அத்தியாயம் 21
காண்டீபன் இறந்த பின்னான இத்தனை வருடங்களில் பலமுறை இந்தச் சிறைச்சாலைக்கு எல்லாளன் வந்துபோயிருக்கிறான். ஒரு முறை கூட அவனால் அந்த இடத்தில் சாதாரணமாகக் கால் வைக்க முடிந்ததில்லை.
அந்தச் செய்தி இடியாய்த் தலையில் விழுந்ததும், தான் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்ததும், வேர் அறுந்த மரமாய்க் காண்டீபன் மண்ணில் கிடந்ததும் அவனைக் கூறு போட்டுவிடும்.
அந்தத் தண்ணீர்த் தொட்டி, அதன் பக்கத்தில் நிற்கும் பெரிய மரம், அதைத் தாண்டி வந்தால் இருக்கும் அந்த வெளி எல்லாமே அவனை உலுக்குபவை. அந்த இடத்தைக் கடக்கையில் ‘என்னை விட்டுட்டியே மச்சான்’ என்று காண்டீபன் ஓலமிடுவது போலவே இருக்கும். அதனால் எப்போதும் வந்த வேலையை மின்னல் விரைவில் முடித்துவிட்டுப் போய்விடுவான்.
ஆனால் இந்த முறை ஏதோ ஒரு துடிப்பு. நண்பனின் சகோதரனையாவது கண்டுபிடித்துவிட வேண்டும். அவன் உருவில் இருக்கும் இவனைப் பார்த்துவிட வேண்டும். அவன் நிலை என்ன, எப்படி இருக்கிறான், அவன்தான் தான் தேடிக்கொண்டிருக்கும் குற்றவாளியா என்றெல்லாம் அவனுள் பரபரப்பு.
அவை கொடுத்த வேகத்துடன் வந்தவன் கண்டது தன்னைக் கண்டதும் திகைத்து நின்ற கிருபானந்தத்தைத்தான். எதிராளியின் சிறு கண்ணசைவில் கூடக் காரணத்தைத் தேடுகிறவன் அவன். சொற்ப நேர அவரின் அதிர்வைத் தனக்குள் குறித்துக்கொண்டான்.
கிருபானந்தத்திற்கு எல்லாளன் அங்கே எதற்கு வந்திருக்கிறான் என்று தெரியாது. வழக்குகள் தொடர்பாக வந்து போவான்தான். என்றாலும் இந்த முறை பதற்றமானார். விடாத அவன் பார்வை அவர் நெஞ்சையே கூறு போடுவது போலிருக்க அவனறியாமல் மிடறு விழுங்கினார். ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “ஹல்லோ சேர்!” என்று கைகொடுத்து வரவேற்றார்.
தன்னிடமிருந்த கவர் ஒன்றினை அவரிடம் நீட்டினான் எல்லாளன். அது, அவன் கேட்கும் தகவல்களைக் கொடுக்கும்படி சிறைச்சாலைகள் ஆணையாளரினால் (Commissioner of Prisons) கொடுக்கப்பட்டிருந்த கடிதம்.
அதைப் பார்த்ததுமே அவருக்குள் நடுக்கம் ஓடிற்று. “ஓகே சேர்!” என்றார் வேறு வழியற்று.
“ஆரைப் பற்றின தகவல் வேணும் சேர்?” என்று கேட்டபடியே அவர்களின் அலுவலகப் பிரிவுக்கு அழைத்துச் சென்றார்.
“வாசுசேனன்.”
அந்த ஒற்றை வார்த்தையில் சட்டென்று நின்றுவிட்டார் கிருபானந்தன். ஒரு வழியாக அவனுக்கு இனி விடிவு காலம் வந்துவிடும் என்று நினைத்தாரே. இல்லையோ. அவனைப் போட்டு ஆட்டும் விதியின் விளையாட்டு இன்னும் முடியவில்லையோ. இவன் நேர்மை, சட்டம், நீதி என்று நிற்பவனாயிற்றே.
“என்ன நிண்டுட்டீங்க? தெரியுமா அவனை?”
அவருக்கு வியர்க்க ஆரம்பித்தது. “ஓம் சேர்.” என்றார்.
