கதிரவனின் கண்ணில் மன்னைத் தூவிவிட்டுத் தப்பித்து வந்திருந்தான் வாசுசேனன். அதெல்லாம் அவனுக்கு ஒரு காரியமே இல்லை. ஆனால், தப்பித்துவிட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்தவோ, இறுமாப்புக் கொள்ளவோ முடியவில்லை.
மாறாக ஒரு ஆத்திரம் புசு புசு என்று அவனை எரித்தது. வெறி கொண்ட மிருகம் போன்று உறுமிக்கொண்டிருந்தான். அவனிடமிருந்து வெளியேறும் மூச்சுக்காற்று அந்தச் சுற்றத்தையே அனலாக்கிவிடும் அளவிற்குச் சூடாக இருந்தது. அதற்குக் காரணம் அவன் குறி தவறியிருக்கிறது. வாசுசேனன் வைத்த குறி தப்பியிருக்கிறது! எப்படி? இது எப்படி? அவனுக்குப் புரியவே இல்லை.
கடந்த சில நாள்களாகத்தான் எல்லாளன் என்கிற பெயர் அவன் காதில் விழ ஆரம்பித்தது. அவன் ஒரு காவல்துறை அதிகாரி என்று அறிந்ததில் இருந்தே ஒரு அலட்சியம். பணத்தைத் தூக்கிப் போட்டால் பல்லைக் காட்டும் இனத்தைச் சேர்ந்தவன் என்று நினைத்தான். சிவநாதர் மூலம் காவல்துறை ஆட்களை அப்படித்தான் எடைபோட்டு வைத்திருந்தான்.
தம் சுயநலத்துக்காகவும், தம் வளமான வாழ்வுக்காகவும், தம் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவும் யார் உயிரையும் பணயம் வைக்கவும் யோசிக்க மாட்டார்கள், யார் மீது என்ன வழக்குப் போடுவதற்கும் தயங்க மாட்டார்கள். இதுதான் காவல்துறை.
அதனாலேயே அவனைப் பற்றி மேலே ஆராயவோ அறிந்துகொள்ளவோ முயற்சி எடுக்கவில்லை.
அப்படியிருக்க அவன் ஜெயில் வரை சென்று தன்னை விசாரித்தது ஒரு வகையான எரிச்சலை மூட்டிற்று. சிவநாதர் மூலம் அவன் நினைத்தது நடக்கப்போகிறது என்று இருக்கிற இந்த நிலையில் நடுவில் புகுந்து அனைத்தையும் குழப்பப் பார்க்கிறானே என்கிற சினமும்.
அடுத்ததாய் வேந்தனின் கைது. அதன் எதிரொலியாகச் சிவநாதர் அவனுக்கான விடுதலைக்கு ஏற்பாடு செய்ய மாட்டேன் என்றது என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் நந்தியாக எல்லாளனே நின்றான். அதுதான் அவன் கதையை முடிக்கக் கிளம்பினான்.
சத்தமே இல்லாமல், அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாமல் முடித்துவிட்டு வருவதுதான் அவன் பாணி. வைத்தியசாலையில் இருந்தே பின்தொடர ஆரம்பித்திருந்தான். அந்தக் கோயில் ஒரு ஒதுக்குப்புறமாக இருந்தது. அதை விடவும் எல்லாளன் தன் காரை நிறுத்திய இடம், எந்த சிசிடிவி கேமராக்களும் இல்லாத ஒரு பகுதி.
அது அவனுக்கு இன்னுமே கொண்டாட்டமாயிற்று. கணவனும் மனைவியும் காரில் ஏறும் அந்த நொடியில் பாய்ந்து, அவன் வயிற்றில் கத்தியை இறக்கிவிட்டு வருவதுதான் அவன் திட்டம்.
