ஆட்டநாயகன் 18.1

அத்தியாயம் 18

அகரனின் பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கும் எல்லாளனின் பிள்ளைகள் நேசரிக்கும் சென்றிருந்தனர். தன்னுடைய அலுவலக அறையில் அமர்ந்திருந்து குணசேகரன் கொடுத்திருந்த குற்றவியல் வழக்கு ஒன்றின் கோப்பினைப் படித்துக்கொண்டிருந்தாள் ஆதினி.

அப்போதுதான் விடுவிடு என்று வீட்டுக்குள் வந்தான் எல்லாளன். “அண்ணா, என்னண்ணா இந்த நேரம் வந்திருக்கிறீங்க?” அப்படித் தமையன் வரமாட்டான் என்பதில் அதிசயமாய் வினவினாள் சியாமளா.

அதைக் கேட்ட ஆதினிக்கும் ஆச்சரியமாயிற்று. எழுந்து அறையை விட்டு வெளியே வந்து பார்த்தாள்.

“பூநகரிக்குப் போகோணும் சியாமளா.” என்றுவிட்டு நிற்காமல் மேலேறிச் சென்றுகொண்டிருந்தான் அவன்.

என்னவோ சரியில்லை என்று இரண்டு பெண்களுக்கும் புரிந்துபோயிற்று. “பொறுங்க அண்ணி. என்ன எண்டு கேட்டுக்கொண்டு வாறன்.” என்றுவிட்டுத் தானும் மேலே சென்றாள் ஆதினி.

அங்கே அணிந்திருந்த காக்கிச் சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டுக் கட்டிலின் குறுக்கே மல்லாந்து விழுந்திருந்தான் எல்லாளன். விழிகள் மூடியிருந்தன. கைகள் இரண்டும் தலைக்கு மேலே விசிறிவிட்டிருந்தான். இவள் அறைக்குள் வந்து நின்றும் விழிகளைத் திறந்தானில்லை. அவள் புருவங்கள் சுருங்கின. அவனருகில் சென்று அமர்ந்தாள்.

அப்போதும் அவனிடம் அசைவில்லை என்றதும் அவன் மார்பில் மெல்லக் கையை வைத்து, “என்னப்பா?” என்றாள் இதமான குரலில்.

அதற்காகவே காத்திருந்தான் போலும். ஆதரவைத் தேடும் குழந்தையாக அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். அவளுக்குள் தன்னைப் புதைத்துக்கொள்கிறவன் போன்று அணைப்பை இறுக்கினான்.

அவளுக்கு வலித்தது. எப்போதுமே அவளின் நலன் நாடுகிறவனின் இன்றைய செய்கை புதிர் போட்டது. தலையை மட்டும் நிமிர்த்தி அவன் முகம் பார்த்தாள்.

இன்னும் விழிகள் மூடியே இருந்தன. சுருங்கியிருந்த புருவங்களும், நெற்றியில் விழுந்திருந்த கோடுகளும், அழுந்த மூடியிருந்த உதடுகளும் அவன் எதற்கோ அலைபாய்கிறான் என்று சொல்லின. அவன் அணைப்புக்குள் இருந்து கைகளை மட்டும் விடுவித்து அவன் கன்னம் தடவி, இலேசாக வளர ஆரம்பித்திருந்த தலையின் முடிகளின் மீது தன் கரங்களைப் பரவவிட்டாள்.

சில கணங்களுக்கு அதை ஆழ்ந்து அனுபவித்துவிட்டு விழிகளைத் திறந்தான் எல்லாளன்.

“என்ன?” என்றாள் கனிந்த குரலில். அவனுக்கே இன்னதென்று தெளிவாகாத ஒன்றை என்னவென்று சொல்வான்? மனம் மீண்டும் கலங்கிப்போயிற்று. அவன் அவளையே பார்க்க, “என்ன எண்டு சொல்லுங்கோவன்? நீங்க எதுக்கும் இப்பிடி இருக்க மாட்டீங்களே?” என்றாள் அவன் புருவங்கள், கன்னம், தாடை என்று வருடிவிட்டபடி.

அப்போதும் விழிகளை மூடி அவள் தரும் அந்தச் சுகத்தை அனுபவித்தானே தவிர்த்து வாயைத் திறந்தான் இல்லை.

“அடேய் எள்ளுவய! நானும் எத்தின தரம்தான் கேக்கிறது?” என்றதும் படக்கென்று விழிகளைத் திறந்து அவளை முறைத்தான்.

“என்ன முறைப்பு. கேட்ட கேள்விக்கு ஆன பதில் சொல்லத் தெரியாது. இதுக்க இவர் முறைப்பாராம், நாங்க பயந்திடுவமாம். போடா டேய்!” என்றுவிட்டு எழுந்துகொள்ள முயன்றாள்.

அவளைவிட வேகமாக அவளை இழுத்துக் கட்டிலில் போட்டவன் அவள் புறம் திரும்பி, “இந்த வாய் அடங்கவே அடங்காதா உனக்கு?” என்றான் அவள் உதட்டோரம் தன் உதடுகளை உரசவிட்டு.

அதற்கே ஆதினியின் உடலும் உள்ளமும் உருகிக் குழைய ஆரம்பித்தது. “என்ன செய்றீங்க, அதுவும் இந்த நேரத்தில?” என்றபடி மெல்ல அவனைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றாள்.