புருவங்கள் சுருங்க அவரைப் பார்த்தான் எல்லாளன். கோப்புகளில் வாசுசேனனின் விபரத்தைத் தேடி எடுத்துத் தருவது வேறு. பெயரைச் சொன்னதுமே தெரியும் என்று சொல்கிறார் என்றால் அவன் இங்கே பிரபல்யமானவனாக இருந்திருக்க வேண்டும், இல்லையா சமீபத்தில் வெளியே சென்றிருக்க வேண்டும். அதுவும் இல்லையா இன்னும் இங்கே இருக்க வேண்டும்.
“வாசு… வாசுசேனனைப் பற்றி என்ன தெரியோணும்?” கைதிகளின் விபரங்கள் அடங்கிய கோப்புப் பிரிவுக்குச் சென்றதும் வினவினார். கணனியில் அத்தனையையும் பதிவு செய்து வைத்திருந்தாலும் இன்னுமே கோப்புப் பாவனையும் அங்கே இருந்தது.
“எல்லாமே. அவன்ர மொத்த வரலாறும் எனக்கு வேணும்.”
“அது வாசுன்ர ஃபைல் எல்லாமே எஸ்பின்ர(Superintendent of Prisons) கைக்குப் போயிற்றுது. அவன் ரிலீஸ் ஆகப்போறான்.”
அப்படியானால் அவன் நினைத்தது போன்று இங்கேதான் இருக்கிறான். உள்ளே ஒரு வலி பரவ, “ஒரு கொப்பி உங்களிட்டயும் இருக்கும்தானே?” என்றான்.
வேறு வழியற்று வாசுசேனனின் கோப்பினை எடுத்து நீட்டினார். எல்லாளனின் மனத்தில் காரணமற்ற ஒரு நடுக்கம். நண்பனின் இன்னொரு உருவத்தைப் பார்க்கப் போகிறான். அதை பிரிக்கவே பயந்தான்.
சற்றே தன்னைத் திடப்படுத்திக்கொண்டு முதற் பக்கத்தைப் பிரட்டியதும் வந்த முத்திரை அளவிலான புகைப்படத்தைக் கண்டதும் அவன் பார்வை அப்படியே நிலைகுத்தி நின்றுபோயிற்று.
அங்கிருந்தவன் அந்த மொட்டையன். எவனாக அவன் இருந்துவிடக் கூடாது என்று ஆசைப்பட்டானோ அந்த வாசுசேனன். காண்டீபனின் இன்னொரு உரு. அவன் தேடும் குற்றவாளி இவனா? பெற்ற தகப்பனை அவனே கொலை செய்தானா? அவனால் நம்பவே முடியவில்லை. நெஞ்சு ஒருமுறை குலுங்கிப்போயிற்று. அந்தளவில் கொடூரனாக மாறிப்போனானா வாசுசேனன்?
இப்போது அவன் என்ன செய்யவேண்டும்? ஒன்றுக்கு இரண்டு உயிர்களை வாங்கியவனை எப்படிச் சும்மா விடுவான்? இதனால்தான் சிவநாதர் அவனை இங்கே மாற்றினாரா? மகன் கைக்கொண்ட அதே பாதை.
ஒவ்வொரு முறையும் கடவுள் ஏன் இப்படி ஒரு நிலையில் அவனை நிறுத்துகிறான்? இந்த முறை என்ன செய்யப்போகிறான்? நண்பனின் இன்னொரு உயிருக்காக நிற்பானா, சட்டத்தின் பக்கம் நிற்பானா? சட்டென்று கோப்பினை அடித்து மூடிவிட்டு வெளியே வந்து நின்றான்.
‘காண்டீபா! நான் என்னடா செய்ய? ஏன் எனக்கு மட்டும் இப்பிடியே நடக்குது?’ வானத்தைப் பார்த்துச் சத்தமே இல்லாமல் குரல் கொடுத்தான். ‘இந்த யூனிபோர்மை கடைசி வரைக்கும் கழட்டிப்போடாத எண்டு சொன்னாய். ஆனா இந்த நிமிசம் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுபோட்டுப் போகோணும் மாதிரி இருக்கே மச்சான்.’
