அப்போதுதான் அவனைக் கவனித்தாள். கவனித்தளவுக்குப் பெரும் திகைப்பாயிற்று. என்னவோ சிவப்பு நிறச் சாயத்தை உடல் முழுக்கத் தெளித்துவிட்டதுபோல் முகம், புஜங்கள், கைகள் என்று எல்லா இடமும் இரத்தம். அதைவிட அவனுடைய கறுப்பு நிற பெனியன் பல இடங்களில் கிழிக்கப்பட்டு நனைந்திருந்தது.
இரக்கமோ பரிதவிப்போ வரவில்லை. மாறாகப் பயம்தான் உண்டாயிற்று. பெரிய பெரிய வாள்களுடன் வந்த கும்பலை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டு நிற்கிறான் என்றால் இவன் எப்படியானவன்?
“தள்ளிப் போங்க!” தான் பின்னால் நகர்ந்தவாறு சொன்னாள்.
“மருந்து போட வேண்டாமா?”
“நீங்க போட வேண்டாம்.” பின் முதுகு மொத்தமும் எரிந்தது. சின்ன அசைவுக்கே உச்சந்தலை வரை வலித்தது. அந்த நேரத்திலும் அவனை நெருங்கிவிட மறுத்தாள்.
உதடுகள் கோடாக அழுந்த ஒரு கணம் இமைக்காது அவளையே பார்த்துவிட்டு அவள் காலைப் பற்றி இழுத்துத் தன்னிடம் கொண்டுவந்தான். அவள் பயந்துபோனாள். இதை எதிர்பார்க்கவில்லை. அதுவும் வலுக்கட்டாயமாக அவளுக்கு வைத்தியம் பார்க்க அவன் முயன்றபோது அவளுக்கு ஆத்திரம், அழுகை, ஆக்ரோசம் எல்லாம் பொங்கிற்று.
அது கொடுத்த வேகத்தில், “எல்லாம் உன்னால. இண்டைக்கு நான் அனுபவிக்கிற இந்த வேதனைக்கு நீதான் காரணம். விடு! என்னை விடு! நான் போகோணும். விடு விடு!” என்று வெறி வந்தவள் போன்று அவனுக்கு அடிக்க ஆரம்பித்தாள்.
முதலில் தடுத்துப் பார்த்தான். அவள் அடங்குவதாக இல்லை என்றதும் அவன் முகம் பயங்கரமாக மாறிப்போயிற்று. ஏற்கனவே உடல் முழுக்க அவனுக்குக் காயம். அவையெல்லாம் சுள் சுள் எரிந்துகொண்டிருந்தன. அவனைக் கவனிக்க வேண்டும். மற்ற இருவர் நிலை என்னவென்று பார்க்க வேண்டும். டைகர் எப்படி இருக்கிறான் என்று கவனிக்க வேண்டும். அடுத்தது என்ன என்று யோசிக்க வேண்டும். இது எல்லாவற்றுக்கும் முதல் அவளைப் பார்க்க வந்தால் அவள் அவனுக்கே அடிக்கிறாள்.
சினம் மிகுந்துவிட ஒரே பற்றாக அவள் கழுத்தைப் பற்றி, “மூச்சு விடுறதத் தவிர வேற ஏதாவது சத்தம் வந்துது…” என்றுவிட்டுக் கழுத்தைப் பற்றியிருந்த விரல்களில் அழுத்தத்தைக் கூட்டினான்.
கேதகிக்கு ஒரு கணம் இதயம் துடிப்பதையே நிறுத்திற்று. அவன் விழிகளில் தெரிந்த சினமும் சீற்றமும் சிவப்பும் சொன்னதைச் செய்வான் என்று சொல்லின. நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. வாள் வெட்டிலிருந்து பிழைத்து இவன் கையில் உயிரை விடப்போகிறாளா? விழிகள் பிதுங்க சுவாசிக்க முடியாமல் இருமினாள் கேதகி. இரும இரும முதுகும் சேர்ந்து வலித்தது. ஆரோக்கியமாக இருந்தாலே அவளால் அவனோடு போராட முடியாது. அப்படியிருக்க இப்போது?
“இல்ல இல்ல” என்று கைகளையும் தலையையும் குறுக்காக அசைத்து, அப்படி எதுவும் செய்ய மாட்டேன் என்று அவள் பதறிய பிறகே விட்டான்.
அவளைக் குப்புறப் படுக்க வைத்து, ஆடையை விலக்கி, காயத்திற்கு மருந்திட்டான். உடல் உள்ளம் எல்லாம் புண்ணாகிப்போயிருந்தவளுக்கு விம்மல் வெடித்தது. மூச்சு விடுகிற சத்தத்தைத் தவிர்த்து வேறு சத்தம் வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறானே அவன். வாயை ஒற்றைக் கையால் பொத்திக்கொண்டு விழிகளை இறுக்கி மூடிக்கொண்டாள். உடல் அடக்க முடியாத விம்மலில் குலுங்கிற்று.
அவன் கவனம் எதற்கும் சிதறவில்லை. அவள் அழுகை குறித்து எந்தக் கரிசனமும் கொள்ளவில்லை. நிதானமாய் அவளுக்கு மருந்திட்டுவிட்டு ஏதோ இரண்டு மாத்திரைகளைத் தண்ணீரோடு சேர்த்து விழுங்க வைத்துவிட்டுப் போனான்.
