எல்லாளனின் வேகத்திற்கு இணையாகச் சட்ட திட்டங்கள் இல்லை. அவன் சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிடவோ, விசாரிக்கவோ செல்ல நினைக்கவில்லை. ஒரு கைதி பற்றிய விபரம் அறியவேண்டும். அதற்கு முறைப்படி கோப்பினை நகர்த்தி, அனுமதி வாங்கித்தான் செல்ல முடியும்.
இதில் அவன் இப்படி ஒருவனை விசாரிக்கிறான் என்கிற செய்தி வெளியே கசியவும் கூடாது. பொறுத்துத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.
அங்கே அதற்கான அனுமதி கிடைப்பதற்கிடையில் இங்கே வேந்தனின் வீடு இருக்கும் கொக்குவில் பகுதிக்குச் சாதாரண உடையில் எல்லாளனும் கதிரவனும் சென்றார்கள்.
நல்ல பெரிய வீடு. அதைவிட எட்டிக்கூடப் பார்க்க முடியாத அளவில் மதில் எழுப்பப்பட்டு, மின்சாரத்தில் இயங்கும் பெரிய கேட் போடப்பட்டிருந்தது. வாகனத்தில் வருகிறவர்கள் இறங்கி ஏறி மற்றவர்களின் கவனத்தில் படும் அவசியம் இல்லை. நேரடியாக உள்ளே சென்றுவிடலாம். உள்ளிருப்பவர்களின் அனுமதி கிடைத்தால் போதும்.
அயலட்டை மனிதர்களை மேலோட்டமாக விசாரித்துப் பார்த்தார்கள். அடிக்கடி பல வாகனங்களில் ஆட்கள் வந்துபோவதாகச் சொன்னவர்கள், அப்படி வந்து போகிறவர்கள் பற்றிய விபரங்கள் தெரியாது என்றார்கள்.
“சோபனா வீட்டு ஆக்களக் கூப்பிட்டு சப்ரைஸ் கிஃப்ட் பற்றி நான் விசாரிச்சது கட்டாயம் சிவநாதர் காதுக்குப் போயிருக்கும் கதிரவன். நாங்க சந்தேகப்படுற மாதிரி இந்தக் கொலைகளை சிவநாதரோ வேந்தனோ செய்திருந்தா, அத வச்சே நான் அவேய நெருங்குறன் எண்டு தெரிஞ்சிருக்கும். சோ அலெர்ட்டாத்தான் இருப்பினம்.” என்றவன் வேந்தனின் வீடு இருக்கும் அந்த ஏரியா தெருக்களை பைக்கில் சுற்றி வந்தான்.
அந்த ஊரின் பிரதான தெருவில் ஒரு மரக்கறிக் கடை, அதற்குக் கொஞ்சம் தள்ளி மீன் கடை, பெட்டிக்கடை போன்று ஒரு பலசரக்குக் கடை எல்லாம் இருந்தன. அந்தச் சந்தியில் ஐஸ் கஃபே ஒன்றும் சின்ன அளவில் இருந்தது.
இப்படியான கடைகளுக்கு வெய்யிலுக்கு இதமாகக் குளிர்பானம் அருந்தவோ, இல்லை ஏதாவது சாப்பிட்டுப் போகவோ நிச்சயம் வந்திருப்பார்கள் என்று மனம் சொல்ல, அதன் முன்னே கொண்டுபோய் பைக்கை நிறுத்தினான் எல்லாளன்.
அந்தக் கடையின் ஒரு பக்கமாக இருந்த நிழற்குடையின் கீழ் நின்றிருந்த இருவர் குளிர்பானங்களை அருந்தியபடி, கைக்கு மறைவாக வைத்திருந்த சிகரெட்டை புகைத்துக்கொண்டிருந்தார்கள். “பழக்கம் இருக்கா?” என்றான் அவர்களைக் கண்ணால் காட்டி.
சின்ன சிரிப்புடன் மறுத்துத் தலையசைத்தான் கதிரவன்.
“எனக்கும் இல்லையே. இருந்ததோ நான் கட்டினவள் தோளை உரிச்சு உப்புக் கண்டம் போட்டுடுவாளே!” என்றபடி இறங்கிக் கடைக்கு நடந்தான்.
கதிரவன் சிரித்தான். எல்லாளன் என்றால் குற்றவாளிகள் நடுங்குவார்கள். அந்த எல்லாளன் ஆதினிக்கு நடுங்குகிறான்.
“என்ன சிரிப்பு?”
