ஆட்டநாயகன் 13.2

அதிர்வுடன் ஒரு கணம் அசையமுடியாமல் நின்றுவிட்டான் எல்லாளன். அதற்கும் சேர்த்து வேகம் கொடுத்து அவளையும் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடினான்.

தன் பெண் மகவை உயிருடன் இந்தப் பூமிக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டிருந்தாள் மாதவனின் மனைவி. சம்மந்தரின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்துவிட்டதை வைத்தியர்களும் உறுதிப்படுத்தினர்.

*****

தன் வீட்டு விறாந்தையில் சீண்டப்பட்ட சிங்கமாக நடந்துகொண்டிருந்தான் வேந்தன். அவனால் தான் பட்ட அவமானத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. அதுவும் கேதகியின் முன்னால் நாயிடம் கடி வாங்கி, பயத்தில் அலறி, தன்னை விட்டுவிடும்படி கெஞ்சி, பெட்டையைப் போன்று ஓடி வந்ததை நினைக்க நினைக்க அவன் நெஞ்சில் அவமான நெருப்பு எரிந்தது. அந்த நிமிடமே வாசுசேனனுக்கு ஏதாவது செய்துவிடத் துடித்தான்.

சிவநாதரிடம் இந்த விடயத்தை அவன் கொண்டுபோகவில்லை. ஏன் தனக்குச் சொல்லாமல் அங்குப் போனாய் என்று கேட்பார். இல்லையா வாசுசேனனை உயர்த்திக் கதைப்பார். இரண்டையுமே அவன் வெறுத்தான்.

அவரைப் பார்க்கப் போகவும் இல்லை. அவர் கேட்டதற்கு அன்னையைப் பார்க்கத் திருகோணமலை வந்துவிட்டதாகச் சொன்னான். அவனுக்கு வாசுசேனனை இந்த உலகத்தை விட்டே அனுப்ப வேண்டும்.

அவனைக் கொன்று அவனெல்லாம் தனக்கு ஒன்றுமே இல்லை என்று சிவநாதருக்குக் காட்டவேண்டும். உடனேயே தன் ஆள்களை யாழ்ப்பாணத்திற்கு வரவழைத்தான். அன்று இரவே வாசுசேனனின் வீட்டுக்குள் புகுந்தான்.

முதல் வேலையாக இவர்களைக் கண்டுவிட்டு குரைத்துக்கொண்டு வந்த டைகரின் மீது, கேட்டின் மீது ஏறி நின்று விச ஊசி ஒன்றை எறிந்தான். அதுவும் குறி தப்பாது அதன் உடலில் குத்திட்டு நின்றது. சொற்ப நொடிகள்தான். உயிர்போகும் துடிப்புடன் பெருங்குரலில் ஊளையிட்டுவிட்டுத் துள்ளித் துடித்தது டைகர்.

அந்த வீட்டின் விறாந்தையின் தரையில் தலைக்குக் கைகளைக் கொடுத்து, மடித்திருந்த ஒற்றைக் காலின் மேல் குறுக்காக மற்றக் காலைப் போட்டபடி படுத்திருந்த வாசுசேனன், அதன் சத்தத்தில் படக்கென்று விழிகளைத் திறந்தது மாத்திரமல்லாமல் துள்ளி எழுந்தான்.

நாயின் கதறலோடு சேர்த்துக் காலடி ஓசைகள் மிக வேகமாக வீட்டை அண்மிக்க ஆரம்பித்தன. என்னவோ தவறாக நடப்பது புரிந்துபோயிற்று. திரும்பி மற்ற இருவரையும் பார்த்தான். அவர்களும் அவனோடு தயார் நிலையில் நின்றிருந்தனர். அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. கூர்மை நிறைந்த அவர்களின் விழிகள், அந்த இருட்டிலும் தம் கணிப்புச் சரிதான் என்று மற்றவரிடம் செய்தி பரிமாறிற்று.

அவன் புலன்களும் தேகமும் எதிர்த்துத் தாக்கத் தயாராகின. அங்கிருந்த கத்தியை எடுத்து இடுப்பில் செருகினான். எப்போதும் தயாராக இருக்கும் இரும்புச் சங்கிலியை ஒற்றைக் கையில் சுழற்றிப் பிடித்தான். அவனாக வீட்டின் கதவைத் திறக்கவில்லை. தயார் நிலையில் காத்திருந்தான். அவனோடு மற்ற இருவரும்.

அந்த வீடு சற்றே உள்ளே தள்ளி இருந்தது. பெரிதாக ஆட்களின் நடமாட்டம் இருக்காது. குளியலறைக்குச் சென்று வருகிற பொழுதுகளில் பக்கத்தில் ஏதாவது வீடுகள் இருக்கின்றனவா என்று பலமுறை ஆராய்ந்து ஏமாந்திருக்கிறாள் கேதகி. அப்படி இருந்தும் பிரதான வீதியில் ஏதும் சத்தம் கேட்டாலே இங்கே டைகர் குரைக்க ஆரம்பித்துவிடும்.

