அத்தியாயம் – 9(2)

“எனக்கும் விளங்குது கயல். ஆனாலும்…”

“ஏன், உமக்கே மனசுக்க பயம் இருக்கு. அப்பிடியிருக்க கொஞ்ச நாளுக்குத்தானே? பூபாலன் அண்ணாவ விட்டு விலகியே இருக்க பிரச்சினை இல்ல காயு.  நான் வர முதல் பிள்ளைகளப் பாத்துக்கொண்டு எட்டித்தானே இருந்தீர். அடுத்தது சின்னவனுக்குப் பாலும் காணாது…மாப்பால் குடுக்கவும் தேவை இல்ல.” படபடவென்று கடிந்து கொண்டவளுக்கு உடனே பதில் சொல்லவில்லை, காயு. சாப்பிட்டுவிட்டு எழுந்து பெரிய கோப்பையில் சுடு நீரை ஊற்றி எடுத்தபடி, கயலைப் பார்த்தாள்.

 “பிள்ளைகள எங்களப் போலவே ஒரு குறையும் இல்லாமப் பாப்பீர் எண்ட நம்பிக்கை முழுசா இருகிறதால தான் நான் அதப் பற்றிக் கவலைப்படேல்ல கயல். அதோட கண்பார்வையிலதானே இருக்கினம் எண்ட ஆறுதலும். பாலன் சுகமாகி அந்த அறைய விட்டு வெளியில வரும் மட்டுக்கும் எனக்கு வேற ஒண்டும் ஓடாது. ஏனோ…” தடுமாறினாள்.

“எனக்கு எப்பிடிச் சொல்லுறது எண்டு தெரியேல்ல கயல்.” கண்ணீர்த் துளிகள்  உருண்டு தெறிக்கச் சொன்னவளை தொடர்ந்து எப்படிக் கோபிப்பது! தினமும் காலையும் மாலையும் எடுக்கும் இரு பகுதி வீட்டினரும் கயலோடும் கதைத்துவிட்டே வைப்பார்கள். அப்போதெல்லாம் மிகையாகவே கவலைப்படுவார், காயுவின் அன்னை. 

“நான் நிண்டிருக்க வேணும் பிள்ள. அவள் சொல்லுறது கேட்கிறாள் இல்லப் பாரும். என்னதான் இவையள் இளம்பிள்ளைகள் உரமான மனிசர் அப்பிடி இப்பிடிச் சொன்னாலும் பிள்ள பெத்த உடம்பு எல்லா? அதோட அவளுக்குச் சின்னனில தொய்வும் இருந்தது. குமர்ப்பிள்ளையா இருக்கேக்க கூட இழுத்துக்கொண்டு இருந்தவள்.  இங்க வர இல்லாமல் போனாலும் இந்த வருத்தம் பற்றிக்கேட்க நெஞ்சுக்க என்னவோ செய்யுது அம்மா. பிரசர், டயபட்டிஸ் என்று எல்லாம் வந்த பெட்ட…கொஞ்சமும் யோசியாமல் நடக்கிறாள் பாரும்.” புலம்பித் தள்ளிவிடுவார்.

தன் சோர்வை மறைத்து நடமாடும் காயு, கயல் மனதுள்ளும் கவலையை விதைத்தாளே. இருந்தாலும் அதை வெளியில் காட்டிடாது, “பத்து நாளுக்கு மேலாகிட்டு ஆன்ட்டி. பூபாலன் அண்ணாக்கு இப்ப எவ்வளவோ  சுகம். இன்னும் ஒரு கிழமையில் ஆள் முழுசா சுகம் வர காயுவும் ஒகே ஆகிருவா.” தேறுதலாகக்  கதைப்பாள்.

“நான் கும்பிடுற கடவுள் கைவிடார். உமக்கும் எப்பிடி நன்றி சொல்லுறது எண்டு தெரியாதம்மா! வீடு இவ்வளவு பதற்றத்தில இருந்தாலும் லாதியும் சின்னவனும் இப்பிடிச் சந்தோசமா இருக்க நீர் மட்டும் தான் காரணம்.” நெஞ்சாரச்  சொல்வார் அவர். அவரைப்  போலவே பூபாலனின் அன்னையும் சொல்வார். 

இந்நாட்களில், அவர்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் பார்த்துப் பார்த்து வேண்டிக்கொண்டு வந்து கராஜில் காரை நிறுத்தி இறக்கி வைத்து விட்டுச் செல்வான்,  பிரணவ். தினமும் காயு, பூபாலனோடு அலைபேசியில் கதைப்பவன் அப்பப்போ இவளோடும் தள்ளி நின்றபடியே கதைப்பான். “கவனமாக இரும்!” என்று சொல்பவன் குரலில் உண்மையான அக்கறை இருக்கும். அவன் அப்படிச் சொல்லும் ஒவ்வொருமுறையும் இவளுள் ஒரு வகை அசௌகரியம் பரவும். ‘கெதியா இந்தாளுக்கு ஒரு கலியாணம் நடந்தா நல்லம்.’ என்று கூட எண்ணியிருக்கிறாள்.

