அவனுக்கும் தெரியவில்லை. திருகோணமலையில் வேந்தனைப் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தார்கள். அந்தத் தகவல் எதுவும் வந்த பாடாக இல்லை. கோவளம் கடற்கரையோரம் காவலுக்கு நிறுத்தியிருக்கும் காவலர்களிடமிருந்தும் உருப்படியான எந்தத் தகவலும் இல்லை. இனிச் சிறைச்சாலைகளில் தேடுதலை முடுக்கிவிட வேண்டும். இன்னொரு பக்கம் பெண் பிள்ளை கேதகியின் நிலை என்னவென்று தெரியவில்லை.
“வேந்தனுக்கு ஷடோ போட்டனீங்களா கதிரவன்?”
“ஓம் சேர். அப்டேட் வந்துகொண்டுதான் இருக்கு. கொக்குவில்ல அவனுக்கு எண்டு தனியா ஒரு வீடு இருக்காம். இப்ப அங்கேயும் ஆக்களப் போட்டாச்சு.”
சொற்ப கணங்களுக்கு யோசித்துவிட்டு, “திருகோணமலை சிறைச்சாலை நான் நினைக்கேல்ல கதிரவன். கிளிநொச்சி இல்லாட்டி யாழ்ப்பாணம் இங்கதான் கூடுதலா கவனிங்க.” என்று சொன்னான்.
“ஓகே சேர்!”
“இந்த மாமா இடைப்பட்ட காலத்தில ஊருக்கு ஒருக்கா போய் வந்திருக்க எல்லாம் தெரிய வந்திருக்கும்.” அப்படிச் செய்திருக்க எல்லாமே மாறியிருக்கும் என்கிற பரிதவிப்புடன் சொன்னான்.
அதே நேரத்தில் அவர் ஏன் அப்படிப் போகாமல் இருந்தார் என்றும் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அவன் எதற்காகப் பூநகரிக்கே வராமல் இருந்தான்? உயிராய் நேசித்த மனிதர்களை இழந்த இடங்களைத் திரும்பவும் பார்க்கும் தைரியம் எல்லோருக்கும் இருப்பதில்லை. இழப்பினுள் அமிழ்ந்து முடங்குவதை விரும்பாத யாரும் அதிலிருந்து வெளியே வரவும், தள்ளி நிற்கவும்தான் பிரியப்படுவார்கள். அப்படித்தான் அவரும் செய்திருப்பாராக இருக்கும்.
தப்பியிருப்பார்களோ என்கிற சந்தேகம் இருந்திருக்கத் தேடியிருப்பாராக இருக்கும். அதற்குச் சாத்தியமே இல்லை என்று இருந்த ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.
“கதிரவன், நீங்க ஜீப்பை திருப்புங்க. எதுக்கும் ஒருக்கா முல்லைத்தீவுக்கு நேராவே போயிற்று வருவம்.” என்றான் திடீரென்று.
“ஜெயில்ல தேடிக் கண்டு பிடிக்கிற வரைக்கும் என்னால பேசாம இருக்கேலாது கதிரவன். தனிப் பொம்பிளை. மனுசனையும் இன்னொரு மகனையும் இழந்துபோட்டுத் தெரியாத ஊர்ல போய் இருக்கிறதை விட, பிறந்து வளந்த ஊர்ல இருக்கிறதைத்தான் பாதுகாப்பா நினைச்சிருப்பா. இல்லாட்டியும் கட்டாயம் அங்க போய்ப் பாத்துக்கொண்டாவது வந்திருப்பா.” என்று அவன் சொல்வது கதிரவனுக்கு நியாயமாகவே பட்டது.
அவன் ஜீப்பை திருப்ப, அவனை மாற்றிவிட்டு ஓட்டுநர் இருக்கையில் தான் ஏறி அமர்ந்துகொண்டான் எல்லாளன். அடுத்த இரண்டு மணி நேரத்தில் முல்லைத்தீவில் காண்டீபனின் சொந்த ஊரில் நின்றார்கள்.
சம்மந்தர் காவல்துறையில் பணிபுரிந்ததும், காண்டீபன் வாசுசேனன் இருவரும் இரட்டைப் பிள்ளைகள் என்பதும் அந்த ஊரில் அவர்களை நினைவூட்டப் போதுமாக இருந்தது.
அங்கிருந்த பலருக்கு அவர்களைத் தெரிந்திருந்தது. காண்டீபனின் வீடும் இவன் வீட்டைப் போலவே பாழடைந்து கிடந்தது. பக்கத்து வீட்டில் இருந்த வயதான பெண்மணியிடம் சம்மந்தர் வழியில் தான் தூரத்து உறவு என்று அறிமுகம் செய்துகொண்டு அவர்களைப் பற்றி விசாரித்தான்.
