அத்தியாயம் 28
கேதகிக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட நிலை. சும்மாவே யாழ்ப்பாணம் வந்த நாள் தொட்டுத் தன் வாழ்வில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்கிற தெளிவு அவளுக்கு இல்லை. இப்போதோ நடப்பவை அனைத்தும் மர்மங்களாகவே இருந்தன.
இத்தனை நாள்களில் தான் ஏதாவது கோளாறு செய்து தப்பிக்க முயலாத வரையில் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது வரை புரிந்து வைத்திருந்தாள். டைகர் கூட அவளைத் தன் நட்புப் பட்டியலில் சேர்த்துக்கொண்டிருந்தான்.
இருவருமாக மொட்டை மாடியில் நடப்பார்கள், குந்தியிருந்து வானத்தை வேடிக்கை பார்ப்பார்கள், விளையாடுவார்கள், ஒன்றாகச் சாப்பிடவும் செய்வார்கள். இரவுகளில் டைகர் உறங்குவது கூட அவள் அருகில்தான்.
அந்த முரட்டு ஆண்களின் சுபாவங்கள் கூட அவளுக்குப் பழகியிருந்தன. அங்கே அந்த வீட்டில் இருந்தபோது மரங்களை வெட்டுவது, புற்களைச் செருக்குவது என்று ஏதோ ஒரு கடினமான வேலை செய்துகொண்டிருப்பார்கள். கடைசியாக மரப்பலகை வாங்கி வந்து கட்டில் செய்துகொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் எப்போதுமே ஒரு இறுக்கம் இருக்கும்; கடினம் இருக்கும். அவர்கள் மூவரும் சிரித்துப் பேசி அவள் பார்த்ததில்லை. ஆனாலும் கூட ஒரு பதற்றத்தை அல்லது பரபரப்பைக் கண்டதில்லை.
அன்று வேந்தன் வந்து சண்டையிட்டுவிட்டுப் போன அடுத்த நாள் கூட, அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதுபோல் ஆளாளுக்கு அவரவர் வேலைகளைப் பார்த்ததைக் கண்டு இவள்தான் திகைத்து நின்றிருந்தாள்.
அப்படியானவர்களின் முகங்களில் இந்தச் சில நாள்களாக எரிச்சல் கோடுகளைக் காண்கிறாள். அடிக்கடி இரகசியமாகப் பேசுகிறார்கள். அவர்கள் மூவரும் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு மிகத் தீவிரமாகப் பேசிக்கொண்டு நிற்பதைப் பார்க்கையில் இவளைப் பதற்றம் தொற்றிக்கொள்ளும்.
யாரோ ஒருவர் வெளியே ஓடிக்கொண்டேயிருந்தார். கடைசியாக வாசுசேனன். எங்கேயோ அவசரமாகப் போனான். அதை விட வேகமாகத் திரும்பி வந்தான்.
வந்தவனைக் கண்டு அவள் பயந்துபோனாள். சும்மாவே அவன் முகத்தில் கடுமை குடியிருக்கும். ஆனால் இப்போது சினம், சீற்றம், ஆற்றாமை என்று எல்லாம் சேர்ந்து பொங்கின. போதாதற்கு அடிபட்ட சிங்கம் போன்று அங்குமிங்குமாக நடந்தான்.
பிறகு கைப்பேசிக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு எதையோ தேடினான். திடீர் என்று டொம் டொம் என்று சத்தம். அறைக்குள் இருந்தவள் பயந்துபோய் வெளியே ஓடி வந்து பார்த்தாள். குளியலறைச் சுவரில் கையாலேயே ஓட்டை போட்டுவிடுகிறவன் போன்று ஓங்கி ஓங்கிக் குத்திக்கொண்டிருந்தான்.
என்னாயிற்று இவனுக்கு? இப்படி அவனை அவள் இதற்கு முதல் பார்த்ததில்லை. அருகில் சென்று கேட்கவும் பயந்தாள்.
அப்போது மற்ற இருவரும் வேகமாக மாடியேறி வந்தார்கள். மூவருமாக என்னவோ குசு குசு என்று பேசினார்கள். அவன் அதே வேகத்தில் எங்கோ புறப்பட ஆயத்தமானான்.
அதற்கு முதலில் திரும்பி இவளைக் காட்டி, “உங்களோடயே கூட்டிக்கொண்டு போங்க.” என்று சொல்லவும் இவளுக்குத் திக்கென்றிருந்தது.
