அத்தியாயம் 17
டைகர் இப்போது ஓரளவிற்குத் தெளிந்திருந்தான். கேதகியின் நிலைதான் சொல்வதுபோல் இல்லை. இன்னுமே காய்ச்சல் அடித்தது. காயம் மாறுகிறதா இல்லையா என்று அவளுக்குத் தெரியவில்லை. கையை அசைக்க முடியாது. தலையைத் திருப்ப முடியாது. அவசரத் தேவைகளைத் தீர்ப்பதற்குள் செத்துப்பிழைத்தாள். அழுகையில் உடல் குலுங்கினால் கூட முதுகு சுளீர் என்று இழுத்து வலித்தது.
வலி தாங்க முடியாமல் வைத்தியரிடம் கூட்டிச் செல்லும்படி கேட்டு அழுதாள். அவன் அசைவதாக இல்லை. “ஏன் இப்பிடி என்னச் சித்திரவதை செய்றீங்க? அப்பிடி என்ன பாவம் செய்தனான் நான்? என்னை விடுங்க, நான் போகோணும். இப்பிடியே இருந்தா செத்திருவன் போல இருக்கு.” என்று கண்ணீர் விட்டாள்.
மரக்கட்டை போன்று முகத்தை வைத்துக்கொண்டு அவளுக்குத் தேவையானவற்றைச் செய்தானே தவிர்த்து ஒரு வார்த்தை உதிர்த்தான் இல்லை.
அதற்குமேல் அவனிடம் கோபப்படுவதற்குக் கூட அவளிடம் சக்தி இல்லை.
சிவநாதர் மீது வாசுசேனனுக்கு நம்பிக்கை இல்லை. அவரின் பிடி அவனிடம் இருந்தாலும் அதுவே அவரைச் சினம் கொள்ள வைக்கும். அடங்கிப்போக விடாது. அவர் மகனை நாயை விட்டுக் கடிக்க வைத்திருக்கிறான். ஓட ஓடத் துரத்தியடித்திருக்கிறான். கேதகி அவன் கையில் இருப்பது அவர்கள் தலையின் மேல் கத்தி தொங்குவதற்குச் சமானம். இது எல்லாவற்றையும் யோசித்துவிட்டு அவனுக்கும் கேதகிக்கும் ஏதும் செய்வதற்கு நிச்சயம் முயல்வார்.
ஒரு கணம் யோசித்துவிட்டு யாழ்ப்பாணத்துச் சிறைச்சாலை ஜெயிலருக்கு அழைத்து, தன் கேஸ் பற்றி ஏதாவது நடந்தால் தன்னிடம் தெரிவிக்கச் சொன்னான்.
அவருக்கு இவன் மீது பிரத்தியேகமான அன்பு. எதையும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார். அது அவருக்கு ஆபத்து என்பதில் அவனைக் கவனமாக இரு என்று மட்டும் சொல்லுவார். சிவநாதரின் காரியங்கள் ஆவதற்காகக் களவாக அவன் வெளியில் சென்று வந்த நாள்களில் இதற்கு உடன்படாதே என்று அவனுக்குப் புத்தி சொல்லியிருக்கிறார்.
அரசியல் செல்வாக்கு மிகுந்த மனிதரின் கட்டுப்பாட்டின் கீழ் அவரின் உயர் அதிகாரிகளே இருக்கையில் அவரால் அதைத் தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடியாது. அதில், “இது உனக்கே ஆபத்தா முடியும் வாசு. நாளைக்கு ஒரு பிரச்சினை வந்தா தான் எப்பிடித் தப்பிக்கலாம் எண்டு சிவநாதர் பாப்பாரே தவிர்த்து உன்னைப் பாதுகாக்கப் போறேல்ல.” என்று சொல்லியிருக்கிறார்.
அப்போதெல்லாம் அவன் அதை நம்பியதில்லை. அதைவிட ஒரு அசட்டைத்தனம். அப்படியே பிடிபட்டால் என்னாகும்? இன்னும் ஆறு மாதங்களோ, ஒரு வருடமோ ஜெயிலில் இருப்பான். அவ்வளவுதானே என்று நினைத்திருக்கிறான். அப்படித்தான் இத்தனை வருடங்களும் இருந்திருக்கிறானும் கூட. அதைவிட வெளியுலகை விட பழகிய அந்த உலகு அவனுக்குப் போதுமாகவும் இருந்திருக்கிறது.
ஆனால் ஒருமுறை அவன் மாட்டிக்கொண்டபோது சிவநாதர் சத்தமே காட்டவில்லை. அவன் கேட்டதற்கு, “அதெல்லாம் ஒரு விசயமே இல்ல வாசு. போலீசுக்கு கொஞ்ச நாளைக்கு ஒருக்கா அரசாங்கத்துக்குக் காட்டுறதுக்காக கேஸ் பிடிக்கோணும். அதுக்குத்தான் இதெல்லாம்.” என்று முடித்துவிட்டார்.
