ஆட்டநாயகன் 11.1

குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான் வேந்தன். சிவநாதர் கூப்பிட்டுச் சொன்ன செய்தியில் அதிர்ந்துபோனான். கெட்ட வார்த்தைகளில் அவர் திட்டியதுகூடப் புத்தியில் உறைக்கவில்லை. மாறாக நட்ட நடுச் சாமத்தில் காரியத்தைக் கன கச்சிதமாக முடித்திருந்த போதும் கண்டுபிடித்துவிட்ட எல்லாளன் மீது சினம் பொங்கிற்று. 

 

அவன் தந்தை இவனை எதற்கு இங்கே மாற்றினார்? அதனால்தானே இத்தனையும் என்று தந்தை மீது எரிச்சல் உண்டாயிற்று. அதே நேரத்தில் கேதகி கிடைக்காமல் போய்விடுவாளோ என்று பயந்தான். 

 

சிவநாதர் சொன்னதுபோன்றுதான் அவனும். அவளோடு மட்டுமே நிற்கும் எண்ணம் இல்லை. இதற்கு முதலும் சில பல அனுபவங்கள் உண்டு. அதற்காக அவளை இழக்க முடியாது. அவள் அழகும் வாளிப்பான தோற்றமும் கண்களுக்குள்ளேயே நின்று அவனைச் சித்திரவதை செய்தன. 

 

எல்லாளன் இன்னும் நெருங்கினால் நிச்சயமாகச் சிவநாதர் கேதகியை முடித்துவிடுவார் என்று தெரியும். அதற்கு முதல் அவனுக்கு அவள் வேண்டும். அவன் மனம் அடித்துச் சொன்னது. 

 

*****

 

இன்னுமே தான் ஏன் கடத்தப்பட்டிருக்கிறோம், தனக்குப் பின்னால் என்ன நடக்கிறது, விடுதலை என்பது எப்போது, முதலில் அவளுக்கு அது கிடைக்குமா என்கிற கேள்விகளும் அவை உண்டாக்குகிற பயங்களும் கேதகியைப் போட்டு ஆட்டிப்படைத்தன. 

 

முதலில் அவளைப் பெற்றவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா? அங்கிருந்த மற்றவர்கள்? அவளால் அவர்களோடு ஒட்ட முடியாதபோதிலும் அவர்கள் முகங்களில் தெறித்த மகிழ்ச்சியைப் பார்த்தாளே. அத்தனை பேரும் கருகிப்போயிருப்பார்களா? இருப்பதற்குச் சாத்தியமே இல்லை என்று அறிவு அடித்துச் சொன்னாலும் அதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு எந்த வழியும் இல்லை. 

 

அந்த அவனிடம் எத்தனையோ முறை கேட்டுவிட்டாள். மலைகளைக் கூட அசைத்துவிடலாம் போலும். தடிமாடுகள் மூவரையும் அசைக்கவே முடியவில்லை. அங்கிருந்து தப்பித்துப் போக முடியும் என்கிற நம்பிக்கையும் இல்லை. மாமிச மலைகள் மூன்று இருப்பது போதாது என்று நாய் வேறு இருக்கிறதே. 

 

அவளால் முடிந்தது ஒரு நாளைக்குப் பத்துத் தரம் குளியலறை சென்று வருவதுதான். இன்னும் சொல்லப்போனால் அவள் பொழுதுபோக்கு அதுதான். அதைத் தாண்டி அந்த ஹோலில் வந்து நின்றால் போதும். என்ன என்பதுபோல் எவனாவது ஒருவன் அவள் முன்னே வந்து நிற்பான். 

 

அப்போதும் குளியலறை சென்றுவிட்டுத் திரும்பியவள் முன்னே திடீரென்று வந்து நின்றான் வேந்தன். அவள் திடுக்கிட்டுப்போனாள். 

 

“வா!” என்று வந்ததும் வராததுமாக அவள் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு நடந்தான் அவன். 

 

அவள் பயந்துபோனாள். வேகமாகத் திரும்பி மற்ற மூவரையும் தேடினாள். வீட்டின் பின் பக்கமிருந்து அந்த அவன் வருவது தெரிந்தது. ஒரே உதறலில் இவனிடமிருந்து கையை உதறி விடுவித்துக்கொண்டு அவனிடம் ஓடிப்போனாள்.

 

“என்னை அவரோட அனுப்பாதீங்க ப்ளீஸ்!” என்று கெஞ்சிக்கொண்டு அவனை ஒட்டி நின்றுகொண்டாள்.

 

அவளையும் அவள் தன்னை நெருங்கி நிற்பதையும் ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு முன்னால் வந்து, “என்ன வேந்தா?” என்றான் நிதானமாய். 

 

“என்னைக் கேள்வி கேக்க நீ ஆர்? அவளை அனுப்பு.” கேதகி தன்னை உதறிவிட்டு ஓடிப்போய் அவன்தான் பெரிய பாதுகாப்பு என்பதுபோல் நின்ற காட்சி உண்டாக்கிய ஆத்திரத்தில் சீறினான். 

 

“அனுப்பாட்டி?”

 

“அந்தளவுக்கு நீ பெரிய இவனாடா? என்ர ஐயா தூக்கிப்போடுற காசுக்கு வேலை பாக்கிறவன் நீ. அவரின்ர மகன் என்னட்ட திமிர் காட்டுவியா?” திரும்பவும் கேதகியை நோக்கி அவன் வர அவனை விட வேகமாய் வாசுவின் பின்னால் ஒளிந்துகொண்டாள் கேதகி. 

 

அதற்கு முதலே ஒற்றைக் கையை அவன் நெஞ்சில் வைத்துத் தள்ளினான் வாசுசேனன். “ஒழுங்கா திரும்பி போனா உனக்கு நல்லது…” என்றவனைச் சொல்லி முடிக்க விடாமல், “இல்லாட்டி என்ன செய்வாய்?” என்றுகொண்டு வந்தவனிடம் ஒன்றும் சொல்லவில்லை அவன். 

 

“டைகர்!” என்று ஒரு குரல்தான் கொடுத்தான். அவ்வளவு நேரமாக வாசலில் நின்று நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த டைகர், ஒரே பாய்ச்சலில் வேந்தன் மீது பாய்ந்திருந்தது. 

 

வேந்தன் அலறித் துடித்தான். டைகரைத் தன்னிடமிருந்து தள்ளிவிட முயன்றான். அது அவன் மீது பாய்ந்து குரல்வளையையே கடிக்கிறேன் என்பதுபோல் உக்கிரம் கொண்டு மீண்டும் மீண்டும் அவனைத் தாக்கிக்கொண்டிருந்தது. 

 

error: Alert: Content selection is disabled!!