பதில் சொல்லாமல் அழுத்தமாக அவரையே பார்த்தான் அவன்.
உள்ளே பல்லைக் கடித்தாலும், “அவள் தயாநிதின்ர மகள். வேந்தனுக்கு அவளைப் பிடிச்சிருக்காம்.” என்றார் சுருக்கமாக.
“அதாலதான் அந்த எல்லாளன்ர கண்ணில அவள் பட்டுடவே கூடாது எண்டு சொன்னீங்களோ? காரியம் மிஞ்சினா போட்டுத் தள்ளவும் யோசிக்காத எண்டு சொன்னது?”
நறநறவென்று பல்லைக் கடித்தார் சிவநாதர். அன்று அவனை நம்பிச் சொன்னதை அவருக்கு எதிராகவே இன்று பயன்படுத்துகிறான்.
“நான் ஏதாவது செய்தா அதில ஒரு அர்த்தம் இருக்கும் வாசு. எல்லாத்தையும் உனக்குச் சொல்லிக்கொண்டு இருக்கேலாது.”
“ஓகே! ஆனா ஒண்டு, இனியும் உங்கட மகன் நான் இருக்கிற இடத்துக்கு வந்தானோ பிணமாத்தான் வெளில வருவான்.” என்று எச்சரித்தான் வாசுசேனன்.
“என்னை வெருட்டுறியா?” சட்டென்று மூண்டுவிட்ட சினத்துடன் அமர்ந்திருந்த நாற்காலியில் முன்னே வந்து வினவினார் சிவநாதர். அவனோடு எப்போதுமே ஏறி விழுந்துகொண்டுதான் இருப்பார். பாசமாக ஒரு நாளும் பேசியதில்லை. அதற்கென்று பாசம் இல்லாமல் இல்லை. அந்தப் பிள்ளைப் பாசம் அவரைக் கொதிக்க வைத்தது.
“இல்லை. உண்மையச் சொல்லுறன்.” என்றுவிட்டு அவன் எழுந்துகொள்ள, “கேதகி எங்க?” என்றார் அவர் அவசரமாக.
“என்னட்டத்தானே தந்தனீங்க.” என்றான் சிகாரை எடுத்து வாயில் பொருத்தியபடி.
“சரி, நான் சொல்லுற இடத்தில கொண்டுபோய் விட்டுவிடு.”
“அது இனி நடக்காது!” அவரை இடையிட்டுக்கொண்டு சொன்னான் அவன்.
“விளங்கேல்ல?”
“நீங்க சொன்ன வேலை எல்லாம் நான் செய்திட்டன்.”
அவன் சொல்லி முடிக்கட்டும் என்று அவனையே பார்த்திருந்தார் அவர்.
“இனி நீங்க முடிக்க வேண்டியதை முடிச்சிட்டுச் சொல்லுங்க. அவளைக் கொண்டுவந்து தாறன்.” விரல் இடுக்கில் இருந்த சிகாரின் சாம்பலை அவன் முன்னிருந்த மேசையின் ஆஸ்ட்ரே யில் தட்டியபடி சொன்னான்.
“அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை வாசு.” அவர் பேச்சில் சூடு ஏற ஆரம்பித்தது.
“ஆர் சொன்னது?”
அவர் பதில் சொல்லாமல் பார்த்தார்.
“என்ர வீட்டுக்கே வந்து என்னையே முடிக்கப் பாத்தவன் உங்கட மகன். அதுக்கு முதல் இதையெல்லாம் நீங்க யோசிச்சிருக்கோணும்.”
இது அவருக்குத் தெரியாது. ஆனால், எப்போதும்போல் அவசரப்பட்டு ஏதோ ஒரு முட்டாள்தனத்தைச் செய்துவிட்டான் என்று புரிந்து மனத்தினுள் அவனை கெட்ட வார்த்தைகளால் வசை பாடினார்.
“என்ன பிளான்ல இருக்கிறாய்?” என்றார் அவனிடம் நிதானமாக.
“அந்தக் கேதகி உங்களுக்கு வேணுமா இருந்தா, என்ர பெயர்ல இருக்கிற அத்தனை வழக்கில இருந்தும் என்னை விடுவிங்க.”
“அது அவ்வளவு ஈஸி இல்ல வாசு.”
ஒரு பக்க உதடு இலேசாக வளைய ஒரு விதமாய்ச் சிரித்தான் அவன். அவருக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
“வாசு நான் சும்மா சொல்லேல்ல.”
“ஈஸி இல்லாம இருக்கலாம். அதுக்காக செய்யேலாத ஒண்டு இல்ல. இத நீங்க செய்தா உங்களுக்கும் உங்கட மகனுக்கும் கேதகி கிடைப்பாள்.”
