ஆட்டநாயகன் 24.2

அவனுடைய நேர்மையும் வளைந்து கொடுக்காத நிமிர்வும் சிவநாதரின் நிம்மதியைப் பறிப்பதையும் அறிந்துதான் இருந்தார். அப்படியான ஒருவன் அவரோடு என்ன கதைக்க நினைக்கிறான்?

அன்று முழுக்க யோசித்தார். முதலில் விபரம் அறிவோம் என்று எண்ணிக்கொண்டு, சிவநாதர் உறங்கச் சென்ற பின்னர் அவனுக்கு அழைத்தார்.

அதுவரை நேரமும் ஒரு நம்பிக்கையோடு காத்திருந்தாலும் அழைப்பாரா என்கிற கேள்வியும் அவனோடு கூடவேதான் சுற்றிக்கொண்டிருந்தது. அவர் அழைத்ததும் பரபரத்துப்போனான். அதுவே அவர் நல்ல மனத்தைச் சொல்ல, அழைப்பை ஏற்று முதல் வேலையாக அவர் அழைத்ததற்கு நன்றி சொன்னான்.

“என்னோட என்னப்பு கதைக்கோணும்?” வேறு எதையும் பேசாமல் ஒரு விதமாகத் தயங்கி தயங்கி வினவினார் அவர்.

வயதான பெண்மணி. அவனின் அன்னைக்கு ஒப்பானவர். அவர் குரலில் தெரிந்த அந்தத் தயக்கம் ஒரு விதமாய் அவனைத் தாக்கிற்று. கூடவே அவரின் நெருக்கடியான நிலையையும் புரிந்துகொண்டான்.

“சொறி அம்மா. உங்களை எந்தச் சங்கடமான நிலைலயும் நிப்பாட்டுற எண்ணம் எனக்கு இல்ல ஆனா…” என்று ஆரம்பித்து, தயாநிதி குடும்பத்தை வேந்தன் மொத்தமாகக் கொன்றது, கேதகியைக் கடத்தியது, இன்றுவரை அவள் உயிரோடு இருக்கிறாளா, இருந்தால் எங்கே இருக்கிறாள் என்று தான் தேடிக்கொண்டிருப்பது வரை சொல்லிவிட்டு, “எனக்கு வேற ஒண்டும் நீங்க சொல்ல வேண்டாம் அம்மா. அந்தப் பிள்ளை எங்க இருக்கிறா எண்டு தெரியுமா? முதல் உயிரோட இருக்கிறாதானா எண்டு தெரியோணும். பொம்பிளைப்பிள்ளை வேற. உங்களுக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன். கவனமா ஹாண்டில் பண்ணவேண்டி இருக்கு. அதாலதான் உங்கட உதவியக் கேக்கிறன்.” என்று தயாவாகவே சொன்னான்.

அவர் அப்போதும் பதில் சொல்லத் தயங்கினார்.

“வேந்தன்ர கொக்குவில் வீடு செக் பண்ணிட்டம். அங்க அவா இல்லை. சில நேரம் உங்களோட…”

“இல்ல. அவா இஞ்ச இல்ல.” அவன் கேட்டு முடிக்க முதலே பதில் வந்தது.

“வேற எங்க எண்டு தெரியுமா உங்களுக்கு?” பதில் சொல்வாரா என்கிற சந்தேகம் இருந்தாலும் வினவினான்.

“இப்பிடியான விசயங்களை என்னையும் வச்சுக்கொண்டு அவே கதைக்கிறேல்ல தம்பி. இருக்கிற நிம்மதியும் போயிடுமோ எண்டு நானும் இதையெல்லாம் காதுல விழுத்த விரும்பிறேல்ல. ஆனா, வாசு எண்டுற ஒரு பெடியனிட்ட அவா உயிரோடதான் இருக்கிறா எண்டு நினைக்கிறன். இதுவும் கொஞ்ச நாளைக்கு முதல் கோபத்தில இவர் கத்தினதில காதுல விழுந்தது மட்டும்தான்.”

“இது போதும் அம்மா. மிச்சத்தை நான் பாக்கிறன். இந்தளவு தூரத்துக்கு நீங்க ஹெல்ப் பண்ணுவீங்க எண்டு நினைக்கேல்ல. நன்றி அம்மா.” என்று சொன்னவன், “இதுதான் என்ர நம்பர். எப்ப என்ன உதவி தேவை எண்டாலும் யோசிக்காமக் கூப்பிடுங்க.” என்றும் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

பெரியநாயகி அம்மாவுக்குத் தான் செய்த காரியத்தின் சரி பிழைகளைத் தாண்டி மனம் துடிக்காமல் இல்லை. ஆனால், ஒரு பெண் பிள்ளையின் நலனை நாடி உதவி கேட்பவனிடம் எப்படித் தனக்குத் தெரிந்ததைச் சொல்லாமல் இருப்பார்? இதற்கு மேல் நடப்பது நடக்கட்டும் என்று எண்ணிக்கொண்டு தன் மனத்தின் பாரத்தை இறக்கக் கடவுளின் துணையை நாடினார். அவருக்கும் வேறு யார்தான் துணை?

