ஆட்டநாயகன் 12.1

அத்தியாயம் 12

காலையிலேயே விழிப்பு வந்திருந்தது கேதகிக்கு. எழுந்து சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டுத் திரும்பினாள். காலை உணவு தயாராக இருந்தது. இதற்கு ஒன்றும் குறை இல்லை. எரிச்சலும் சினமும் மண்டிற்று.

ஒரு உயிரை உயிராகக் கூட மதிக்காத இவர்களின் கையால் சாப்பிடுவதையே வெறுத்தாள். சாப்பிட்டுவிட்டுத் தட்டைச் சமையல்கட்டுக்குக் கொண்டுபோகையில் வந்தான் அவன்.

எப்போதும் போல் அதே உடை. ஜீன்ஸின் நிறம் மட்டும் மாறும். கறுப்பு நிற ஆர்ம் கட் பெனியன் மாறவே மாறாது. கொடியில் காயும் பெனியன்களைக் காணாவிட்டால் ஒன்றையேதான் வைத்திருந்து போடுகிறான் என்று அவளே சொல்லிவிடுவாள். ஒரு பெண்ணைத் தூக்கித் தோளில் போட்டது போன்று ஒரு பக்கத் தோளில் இப்போதும் அவனுடைய ஷேர்ட் தொங்கிக்கொண்டிருந்தது.

தண்ணீரில் கிடந்து ஊதியது போன்று அவன் முகம் உப்பி, சிவந்து, உதடுகள் வெளிறி இருந்தன. கண்கள் சும்மாவே பயமுறுத்தும். இன்று இரத்தக்கட்டிகள் போலாகி இரண்டு நெருப்புத் துண்டங்களைக் கண்களில் வைத்ததுபோல் இருந்தவனைக் கண்டு அவள் நெஞ்சு சில்லிட்டுப் போயிற்று.

ஓடிப்போய்த் தட்டை வைத்துவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டாள்.

*****

அன்று காலையிலேயே ஆதினியும் எல்லாளனும் ஆளுக்கு ஒரு பக்கமாகத் தயாராகிக்கொண்டிருந்தனர். ஆதினியை ஆத்திரமும் அழுகையும் சரிசமமாக ஆக்கிரமித்திருந்தன. எல்லாளன் என்று ஒருவன் அங்கே நிற்கிறான் என்று கூடக் காட்டிக்கொள்ளாமல் சேலையை அணிந்துகொண்டிருந்தாள்.

காக்கிச் சட்டையில் தயாராகித் தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொண்ட எல்லாளன் திரும்பி ஆதினியைப் பார்த்தான்.

கூப்பிடுகிற அத்தனை பல்கலைக்கழகங்களுக்கும் சிறப்புப் பேராசிரியையாகப் போகிற அவள், யாழ் பல்கலைக்கு மட்டும் போவதே இல்லை. இன்னும் அந்தப் பல்கலையை மிதிக்கும் தைரியம் அவளுக்கு இல்லை.

அது யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை பீடாதிபதிக்கு மிகுந்த அதிருப்தி. அவளைப் போன்ற கெட்டிக்காரியான, சட்டத்துறையில் புகுந்து விளையாடும் ஒருத்தி தம் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க மறுப்பதை பெரும் குறையாகக் கருதினார்.

அதில் அவள் தந்தையும் அவரின் நண்பருமான இளந்திரையனைச் சந்தித்து தன் மனக்குறையைச் சொல்லியிருந்தார்.

அவரிடம் மறுக்க முடியாதுபோனது ஒரு காரணமென்றால், வலி என்றாலும் அந்தப் புள்ளியையும் தன் மகள் கடந்துவர வேண்டும் என்று விரும்பினார் இளந்திரையன். அதில் அவரே சம்மதத்தைச் சொல்லியிருந்தார்.

எல்லாளன், அகரன், சியாமளா என்று எல்லோரும் அவர் பக்கம் நின்றுவிட்டதில் ஆதினியின் மறுப்பு எடுபடாமல் போயிற்று. அந்தக் கோபத்தைத்தான் இப்போது காட்டியபடி புறப்பட்டுக்கொண்டிருந்தாள்.

கோபத்தை மாத்திரமல்லாமல் அழுகையையும் சேர்த்தே அடக்கிக்கொண்டிருக்கிறாள் என்பதில், “ஆதிம்மா!” என்றபடி அவளைப் பற்றித் தன் புறம் அவன் திருப்பியதுதான் தாமதம், அவன் மார்பிலேயே புகுந்து கண்ணீர் உகுத்தாள் ஆதினி.

“என்ர செல்லம் எல்லா. அழாதயடி!” என்று அவளைத் தேற்ற முயன்றவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் ஆதினி.

“உங்களுக்குக் கூட என்னை விளங்கேல்ல என்ன? என்னால எப்பிடி அங்க போகேலும்? அவர் இல்லாத அந்த இடத்தை எப்பிடிப் பாப்பன்?” என்று குமுறியவளை வலுக்கட்டாயமாக இழுத்துத் தன் மார்பில் சேர்த்துக்கொண்டான் எல்லாளன்.