வானத்தையே வெறித்தபடி நின்றவனின் உள்ளம் சமன்படுவதாய் இல்லை. இனிச் சமன்படும் என்கிற நம்பிக்கையும் இல்லை. ஒரு நெடிய மூச்சுடன் திரும்பி வந்தான். அங்கே அந்தக் கோப்பைத் தானும் ஒருவிதமான அதிர்வுடன் பார்த்திருந்த கதிரவன் இவனைக் கண்டதும் இவன் புறமாக நகர்த்தி வைத்தான்.
மீண்டும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான். காண்டீபனின் அதே சாயல். ஆனால், அந்த முகம் எப்போதும் இளகி மலர்ந்திருக்கும். இந்த முகம் மொத்தமாக மாறி, ஈவிரக்கம் என்பதே என்னிடம் மருந்துக்கும் இல்லை என்று சொல்வது போன்ற கடுமை நிறைந்த முகம். அந்த மொட்டையில் தரையைப் பிளந்துகொண்டு ஓடும் வேரைப் போன்று பெரிய வெட்டுக்காயத்தின் அடையாளம்.
“இது எப்பிடி வந்தது?” என்றான் கிருபானந்தன் புறம் திரும்பி.
“அது இஞ்ச ஜெயிலுக்கு வச்சு வந்த சண்டைல நடந்தது.”
“அதுக்கு முந்தின போட்டோ இருந்திருக்குமே உங்களிட்ட?”
“அது மிஸ்ஸாகிட்டுது சேர்.” இலேசாக வியர்த்து வழியச் சொன்னார்.
அவர் நெஞ்சையே ஊடுருவுகிறவன் போன்று சில கணங்களுக்கு அவரையே பார்த்துவிட்டுத் திரும்பவும் கோப்பில் பார்வையைக் குவித்தான்.
பெயர், பிறந்த திகதி, சொந்த ஊர் எல்லாமே காண்டீபனுடையது.
2014ல் முதன் முறையாக இரண்டு குழுக்களுக்கிடையிலான சண்டையில் கைதாகியிருக்கிறான். ஒரு மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆறு மாதங்களில் திருட்டு கேஸில் கைதாகியிருக்கிறான். அப்போது ஒன்றரை வருடங்கள் இருந்து வெளியே போயிருக்கிறான். அப்போது தொடங்கி உள்ளே வருவதும் வெளியே போவதுமாக இருந்திருக்கிறான்.
கடைசியாக 2020ஆம் ஆண்டு உள்ளே வந்திருக்கிறான். போதைப்பொருள் கடத்தலில் பிடிபட்டு ஆறாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறான். ஆனால் அவனிடம் எந்தப் பொருளும் இருக்கவில்லை.
ஆனாலும் அந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படாமலேயே இன்றுவரை கிடக்கிறது. அதன் பிறகு சிறையில் சிறைக் கைதிகளுடன் நடந்த சண்டை, தப்பியோட முயன்ற குற்றம், பிணையில் சென்றுவிட்டுச் சொன்ன திகதியில் உள்ளே வராமல் இருந்தது என்று என்னென்னவோ குற்றங்களை எல்லாம் போட்டு அவனை இங்கேயே வைத்திருந்திருக்கிறார்கள்.
அதுவும் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய குற்றவாளியாக இருந்தவன் பெயர் ராஜேஷ். உடனேயே அவனுடைய கோப்பினை வாங்கிப் பார்த்தான். பிரதான குற்றவாளியான அவனே குறிப்பிட்டளவு போதைப்பொருள்கள்தான் வைத்திருந்தான் என்கிற பெயரில் சில ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டு எப்போதோ வெளியில் சென்றிருந்தான். ஆறாவதாகச் சேர்க்கப்பட்ட இவன் இன்னும் சிறையில் இருக்கிறான்.
“என்ன இதெல்லாம்?” என்றான் தாங்கமுடியாத சினத்தோடு.
“என்ன சேர்?” கிருபானந்தனிற்குத் தெரியாமல் இல்லை. சமாளிக்க வேண்டுமே.
“இவன் எப்பயோ வெளில போயிருக்க வேண்டியவன் எண்டு உங்களுக்குத் தெரியாது?”