“சேனா!” என்று அழைத்துக்கொண்டு அவனிடம் ஓடினாள். “எங்க போறீங்க? எங்க போனாலும் என்னையும் உங்களோடயே கூட்டிக்கொண்டு போங்க. ப்ளீஸ்.” என்று கெஞ்சினாள்.
அவன் இவள் பேச்சைக் கவனத்தில் எடுக்கவில்லை. அறைக்குள் சென்று அணிந்திருந்த கறுப்பு பெனியனைக் கழற்றி போட்டான். வேறு ஒன்றை எடுத்து மாட்டினான். அதிசயமாக சேர்ட் ஒன்றையும் எடுத்து அணிந்தான்.
அவன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதைக் கூட உணராமல் அவன் பின்னாலேயே அறைக்குள் நுழைந்து, “பிளீஸ் சேனா. எனக்குப் பயமா இருக்கு. அந்த வேந்தன் திரும்பவும் வந்தா என்ன செய்றது? நானும் உங்களோடயே வாறன் ப்ளீஸ்.” என்று கெஞ்சினாள்.
அவன் தலைக்குத் தொப்பி ஒன்றை எடுத்து அணிந்துகொண்டான். கண்களுக்குக் குளிர் கண்ணாடி குடியேறிற்று. கைப்பேசியை எடுத்து ஜீன்ஸ் பொக்கெட்டினுள் அடைத்துக்கொண்டு அவன் அறையை விட்டு வெளியேறப் போனான். அதுவரை அவன் செல்கிற இடமெல்லாம் பின்னாலேயே சென்றபடி கெஞ்சிக்கொண்டிருந்தவளின் நிதானம், அவனின் அலட்சியத்திலும் போய்விடப்போகிறான் என்கிற பதற்றத்திலும் காணாமல் போயிற்று.
“நான் என்ன பொம்மையா ஆளாளுக்கு நீங்க நினைக்கிற இடத்துக்குத் தூக்கிக்கொண்டு போக? ஒண்டு உங்களோட கூட்டிக்கொண்டு போங்க. இல்லையா என்னை விடுங்க, நான் கொழும்புக்கே போறன்.” என்று குரலை உயர்த்தினாள்.
அவ்வளவுதான். இரண்டு எட்டில் அவளை நெருங்கி, அவள் கழுத்தைப் பற்றியிருந்தான் வாசுசேனன். சும்மா மிரட்டுவதாகப் பற்றிய பற்றல் இல்லை அது. மெய்யாகவே அவள் கழுத்தை நெறித்தான். முகமெல்லாம் நொடியில் சிவந்து, சுவாசிக்க முடியாமல் இருமத் தொடங்கியது அவளுக்கு. “விடுங்க விடுங்க!” என்று அவன் கையை எடுத்துவிடப் போராடினாள்.
அப்படி அவள் போராட போராட அவன் முகம் கடுமையாக மாறிற்று. அவள் கழுத்திலிருந்த தன் விரல்களின் அழுத்தத்தைக் கூட்டினான். இரக்கம் காட்டவேயில்லை. அவள் பயந்துபோனாள். அவனை எதிர்த்துப் போராடுவதை விட்டுவிட்டு ஒருவிதத் திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.
“சத்தம் வரக்கூடாது! சொன்னதை மட்டும் செய்யோணும். விளங்கினதா?”
கடுமை நிறைந்த அவன் வார்த்தைகளில் விழிகளில் வேதனை துலங்க அவனையே பார்த்தாள் கேதகி.
சொன்னதை மட்டும் செய்ய அவள் என்ன பொம்மையா? அவளுக்கு யாருமில்லைதான். அதற்கென்று வாழ வழியில்லாமலா நிற்கிறாள்? அவளை அவள் பாட்டுக்கு விட்டால் அவள் வழியைப் பார்த்துக்கொண்டு போய்விடுவாளே. அதற்கும் விடாமல் ஆளாளுக்குப் பந்தாடுகிறார்களே. இல்லையானால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவானா?
பரவாயில்லை, கொன்றுவிடு என்று சொல்வதற்குத் தைரியமில்லையே. அதனாலேயே அவனுக்கு அடங்கிப்போகும் நிலையில் இருக்கிறாள். அவள் கட்டுப்பாட்டையும் மீறிக் கண்ணீர் கன்னத்தை நனைத்தது.