“இல்ல. காண்டீபன் சேர் ஒருக்கா சொன்னவர். மேமோட ஃபிரெண்ட்லியா மூவ் பண்ணிப் பாருங்க, உங்களுக்கு நல்ல ஒரு ஃபிரெண்ட் கிடைப்பா எண்டு. சோ மேம் எனக்கு நல்ல ஃபிரெண்ட்.”
“ம்க்கும்! அவள் ஊருக்கு நல்லவள்தான். எனக்குத்தான்…” என்றவனிடம், “சேர், உங்களுக்கு ஃபோன்.” என்று தன் கைப்பேசியை நீட்டினான் கதிரவன்.
சட்டென்று நின்றுவிட்ட எல்லாளன், “அடப்பாவி!” என்றான் நம்ப முடியாமல். “போட்டுக் குடுத்திட்டியாடா?” என்றபடி கைப்பேசியை வாங்கிக்கொண்டு தள்ளி நடந்தான்.
இது எப்போதாவது நடக்கும். எல்லாளன் இலகுவாகப் பேசும் தருணங்கள் மிக மிகக் குறைவு. எப்போதும் இறுக்கமாகவே இருப்பான். அவனிடம் வரும் வழக்குகளும் அவனை அப்படித்தான் வைத்திருக்கும்.
அதையும் தாண்டி இப்படி அமைகிற சிறு சிறு பொழுதுகளை அவனுக்கு அழகாக்கிக் கொடுப்பவள் அவன் மனைவிதான். அதனால்தான் கதிரவனும் தன்னால் முடிந்ததாக எதையாவது போட்டுக்கொடுத்துவிடுவான்.
அங்கே ஆதினியிடம் கெஞ்சிக்கொண்டிருந்தவனைக் கண்டு சிரித்தான் கதிரவன். அதைக் கவனித்துவிட்டு அந்தப் பக்கம் அவளைச் சமாதானம் செய்துகொண்டே இவனுக்கு விரல் நீட்டி எச்சரித்தான் எல்லாளன். கதிரவனின் முறுவல் விரிந்துபோயிற்று.
தன்னை மீறிக் கதிரவனை நெருக்கமாக உணரும் தருணங்களில்தான் எல்லாளன் ஒருமையில் அழைப்பான். அது கதிரவனுக்கு மிக மிகப் பிடிக்கும். இன்றும் அவன் ‘போட்டுக்குடுத்திட்டியாடா’ என்று கேட்டதில் புளகாங்கிதம் அடைந்தவன், அவன் ஆதினியைச் சமாதானம் செய்வதைப் பார்த்துச் சிரித்தபடி கடையின் உள்ளே வந்து அமர்ந்தான்.
“என்ன தம்பி தர?” என்றுகொண்டு வந்தார் கடைக்காரர்.
அவனுக்கும் எல்லாளனுக்கும் பிடித்த இரண்டு ஐஸ் பவுல்களை சொல்லிவிட்டுப் பார்வையைச் சுழற்றினான்.
ஐசிங் போட்ட, ஐசிங் போடாத கேக் வகைகள், ஐஸ் வகைகள், மில்க்க்ஷேக் வகைகள் எல்லாம் இருந்தன. கூடவே விதவிதமான குளிர்பானங்களும்.
“நீங்க இந்த ஊரா அண்ணா?”
“ஓம் தம்பி.” அங்கே கண்ணாடித் தடுப்பின் பின்னே இவர்களுக்கான ஐஸ் பவுல்களைத் தயார் செய்துகொண்டே சொன்னார் அவர்.
“கடை எத்தின வருசமா வச்சிருக்கிறீங்க?”
“அப்பா முந்தி தேத்தண்ணிக் கடையா இதை வச்சிருந்தவர். நான் அத மாத்தி ஐஸ் கஃபேயாக்கி இருக்கிறன்.”
“சிசிடிவி எத்தினை நாளைக்கு ரெக்கோர்ட் ஆகும்?” அங்கிருந்த காமெராக்களைக் கவனித்துவிட்டு வினவினான்.
அதுவரை சாதாரணமாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தவர் இப்போது சந்தேகமாக அவனைப் பார்த்தார்.
சின்ன முறுவலுடன், “நாங்க போலீஸ்தான். அதுக்காக நீங்க பயப்பிட வேண்டாம்.” என்று சொன்னான் அவன்.
அவன் சொன்னால் போதுமா? போலீஸ் என்றாலே பகீர் என்றுதானே இருக்கும்.
“ஏதும் விசாரணையோ சேர்?”
இதற்குள் உள்ளே வந்த எல்லாளன், இவன் முதுகிலேயே ஒன்றைப் போட்டுவிட்டு எதிரில் அமர்ந்தான். இவன் சிரிப்புடன் பார்க்க முறைப்புடன் அவன் கைப்பேசியை அவன் முன்னே வைத்தான்.

