அத்தியாயம் 19
ஏதோ ஒரு கதவு தனக்குத் திறக்கும் என்கிற நம்பிக்கையோடுதான் சொந்த ஊருக்கு வந்தான் எல்லாளன். அதற்கென்று இப்படி ஒரு திருப்பத்தைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
காண்டீபனின் அன்னையும் சகோதரனும் உயிருடன் இருப்பது அவனுக்கு மட்டுமில்லை சம்மந்தர், காண்டீபன் இருவருக்குமே தெரியாது. அதைத்தான் சத்தியநாதன் விசாரித்தபோது அறிந்துகொண்டானா? அப்படியே அதை அறிந்திருந்தாலும் எள்ளலோடு இவனிடம் சொல்லுகிற அளவுக்கு அதில் எதுவும் இல்லையே.
அறிந்துகொண்டதால் எதுவுமில்லைதான். அவர்களை அவன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால்? காண்டீபன் மீதான கோபத்தை, எல்லாளன் மீதான வஞ்சினத்தை அவர்களிடமும் காட்ட முயன்றிருந்தால்?
தன் வீட்டின் வாசல்படியில் அமர்ந்திருந்த எல்லாளன் சட்டென்று துள்ளி எழுந்தான். நிச்சயமாக அதுதான் நடந்திருக்க வேண்டும். சாதாரணமாகக் காண்டீபனின் சகோதரன் இவன்தான் என்று சத்தியநாதனால் இனம் கண்டுகொள்ள முடிந்திருக்குமா தெரியாது.
கூடப் பிறந்தவர்களாக இருந்தாலுமே எல்லோருக்கும் முகச் சாயல் ஒன்றாக இருப்பதில்லை. அதுவே இரட்டையர்களாக இருந்தால்? எங்கு வைத்துப் பார்த்தாலும் இவன் அவன் சகோதரன் என்று யாரும் சொல்லாமலேயே புரிந்துவிடுமே.
அதுதான் நடந்திருக்கிறது. காண்டீபனும் அவனும் இரணைப் பிள்ளைகள்(இரட்டையர்கள்). அதனாலேயே முகச் சாயலை வைத்துச் சத்தியநாதன் பிடித்திருக்கிறான். அப்படியானால் இப்போது எங்கே அவர்கள்? இருக்கிறார்களா அல்லது அவர்களையும்… என்றவனுக்கு மேலே யோசிக்க முடியாமல் இதயத்தின் துடிப்புக் கூடிப்போயிற்று.
“சேர், காண்டீபன் சேரின்ர சகோதரம் ஜெயிலுக்குப் போயிருக்கிறார். பெயர் தெரிஞ்சா விசாரிச்சுப் பாக்கலாம்.” என்று அவன் சிந்தனைக்குள் இடையிட்டான் கதிரவன்.
“வாசு. வாசுசேனன் இல்லாட்டி வாசுநேசன் இப்பிடி ஏதோ ஒரு வயசுதான் பெயர்.” என்றவனுக்குச் சரியாக நினைவில் இல்லை. எப்போதாவது பேசுகிறபோது வாசு என்று சொல்வான் காண்டீபன்.
ஆனால், மிதிலாவைக் காண்டீபன் ஊரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்ற அந்தக் காலத்தில்தான் அவன் சிறைக்குச் சென்றிருக்கிறான். ஒரு சில மாதங்களுக்கு முன்னராகவும் நடந்திருக்கலாம். இன்று காண்டீபன் இறந்தே எட்டு வருடங்களுக்கு மேலாகிறது என்கையில் இது நடந்து பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாகிற்று.
சிரமம் என்றாலும் சிறைச்சாலையில் விபரம் எடுக்கலாம்தான். ஆனால், அதை வைத்துத் தற்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியுமா தெரியவில்லை.
அதற்கென்று பேசாமல் இருக்க முடியாதே. முதலில் அவன் நினைப்பதுபோல், கோபால் ஐயா சொன்னதுபோல் காண்டீபனின் இரட்டைச் சகோதரனும் அவன் அன்னையும் உயிருடன் இருந்தார்களா, இருக்கிறார்களா என்று அறிய வேண்டும்.