அந்தக் கண்ணீர்த் துளிகள் அவன் கரத்தில் வந்து விழுந்ததும் வேகமாக அவள் கழுத்திலிருந்து கையை இழுத்துக்கொண்டான். இறுக்கமான முகத்துடன் ஒற்றை விரலை மாத்திரம் கவனம் போன்று ஆட்டிக்காட்டிவிட்டுப் போனான் அவன்.
*****
வைத்தியசாலை வளாகத்தில் ஜீப்பை கொண்டுவந்து நிறுத்திவிட்டு வேகநடையில் வைத்தியசாலைக்குள் உள்ளிட்டான் கதிரவன். எல்லாளனை எதிர்கொள்ள மிகவும் சங்கடப்பட்டான்.
காண்டீபன் என்று அவன் குறிப்பிட்ட வாசுசேனனைத் தவற விட்டுவிட்டானே. அங்கே கோயிலடியில் இவன் ஓடி வந்து எல்லாளனைப் பார்த்துவிட்டுத் திரும்பி ஓடிப்போய் ஜீப்பை எடுத்துக்கொண்டு துரத்த ஆரம்பிக்கும்போதே அவனைக் காணவில்லை. அத்தனை வேகமாக அங்கிருந்து மறைந்திருந்தான். ஊர் முழுவதும் சல்லடை போட்டுத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கணவன் மனைவி இருவரையும் இப்படிப் பார்ப்பதே ஒரு மாதிரி மனத்தைப் பிசைந்தது. அதைவிட எப்போதுமே கம்பீரமாகப் பார்த்துப் பழகியவனை காயப்பட்ட ஒருவனாகப் பார்க்க மிகவுமே சிரமப்பட்டான்.
“சேர்!” வாசலிலேயே நின்று தயங்கி அழைத்தான்.
தலை மீது ஒற்றைக் கையைப் போட்டபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்த எல்லாளன் திரும்பி அவனைப் பார்த்தான்.
“சொறி சேர்…” என்று இவன் பேச்சை ஆரம்பிக்கையிலேயே கையை நீட்டித் தடுத்துவிட்டுத் திரும்பி ஆதினியைப் பார்த்தான். அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். திரும்பிக் கதிரவனை நோக்கிக் கரத்தை நீட்டினான். புரிந்துகொண்ட வேகமாய் வந்து அதைப் பற்றி அவன் எழும்புவதற்கு உதவி செய்தான்.
அதற்கே சுளீர் என்று இடுப்புப் பக்கம் முழுவதும் சுண்டி இழுத்தது எல்லாளனுக்கு. பல்லைக் கடித்துப் பொறுத்துக்கொண்டு மெல்ல நடந்து வெளியே வந்து, “இப்ப சொல்லுங்க!” என்றான்.
“மிஸ் பண்ணிட்டன் சேர்.” மெல்லிய குற்றவுணர்ச்சியுடன் சொல்லிவிட்டு, “ஆனா, கோயில், அந்த ரோட்டில இருந்த ஃபுட்டேஜ் எல்லாம் எடுத்திட்டன். பைக் நம்பரும் இருக்கு. பிடிச்சிடலாம் சேர்.” என்று வேகமாக இயம்பியவனிடம் மறுத்துத் தலையசைத்தான் எல்லாளன்.
“சத்தியநாதன் கேஸ் நினைவிருக்கா கதிரவன்?” என்று கேட்டுவிட்டுக் கதிரவனின் விழிகளையே ஊடுருவிப் பார்த்தான் எல்லாளன்.
கதிரவன் தனக்குள் அதிர்ந்தான். கொடூரமாகக் கொன்றுவிட்டுச் சிறு தடயமே இல்லாமல் அத்தனையையும் அழித்தார்களே, அதைப் போலவே இதையும் செய்யச் சொல்கிறானா?
அந்தக் கேள்வியை அவன் கேட்கும் அவசியமே இல்லாமல், “இதுவரைக்கும் அவன் அனுபவிச்சதுகளே பெரும் தண்டனை கதிரவன். இனி அனுபவிக்கப்போறதுகள்…” என்றவனால் மேலே பேச முடியவில்லை. தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவர முயல்கிறவன் போன்று கதிரவனுக்கு எதிர்ப்புறம் திரும்பி எங்கோ வெறித்தான்.
“என்ர காண்டீ சாதாரண சொல்லால கூட என்னை நோகடிக்க மாட்டான் கதிரவன். எனக்காகத் தன்ர உயிரைக் கூடக் குடுப்பானே தவிர என்ர உயிரை எடுக்க நினைக்க மாட்டான். அப்பிடியானவன் என்னைக் குத்திற அளவுக்கு வந்திருக்கிறான். சோ நாங்க தேட வேண்டியது அவனை இப்பிடி மாத்தினது ஆரு, அப்படி அவனுக்கு என்ன நடந்தது எண்டுறதைத்தானே தவிர அவனை இல்ல.” என்று சொன்னான் எல்லாளன்.