ஆனால், முதன் முதலில் வைத்தியசாலையில் வைத்து, தூரத்தில் என்றாலும் சிரித்த முகமாக மனைவியோடு பேசிக்கொண்டு வந்த அந்த எல்லாளன், ஏதோ ஒரு வகையான அதிர்வலைகளை இவனுக்குள் கிளப்பிவிட்டான். இதயத்தில் ஒரு நடுக்கம். உள்ளத்தில் ஒரு தவிப்பு. எதையும் யோசிக்க முடியாதவன் போன்று சில கணங்களுக்கு உறைந்து நின்றுவிட்டான். ஆனாலும் தலையை உலுக்கித் தன்னை மீட்டுக்கொண்டு, அவர்கள் அறியா வண்ணம் பின் தொடர ஆரம்பித்தான்.
ஆனாலும் கூட அவன் போட்ட திட்டங்களை அவனாலேயே செயலாற்ற முடியாமல் போயிற்று. தேவையற்று அவன் முன்னே சென்று நின்றான். நீதானே எல்லாளன் என்று கேட்டான். அந்த இடத்தில் வைத்தாவது கத்தியை இறக்கியிருக்கலாம். அதுவும் இல்லை. மாறாக அவன் மீது பாய்ந்தான். அப்போதும் கூட அவனால் தன் முழுப் பலத்தையும் பிரயோகிக்க முடியவில்லை.
அந்த எல்லாளனின் தேகம் தொட்ட நொடியில் இவன் இதயமே குலுங்கிப் போயிற்று. கைகால்களை அசைக்க முடியவில்லை. மரத்துப்போய்க் கிடந்தவன் நெஞ்சில் யாரோ கத்தியை விட்டுக் குடையும் வலி ஊடுருவிற்று.
அவனை அடிக்கையில் இவனுக்கு வலித்தது. அதுவும் அந்தப் பெண் அண்ணா அண்ணா என்று கதறியது மிகவுமே தொந்தரவு செய்தது. எங்கோ ஒரு காலத்தில் எப்போதோ கேட்ட குரல் அது. அந்த எல்லாளனும் அவனை என்னவோ நெடுநாள் தெரிந்தவன் போல் பேசினான். கரிசனையோடு கையாள முயன்றான். அவன் இவனை எதிர்த்துத் தாக்கவில்லை. தடுக்கத்தான் முயன்றான். கடைசியில் இவனைத் தரையில் உருட்டி இவன் மீது ஏறி அமர்ந்த பிறகும் அடிக்கவில்லையே.
‘டேய் காண்டீபா!’ என்றவனின் குரலில் இருந்த தவிப்பு இப்போதும் இவன் நெஞ்சை என்னவோ செய்தது. வேகமாய்த் தலையை உதறி அது தரும் அதிர்விலிருந்து வெளியே வர முயன்றான். முடியவில்லை.
உண்மையில் அவனைக் கதிரவன் துரத்தவில்லை. அந்த எல்லாளன் முன்னே பேயாட்டம் போட்ட இவன் உணர்வுகள்தான் துரத்தின. அவன் உடலில் இறக்கிய கத்தியைக் கூட ஆழமாய் இறக்கவில்லை. அவ்வளவில் கை நடுங்கிக்கொண்டிருந்தது. அதுதான் அசுர வேகத்தில் அங்கிருந்து தப்பித்து வந்தான்.
ஆனால், இது நிரந்தரமான தப்பித்தல் இல்லை என்று அவனுக்குத் தெரியும். நாளை விடிந்தால் இவன் காவல் நிலையம் சென்று கையொப்பம் இடவேண்டும். அதைத் தவிர்த்தால் அடுத்த கட்டமாய் மொத்தக் காவல்துறையும் அவனை நோக்கிப் பாயும்.
அங்குப் போனால் நிச்சயம் காவல்துறை அவனைக் கைது செய்யும். சத்தமே இல்லாமல் காரியம் செய்யப்போனவன் மைக் வைத்து அறிவிக்காத குறையாகச் செய்துவிட்டு வந்திருக்கிறான்.
ஆக, அவன் மீண்டும் சிறை செல்வது உறுதி. உள்ளே ஒரு ஆத்திரம் சுறு சுறு என்று ஏறிற்று.
