ஆட்டநாயகன் 13.1

அத்தியாயம் 13

சம்மந்தருக்கு கொஞ்ச நாள்களாக மனநிலை மிகவுமே கெட்டுப்போயிருந்தது. தான் வாழ்வதே ஒருவிதமான தண்டனை போல் உணர ஆரம்பித்திருந்தார். பேரன், மருமகள் இருவருக்கும் தான் மட்டுமே துணை என்று புரியாமல் இல்லை. தானும் இல்லாமல் போனால் நிலைகுலைந்து போவார்கள் என்றும் தெரியும்.

அதே நேரத்தில் தான் இருப்பதால்தான் மிதிலா இன்னொரு வாழ்வினுள் நுழையாமல் இருக்கிறாள் என்றும் நினைத்தார். தான் எல்லாளனுக்கு மட்டுமில்லாமல் பேரனுக்கும் பாரமாகிக்கொண்டிருக்கிறோம் என்பது கசந்தது. இப்படி எல்லோருக்கும் பாரமாக வாழ்ந்து என்ன காணப்போகிறோம் என்கிற விரக்தி அவர் மனத்தில் படிய ஆரம்பித்திருந்தது.

அதுவும் எல்லாளன் இங்கே திரும்பவும் மாற்றலாகி வந்ததில் இருந்து மகன் நினைவு அளவுக்கதிகமாக அவரை வாட்டியது. எல்லாளனைப் பார்க்கிற ஒவ்வொரு முறையும் காண்டீபனும் இருந்திருந்தால் இப்படித்தானே இருந்திருப்பான் என்று தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.

இதையெல்லாம் அவரால் யாரிடமும் மனம் விட்டுப் பேச முடியாது. எல்லோருக்குமே காண்டீபன் என்பவன் மனதிற்கு மிக நெருக்கமானவன். யாரிடம் பேசினாலும் அது அவர்களையும் சோகத்தில் ஆழ்த்திவிடும்.

அப்படி என்ன பாவம் செய்தோம் என்று இப்படியான ஒரு வாழ்க்கை என்கிற விரக்தியோடு தினமும் கோயிலில் சென்று அமர்ந்திருப்பது அவர் வாடிக்கை.

அவரோடு இப்போது மாதவனின் மனைவியும் சேர்ந்துகொண்டாள். சில நேரங்களில் நமக்கு நெருக்கமான உறவுகளிடம் கூடப் பகிர்ந்துகொள்ள முடியாத உள்ளக் கிடக்கைகளை மூன்றாம் நபராக இருக்கிற ஒருவரிடம் கொட்ட முடியும். நம் பாரம் அவர்களை அழுத்தாது. நம் துன்பம் பெரியளவில் அவர்களைப் பாதிக்காது. அதை அவர்கள் வெளியில் நின்று பார்ப்பார்கள். அப்படி அமைந்துபோன ஒரு துணைதான் அவருக்கு மாதவனின் மனைவி.

கோயிலில் இருக்கிற பொழுதுகளில் அந்தக் காலத்து நாள்களுக்குள் தன்னைத் தொலைத்துவிட்டு இரைமீட்டுவார். மனம் விட்டுக் கதைப்பார். அன்றும் அப்படித்தான். ஏதேதோ கதைத்தபடி கோயிலுக்கு வந்தார்கள். சற்று நேரத்திற்கு அங்கேயே இருந்துவிட்டுப் புறப்பட்டார்கள்.

அது ஒரு சந்தி. இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கு மாறவேண்டும். வாகனங்கள் இரு புறமிருந்து வருவதும் போவதுமாக இருந்தன. பக்கம் மாறுவதற்கு காத்திருந்த வேளையில் மாதவனின் மனைவிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதை ஏற்றுப் பேசினாள் அவள். வீதியிலேயே கவனமாக இருந்த சம்மந்தர் அதைக் கவனிக்கவில்லை.

“வாங்கோம்மா.” என்று சொல்லிவிட்டுத் தன் சக்கர நாற்காலியை வீதியின் குறுக்கே ஏற்றினார். அதற்காகவே காத்திருந்தாற்போல் மிக வேகமாய் வந்தது ஒரு லொறி. அப்போதுதான் அழைப்பை முடித்த மாதவனின் மனைவி அதைக் கண்டுவிட்டாள். “ஐயோ அங்கிள்! லொறி வருது!” என்று தன் நிலையையும் மறந்து ஓடிப்போய் அவரைப் பின்னால் இழுப்பதற்குள் இருவரையும் சேர்த்து அடித்துத் தள்ளிவிட்டுப் பறந்திருந்தது லொறி.

இருவருமே தூக்கி எறியப்பட்டனர். தலை தார் வீதியில் படார் என்று மோதுண்டதில் அந்த இடத்திலேயே சம்மந்தரின் உயிர் பிரிந்திருந்தது. சற்றுத் தள்ளி விழுந்துகிடந்தாள் மாதவனின் மனைவி.