ஆரம்ப காலத்தில் அதன் தொல்லையால் உறங்க முடியாமல் விழித்திருந்த கேதகி நாளடைவில் அதைப் பழகியிருந்தாள். இன்றும் அதன் சத்தம் கேட்டபோது அப்படி ஏதோ என்றுதான் முதலில் நினைத்தாள். ஆனால், டைகரின் சத்தம் கதறலாக ஒலிக்கவும் விருட்டென்று எழுந்து அமர்ந்துவிட்டாள். வெளியில் காலடித் தடங்கள் வேறு கேட்க ஆரம்பித்தன.

இன்று என்னவோ என்று அவள் மார்பு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. விறாந்தையில் இருந்து சிறு சத்தமும் இல்லை. இந்த மூன்று தடிமாடுகளும் என்ன செய்கிறார்கள் என்று அறிய நினைத்தாள். சத்தமே போடாமல் அவள் தன் அறையின் கதவைத் திறந்த நேரத்தில்தான் வாசல் கதவும் உடைக்கப்பட்டது.

“உள்ளுக்குப் போ. கதவை பூட்டு!” என்ற வாசுசேனனின் அழுத்தமான குரல் அவளிடம் உத்தரவிட்டது.

அவள் செயலாற்றும் நிலையில் இல்லை. கணநேரத்தில் அந்த இடமே போர்க்களமாக மாறிப்போனதில் உறைந்து நின்றாள். மின் விளக்குகள் எதுவும் போடாததால் ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை. நிலவின் வெளிச்சத்தில் ஒரு கும்பலே வீட்டுக்குள் புகுந்திருப்பது புரிந்தது.

ஒருவர் கூட குரல் கொடுத்துத் தம்மைக் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், வாள்களா கத்திகளா என்று அவளால் பிரித்தறிய முடியவில்லை. சலீர் சலீர் என்று அவை ஒன்றுடன் ஒன்று மோதும் சத்தங்கள் காதைப் பிளந்தன.

கேதகிக்கு இதயத் துடிப்பே நின்றுபோயிற்று. படங்களில் கூட சண்டைக் காட்சிகளை விரும்பாதவள். கண்முன்னே நடந்துகொண்டிருக்கும் பயங்கரத்திலிருந்து மீள முடியாமல் நின்றாள். “உள்ளுக்குப் போ!” ஓங்கி ஒலித்த வாசுசேனனனின் ஆத்திரக் குரல் அவளைத் திடுக்கிட்டு நிமிர வைத்தது. அவன் சொன்னது புரிந்து வேகமாக அறைக்குள் மறைந்து கதவடைப்பதற்குள் ஒருவன் பாய்ந்து வந்து அவளை இழுத்தான்.

அவளின் உயிர்க்கூடே ஆட்டம் கண்டது. “ஐயோ இல்ல விடு விடு!” என்று உதறிக்கொண்டு உள்ளே ஓட முயன்றாள். அவன் விடவில்லை. அடுத்த நொடியே வாசுசேனனின் கையில் இருந்த செயின் இவளைப் பிடித்திருந்தவனின் கழுத்துக்குப் பாய்ந்தது. ஒரே இழுவைதான். எங்கோ போய் மோதினான் அவன். அப்போதும் அவளை விடவில்லை அவன். அதில் சூறாவளிக்குள் சிக்குப்பட்ட படகாக அவளும் எங்கென்றில்லாமல் இழுபட்டாள்.

இதற்குள் அவள் கையைப் பற்றி இழுத்து அறையை நோக்கித் தள்ளினான் வசுசேனன். அவன் தள்ளிய வேகத்தோடு அறைக்குள் பாய்ந்தவளின் முதுகை, ஏதோ ஒரு ஆயுதம் ஆழமாகக் கீறிக்கொண்டு போயிற்று.

அவ்வளவுதான். அம்மா என்று கதறியபடி அங்கேயே விழுந்தாள் கேதகி. வாசுசேனனின் கவனம் ஒரு நொடி அவள் புறம் திரும்பிற்று. நின்று நிதானித்து ஆராய நேரமில்லை. மற்ற இருவரும் வந்தவர்களை எதிர்த்துக்கொண்டிருந்தாலும் ஒற்றைக் கையால் அவளை இழுத்துப்போய் அறைக்குள் தள்ளிக் கதவடைத்திருந்தான்.

அவ்வளவுதான் கேதகிக்குத் தெரியும். அதன் பிறகும் கத்திகளும் வாள்களும் உரசும் சத்தத்தில் அவள் உயிர் துடித்துக்கொண்டிருந்தது.

error: Alert: Content selection is disabled!!