அவனுக்குப் புரியாமல் இருக்குமா? காட்டிக்கொண்டால் போகவே மாட்டேன் என்று நிற்பாள்.

அவள் முகத்தைத் தன் கைகளினுள் அடக்கி, “எங்களால முடியாது எண்டு நினைக்கிற ஒண்ட செய்யேக்கதான் நாங்க எவ்வளவு ஸ்ட்ரோங் எண்டு எங்களுக்கே தெரியவரும். நீ எவ்வளவு ஸ்ட்ரோங் எண்டு இண்டைக்கு நீயே பாக்கப்போறாய். அவன் படிப்பிச்ச அதே கம்பசில நீயும் வகுப்பெடுக்கப் போறாய். அதைவிட நீ படிச்ச கம்பஸ் அது. அங்க இண்டைக்கு நீ ஒரு லெக்சரரா போறாய். அது எவ்வளவு பெரிய விசயம் சொல்லு?” என்றான் இதமான குரலில்.

அவளுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், இது அத்தனையையும் தாண்டிக்கொண்டு அவளின் தாயுமானவன் கண்களுக்குள் வந்து நிற்கிறானே. அவள் கண்களில் அரும்பிய கண்ணீரைத் தன் உதடுகளினால் ஒற்றி எடுத்தான் எல்லாளன்.

“நீ ஒண்டும் சாதாரண லெக்சரர் இல்ல. குணசேகரன் அங்கிளிட்ட பயிற்சி எடுத்த கிரிமினல் லோயர். உன்ர ஆசா பாசங்களை விட்டுப்போட்டு அந்தப் பிள்ளைகளின்ர இடத்தில இருந்து யோசி. உன்னை மாதிரி ஒருத்தின்ர வகுப்பு கிடைச்சா அவேக்கு அது எவ்வளவு பெரிய பயனா இருக்கும் எண்டு பாரு. போயிற்று வா. என்ர ஆதினி தைரியசாலி. அவள் எல்லாத்தையும் கடந்து வருவாள்.” என்று அவளை அணைத்துக்கொண்டான்.

அதன் பிறகு அவர்கள் தாமதிக்கவில்லை. பிள்ளைகள் ஏற்கனவே நேசர்க்குப் புறப்பட்டிருந்தார்கள். இன்று இருவர் மனநிலையும் நன்றாக இராது என்று தெரிந்து சியாமளா, அவர்களின் பொறுப்பைத் தான் எடுத்திருந்தாள். அகரனுக்கு முல்லைத்தீவில்தான் வேலை. வார இறுதிகளில் இங்கே வந்துபோவான்.

இறங்கி வந்த மகளையும் மருமகனையும் பார்த்த இளந்திரையன் தன் செல்லப்பெண்ணின் தலையை வருடிக்கொடுத்தார். “காண்டீபன்ர கேஸையே எடுத்து வாதாடினவா என்ர மகள். வாதாடினது மட்டுமில்லை வெற்றியும் அவாக்குத்தான் கிடைச்சது. அப்பிடியான அவாக்கு இதெல்லாம் ஒண்டுமே இல்ல. தைரியமா போயிற்று வரோணும் என்னம்மா.” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

பல்கலை வாசலில் கொண்டுவந்து பைக்கை நிறுத்தியபோது எல்லாளனுமே வெடித்துவிடும் விளிம்பு மனநிலையில்தான் இருந்தான். இதே வாசலில்தான் ஒரு நாள் சினமும் சீற்றமுமாக வந்து காத்திருந்தான்.

அவன் வந்தது, இவனைக் கண்டுவிட்டு முகம் மலர்ந்தது, விழிகள் பனிக்க இவனையே பார்த்துவிட்டு இவனோடு புறப்பட்டு வந்தது, அதன் பிறகு நடந்தவை எல்லாம் நெஞ்சில் முட்டி மோதிற்று.

“நான் இப்பிடியே உங்களோடயே வரவா?” கண்ணீர் கன்னத்தில் இறங்க வினவினாள் ஆதினி.

பதில் சொல்லவில்லை எல்லாளன். அவளையே ஊன்றிப் பார்த்தான்.

அவளுக்கு மறுபடியும் ஆத்திரமும் அழுகையும் சேர்ந்து பொங்கின. “எல்லாரும் என்னைப் பிடிவாதக்காரி எண்டு சொல்லுறது. ஆனா உண்மையான பிடிவாதக்காரன் நீங்கதான்.” என்று சீறிவிட்டு விறுவிறு என்று உள்ளே நடந்தாள்.

கொஞ்ச நேரம்தான் அந்தக் கோபம் வழிநடத்தியது. சட்டபீடத்தின் முன்னே இருக்கும் அந்த மரத்தடியைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள். தினமும் தேடி வருவான். அவளின் சாப்பாட்டை அவன்தானே முக்கால்வாசி நாள்கள் சாப்பிடுவான். சீண்டி, சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து அவளை நேரப்படுத்திவிட்டு அவன் போய்விட்டான்.

error: Alert: Content selection is disabled!!