அத்தியாயம் 16
அநியாயமாகப் பறிகொடுத்துவிட்ட உறவுகளின் இழப்பிலிருந்து இன்னுமே மீள முடியாமல் தவித்தபடியிருந்தது காண்டீபனின் வீடு. சம்மந்தரின் மரணம் காண்டீபனையும் சேர்த்து நினைவூட்டிவிட்டதில் இன்னுமின்னும் தனக்குள் சுருண்டுபோனாள் மிதிலா.
எதிர்காலம் மிரட்டியது. ஒரு பொழுதைக் கடத்துவதே மலையைப் புரட்டுவது போன்ற வாதையைத் தந்தது. ஏன் இப்படி வாழ்க்கை நெடுகிலும் இழப்புகளை மாத்திரமே பரிசாகப் பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்று அவளுக்குப் புரியவேயில்லை.
மகனைக் கூடக் கவனிக்க முடியாமல் திணறினாள். அதுவும் ஒரு நாள் இரவு அவள் கைகளுக்குள் சுருண்டிருந்த அதிரன், “அப்பாவை மாதிரி இனி அப்பப்பாவும் வரமாட்டார் என்னம்மா?” என்று கேட்டபோது, அவன் முன்னே அழக்கூடாது என்பதையும் மறந்து அவனைக் கட்டிக்கொண்டு அழுதிருந்தாள் மிதிலா.
மாதவன் நிலை இன்னுமே மோசம். தாய்ப்பாலுக்காய்க் கதறும் பிறந்த குழந்தை, அதைக் கவனிக்க முடியாமல் தடுமாறும் வயதான தாய், மனைவியின் இழப்பு என்று எந்தப் பக்கத்திலிருந்தும் சிறு ஆறுதல் கூட இல்லாது இடிந்துபோயிருந்தான்.
இடைப்பட்ட காலத்தில் பின் தங்கிய கிராமம் ஒன்றின் பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்திருந்தான். படித்து ஆசிரியனாக இருந்த மகன், விவசாயம் பார்ப்பதில் அவன் பெற்றோருக்கு உடன்பாடில்லை. எல்லாளனைச் சந்தித்துப் பேசியபோது அவன்தான் இந்த வேலைக்கு ஏற்பாடு செய்திருந்தான்.
அடுத்த வாரத்திலிருந்து பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். அப்போது மகளை யார் பார்ப்பது என்கிற கேள்வி அவனை இப்போதே மருட்ட ஆரம்பித்திருந்தது.
அப்போதுதான் எல்லாளன் கதிரவனோடு அங்கே வந்தான். அதிரனையும் அந்த வாரம் மிதிலா பள்ளிக்கூடம் விடவில்லை. என்னவோ தனிமையில் இருக்க மிகவும் பயந்தாள். அவனுக்கு அவள் துணையோ இல்லையோ, இன்றைய நிலையில் மகன்தான் அவளின் பெரும் துணையாகிப்போனான்.
எல்லாளனைக் கண்டதும் அவள் விழிகள் தானாகக் கலங்கின. எல்லாளனுக்கும் என்ன பேசுவது என்று தெரியா நிலை. அதிரனைத் தன்னிடம் அழைத்தான். அவனிடம் வந்தவனைத் தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டு, “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டான்.
ஆம் என்று தலையை மட்டும் அசைத்தான் அவன். அவனைத் தன் மார்புடன் சேர்த்தணைத்தவனின் நெஞ்சில் பெரும் அழுத்தம். என்றுமே தன்னால் இறக்கி வைக்க முடியா பாரங்களைத் தந்துவிட்டுப் போன நண்பனை நிமிர்ந்து பார்த்தான். எப்போதும்போல் சிரித்துக்கொண்டிருந்தான் அவன்.
‘தங்கப்பிள்ளை மாதிரி ஒரு மகன் இருக்கிறானடா உனக்கு. அவனைக் கூடப் பாக்காம போயிட்டியே!’ என்று அரற்றியது அவன் உள்ளம். அப்போது மாதவன் அங்கே வந்தான்.
நிரந்தரமாகச் சோகம் அப்பிக் கிடந்த அவன் முகம் பார்த்துப் பேச மிகவுமே சிரமப்பட்டான் எல்லாளன்.
இன்னும் அவர்கள் யாருக்குமே அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்று தெரியாது. இனியும் மறைக்க முடியாது. அதைச் சொல்லிவிட்டு அவன் மனைவி சொன்னது பற்றி விதுசாரிக்கத்தான் அவனை அழைத்துவரும்படி கதிரவனிடம் பணித்திருந்தான்.
முதல் வேலையாக அதிரனை மாதவன் வீட்டுக்கு அனுப்பினான். அவனின் ஆயத்தங்கள் என்னவோ பெரிதாகச் சொல்லப்போகிறான் என்று சொல்லிற்று. இனியும் எந்த அதிர்ச்சியையும் தாங்க முடியாது என்பதுபோல் பதைபதைக்கும் நெஞ்சுடன் அவனையே பார்த்தனர் மாதவனும் மிதிலாவும்.
அது ஒரு விபத்தல்ல திட்டமிடப்பட்ட கொலை என்று அவர்கள் முகங்களைப் பார்த்துச் சொல்வது எல்லாளனுக்கு இலகுவாய் இல்லை. அவன் சொன்னதும் மிதிலா முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். பேசக்கூட முடியாதவனாக அமர்ந்திருந்தான் மாதவன். அவன் மூக்கு முகமெல்லாம் சிவந்துபோயிற்று.
