ஆட்டநாயகன் 24.1

அத்தியாயம் 24

அந்த மூவரையும் கவனிக்கிற விதத்தில் கவனித்தால் போதும். தயாநிதி குடும்பத்தைக் கொலை செய்தது வேந்தன்தான் என்கிற உண்மையை வரவழைத்து, வேந்தனைக் கைது செய்துவிடலாம். கேதகி நடுவில் நின்று அவன் கைகளைக் கட்டிப்போட்டாள். ஆனால், அதே கேதகிக்கு இவன் தள்ளிப்போடுகிற இந்த நாள்களுக்குள் ஆபத்து வருவதற்கும் சாத்தியமுண்டு

“வேந்தன்ர நடமாட்டம் எப்பிடி இருக்கு கதிரவன்? ஏதாவது சந்தேகப்படுற மாதிரி?” காவல் நிலையம் வந்து இறங்கியதும் கதிரவனை அழைத்து விசாரித்தான் எல்லாளன்.

“இல்ல சேர். அவன்ர கொக்குவில் வீட்டுக்கு அவன், அவன்ர கூட்டாளிகள் ரெண்டு பேர் மட்டும்தான் போய் வருகினம். ஐஸ் கஃபேலையும் விசாரிச்சுப் பாத்தனான். ஒருத்தரும் திரும்ப வரேல்லையாம்.”

“ஓ!” என்று கேட்டுக்கொண்டு தன் பின் கழுத்தை அழுத்தமாய் நீவிவிட்டான் எல்லாளன். கொலையாளிகள் அவர்கள்தான் என்று தெரிந்த பின்பும், இப்படிப் பாம்பு தானாகப் புத்திலிருந்து வெளியே வரட்டும் என்று காத்திருக்கப் பொறுமை இல்லை அவனுக்கு. பாம்பை வெளியே வர வைக்க வேண்டும். அப்படிச் செய்துவிட்டால் போதும். கூண்டோடு அள்ளிவிடுவான்.

சற்று யோசித்துவிட்டு வேந்தன் கொக்குவில் வீட்டிலிருந்து வெளியேறிய பின்பு, ட்ரோன் கமரா ஒன்றினை அவன் வீட்டின் மேலே பறக்கவிட்டார்கள். பெண்ணின் நடமாட்டம், குறைந்த பட்சமாகத் தோய்த்துப் போட்ட பெண்ணின் ஆடைகள் ஏதும் தெரிகிறதா என்று பார்த்தார்கள். ஒன்றுமே கிடைக்கவில்லை.

“இனி என்ன சேர் செய்றது?” கதிரவனுக்குமே அவன்தான் குற்றவாளி என்று தெரிந்த பின்பும் அவனை இப்படி விட்டு வைத்திருப்பது பிடிக்கவில்லை. கொத்தாக அள்ளிக்கொண்டு வந்து, லொக்கப்பில் போட்டு மிதி மிதியென்று மிதித்தால் மட்டுமே ஆத்திரம் அடங்கும் என்கிற நிலையில் இருந்தான்.

“சிவநாதரின்ர வைஃப், பெரியநாயகி அம்மா எப்பெப்ப வெளில வருவா கதிரவன்?”

“ஒவ்வொரு நாளும் கோயிலுக்குப் போவா சேர். ஆனா முழுப் பாதுகாப்போடதான் போவா. எனக்கு என்னவோ அது பாதுகாப்பு எண்டுறதை விட அவா ஆரோடயும் கதைச்சிடக் கூடாது எண்டு போட்ட காவல் மாதிரித்தான் இருக்கிறது.”

“வேற எப்பிடி அவாவோட கதைக்கலாம்?”

“அந்த வீட்டுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பிள்ளை பால் கொண்டு போறவா. திங்களும் புதனும் மீன்கார ஐயா ஒராள் போறவர். செவ்வாய், வெள்ளிக்கிழமைல மரக்கறி விக்கிற ஒருத்தர் போவார்.”

சிவநாதர் வீட்டைக் கண்காணிக்க ஆட்களை வைத்திருந்ததால் அத்தனை விபரங்களும் கதிரவனிடம் இருந்தன. கூடவே அவர்கள் எங்கிருக்கிறார்கள், உண்மையில் அவர்கள் வியாபாரிகள்தானா என்று அறிந்து வைத்திருந்தான். அது இன்று உதவிற்று.

அதுவும் அவர்களுக்குப் பால் கொடுக்கும் பெண் பின் வீதியில் இருந்தாள். அவளைத் தனியாகப் பிடித்து விசாரித்தார்கள். அவளிடம் பெரியநாயகி அம்மாவின் கைப்பேசி இலக்கம் இல்லை.