“நேரத்துக்கு என்ன?” அவள் விலக முயன்றதற்கும் சேர்த்து இழுத்து அணைத்தான் அவன்.

அதற்குமேல் அவள் மறுக்கவில்லை. கணவனுக்கு வாகாகத் தன்னைக் கொடுத்தபடி, “கதவு திறந்திருக்கு.” என்று அறிவுறுத்தினாள்.

“அண்ணி வந்தாலும் வந்திடுவா.”

“கொஞ்ச நேரம் பேசாம இருக்கவே மாட்டியாடி!” இருக்கிற அழுத்தம் போதாது என்று அவளும் தடை போட்டுக்கொண்டிருக்க கோபம் வந்தது அவனுக்கு. அவளிடம் சீறிவிட்டுப் போய்க் கதவைச் சாற்றிவிட்டு வந்தான்.

அவனையே பார்த்திருந்தாள் ஆதினி. என்னதான் திடமானவனாக இருந்தாலும் அவன் இளைப்பாறும் மடி அவள்தானே. மென் புன்னகையுடன் கைகளை விரித்து அவனைத் தன்னிடம் அழைத்தாள்.

“போ நீ! எனக்கு ஒண்டும் வேண்டாம்!” என்றபடி அவள் மீதே விழுந்தான் அவன்.

“அம்…மா!” என்று சத்தமில்லாமல் அலறினாலும், “வேணாமா?” என்றாள் வேண்டுமென்றே.

“ம்ஹூம் வேணாம்!” அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தபடி சொன்னான்.

அவள் உதட்டில் சின்ன முறுவல். தானும் அவனை ஆரத்தழுவி முகம் முழுக்க முத்தங்களாகப் பதித்தாள். அவனை நிலையிலக்கச் செய்ய மனைவியின் அண்மையே போதுமானது. அப்படியிருக்க அவளும் அவனுக்கு வாகாக இசைந்துகொடுத்து முத்தங்கள் பதித்தால்?

காற்றாற்று வெள்ளமாய்க் கரைபுரண்டோடி அவளுள் கரைந்து காணாமல் போனான்.

உடலின் தேவை என்பதை விடவும் உள்ளத்தின் தேடலிது. நிம்மதியைத் தொலைத்துவிட்டு அலைந்துகொண்டிருக்கும் மனத்திற்கு மருந்திடும் முயற்சி. அவள் தாங்கிக்கொள்ள அவன் அடைக்கலமானான்.

இப்போது அவன் கைகக்குள் அவள் அடங்கியிருக்க, அவள் முகத்தை வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தான் அவன்.

“என்ன ஓடுது உங்களுக்க?” அவன் கைகளுக்குள் இருந்தபடியே முகத்தை மாத்திரம் நிமிர்த்தி வினவினாள்.

அவன் மனம் மீண்டும் கலங்க முயன்றது. ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

“ஏன் பூநகரிக்குப் போகோணும் எண்டு சொன்னீங்க?”

அவன் உடல் ஒரு விதமாக விறைத்தது.

“அண்ணா…” என்று ஆரம்பிக்கையிலேயே அவள் இதழ்களை அழுத்தமாய்ச் சிறை செய்து, பேச்சை நிறுத்தியிருந்தான் அவன்.

அவள் மனமும் கலங்கிப்போனது. அவளை நிலையிலக்கச் செய்கிறவன் அவளின் தாயுமானவன் என்றால், அவனை உடைக்கும் ஒற்றைச் சக்தியும் அவன் மட்டுமே.

அவனோடு சம்மந்தப்பட்ட ஏதோ ஒன்று என்று புரிந்துவிட,
“என்னப்பா, என்ன எண்டு சொல்லுங்களன்?” என்றாள் தவித்துப்போய்.

“உன்னட்டச் சொல்லாம எங்க போகப்போறன்? அதுக்கு முதல் எனக்கே என்னது எண்டு தெளிவில்ல ஆதினி.” என்றான் குழப்பம் நிறைந்த குரலில்.

அவன் மனத்தை ஆராய்வது போன்று அவனையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, “சரி, கவனமா போயிற்று வாங்க. உங்கட மகளின்ர கடிடவன் மாமாவும் வாறார்தானே?” என்று வினவினாள்.

பிள்ளைகளின் நினைவில் அரும்பிய சின்ன முறுவலோடு ஆம் என்று தலையசைத்தான். “உடனேயே திரும்பி வரக் கிடைக்குமா தெரியாது. அப்பிடி நான் வராட்டிப் பிள்ளைகளைச் சமாளி.” என்றுவிட்டு எழுந்துகொண்டான்.

அதன் பிறகு அவன் தாமதிக்கவில்லை. உடனேயே கதிரவனோடு புறப்பட்டிருந்தான். அன்னை தந்தையைக் கோரமாகப் பறிகொடுத்துவிட்டு, ஒற்றைத் தங்கையை வைத்துக்கொண்டு திக்குத் தெரியாது விழித்து நின்றபோது யாருமே அவனுக்கு உதவ வரவில்லை. அது தந்த வெறுப்பிலும் விரக்தியில் மொத்தமாக அந்த ஊரை விட்டே வெளியே வந்ததாலோ என்னவோ அங்கே போவதை அவன் பெருமளவில் விரும்புவதே இல்லை.

error: Alert: Content selection is disabled!!