மாலை மங்கும் பொழுது. சூரியன் ஒரு பக்கமாகக் கரையொதுங்க ஆரம்பித்திருந்தான். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு இருள் வந்து உலகைச் சூழ, மேனிக்கு இதமான காற்று வீச என்று அந்தப் பொழுது மிக மிக ரம்மியமாக இருந்தது.
ஆனால், கையில் ஒரு ட்ராவலிங் பாக்குடன் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் வந்திறங்கிய கேதகியின் மனம், சுற்றுப்புறத்தை ரசிக்கும் நிலையில் இல்லை.
பிடிக்காத பயணம், வேண்டாம் என்று அவள் ஒதுங்கிக்கொண்ட உறவுகள் என்கையில் எப்படி மனம் நல்ல நிலையில் இருக்கும்?
வேறு வழியில்லை. என்னதான் இருபத்தியேழு வயது நிரம்பிய, சொந்தக் காலில் நிற்கும் தைரியமான பெண் என்றாலும் இந்தப் பூமிக்கு அவள் வருவதற்குக் காரணமாக ஒரு மனிதர் இருப்பாரே.
அவர் சொல்கிறவற்றை அவளால் முழுமையாகத் தட்டிவிட முடிவதில்லை. அதுதான் புறப்பட்டு வந்தாள். இதுதான் கடைசி, இனி என்னைக் கூப்பிடக் கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டுத்தான் வந்தாள்.
அவளை அழைத்துச் செல்ல யார் வந்திருப்பார்கள் என்று தெரியாது. அழைத்து விசாரிப்போமா என்று நினைக்கையிலேயே இரு தடிமாட்டு ஆண்கள் குடுகுடு என்று அவளிடம் ஓடி வந்தார்கள்.
புருவங்களைச் சுளித்துப் பார்வையாலேயே அவர்களைத் தள்ளி நிறுத்திக் கேள்வியாக ஏறிட்டாள்.
“ஐயா உங்களக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னவர் தங்கச்சி.” என்றான் ஒருவன் மிகுந்த பணிவுடன்.
அந்த அர்த்தமற்ற பணிவு கூட எரிச்சலைத்தான் உண்டாக்கிற்று. இதற்குள் அவள் கைப்பேசி சிணுங்கிற்று. தயாநிதி என்று விழுந்தது. அவள் இந்தப் பூமிக்கு வருவதற்கும், அனைவரையும் வெறுத்துத் தனியாக வாழ்வதற்கும் காரணமானவர்.
“சொல்லுங்க!” அழைப்பை ஏற்று அந்நியக் குரலில் பேசினாள்.
“எங்கட ஆக்கள்தான். பயப்பிடாம வாம்மா. நீ ஒருக்கா அவங்களிட்ட ஃபோனை குடு.” என்றார் வாஞ்சையுடன்.
அந்தக் கைப்பேசியை அவள் மறுபடியும் பயன்படுத்த வேண்டாமா? அவர்களிடம் கொடுக்காமல் மைக்கை அழுத்திவிட்டு, “கதைங்க.” என்றாள்.
“டேய்!”
“ஐயா சொல்லுங்கய்யா!”
“பிள்ளையக் கவனமா கூட்டிக்கொண்டு வரோணும். வாற வழில எங்கயாவது சொறிச் சேட்டை விட்டுப் பிரச்சினைய இழுத்தா தோளை உரிச்சு உப்புத் தடவுவன்.” என்று மிரட்டிவிட்டுக் கைப்பேசியை வைத்தார் அவர்.
பெற்ற மகளை அழைக்க வர முடியாத தந்தை, தன் அடியாட்களை உத்தரவிடுகிறாராம். நடக்கும் எல்லாவற்றையும் மனம் அடியோடு வெறுத்தது. இவ்வளவு தூரம் வந்துவிட்டுத் திரும்பிப் போக முடியாமல் அவர்களோடு நடந்தாள்.
ஒருவன் அவள் கையில் இருக்கும் பையை வாங்க வந்தான். கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு, “நானே கொண்டு வாறன்!” என்றாள் சுருக்கமாக.