இப்படியிருக்கையில், பதினெட்டு நாட்களின் பின்னரே பூபாலனுக்கு ‘நெகட்டிவ்’ என்று காட்டியது. நன்றாகவே தேறியிருந்தான். களைப்பு மட்டும் போகவில்லை. சோர்ந்து போயிருந்தவனுக்கு சிறைக்குள்ளிருந்து விடுபட்ட உணர்வு. பிள்ளைகள் இருவரையும் கொஞ்சிக்கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு மனைவியையும் கைவளைக்குள் வைத்திருக்கப்  பேரவா!

அது எங்கே? நெகட்டிவ் என்று வந்ததும் கொண்டாட்ட மனநிலைக்கு வந்திருந்தாள், காயு. “பாலன்!” பாய்ந்து  அவனை அணைத்துக்கொண்டு நின்றவள் மனம் உணர்ந்த நிம்மதியை, சந்தோசத்தை இறுக்கமான அணைப்பிலும் கசிந்த கண்ணீரிலும் வெளிப்படுத்தியிருந்தாள். 

“இண்டைக்கு வாய்க்கு ருசியா புரியாணி செய்றன் பாலன். முதல் முதல் செய்யப்போறன் எப்பிடி இருந்தாலும் உள்ள தள்ளிருங்கோ!” கன்னத்தில் அழுத்தமாக உதடுகளைப் பதித்து எடுத்த வேகத்தில் சமையலறைக்குள் புகுந்தவள் தான். 

“வாய்க்கு ருசியா எண்டு ஆசைகாட்டிப்போட்டு எப்பிடி இருந்தாலும் உள்ள தள்ளட்டாமே! உமக்கு புரியாணி செய்யத் தெரியுமா கயல்? நீரே செய்யுமன்!” சீண்டிய கணவனோடு சண்டை போடக் கூட வெளியே வரவில்லை. மும்மரமாக சமையலில் இறங்கியிருந்தாள்.

“ஏதோ புரியாணி இவரால மட்டும் தான் செய்ய ஏலும் எண்ட நினைப்பு என்ன காயு?” திருப்பிக் கடித்தாலும் உலகம் இருக்கும் நிலையில், கேள்விப்படும் கதைகளுள், கொள்ளை நோய் வந்து இரு கிழமைகளுக்கு மேல் வருந்திவிட்டு எழுந்திருப்பவனைப் பார்க்கையில் கயலுக்குமே அவ்வளவு சந்தோசமாக இருந்தது. 

“கயல் மட்டும் இல்லையோ…” முடிக்கவில்லை பூபாலன். காயுவுக்கோ அவனுக்கோ ஒரு சகோதரி உடன் இருந்திருந்தால் கூட இந்தளவுக்கு அக்கறையாகப் பிள்ளைகளைப் பார்த்திருப்பார்களோ தெரியாதே! அதோடு, தன் வேலையையும் பார்த்துக்கொண்டு வீட்டிலும் கணிசமான வேலைகளைச் செய்தபடி. 

“அதான் பாலன்.” இறைச்சி வெட்டியபடியே ஆமோதித்த காயு, வெங்காயம் உரிப்பவளை அன்போடு பார்த்தாள்.

“இதென்ன பெரிய விசயம் எனக்கு ஒண்டு எண்டா நீங்க செய்ய மாட்டிங்களா?” என்றுவிட்டு, கண்ணடித்தாள் கயல். இப்படியே இந்த இரு கிழமைகளுக்கு கணவனைக் கேட்டுக் கேட்டுப் பாடாய்ப் படுத்தி எடுத்திருந்தாளே, காயு.

“ஐயோ கயல், அந்தச் சொல்லுகளச் சொல்லாதேயும், நெஞ்சுக்க  என்னமோ செய்யிது!” பூபாலன் அலறினான்.

“நான்   பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். உங்களுக்கு நக்கலாக இருக்கு என்ன?” எட்டிப் பார்த்து கணவனை முறைத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள், காயு. “ஆனா ஒண்டு பாலன், நம்மட  பிள்ளைகள் ரெண்டும் இனி என்னையும் உங்களையும் வேணாம் எண்டிட்டு கயலோடு போகப் போகுதுகள் பாருங்கவன். சின்னவனுக்கு பால் கூட எடுத்து வச்சுக் குடுக்கிறதால நான் அவனைத்  தூக்கிறதும்  இல்ல. ஆரம்பத்தில என்னைக் கண்டோன்ன கையைக் கால அடிச்சவர், இப்ப கயலோட அணைஞ்சு கொண்டு இருந்து வெக்கமாய் பாப்பார் தெரியுமா?”

 

error: Alert: Content selection is disabled!!