வாசுசேனனின் காவலில் ஏன் கேதகியை வைத்திருக்கிறார்கள் என்று எல்லாளன் யோசித்தது சில நிமிடங்களுக்குத்தான். பஸிலின் அத்தனை துண்டுகளும் அதனதன் இடத்தில் பொருந்திவிட்டது போலிருக்கவும் சட்டென்று சிரித்துவிட்டான். வேந்தனை அவனிடமிருந்து காப்பாற்ற எண்ணி அதைச் செய்திருக்கலாம். அவளையே தன் பிடியாக வைத்துக்கொண்டு வாசுசேனன் தனக்கான விடுதலையை சிவநாதரிடம் வற்புறுத்தியிருக்கலாம்.

இல்லாமல் இத்தனை வருடங்களாகச் சிறையில் இருந்தவனின் வழக்கு இப்போது இத்தனை அவசரமாகத் தீர்க்கப்படாது. ஆக, தனக்கான விடுதலை கிடைக்கிற வரை வாசு அவளை கொடுக்கப்போவதில்லை.

இனித் தாமதிக்கத் தேவையில்லை என்றதும் அருந்தவராஜாவிடம் அடுத்துச் செய்ய வேண்டியதை அப்போதே சொன்னான் எல்லாளன்.

அடுத்த நாளின் பொழுது விடிந்ததே ‘தயாநிதி குடும்பக் கொலை வழக்கின் குற்றவாளிகள் என்று நம்பப்படுகின்ற சந்தேக நபர்கள் திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் ஒரே நேரத்தில் கைது.’ என்கிற பரபரப்புச் செய்தியில்தான்.

சிந்திக்கும் திறனைக்கூட இழந்துபோய் அப்படியே அமர்ந்துவிட்டார் சிவநாதர். இனி இந்த மகனும் இல்லையா என்பதை அவரால் யோசிக்கக் கூட முடியவில்லை. தான் கொஞ்சம் முதலே அனைத்தையும் செய்து, அவனை இங்கிருந்து அனுப்பியிருக்க வேண்டும் என்று திரும்ப திரும்ப எண்ணினார்.

முதலில் எப்படி இது நடந்தது? எந்த ஆதாரத்தின் கீழ் கைது செய்திருக்கிறான் என்று ஒன்றும் பிடிபடவில்லை. உடனேயே வாசுசேனனுக்கு அழைத்து, “இப்ப சந்தோசமா உனக்கு?” என்று சீறினார்.

“என்ன விசயம்?” அனைத்தையும் அறிந்துதான் இருந்தான் வாசுசேனன். ஆனாலும் அவர் வாயிலிருந்து வரட்டும் என்று வினவினான்.

“என்னவா? அந்த எல்லாளன் என்ர மகனைத் தூக்கிட்டான்.” என்று பல்லைக் கடித்தார்.

“அதுக்கு?”

“எவ்வளவு திமிராடா உனக்கு? எனக்கு எண்டு மிஞ்சி இருந்தது அவன் ஒருத்தன்தான். அவனையும் ஜெயிலுக்கு அனுப்பிப்போட்டு உனக்கு உதவி செய்வன் எண்டு நினைச்சியா நீ?”

“ஆனா சாட்சி சொல்ல வேண்டிய கேதகி இன்னும் என்னட்டத்தான் இருக்கிறாள்.” என்றான் எச்சரிக்கும் குரலில்.

“பரவாயில்ல. இனியும் நீயே வச்சிரு. நானும் இனி உன்ர கேஸ தொட்டும் பாக்க மாட்டன்.”

சில நொடிகள் வாசுசேனனிடத்தில் அடர்ந்த அமைதி. “இப்ப நான் என்ன செய்யோணும்?” என்றான் நிதானமாக.

“எல்லாளனை முடி. அப்பதான் உனக்கு விடுதலை.”

“இல்லாட்டி?”

“வீட்டுக்கு வந்து என்னையே நீ கொன்றுபோட்டாலும் ஒண்டும் நடக்காது!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தார் சிவநாதர்.

“எல்லாளா!” அந்தப் பெயரே அவனுள் கொலைவெறியை உண்டாக்கிற்று. “நீ என்ன அவ்வளவு பெரிய இவனாடா? நேர்லயே வாறன்!” என்றுவிட்டுப் புறப்பட்டான் வாசுசேனன்.

error: Alert: Content selection is disabled!!