யாரிடமும் பெரிதாகக் கதைக்கமாட்டாராம். அவளிடம் மட்டும் கனிவோடு இருப்பாராம். அவளின் பிறந்தநாள் என்றால் பணம் கொடுப்பது, நல்லதாகச் சமைத்தால் கொடுத்துவிடுவது எல்லாம் செய்வாராம். நிச்சயம் அவரிடமிருந்து ஏதாவது உதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு, தன் கைப்பேசி இலக்கத்தை ஒரு துண்டில் எழுதி, அந்தப் பெண்ணைக் கொண்டுபோய்க் கொடுக்கச் சொன்னான் எல்லாளன்.

*****

கேதகியை வாசுசேனனிடம் கொடுக்கும் வரை அத்தனையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகவே இறுமாந்திருந்தார் சிவநாதர். அவளைக் காட்டித் தனக்குத் தேவையானதை வாசுசேனன் சாதிக்க முயன்றதிலிருந்து அத்தனையும் மாற ஆரம்பித்திருந்தது.

அதுவும் கடந்த சில நாள்களாக ஒழுங்கான உறக்கமே இல்லை. மனம் கண்டதையும் நினைத்து உழன்றது. மூன்று மகன்களினதும் நினைவுகள் அடிக்கடி வந்தன. இரண்டாவது மகனுக்காகக் கொடுத்த மனுவின் நிலைப்பாடு என்னவென்றும் தெரியவில்லை.

வேந்தனையும் இழந்துவிடுவேனோ என்கிற பயம் அதிகமாயிற்று. தயாநிதி குடும்பத்தை வேந்தன் கொன்றே இருக்கக் கூடாது என்று இப்போதெல்லாம் அடிக்கடி நினைத்தார். ஒரு கட்டத்துக்கு மேல் மனத்தின் இந்த உளைச்சல்களைத் தங்க முடியாமல் வேந்தனை அழைத்து, “நீ வெளிக்கிடு!” என்றார்.

அவனுக்குப் புரியவில்லை. திடீரென்று கூப்பிட்டு வெளிக்கிடு என்றால் என்ன அர்த்தம்? “எங்க?” என்றான்.

“சிங்கப்பூருக்கு.”

“ஏன்?” ஒரு விதமான திகைப்புடன் வினவினான்.

“எனக்கு என்னவோ மனம் சரியில்லாமயே இருக்கு வேந்தா. கொஞ்ச நாளைக்குப் போய் அங்க இரு. இஞ்ச இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஓயட்டும்.”

“கேதகி?” என்று அவன் கேட்டு முடிக்க முதலே கெட்ட வார்த்தைகளைக் கடகடவென்று கொட்டித் தீர்த்தார்.

“அந்தளவுக்கு அவள் என்ன…” என்று கண்டதையும் கேட்கப் போனவர் தன்னை அடக்கி, “இன்னும் ரெண்டு நாளில எல்லா ஏற்பாட்டையும் செய்துபோட்டுச் சொல்லுவன். போறாய்.” என்று முடித்திருந்தார் அவர்.

*****

அடுத்த நாள் காலையிலேயே எல்லாளன் கொடுத்துவிட்டதைப் பெரியநாயகி அம்மாவிடம் சேர்ப்பித்திருந்தாள் அவள்.

பெரியநாயகி அம்மா இதை எதிர்பார்க்கவில்லை. அந்தப் பெண், விடயத்தைச் சொன்னதும் என்னவோ கணவருக்கு எதிராகச் செய்யக்கூடாத எதையோ செய்துவிட்டவர் போன்று அவர் நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.

கணவரின் பச்சைத் துரோகம், அதை இன்னுமே சகித்து வாழும் நிலை, கண் முன்னே நடமாடும் வேந்தன் என்று தான் வாழ்வதையே தண்டனையாக எண்ணி வாழ்பவர்தான் அவர். ஆனாலும் கூட கணவருக்கு எதிராக ஒரு காரியம் செய்ய மிகவுமே பயந்தார். இதுவரை அப்படி அவர் நடந்ததில்லை.

அதே நேரத்தில் எல்லாளனைப் பற்றியும் அவருக்குத் தெரியும். அவன் பெற்றோர் தன் பிள்ளைகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டவர்கள் என்பது முதற்கொண்டு, இன்று அவரின் ஒரு மகன் சிறையில் இருப்பதற்குக் காரணம் அவன்தான் எனபதிலிருந்து, மற்றைய இரு மகன்களையும் கொன்றது அவன்தான் என்கிற வரை தெரியும்.

error: Alert: Content selection is disabled!!