“சம்மந்தரும் காண்டீபனும் கடைசிச் சண்டைல செத்திட்டினம் தம்பி. மற்றவன் வாசு இருக்கிறான் எல்லா. படிப்பையும் விட்டு, வேலைக்கும் போகாம, சேரக் கூடாத பெடியளோட சேந்து களவு, கொள்ளை எண்டு திசை மாறிப் போயிற்றான். தாய்க்காரி மானத்துக்கு அஞ்சி விசயத்த வெளில விடேல்ல. அதுக்கெண்டு செய்தி காதுக்கு வராம இருக்குமா சொல்லுங்க? அவன யாழ்ப்பாண ஜெயில்ல பிடிச்சுப் போட்டுட்டாங்கள். அங்க பக்கத்தில இருந்தா மகனை வெளில எடுக்கச் சுகமா இருக்கும் எண்டு யாழ்ப்பாணத்துக்கே போன பொம்பிளை பிறகு வரவே இல்ல. பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலதான் இருப்பா எண்டு நினைக்கிறன்.” என்று தனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொண்டார்.
அவர்கள் வாழ்ந்த வீட்டினுள் சென்று பார்த்தான். இவன் வீட்டை விடவும் மோசமான நிலையில் இருந்தது. இங்கேதான் ஒரு காலத்தில் ஒரு குடும்பம் குருவிக்கூடாகச் சிரித்து மகிழ்ந்திருக்கும். இன்று காலனுக்கும் காலத்துக்கும் உயிர்களைக் காவு கொடுத்தது காணாது என்று மிச்சமாய் எஞ்சிய உயிர்களும் திசைக்கொன்றாய்ச் சிதறிக் கிடக்கின்றன.
அவர்களைக் கண்டுபிடிப்பானா? கண்டுபிடித்தாலும் என்ன சொல்வான்? என்னென்னவோ சிந்தனைகள் எல்லாம் திசைகெட்டு ஓட வேகமாக அந்த வீட்டினுள் இருந்து வெளியே வந்துவிட்டான்.
ஆனால் ஒன்று. அவர்கள் உயிருடன் இருப்பது உண்மை. கூடவே அவன் யாழ்ப்பாணச் சிறையில் இருந்திருக்கிறான். இரண்டு மணி நேரங்களைச் செலவழித்து வந்தது வீண் போகவில்லை. யாழ்ப்பாணச் சிறை என்கையில் இவனே நேரடியாகக் களத்தில் இறங்கலாம்.
*****
வாசுசேனனைக் கண்ட துண்டமாக வெட்டிப்போடும் அளவுக்கு வெறியில் இருந்தார் சிவநாதர்.
தனக்கு ஒரு வேலையாக வேண்டிய நேரத்தில் எதைப் பற்றிய யோசனையும் இல்லாமல் அவன் இறங்கிப் பார்க்க வேண்டும் என்று வாசுசேனனுக்காகவே அந்த வீட்டை வாங்கிப்போட்டு, பெரும் தொகைப் பணத்தை அவனுக்குக் கொடுத்துமிருந்தார். கூடவே இதையெல்லாம் பார்த்து அவனைத் தான் நன்றாக வைத்திருக்கிறோம் என்று அவன் நினைக்க வேண்டும் என்பது உள்நோக்கமாயிருந்தது.
ஆனால் இன்று, அவன் அவர் கையை மொத்தமாக மீறியிருந்தான். அவன் ஆணையிடும் இடத்துக்கும் அதற்கு அடங்கி நடக்கவேண்டிய நிலைக்கு அவரும் வந்துவிட்டார்களே. அதைவிட அவரைச் சினம் கொள்ள வைத்தது அவருக்கே தெரியாமல் அவன் அந்த வீட்டை விட்டுப் போனது.
தயாநிதி குடும்பத்தின் வழக்கு என்பது கொடூரக் கொலை வழக்கு. அதைச் செய்தவன் வேந்தன் என்று நிரூபணமாகுமானால் அவனுக்கும் நிச்சயம் மரணதண்டனை கிடைக்கும்.
அதற்குப் பதிலாக வாசுசேனன் கேட்கும் விடுதலையைக் கொடுத்துவிட்டுக் கேதகியைக் கைப்பற்றுவதே சிறந்த முடிவாகத் தெரிந்தது. எல்லாளன் அவர்களை நெருங்க முதல் வேறு அவர் இதை முடித்தாகவேண்டும்.
அவர் ஒரு திட்டம் போட்டு எல்லாளனை இங்கே மாற்றினால் கடைசியில் ஏனடா அவனை இங்கே வரவழைத்தோம் என்கிற நிலைக்கு வந்து சேர்ந்திருந்தார் மனிதர்.
வேறு வழியற்று வாசுசேனனின் வழக்குகளை முடிப்பதற்கான வேலைகளை விரைவாகப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.
அந்தப் பக்கம் அவர் அந்த வேலையில் இறங்க இந்தப் பக்கம் அடுத்த நாளே யாழ்ப்பாணச் சிறைச்சாலையை நோக்கித் தன் ஜீப்பை ஓடவிட்டான் எல்லாளன்.