அழுதழுதே உறங்கிப்போனாள் கேதகி.
வெளியே வந்தவனைக் கவலையோடு நோக்கினர் மற்ற இருவரும். ஒருவன் மடியில் டைகர் படுக்கவைக்கப்பட்டிருந்தான்.
“உயிர் இல்லையா?” இடையில் கைகளிக் கொடுத்து நின்று இறுக்கமான குரல் வினவினான்.
“இருக்கு. மயங்கி இருக்குது. தப்புமா தெரியாது.”
“உங்களுக்கு ஓகேயா?”
“பெருசா ஒண்டும் இல்ல.” முன்னிலையில் நின்று தாக்கிய அவனைத்தான் அவர்கள் கவலையோடு நோக்கினர்.
“அப்ப டைகரை போய்க் காட்டிக்கொண்டு வாங்க.” என்று அனுப்பிவிட்டு வந்து தன் உடலுக்குத் தானே வைத்தியம் பார்த்தான் அவன்.
*****
முடிந்து போயிற்று! எல்லாமே முடிந்துபோயிற்று. ஒரு காணிக்குள் இரண்டு மரணங்கள். பிறந்த குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு இடிந்துபோய் அமர்ந்திருந்தான் மாதவன். அவன் அன்னைதான் இரு உடல்களுக்கும் சேர்த்து ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார்.
இளந்திரையன், அகரன், சியாமளா, ஆதினி என்று அத்தனை பேரும் வந்திருந்தனர். அயலட்டை மொத்தமும் கூடியிருந்தது. சிலர் சம்மந்தருக்கு இதை விடுதலை என்றனர். சிலர் தன் ஆசை நிறைவேற முதலே போய்ச் சேர்ந்துவிட்டார் என்றனர்.
அழக்கூடத் திராணியற்றவளாக அசைவற்று அமர்ந்திருந்தாள் மிதிலா. அவள் கைகளுக்குள் அதிரன். மௌனமாகக் கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தான்.
அவனைத் தன் மார்புடன் சேர்த்தணைத்துக்கொண்ட மிதிலாவின் பார்வை, அங்கே கிடத்திவைக்கப்பட்டிருந்த சம்மந்தரின் உடலில் இருந்தது. உள்ளத்திலோ பெரும் ஓலம்.
‘ஒரு வேலையாகப் போகிறேன். அப்பாவையும் மாமியையும் பார்த்துக்கொள்’ என்று சொல்லிவிட்டுப் போன கணவனும் வரவில்லை. அவன் பார்த்துக்கொள்ளச் சொன்ன அவன் தகப்பனையும் அவள் முறையாகக் கவனித்துக்கொள்ளவில்லையோ.
தான் ஒரு திருமணம் முடித்திருந்தால், அவரின் அந்தக் கவலையைப் போக்கியிருந்தால் இப்படி ஒரு இறப்பு அவருக்கு நடக்காமல் இருந்திருக்குமோ என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அவர் தன் தேவைகளைச் சுருக்கிக் கொள்வதும், தனக்கும் அதிரனுக்கும் பாரமாக இருந்துவிடக் கூடாது என்று நினைப்பதும் அவளுக்கு தெரியாமல் இல்லை.
ஆனால் அவளின் தீபனின் இடத்தில் இன்னொருவனை எப்படி வைப்பாள்? அவளை நேசித்துக் கொண்டாடிய, கொஞ்சித் தீர்த்த கணவனை மறந்து இன்னொருவனை எப்படித் தன் வாழ்வினுள் அனுமதிப்பாள்? அது நரகம் இல்லையா? அதற்கென்று இப்படியா அவர் உயிர் போக வேண்டும்?
மாதவன் மனைவிக்கான சடங்குகளைச் செய்ய, மீண்டுமொருமுறை மொட்டை அடித்தான் எல்லாளன். மகனாய் நின்று அத்தனை காரியங்களையும் செய்து முடித்தான். கூடிய சனங்கள் முதற்கொண்டு இறப்பு வீட்டுக்காய் அடிக்கப்பட்ட டென்டுகள் எல்லாமே கலைந்துபோயின.
இதற்கு நடுவே மாதவனின் மனைவி சொன்னவை அவனை நிம்மதியாக இருக்க விடவில்லை. அந்த அவனின் அடையாளங்களையும், அவன் வந்து சம்மந்தரைப் பார்த்துவிட்டுப் போனதையும் சொன்னவள், “எங்களுக்கு நல்லா தெரிஞ்ச ஏதோ ஒரு முகம் அண்ணா. என்னால யோசிக்கேலாம இருக்கு. ஆனா விட்டுடாதீங்க. இது விபத்து இல்ல. கொலை.” என்கிற அவளின் கடைசி வார்த்தைகள் அவனை உலுக்கியிருந்தன.
இந்தப் பக்கம் மரணச் சடங்குகளுக்கான வேலைகளைப் பார்த்தாலும் அந்தப் பக்கம் தப்பி ஓடிய அந்த லொறி பற்றிய விபரங்களையும், அந்த மொட்டைத் தலைக்குச் சொந்தக்காரனையும் தேடும் வேலையைக் கதிரவனிடம் ஒப்படைத்தான்.