அன்றிலிருந்துதான் அவனுள் அவர் மீதான சந்தேக விதை விழ ஆரம்பித்திருந்தது. அதன் பிறகு நேரம் அமைகிற பொழுதுகளில் எல்லாம் ஜெயிலரோடு பேசுவான். உள் விவகாரங்கள் எதையும் அவரும் சொல்லமாட்டார். மென்று விழுங்குவார். ஆனால், அவன் செய்கிற காரியங்கள் சரியா பிழையா என்பதை மட்டும் தெரிவித்துவிடுவார்.
இப்படியே போனால் உன் வாழ்க்கை ஜெயிலிலேயே முடிந்துவிடும். முடித்து விடுவார்கள். எப்படியாவது சிவநாதரை மடக்கி உன்னை விடுவித்துக்கொள் என்று சொல்லிக்கொடுத்ததும் அவர்தான்.
சிவநாதருக்காவது அவன் தேவைப்பட்டான். அந்த மனிதருக்கு? எந்த வகையிலும் இல்லை. அப்படியிருக்க அவர் சொல்வது அவன் நன்மைக்கு மட்டுமே. அதனால்தான் அவர் சொல்கிறவற்றைக் குறித்து அவன் யோசிக்க ஆரம்பித்ததும்.
இன்றும் ஏதாவது நடந்தால் தன்னிடம் சொல்லும்படி சொல்லிவிட்டு, “அந்த எல்லாளனைப் பற்றி ஏதாவது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டதும் மனிதர் விக்கித்துப்போனார்.
“ஏன் கேக்கிறாய்?” வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு வினவினார்.
“இல்ல. அவனுக்கும் சிவநாதருக்கும் ஆகாதாம்.”
“வாசு, அதெல்லாம் உனக்கு என்னத்துக்கு? உன்னை எப்பிடியாவது இதுல இருந்து வெளில கொண்டு வா. இன்னும் ரெண்டு கிழமைதான் உனக்கு டைமிருக்கு. பிறகு நீ பிணை முடிஞ்சு இஞ்ச வந்தே ஆகோணும். அதுக்கு முதல் உன்னை ரிலீஸ் பண்ணிக்கொண்டாத்தான் உண்டு. இப்ப நீ சொல்லுறதுகள வச்சுப் பாத்தா இந்த முறை உள்ளுக்கு வந்தியோ, அதுக்குப் பிறகு வெளில வர சான்ஸ் கிடைக்கவே கிடைக்காது எண்டுதான் நினைக்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தார் அவர்.
அவனுக்கும் அது புரிந்தது. முதலில் இடத்தை மாற்றவேண்டும். வேந்தன் அரை வேக்காடு. ஆனால் சிவநாதர் அப்படி அல்லர். எந்த வகையிலும் அவனை மாட்டிவிடக்கூடியவர். சட்டென்று முடிவெடுத்துவிட்டு அறைக்குள் வந்து படுத்திருந்த கேதகியை எழுப்பினான்.
“என்ன?” காய்ச்சலின் வேகத்தில் உறங்கிக்கொண்டிருந்தவள் கண்ணைத் திறக்க முடியாமல் முனகினாள்.
“எழும்பு, வெளிக்கிடு!”
“எங்க? என்னை விடப்போறீங்களா?” விளக்குப் போட்டது போன்று நொடியில் முகத்தில் வெளிச்சம் பரவ விருட்டென்று எழுந்து அமர்ந்தவள், “அம்மா!” என்றால் தீனமாக.
கையைப் பின்னால் கொண்டுபோய் வருடிவிடவும் முடியவில்லை. அவனுக்கு புரிந்தது போலும். தானே அவள் பின்னால் வந்து, அணிந்திருந்த ஆடையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு வாயைக் குவித்து ஊதிவிட்டான்.
இந்த ஒற்றை நாளில் இதெல்லாம் அவர்களுக்குள் பழகிப்போயிருந்தது. அவளுக்கும் வேறு வழியில்லை. மெல்லிய சங்கடம் இருந்தாலும் பேசாமல் இருந்தாள். ஆனாலும் கண்களில் கண்ணீர் திரண்டு போயிற்று. அவன் புறம் திரும்பி, “என்னை விட்டுடுங்களன் ப்ளீஸ். என்னால இந்த வலிய தாங்கவே ஏலாம இருக்கு.” என்றாள் இறைஞ்சலாக.
அவன் கவனம் முழுக்க அவள் முதுகில் மட்டுமே.