அவளை ஏந்திக்கொண்ட உயர் ரகக் கார் ஒன்று, மிதமான வேகத்தில் பயணித்து, இருபது நிமிடங்களின் பின் சற்றே ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு பெரிய வீட்டின் முன்னே சென்று நின்றது.
புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு மாடிகளும் மேலே மொட்டை மாடியும் கொண்ட பிரமாண்டமான வீடு அது.
அவள் இறங்குவதற்குள், “கேதா வந்திட்டியா! வா வா!” என்று கரங்கள் இரண்டையும் விரித்தபடி வந்தார் தயாநிதி.
அவள் உடல் விரைப்புற்றது. அவர் பின்னால் அவர் மனைவி… அப்படிச் சொல்லலாமா என்கிற கேள்வி சட்டென்று வந்து நின்றது. அந்தப் பெண் சோபனா மனைவி என்றால் அவள் அன்னை? அவர்கள் இருவர் கைகளுக்குள்ளும் புகாமல் விலகி நின்றுகொண்டாள்.
இருவரும் அவளை உள்ளே அழைத்துச் சென்றனர். பணத்தின் செழுமை காலை வழுக்கும் மார்பில் தரையிலிருந்து பெரிய விறாந்தையில் ஒரு பக்கச் சுவரையே அடைத்திருந்த தொலைக்காட்சி வரை அப்படியே தெரிந்தது.
இன்னொரு பக்கம் பதினெட்டாவது பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அத்தனையிலும் காசை கொட்டி இறைத்திருக்கிறார்கள் என்று அப்படியே தெரிந்தது.
இதற்குள் கரையான் புற்றுக்குள் இருந்து வரும் ஈசல்கள் போன்று, மாடியில் இருந்து, மற்ற மற்ற அறைகளுக்குள் இருந்து என்று கடகடவென்று நிறைய மனிதத் தலைகள் வெளியே வந்தன.
தயாநிதியின் இரண்டு மகன்கள், ஒரு மகள். சோபனாவின் தங்கை மாலினி, அவள் கணவன், அவர்களின் இரு பிள்ளைகள். மாலினியின் கணவனின் தங்கை, அவள் கணவன், அவர்களின் இரண்டு பிள்ளைகள் என்று எல்லோரையும் சோபனா அறிமுகம் செய்துவைத்தார்.
பிள்ளைகளின் முகங்களைத் தவிர்த்து பெரியவர்களின் எந்த முகங்களும் நல்லதாக இல்லை. பெண்கள் அதிநவீன உடையிலும் அலங்கரிப்பிலும் இருந்தார்கள் என்றால் ஆண்கள் ஏதோ ஒரு வகையில் அச்சமூட்டினார்கள். அந்தளவில் அவர்கள் பார்வை, தோற்றம் என்று எல்லாமே வேறாக இருந்தன.
“எனக்கு ரூம்?” அவர்களின் குத்தும் பார்வைகளைத் தவிர்க்க விரும்பி தயாநிதி சோபனா இருவரையும் பொதுவாக நோக்கி வினவினாள்.
“மேல இருக்கு” என்றார் சோபனா.
“நீ அவாக்கு சாப்பாட்டை ரெடி பண்ணு. நான் காட்டுறன்.” என்று அவரிடம் சொல்லிவிட்டு, அவளை அழைத்து வந்து அவளுக்கான அறையைக் காட்டினார் தயாநிதி.
கீழ் தளத்துக்குச் சற்றும் குறைவில்லாமல் மேலேயும் பணத்தைக் கொட்டியிருந்தார்.
“அறை பிடிச்சிருக்காம்மா?” என்னென்ன வசதிகள் எல்லாம் அந்த அறையில் உண்டு என்று காட்டிவிட்டு ஆர்வமாக வினவினார்.
அவர் அவளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்புவது புரிந்தது. அவள் மனத்தை அது தொட வேண்டுமே. வாயால் பதில் சொல்லப் பிடிக்காமல் தலையை மட்டும் அசைத்தாள்.