“இல்லாட்டி?”
“அந்த எல்லாளன்ர கைல கிடைப்பாள்.”
“வாசு!” தன்னை மீறி அதட்டினார் சிவநாதர். அன்று மகனைக் காப்பதற்காக இவன் கையில் அவளை ஒப்படைத்தார். இன்று அதையே பயன்படுத்தி அவரையே மிரட்டுகிறானே. அப்படி மிரட்டுகிறவனை மொத்தமாக அழித்தால் என்ன என்று ஓடிற்று அவருக்கு.
“என்ன சிவநாதா? என்னைக் கொல்லோணும் மாதிரி இருக்கா?
இவனை வச்சு எல்லாத்தையும் செய்துபோட்டுத் திரும்பவும் தூக்கி உள்ளுக்க போடுவம் எண்டு நினைச்சியா? உன்ர மகன் தயாநிதி குடும்பத்தை கொன்றதுக்கு சாட்சி கேதகி. அவள் எல்லாளனிட்ட மாட்டினா போதும். மிச்சமா இருக்கிற உன்ர மகனும் உனக்கு இல்லாம போயிடுவான். செய்யவா?” என்றதும் பதறிப்போனார் மனிதர்.
“நீ செய்றது நம்பிக்கை துரோகம்.”
“பதிலுக்குப் பதில்.”
“நான் என்ன…” என்றவரை இடைமறித்து, “நீ என்னவோ எனக்குப் பின்னால செய்றாய்.” என்றான் அவன் உறுதியாக.
அவருக்கு கோபம் வந்தது. “உன்னையே உருவாக்கினவன் நான். அழிக்கிறது கஷ்டம் எண்டு நினைக்கிறியா?”
“செய்து பாருங்க.” என்றுவிட்டுப் புறப்பட்டிருந்தான் அவன்.
போகிறவனையே பார்த்திருந்தார் சிவநாதர். அவரின் கடைசி மகனின் பிடியும் இன்னொருவனிடமா? அவருக்கு நெஞ்சு கொதித்தது.
டைகருக்கு யாரோ விச ஊசியை எறிந்திருக்கிறார்கள் என்று சொல்லி மிருக வைத்தியரிடம் காட்டி வைத்தியம் பார்த்திருந்தனர். சத்தான உணவு கொடுக்கப்பட்டு, திடமாக வளர்க்கப்பட்டதில் சோர்ந்திருந்தாலும் அதன் உயிருக்கு எந்த ஆபத்தும் நிகழவில்லை.
டைகரைக் காட்டியது போன்று கேதகியை வைத்தியரிடம் அழைத்துச் செல்ல முடியாது. அவ்வளவு பெரிய காயம் எப்படி உண்டாயிற்று என்கிற கேள்வி உண்டாகும். அதைவிட அவளை வெளியில் கொண்டு செல்வது எல்லோருக்குமே ஆபத்து. அதில் வருகிற வழியில் பார்மசியில் வெட்டுக்காயத்துக்கு என்று மருந்து வாங்கிக்கொண்டு வந்தான் வாசுசேனன்.
வீட்டுக்கு வந்தவன் முதல் வேலையாக அவள் அறைக்குத்தான் வந்தான். அவள் நெற்றியில் தொட்டுப் பார்த்தான். கேதகியால் விழிகளைத் திறக்கவே முடியவில்லை. காய்ச்சலில் அனல் அடித்தது. புரண்டு படுக்கக் கூட முடியாமல் அனத்தினாள். முதல் நாளைக் காட்டிலும் அன்றுதான் காயம் அவளுக்கு அதிக வேதனை தந்தது.
அவளை மெல்லத் தட்டி எழுப்பினான். தன்னை மறந்து புரண்டு படுக்கப் போனவள் வலியில் அலறினாள். இதற்குப் பேசாமல் எரிந்த வீட்டினுள் தானும் மாட்டுப்பட்டிருக்கலாமோ என்று நினைக்குமளவில் இருந்தது உடல் வாதை.
வலுக்கட்டாயமாக அவளை எழுப்பி, முகம் கழுவ அழைத்துப் போனான். தன்னால் முடியாது என்று அழுதவளை விடவில்லை. தன் கைப்பிடியிலேயே வைத்திருந்து முகம் கழுவ வைத்து திரும்ப அழைத்து வந்தான்.
திரும்பவும் காயத்தைக் கவனித்து, மருந்திட்டு, உணவு தந்து மாத்திரைகள் கொடுத்தான். அத்தனையையும் அழுதழுது செய்து முடித்தாள் கேதகி.