அவளுக்குத் தான் உயிருடன்தான் இருக்கிறோமா இல்லை இறந்துபோனோமா என்று பிரித்தறியக்கூட முடியவில்லை. உடல் மொத்தமும் அடிபட்டதால் ஒரு மரத்த நிலை. மங்கலான பார்வையில் சம்மந்தர் அசைவற்றுக் கிடப்பது அப்படியே தெரிந்தது.

அப்போதுதான் யாரோ ஒரு நெடியவன் நிதானமாக அவரை நெருங்கினான். அவனுடைய மொட்டைத் தலை, அதில் ஓடிய அடையாளம், அவன் முகம், விழிகளில் தெரிந்த பயங்கரம் எல்லாமாகச் சேர்ந்து அந்த நிலையிலும் அவளுக்குள் மரண பீதியை உண்டாக்கிற்று.

சேர்ட்டை அவன் அணிந்திருக்கவில்லை. கைகளை நுழைக்காமல் முதுகைப் போர்த்தியது போன்று போட்டிருந்தான். அவரை நெருங்கி நின்று உயிர் இருக்கிறதா என்று உற்றுப் பார்த்தான். உயிர் பிரிந்துவிட்டது என்பது அவனுக்கு மிகுந்த திருப்தியைத் தந்திருக்க வேண்டும்.

அந்தத் திருப்தியோடு திரும்பி அவளைப் பார்த்தான். அவளுக்கு ஒரு நொடி திக்கென்று இருந்தது. அந்தளவில் பயமுறுத்தினான். வேகமாகப் பார்வையை அகற்ற நினைத்தாள். அவளால் உடலின் சிறு பாகத்தைக் கூட அசைக்க முடியவில்லை. பெரும் அச்சத்துடன் அவள் அவனையே பார்த்திருக்கையில் அந்த இடத்தைச் சூழ்ந்துவிட்ட மக்களிடையே நடந்து மறைந்துபோனான்.

பெரும் சிரமத்திற்கு மத்தியில் விழிகளை ஒருமுறை மூடித் திறந்தாள். தன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய்ப் போய்க்கொண்டிருப்பதை அவளே உணர்ந்தாள். இதற்குள் மக்கள் பதற்றத்துடன் அங்குமிங்குமாய் ஓடுப்பட்டனர். ஒரே பேச்சுக்குரல்கள்.

அவர்கள் பேச்சிலிருந்து சம்மந்தன் உயிருடன் இல்லை என்று உறுதியாயிற்று. திடீரென்று அவள் வயிற்றில் சுளீர் என்று ஒரு வலி. ஐயோ குழந்தை. வயிற்றில் இருக்கிற குழந்தையின் நினைவு வந்ததும் மழுங்கிக்கொண்டிருந்த நினைவையும் மூளையையும் மிகவும் சிரமப்பட்டுத் தட்டி எழுப்பினாள்.

அப்போதுதான் பொத்தியபடி கைக்குள்ளேயே இருக்கும் கைப்பேசி கண்ணில் பட்டது. மூளை சுறுசுறுப்பாகியது. மாதவனுக்கு அழைக்கப்போனவள் அதை விட்டுவிட்டு எல்லாளனுக்கு அழைத்துச் சொல்லிவிட்டு மயங்கிப்போனாள்

அடித்துப் பிடித்து ஓடி வந்தான் எல்லாளன். அசைவற்றுக் கிடந்த சம்மந்தனைப் பார்த்தபோதே எல்லாம் புரிந்துபோயிற்று. ஆனாலும் அதற்குள் வந்துவிட்ட அவசர ஊர்தியில் அவரை அள்ளித் தூக்கி ஏற்றினான்.

ஓடி வந்து மாதவனின் மனைவியையும் தூக்கினான். அந்த மயக்க நிலையிலும் அவள் வலியில் துடித்தாள். “ஒண்டுமில்லையம்மா. தைரியமா இருங்கோ.” என்றவனின் பதற்றக் குரலில் சிரமப்பட்டு விழிகளைத் திறந்து பார்த்தாள். எல்லாளன் என்று இனம் கண்டதும் அவன் கையைப் பற்றினாள்.

அவசர ஊர்தியில் ஏற்றப்போனவன் குனிந்து அவள் முகம் பார்த்தான். அவள் உதடுகள் மெல்ல அசைவது தெரிந்தது. குனிந்து அவள் உதட்டருகில் காதைக் கொடுத்து உன்னிப்பாகக் கேட்டான். அவளுக்குத் தான் தப்பமாட்டோம் என்று தெரிந்ததால் தான் பார்த்தவற்றை அவனிடம் சொன்னாள்.

அவன் விழிகளில் பெரும் அதிர்ச்சி. நம்ப முடியாமல் உண்மையா என்று கேட்பதுபோல் அவளையே பார்த்தான். அவளால் தலையை அசைத்து ஆமோதிக்கக் கூட முடியவில்லை. பெரும் சிரமத்திற்கு மத்தியில் விழிகளை ஒருமுறை மூடித் திறந்து ஆமோதித்துவிட்டு மயங்கிப்போனாள்.

error: Alert: Content selection is disabled!!