெண்டு இப்பிடிக் கதைச்சா!” அருகில் நின்ற காயுவிடம் முணுமுணுக்காது இருக்க முடியவில்லை.
‘அம்மா பரிசு வாங்கிக் குடுத்தா எல்லாம் அக்கா வாங்க மாட்டா!’ வாயுண்ணிவிட்டுத் தாயைப் போலவே அமைதி காத்தாள், சுடர்விழி.
“விடும்பா…அவரத் தெரியாதா? நீர் கேக்க வெட்டும்.” மெழுகுவர்த்தியை கொளுத்தியபடி சொன்னாள், காயு.
“ஸ்வீட்டிக்கு ஒரு வயதா?” கேட்டுவிட்டு கலகலவென்று சிரித்தாள், லாதி. எல்லோரும் அதில் கலந்து கொள்ள, முறுவலோடு, அவளைக் கொண்டே அந்த மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டு, அவள் கரம் பிடித்தே கேக்கை வெட்ட முயன்றாள், கயல்.
“நோ நோ…ஸ்வீட்டி தான் வெட்ட வேணும்!” தன் சிறு கரமிரண்டாலும் அவள் கரம்பிடித்து கேக்கை வெட்ட வைத்தாள், லாதி.
முதல் துண்டை எடுத்து லாதிக்குத் தீத்த, அதில் மிகுதியை வாங்கி கயல்விழிக்கு ஊட்டினாள், சிறுமி. கையில் அப்பியிருந்த கிரீமை பார்த்த அவள் முகம் குறும்பில் சுருங்கியது. சட்டென்று கயல்விழியின் கன்னமிரண்டிலும் கோடிழுத்தாள். அதை எதிர்பாராத கயல்விழி பட்டென்று முகத்தைப் பின்னால் நகர்த்திக்கொண்டாள்.
“நோ ஸ்வீட்டி!” அவள் கழுத்தைச் சுற்றி கரத்தைப் போட்டுத் தன்னருகில் இழுத்து, மிகுதியாயிருந்த கிரிமை மூக்கில் நேராகக் கோடிழுத்தாள். அப்படியே முகமெங்கும் பொட்டுப் பொட்டாக வைத்த லாதியின் முகம் முழுதும் அவ்வளவு குதூகலம். ஆரம்பத்தில் விலகிய கயல்விழியின் பார்வை இப்போது சிறுமியின் குதூகலத்தில் சிக்கிக்கொண்டது.
“பாருங்க வேதா ஆன்ட்டி, இதுதான் இப்ப இங்க நடக்கிறது. அவை ரெண்டு பேரும் தனி உலகத்தில இருக்கிற ஆக்கள். நாம எல்லாம் இப்பிடி வாய் பாத்துக்கொண்டு நிக்க வேண்டியதுதான்.” சீண்டியது பூபாலன் குரல்.
கரண் பார்வை இம்மியும் விலகாது மகளில் ஒட்டி நின்றது என்றால் வேதாவுமே அவளைத்தான் பார்த்திருந்தார். சுடருக்கோ, விழிகளில் நீர்த்திரை! கயல்விழி இப்படியெல்லாம் இலகுவாக, வெகு இயல்பாகவிருந்து அவர்கள் கண்டதில்லையே! அப்படியே பிரணவ்வைத் திருமணம் செய்யத் தலையாட்டினாள் என்றால் அதைவிட வேறென்ன மகிழ்வு வேண்டும்?
கயல்விழி மறுப்பைத் தெரிவித்ததை பூபாலன் ஒன்றும் நண்பனிடம் மறைக்கவில்லை. அப்படியிருந்தும் பிரணவுக்கு அவள் மீதான விருப்பம் பட்டென்று விலகிப் போய்விடவில்லை. “பழகிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் என்னைப் பற்றிப் புரிந்து கொள்ளுவாவே!” என்றவகையில் நண்பனிடம் சொல்லியிருந்தவன், வீட்டினர் முணுமுணுத்தாலும் தன் முடிவிலிருந்து இன்னமும் மாறிக்கொள்ளவில்லை. அவன் பார்வையும் கயல்விழியில்தான். அதைக் கவனித்தார் கரண். அடக்கப்பட்ட பெருமூச்சு வெளியேறியது. திரும்பிப் பார்த்தார் வேதா.
“கலியாணத்துக்குச் சம்மதம் சொல்லீட்டாள் எண்டாப் போதுமெண்டு இருக்கு வேதா!” மெல்லச் சொன்னவர் மனதில் இப்போதுதான் மூத்த மகள் பற்றிய கவலை கனமாக அழுத்திக்கொண்டிருக்கு. ஆரம்பத்தில் எல்லாம் மகள் தன்னோடு இல்லையே என்பது பெரும் குறையாகவிருந்தாலும் அவள் வளர்ச்சியில் வெகு திருப்தியோடுதான் இருந்தார். அவள் தாய் இருந்தாலும் இப்படித்தான் வளர்ந்திருப்பார் என்றே எண்ணி மகிழ்ந்திருந்தார்.