உடனேயே மிதிலாவிற்கு அழைத்து காண்டீபனின் சகோதரனின் பெயரை விசாரித்தான்.
திடீரென்று ஏன் கேட்கிறான் என்கிற கேள்வி எழுந்தாலும் அதையெல்லாம் அவனிடம் கேட்கிற தைரியம் அவளுக்கு இல்லை என்பதில், “வாசுசேனன் எண்டு இவர் சொல்லியிருக்கிறார்.” என்று சொன்னாள்.
“ஃபோட்டோ ஏதும் இருக்கா?”
“சின்ன வயசு ஃபோட்டோ இருக்கோணும். கிளியரா இருக்குமா தெரியாது.”
“பரவாயில்லை. தேடி எடுத்து, கிளியரா அதை ஃபோட்டோ எடுத்து எனக்கு அனுப்பிவிடு.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
“பெயர் வாசுசேனன் கதிரவன். அப்பா பெயர் சம்மந்தன். சொந்த இடம் முல்லைத்தீவு. பிறந்த திகதி…” என்று அனைத்தையும் கிடுகிடு என்று சொல்லிவிட்டு, காண்டீபனின் புகைப்படம் ஒன்றையும் அவனுக்கு அனுப்பிவைத்தான்.
“எப்பிடியும் அவனும் இவனை மாதிரித்தான் இருப்பான். ஃபோட்டோ காட்டினா கண்டுபிடிக்கிறது இன்னும் ஈஸியா இருக்கும். முடிஞ்சவரைக்கும் சிவநாதரின்ர காதுக்குப் போகாமத் தேடுங்க கதிரவன்.”
“ஓகே சேர்!” என்றுவிட்டுச் சில பல அழைப்புகளை மேற்கொள்வதற்காகத் தள்ளிச் சென்றான் கதிரவன்.
சட்டென்று அந்த மொட்டையன் இருக்கும் வீடியோவை எடுத்துப் பார்த்தான் எல்லாளன். காண்டீபனை மனத்தில் வைத்துக்கொண்டு பார்க்கையில் அவனும் அதே உயரத்தில் இருப்பதாகப்பட்டது. ஆனால் அந்த உடம்பு, திடகாத்திரம் என்பதை விட முரட்டுத்தனமாய் வளர்ந்திருந்தது.
சிறைக்குச் சென்று வந்தவன் திருந்தி வாழாமல் பெரும் குற்றவாளியாக மாறிவிட்டானா? அவன்தான் இவனா? இல்லை வேறு யாருமோ?
யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலைச் சிறைச்சாலைகளில் தேடுவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்தான் கதிரவன்.
இனி அங்கே அவர்களுக்கு வேலை இல்லை. யாழ்ப்பாணம் புறப்பட்டனர். தேடி வந்த தகவல் கிடைத்துவிட்டது என்று எல்லாளனால் மகிழ முடியவில்லை. அவன் நெஞ்சைப் போட்டுப் பெரும் பரம் அழுத்தியது. இப்படி ஏதோ ஒரு அதிசயம் நடந்து அவனின் காண்டீபன் உயிருடன் வந்தால் எப்படி இருக்கும்?
ஆனால் அது எப்படி முடியும்? அவனேதானே தன் கையால் அவனுக்குக் கொல்லி வைத்தான். பிறகு எப்படி அவன் திரும்பி வருவான்? சட்டென்று கண்ணோரம் துளிர்த்துவிட்ட கண்ணீரை அணிந்திருந்த சட்டையின் தோள் பட்டையிலேயே துடைத்துக்கொண்டான்.
கதிரவனுக்கு அது வியப்பாய் இல்லை. நண்பர்கள் இருவரும் எப்படியானதொரு நட்பில் பிணைக்கப்பட்டவர்கள் என்று அன்று சிறை அறைக்குள் வைத்து அவன்தான் நேரிடையாகப் பார்த்தானே. நீதி, நேர்மை, நியாயம், சட்டம் என்று எதிலிருந்தும் வழுவாத எல்லாளனையே அத்தனையையும் மீறிக்கொண்டு சத்தியநாதனைச் சாய்க்க வைத்த நட்பாயிற்றே அது.
“இனி என்ன சேர்?”