“சேர், அது எனக்குத் தெரிஞ்சு என்ன சேர் பிரயோசனம்? அவனுக்குத் தெரியோணுமே. அதவிட அவனுக்கே இஞ்ச இருக்கத்தான் விருப்பம். அவனை வெளில எடுக்க ஆக்களும் இல்ல.”
“ஏன், அவன்ர அம்மா எங்க?”
“தெரியா சேர். பழைய ஜெயிலர் சிறைக்குப் போன பிறகுதான் நான் இஞ்ச வந்தனான். அப்பவில இருந்து அவனைத் தேடி ஆரும் வாறேல்ல. ஆனா, அவன்ர தாய் இறந்திட்டா எண்டு எனக்கும் முதலே இஞ்ச வேலை பார்த்து ரிட்டயர்ட்டான சப் ஜெயிலர் சொன்னவர்.”
அங்கே அவன் அன்னை பற்றிய ஆரம்ப காலத் தகவல் இருந்தது. அதை ஒரு முறை பார்த்துவிட்டு, “அப்ப இப்ப ஆர் அவனை பிணையில எடுக்கிறது?”
“அது அவன்ர தெரிஞ்ச ஆக்கள் ஆரோ.”
“அவனுக்கு ஒருத்தரும் இல்லை எண்டு சொன்னீங்க.”
அவர் பதில் சொல்லத் தெரியாமல் திணறினார்.
“இவன் ஆர் எண்டு தெரியுமா?”
“வாசுசேனன்.”
“அது மட்டும்தான் தெரியுமா உங்களுக்கு?” அவரைச் சொல்லி முடிக்கக் கூட விடாமல் பாய்ந்துவந்த கேள்விகளில் அனல் பறந்தது.
“ஓம் சேர்.”
“ஓ! இவனை மாதிரியே இருந்த இன்னொருத்தனைத் தெரியாது?”
“இ…ல்லையே சேர்.”
“பழைய ஜெயிலர் இப்ப ஏன் ஜெயில்ல இருக்கிறார் எண்டு தெரியுமா?” என்றதும் அவருக்கு உதடுகள் எல்லாம் வறண்டு போயின.
“கேள்விப்பட்டனான் சேர்.”
அவரின் பதில்களைக் கேட்டு உள்ளே ஒரு சினமும் ஆத்திரமும் கனன்றுகொண்டு வராமல் இல்லை. ஆனால் எங்கேயும் அவர் போகப்போவதில்லை. விசாரிக்க வேண்டிய தேவை வந்தால் எப்போதுவேண்டுமானாலும் விசாரித்துக்கொள்ளலாம். வாசுசேனனின் கோப்பின் ஒரு நகலைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டான்.
அவ்வளவு நேரமும் காற்றில்லா அறையினுள் அடைக்கப்பட்டிருந்தவர் போன்று மூச்சடைத்துப்போய் இருந்த மனிதர், எல்லாளன் போய்விட்டான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வாசுசேனனுக்கு அழைத்தார்.
“வாசு, எல்லாளன் சேர் வந்திட்டுப் போறார். என்ன செய்யப்போறாய் எண்டு எனக்குத் தெரியேல்ல. அவர் நேர்மை, நீதி, நியாயம் எண்டு நிக்கிறவர். அவரிட்டச் சிக்கிடாத ப்ளீஸ். கவனமா இரு. பிணை முடிஞ்சு நீ ஜெயிலுக்க வந்த பிறகுதான் கேஸ் கோர்ட்டுக்குப் போய்த் தீர்ப்பாகும் எண்டு சிவநாதர் சொல்லுவார். அதுக்கு உடன்பட்டு இஞ்ச வந்திடாத. அவர் நினைச்சா நீ இல்லாமயே இந்த கேஸ் எல்லாத்தையும் ஒண்டும் இல்லாம செய்யலாம். அப்பிடிச் செய்யச் சொல்லு. இஞ்ச வந்தியோ சிவநாதர் ஏதும் செய்வார், இல்லையா எல்லாளன் சேரின்ர கட்டுப்பாட்டுக்க போயிடுவாய். ரெண்டுமே உனக்கு ஆபத்து.” என்று படபடவென்று சொல்லிவிட்டு அவர் அழைப்பைத் துண்டித்துவிட, “எல்லாளா!” என்று பல்லை நறநறவென்று அரைத்தான் வாசுசேனன்.