“விளங்குது சேர். ஆனா எதை மறைச்சலும் உங்கட காயத்தை மறைக்கேலாதே சேர். அதுக்கான விசாரணை கட்டாயம் நடக்குமே.”
“சத்தியநாதன் வழக்கும்தான் நடந்தது. ஏதாவது ஒரு சாட்சியாவது கிடைக்காதா எண்டு இப்ப வரைக்கும் சிவநாதர் ரகசியமா தேடிக்கொண்டுதானே இருக்கிறார்.” சிறு புன்னகையுடன் இலகுவாய்ப் பதிலளித்தான் எல்லாளன்.
கதிரவன் உதட்டிலும் மெல்லிய முறுவல்.
“நாங்க கோயிலுக்குப் போகேக்க கோயில் ஐயா நிக்கேல்ல. ஒண்டு ரெண்டு பேர்தான் கோயில்ல நிண்டவே. அவே பற்றின எந்த டீடெயில்ஸும் வெளில வரக் கூடாது. ஆராவது ஃபோன்ல ரெக்கோர்ட் பண்ணியிருக்கவும் சான்ஸ் இருக்கு. அப்பிடி நடந்திருந்தா எப்பிடியாவது அதையும் வாங்கி டிலீட் பண்ணிடுங்க. அத்தனை சிசிடிவி ரெகோர்ட்ஸயும் மொத்தமா அழிச்சு விடுங்க. உங்களிட்ட கூட எந்த ஆதாரமும் இருக்க வேண்டாம் கதிரவன்.”
சரி என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு, “கோயில்ல இருந்த ஆரையும் வெளில போக நாங்க விடேல்ல சேர். நீங்க சொன்ன மாதிரி ஆராவது ரெக்கோர்ட் பண்ணினவையா எண்டு அவேன்ர ஃபோன் எல்லாத்தையும் அப்பவே செக் பண்ணிட்டேன். அதே மாதிரி வேற ஆரும் அங்க நான் வர முதல் நிண்டுட்டு போனவையா எண்டு கோயில் வாசல்ல இருந்த சிசிடிவி செக் பண்ணினனான். ஒரு குடும்பம் மட்டும் ஆட்டோவில போறது தெரிஞ்சது. அந்த ஆட்டோ நம்பர் வச்சு, அந்தக் குடும்பத்தையும் தேடிப்போய் விசாரிச்சிட்டன். அவே எதையும் ரெக்கோர்ட் செய்யேல்ல. சண்டை நடந்த ஆக்களையும் பாக்கேல்லை எண்டு சொன்னவே. சின்ன பிள்ளைகள் இருந்தபடியா உடனேயே அங்க இருந்து போயிட்டினமாம். சோ, என்னட்ட இருக்கிற ஆதாரங்களத் தவிர வேற எதுவும் ஆரிட்டயும் சிக்காது சேர். ஆனா ஒரு சிக்கல்.” என்று சொன்னான்.
என்ன என்பது போல் அவனைப் பார்த்தான் எல்லாளன்.
“கோயில்ல ஒண்டு, அந்த ரோட்டில ரெண்டு சிசிடிவி இருந்தது. அந்த மூண்டயும் மொத்தமா அழிச்சா சந்தேகம் வரும்.”
“பரவாயில்ல. நீங்க கோயில் ரெக்கோடரையே ஏதாவது செய்து உடச்சு விடுங்க. அதில இருக்கிற டைம, காண்டீபன்ர அடையாளங்களை வச்சுத்தானே அவனை அவன் எண்டு கண்டுபிடிப்பினம். நான் நேரத்தையும் மாத்திச் சொன்னா சரிதானே.” என்று இலகுவாய் அதற்குத் தீர்வு கண்டான் அவன்.
கதிரவனின் முகம் மலர்ந்துபோயிற்று. இதுதானே என்றும் அவன் பார்த்து வியக்கும் எல்லாளன். விரைப்புடன் நிமிர்ந்து நின்று அவனுக்கு ஒரு சல்யூட்டை வைத்துவிட்டு, அவன் சொன்ன காரியங்களை அந்த நிமிடமே செயலாற்றப் புறப்பட்டான்.

