யார் என்று இனம் காணப்படாத காடையர்களால் நிகழ்த்தப்பட்டிருந்த கொடூரச் செயலில் மொத்த யாழ்ப்பாணமும் திகைத்து நின்றது. அங்கிருந்து வரும் பத்திரிகைகள், இணையத்தளங்கள், சமூகவலைத்தளங்கள் அத்தனையும் இதையே பேசித் தீர்த்தன. பொதுமக்கள் வாழவே அச்சம் கொண்டிருப்பதாகப் போட்டிகளில் தெரிவித்தனர்.
காவல்துறை தன் விசாரணையை அதிதீவிரமாக முடுக்கிவிட்டிருந்தது. உடனடியாக இதற்கு என்றே தனிக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை மிக மிக வேகத்தில் நடத்தப்படும் என்று காவல்துறைத் துணைத்தலைவர்(Deputy Inspector General of Police (DIG)) அறிவித்தார்.
தன் வீட்டில் அமர்ந்திருந்து அத்தனை செய்திகளையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த தமிழ் அரசியல் கட்சியின் தலைவர் சிவநாதசுப்ரமணியன் கொதிநிலையின் உச்சத்தில் இருந்தார்.
மேசையில் இருந்த மதுக்கோப்பையை எடுத்து வாயில் சரித்தார். கண்கள் இரண்டும் இரத்தக் கட்டிகளாகச் சிவந்து போதையில் பளபளத்தன. கண்முன்னே நின்றிருந்த சத்தியவேந்தனை முழு வெறுப்புடன் நோக்கி, கெட்ட வார்த்தைகளாகவே பல்லிடுக்கில் கடித்துத் துப்பினார்.
அவனை எல்லாம் அவர் பெற்றே இருக்கக் கூடாது. இல்லை, பெற்றது தவறில்லை. எங்கோ ஒரு மூலையில் அடையாளம் இல்லாமல் கிட என்றுதான் விட்டிருந்தார். ஒன்றுக்கு மூன்று சிங்ககங்களைப் பெற்றவன் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரிந்தவரை முறையற்றுப் பிறந்தவனைத் திரும்பியும் பார்த்ததில்லை.
ஆனால், அந்த எல்லாளன் ஒரு மகனுக்குத் தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து ஆயுளுக்கும் சிறைதான் வாழ்க்கை என்று மாற்றியது காணாது என்று, மற்ற இரண்டு மகன்களின் உயிர்களையும் பறித்துவிட்டானே.
சத்தியநாதன் கொலை வழக்கு இன்று வரையில் முடிவு எட்டப்படாமலேயே கிடப்பில் கிடந்தாலும் அவனைக் கொன்றது எல்லாளன்தான் என்பதில் சிவநாதசுப்ரமணியத்திற்குச் சந்தேகமே இல்லை.
அவனைத் தாண்டி இன்னொருவனுக்குச் சத்தியநாதனைத் தொடும் தைரியம், அதுவும் அந்தளவு மோசமாகக் கொல்லும் திடம் வேறு யாருக்கும் இல்லவே இல்லை. என்ன, சட்டத்திற்குத் தேவை சாட்சியங்கள். அவை அவரிடம் இல்லை. அதில் எதையும் செய்ய முடியா கையறு நிலையில் இருக்கிறார்.
தன் காலத்தின் பின் தன் கட்சியைக் காக்க வேண்டியும், அரசியலில் என்றும் தன் குடும்பம் கோலோச்ச வேண்டும் என்கிற ஆசையிலும்தான் சத்தியவேந்தனை அழைத்துவந்தார். என்ன இருந்தாலும் அவன் உடம்பிலும் தன் இரத்தம் ஓடும் என்று நம்பினார்.
அவன் வந்த பிறகு அவர் மனைவி அவர் முகம் பார்ப்பதே இல்லை. அவரின் இரண்டாவது மகன் சத்தியசீலனின் வயது இவனுக்கு. ஒரு சில மாதங்கள் மட்டுமே குறைவு. அதுவே பற்பல கசப்பான உண்மைகளைச் சொல்லிவிட அந்தப் பெண்மணி இவரை அருகில் கூட எடுப்பதில்லை. இவரின் மிரட்டலுக்குப் பயந்தும், வயதான காலங்களில் யார் துணை என்பதிலும் ஒரே வீட்டில் இருக்கிறார். அவ்வளவுதான்.
இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கூடவே வைத்திருந்து, ஒவ்வொன்றையும் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல் சொல்லிக்கொடுத்து அரசியல் பழக்கினார். ஆனால், இந்த ஏழு வருடங்களாக நீ சொல்லிக்கொடுத்தது எல்லாம் வீண் என்று சொல்லிக்கொண்டு நிற்கிறான் அவன்.
“ஐயா!”
“வாயை மூடடா!” அவன் பேச ஆரம்பிக்கையிலேயே எரிந்துவிழுந்தவருக்கு அவன் முகம் பார்க்கவே வெறுப்பாயிற்று. “உன்னப் போய் அடுத்த வாரிசாக்க நினைச்ச என்னைச் செருப்பால அடிக்கோணும். என்ர கண்ணுக்கு முன்னாலயே நிக்காத போ! போய்த் துலை!” என்று கத்திவிட்டு எழுந்து, தள்ளாடிக்கொண்டு போனவருக்கு இன்னும் வெறியும் சினமும் அடங்கவேயில்லை.