முதலில் யார் அந்தக் காண்டீபன்? அவன் பெயரைச் சொல்லி இவன் ஏன் அழைத்தான்? எப்போதோ ஒரு முறை எல்லாளனோடு சேர்த்து அந்தக் காண்டீபனின் குடும்பத்தையும் மொத்தமாக அழிக்க வேண்டும் என்று சிவநாதர் சொன்ன நினைவு.
வேகமாகக் கைப்பேசியை எடுத்துக் காண்டீபன் என்று கொடுத்துத் தேடினான். பெரிதாக ஒன்றையும் காணோம். மகாபாரதமும், அர்ச்சுனனின் காண்டீபமும்தான் வந்தன.
உடனேயே ‘எஸ்எஸ்பி எல்லாளன்’ என்று கொடுத்தான். அவன் வரலாறே வந்தது. அத்தனையும் அவன் நேர்மையையும் துணிச்சலையும் பறைசாற்றி நின்றன. கூடவே அவன் கையாண்ட வழக்குகளையும், அவற்றை அவன் விசாரித்த விதங்களையும், அதில் வெற்றி வாகை சூடியதையும் புகழ் பாடியிருந்தன.
அதில் மிக மிக முக்கியமான வழக்காகச் சொல்லப்பட்டிருந்தது சம்மந்தன் காண்டீபன் வழக்கு! அவன் உள்ளத்தில் ஒரு அதிர்வு. காண்டீபன் யார்? அதைவிட அவனும் சம்மந்தன் வாசுசேனனாயிற்றே. சட்டென்று தொற்றிக்கொண்ட பரபரப்புடன் அந்த லிங்க்கை அழுத்தினான். அடுத்த நொடியே மின்சாரக் கம்பியின் மீது காலை வைத்தவன் போன்று மீண்டுமொருமுறை அதிர்ந்தான்.
அங்கிருந்த புகைப்படத்தில் இருந்தவன் அவன். அவனால் நம்பவே முடியவில்லை. என்ன நடக்கிறது அவனைச் சுற்றி?
வேக வேகமாக அதனை வாசிக்க ஆரம்பித்தான். கல்லூரி மாணவர்களுக்குப் போதைப் பொருட்களை விநியோகம் செய்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது என்கிற தலைப்பின் கீழ், காண்டீபனை எல்லாளன் கைது செய்தது தொடங்கி, போதைத் தடுப்புப் பிரிவின் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் கீழ் அவன் கொண்டு செல்லப்பட்டு, யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் வைத்துத் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டான் என்கிற வரை இருந்ததைக் கண்டு அவன் நெஞ்சு குலுங்கியே போயிற்று.
அந்தக் காலப்பகுதியில் அவனும்தானே அங்கே சிறையில் இருந்தான். இப்படி ஒரு நிகழ்வு நடந்தது அவனுக்குத் தெரியாதே.
கைதிகளுக்கிடையில் நடந்த பெரும் கலவரமாக சோடிக்கப்பட்டு, பின் வந்த நாள்களில் அது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கொலையாக நீதிமன்றில் நிறுவப்பட்டிருந்தது.
திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றாலும் இவ்வளவு பெரிய கலவரம் ஒன்றின் மூலம் ஒரு கொலையே நடந்திருக்கிறது என்கையில், அதே சிறையில் இன்னொரு பகுதியில் இருந்த அவன் காதுக்கு எப்படி வராமல் போகும்? வேகமாக அது சம்மந்தமான வீடியோக்கள் ஏதும் கிடைக்கிறதா என்று தேடினான்.
காண்டீபன் கையில் விலங்கு மாட்டப்பட்டுக் காவல் நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லும் காட்சியைக் கண்டு ஒரு கணம் உறைந்துபோனான். உருவம் இவனாக இருந்தாலும் ஒரு பண்பட்ட மனிதனின் தோற்றம் அது. இமைக்க மறந்து அவனையே பார்த்தான். உள்ளத்தை என்னவோ செய்தது. நீ யார்? உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? உனக்கும் எனக்கும் எப்படி ஒரே உருவம் வந்தது?