“சொறி மாதவன்!” சம்மந்தரின் இழப்பே அநியாயமானது என்கையில் அவன் மனைவியின் இறப்பு?
அவன் தலையை நிமிர்த்தவே இல்லை. தன்னைச் சமாளித்துக்கொள்ளத் தனக்குள் போராடுகிறான் என்று புரிந்தது. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “உங்கட வைஃப் அந்த அவன்ர முகம் எங்க எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச முகம் எண்டு சொன்னவா. அப்பிடி அது ஆர் எண்டு உங்களால கண்டுபிடிக்க முடியுதா மாதவன்?” என்று மெதுவாக விசாரித்தான்.
அவனால் எல்லாளன் சொன்னதிலிருந்தே மீள முடியவில்லை என்கையில் எதை என்று யோசிப்பான். ஆனால் மிதிலா அந்த வீடியோ கிளிப்பினை பார்க்க வேண்டும் என்றாள்.
அதைக் கேட்பார்கள் என்று தெரிந்தே விபத்து நடந்த துண்டை வெட்டிவிட்டு அந்த அவன் சம்மந்தரை வந்து பார்த்துவிட்டுப் போவதை மட்டும் கொண்டு வந்திருந்தான் எல்லாளன்.
அதை அவர்கள் இருவரிடமும் காட்டினான். மிதிலாவுக்கு அவனை இனம் காண முடியவில்லை. பலமுறை திருப்பி திருப்பிப் பார்த்தும் அவளால் பிரயோசனமாக ஒன்றையும் சொல்ல முடியவில்லை. அப்படி யார் என்று யோசித்தாள்.
“நாங்க இஞ்ச இந்த வீட்டுக்கு வந்தே ஆறு மாதம்தான் சேர் ஆகுது. அப்பவே வயித்தில குழந்தை எண்டபடியா பெருசா எங்கயும் நான் கூட்டிக்கொண்டு போனது இல்ல. எனக்குத் தெரிஞ்சு எங்க எல்லாருக்கும் தெரிஞ்ச, அதே நேரம் அவாக்கும் தெரிஞ்ச முகங்கள் எண்டா அது நீங்க, இளந்திரையன் சேர், அகரன் சேர், கதிரவன், சம்மந்தர் ஐயா இவ்வளவு பேரும்தான். இதைத் தாண்டி ஆர்?” என்றான் அவனும் சிந்தனை வயப்பட்டவனாக.
“உனக்கு ஆரையும் தெரியுமா?” என்றான் மிதிலாவிடம்.
மறுப்பாகத் தலையை அசைத்து இல்லை என்றாள் அவள்.
“கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாருங்க மாதவன். அந்த மொட்டையன் ஆபத்தானவனா தெரியிறான். அவன் இன்னும் எதையும் செய்ய முதல் அவனைப் பிடிக்கோணும்.” என்றுவிட்டுப் புறப்பட்டான்.
தினமும் மாலையில் ஆதினியும் சியாமளாவும் பிள்ளைகளோடு இங்கே வந்திருந்து நேரம் செலவழித்துவிட்டு வருவார்கள் என்பதில், “அன்ட்ரியாக்கள் இண்டைக்கும் வருவினம். சரியா?” என்று அதிரனிடம் சொல்லிவிட்டுப் புறபாப்பட்டவனுக்கு இந்த வழக்குகளை அடுத்து எந்தத் திசையில் நகர்த்துவது என்று குழப்பமாக இருந்தது.
நேரே சென்று சிவநாதரிடம் என்னை எதற்கு இங்கே மாற்றினாய் என்று கேட்டால் என்ன என்று தோன்றியது. ஆனால், அவர் அதை இரகசியமாகச் செய்திருந்தார். அவனின் நலன் விரும்பிகள்தான் அதை அவனிடம் சொல்லியிருந்தார்கள். அதனால் அதை வெளிப்படையாகக் கேட்க முடியாது.
இப்படித்தானே சத்தியநாதனும் தமயந்தியின் வழக்கில் அவனை இழுத்துவிட்டுக் காண்டீபனைச் சிக்க வைத்தான். அதேபோன்று இன்று எதில் மாட்ட வைக்க நினைக்கிறார் சிவநாதர்? சட்டென்று எதுவோ மூளைக்கு அடிக்கவும், “ஜீப்பை நிப்பாட்டுங்க!” என்றான் அவசரமாக. கதிரவன் கரையாக நிறுத்தவும் குதித்து இறங்கினான் எல்லாளன்.
“உனக்குத் தெரியாத நிறைய விசயங்கள் எனக்குத் தெரியும். காலம் வரட்டும் சொல்லுறன் எண்டு சத்தியநாதன் ஒருக்கா என்னட்டச் சொன்னவன் கதிரவன். அதுவும் காண்டீபன் செத்ததுக்குப் பிறகு. அது என்ன எண்டு தெரிய வாறதுக்கு முதல்…” என்றவன் மிகுதியைச் சொல்லாது விட்டுவிட்டுத் திரும்பிக் கதிரவனைப் பார்த்தான்.
அதற்கு முதல் இவன் அவனைப் பரலோகம் அனுப்பி வைத்துவிட்டானே. அப்படி என்ன விடயம்?
“கட்டாயம் அது காண்டீபன் சம்மந்தப்பட்டதாத்தான் இருக்கோணும் கதிரவன். அது என்ன?” என்றவனின் உடலும் உள்ளமும் பரபரப்புற்றுப்போனது. தான் சரியான பாதையில் பயணிப்பது போன்ற உணர்வு அவனுள். இன்னுமின்னும் யோசி என்று தனக்குள் தானே துடித்தான்.