அவர் கட்சி அதிகாரத்தில் இல்லாத காலத்தில்தான் மூன்று மகன்களையும் ஒவ்வொரு விதமாக இழந்தார். இப்போது ஆட்சி மாறிவிட்டது. அதிகாரம் அவர் கையில். தன் அரசியல் பலம், அதிகார பலம், செல்வாக்கு, செல்வம் என்று எதைப் பிரயோகித்தும் அவரால் சிறையில் இருக்கும் மகனை வெளியில் கொண்டுவர முடியவில்லை. அவனுக்குத்தான் அந்த நிலை என்றால் இவன்? திரும்பவும் அவர் வாயில் மோசமான வார்த்தைகள் மொத்தமாய் அரைபட்டன.
சோபனா, மாலினி இருவரும் அவரின் தங்கை மக்கள். தயாநிதி அவருக்கு ஒரு வகையான கையாள். இவரின் போதைப் பொருள் வர்த்தகத்தின் முக்கிய புள்ளி. கள்ள ஆயுதங்களாக இருந்தாலும் சரி, போதை பொருள்களாக இருந்தாலும் சரி அவனைக் கொண்டுதான் நடுக்கடலில் தரித்து நிற்கும் கப்பலிலிருந்து நகரத்துக்குள் கொண்டுவருவார்.
அப்படி அவரிடம் வந்துபோன காலத்தில்தான் சோபனா அவருக்குத் தொடுப்பானது. பிறகு அவர் முன்னிலையில் தாலி கட்டி, மனைவி என்று சொல்லிக்கொண்டாலும் உண்மை வேறாயிற்றே.
இப்போது கொஞ்சக் காலமாக அவனும் மாலினியின் கணவன் மகேந்திரனும் சேர்ந்துகொண்டு அவருக்கு விளையாட்டுக் காட்ட ஆரம்பித்திருந்தார்கள். போதைப் பொருள் பொதிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் கைமாற்றாமல் வைத்து இழுத்தடிப்பது, பேசிய தொகையைக் காட்டிலும் அதிகமாகப் பேரம் பேசுவது, ஆங்காங்கே காவல்துறையிடம் அவர்களின் டீலர்களை மாட்ட வைத்து அவரை ஒருவிதமான பதற்ற நிலையிலேயே வைத்திருப்பது, ஒரு வகையாக மிரட்டுவது என்று நிறைய.
இவரால் அவர்களோடு நேரிடையாக மோத முடியாது. தங்கை மக்களின் துணைகள் என்பது ஒரு காரணமென்றால் அவர்கள் அவருக்கு இனியும் தேவை என்கிற நிலை. அதுதான் மறைமுகமாக உயிர்ப் பயம் காட்ட நினைத்தார்.
அவர்கள் சந்தேகப்பட்டு நேராக இவரிடம் வந்தாலும் ‘என்னிடம்தான் வருவீர்கள் என்று தெரியும், தெரிந்துகொண்டே இந்த வேலை பார்ப்பேனா’ என்று கேட்டு மடைமாற்றலாம் என்று எண்ணியிருந்தார்.
எழுபது வயதைத் தாண்டிய பழுத்த அரசியல்வாதியான அவருக்குப் பேசத் தெரியாதா, இல்லை ஒரு விடயத்தை மடைமாற்றத்தான் தெரியாதா?
தயாநிதியின் காலையோ கையையோ இனிக் காலத்துக்கும் பயன்படுத்த முடியாதபடிக்கு மாற்றிவிடச் சொல்லியும், முடிந்தால் மகேந்திரனுக்கும் உயிர்ப்பையும் காட்டு என்றும் சொல்லி அனுப்பிவிட்டார். அவர் பெற்றதோ மொத்தமாக முடித்துவிட்டு வந்திருக்கிறது.
தயாநிதி குடும்பத்தில் 5, மாலினி குடும்பத்தில் 4, மகேந்திரனின் தங்கை குடும்பத்தில் 4 என்று மொத்தமாகப் பதின்மூன்று பேர். இதில் சம்பவ இடத்திலேயே விழுந்த வெட்டுகளாலும், உடல் எரிந்து கருகியும், மூச்செடுக்க முடியாமல் திணறியும் பத்துப் பேர் இறந்திருந்தனர். தப்பிய மூவரும் பிள்ளைகள். அவர்கள் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வந்திருந்தது.
இந்த இறப்புக்காகவெல்லாம் அவர் பெரிதாக கிறுங்கவெல்லாம் இல்லை. அவர் என்று யாருக்குமே தெரியவராது. அப்படியே சத்தியவேந்தன் மாட்டினாலும் இவர் சொல்லித்தான் அவன் செய்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இப்படியான விடயங்கள் பேச என்றே ஒரு அறை வைத்திருக்கிறார். அங்கே அவரைத் தவிர்த்து யார் வருவதாக இருந்தாலும் முழுமையான பரிசோதனையின் பின்னேதான் வரமுடியும். ஆகையால் பயமில்லை.
அவர் பிரச்சனை, நடுக்கடலில் நிற்கும் கப்பல். அதிலிருக்கும் பொருள்களை கரைக்குக் கொண்டுவந்தே ஆகவேண்டும். அதுவும் உடனடியாக.

