அத்தியாயம் 29
கதிரவன் சென்றுவிட்ட பிறகும் அங்கேயே நின்றிருந்தான் எல்லாளன். மூச்சுக்குழாயை அடைப்பது போன்று ஒரு இறுக்கம்.
இழந்துவிட்ட குழந்தை, உடைந்துபோயிருக்கும் மனைவி, தன்னையே தொலைத்துவிட்டு நிற்கும் நண்பன், சேரக் கூடாத இடம் சேர்ந்து செய்யக் கூடாதவற்றை எல்லாம் செய்துவிட்டானே என்கிற வேதனை, அதெல்லாம் தெரிய வருகையில் தன்னைத் தானே மன்னிக்க முடியாமல் அவன் அனுபவிக்கப் போகிற அந்த வலி, அவனுக்கு அவனையே எப்படி உணர்த்தப்போகிறேன் என்கிற துயர், இன்னுமே இருப்பது காண்டீபன்தான் என்பதை நம்ப முடியாத ஆனந்தமும் திகைப்பும் கலந்த நிலை, இனி எப்படி அவனை அத்தனையிலும் இருந்து வெளியே கொண்டுவருவேன் என்கிற கேள்வி, எதிர்காலம் அவனுக்கு எப்படி அமையப்போகிறது என்கிற கவலை, இந்த முறையாவது எக்காரணத்தைக் கொண்டும் அவனை விட்டுவிடக் கூடாது என்கிற துடிப்பு என்று அவன் மனம் ஒரு நிலையிலேயே இல்லை.
பழைய ஜெயிலரைத் திருகோணமலை சென்று சந்திக்க வேண்டும், கிருபானந்தரை விசாரிக்க வேண்டும், பிரேத பரிசோதனை செய்த வைத்தியர் எங்கே என்று பார்க்க வேண்டும். இப்படி அவசரமாகப் பார்க்க நிறைய வேலைகள் இருந்தன. அவற்றை அவன் தாமதப்படுத்துவது சிவநாதருக்கு வாய்ப்பாக அமைந்துவிடச் சாத்தியம் உண்டு.
ஆனால் அவனால் இயலவில்லை. கை கால்களில் கத்திக் குத்து விழுந்திருந்தால் கூடப் பரவாயில்லை. வலிக்க வலிக்க வேலைகளைப் பார்த்திருப்பான். இது இடுப்புப் பக்கம் என்கையில் அவனால் அமர முடியவில்லை. ஓரளவிற்கு நிற்கலாம் அல்லது படுக்கலாம். இருக்கவோ குனியவோ மிகவும் சிரமப்பட்டான். ஓட்டப் பந்தயத்தில் பாய நின்ற குதிரையைக் கட்டிப்போட்டது போலாயிற்று அவன் நிலை.
இது எல்லாவற்றுக்கும் முதல் இவனைக் காண்டீபன் கத்தியால் குத்திய சாட்சியை அழிப்பதுதான் முக்கியம். அதுதான் கதிரவனை அந்த வேலையை முதலில் பார்க்கச் சொல்லி அனுப்பிவைத்தான்.
நாளைய நாள் காவல்நிலையத்திற்குக் கையெழுத்திட வருகிற காண்டீபனைச் சந்தித்துப் பேச வேண்டும். இவன் பேச நினைக்க அவன் என்ன செய்வான் என்று தெரியாது.
இதையெல்லாம் யோசித்தபடி நிற்கையிலேயே உடல் நடுங்கிக்கொண்டு வந்தது. கழுத்தோரம் தன்னைத் தானே தொட்டுப் பார்த்தான். உடல் நன்றாகச் சுட்டது. காய்ச்சல் நிச்சயம் வரும் என்று வைத்தியர் சொன்னார்தான். அதற்கு மாத்திரையும் தந்திருந்தார்.
அங்கே வீட்டில் சின்னவர்கள் அடிபட்டு ஒரே அழுகையாம் என்று அறிந்ததும் சியாமளாவை வீட்டுக்கு அனுப்பியிருந்தான். எப்படியும் அகரன் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்துவிடுவான். இல்லாவிட்டாலும் அவள் நின்று பார்க்க என்று ஒன்றும் இங்கில்லை.
மெல்ல நடந்து உள்ளே சென்று மாத்திரைகளை எடுத்து விழுங்கினான். ஆதினி இன்னும் நல்ல உறக்கத்தில் இருந்தாள். அந்த உடல் நிலையிலும் அமைதியாக இராமல் அவன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அவனுக்கே உத்தரவிட்டவளின் வேகம், காண்டீபன் மீதான அவளின் பாசத்தைச் சொல்லிற்று.
அதுதான் அவளறியாமல் உறங்குவதற்கான மருந்தை அவளின் செலைனில் ஏற்றச் சொல்லியிருந்தான். இல்லாமல் அவளாவது இப்படி உறங்குவதாவது. அதுவும் அவன் உடல் நிலை இப்படி இருக்கையில்.
மென் புன்னகை முகத்தில் அரும்ப அவளிடம் சென்றான். அவளோடு தனக்கு இப்படி ஒரு ஆத்மார்த்தமான, அமைதியான, நிறைவான வாழ்க்கை அமையும் என்று அன்று இளந்திரையன் திருமணத்திற்குக் கேட்டபோது நினைத்தே பார்க்கவில்லை.
அவளோடான வாழ்க்கைக்கு அவன் தன்னையோ, தன் வாழ்க்கை முறையையோ பெரிதாக மாற்றிக்கொள்ளவேயில்லை. ஆனால் அவள்? அப்படியே மாறினாள். மெய்யாகவே அவன் முகம் பார்த்து மலரும் தாமரை அவள். அவனுக்கு எங்கு இடமாற்றம் வந்தாலும் பின்னோடு வந்துவிடுவாள்.
பிள்ளைகள் பிறந்த நேரத்திலும் சியாமளாவையும் இளந்திரையனையும் தம்மிடம் அழைத்துக்கொண்டாளே தவிர அவள் போய் அவர்களோடு இருக்கவில்லை. தாய்க்குத் தாயாய் தாரத்திற்குத் தரமாய் அவனைத் தாங்கும் தங்கம் அவள்.
தன்னால் இயலாதபோதும் மெல்லக் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான். போர்வையைச் சரியாகப் போர்த்திவிட்டான். அவள் ஆசைப்பட்டது போன்று அவனுக்கும் அவள் இடுப்பைக் கட்டிக்கொண்டு, அவள் கைகளுக்குள் அடங்க வேண்டும் போல்தான் இருந்தது. அலைபாய்ந்து நிற்கும் அவன் மனத்திற்கு மனைவியின் மடியும் அவளின் தலைகோதலும் மட்டுமே அருமருந்தாய் இருக்கும். அதற்கு இருவர் உடல் நிலையும் ஒத்துழைக்காதே.
அவனும் வந்து மெல்லக் கட்டிலில் சரிந்தான். அப்போதும் அவனால் உறங்க முடியவில்லை. மனம் அலைபாய்ந்துகொண்டேயிருந்தது. ஆனால், அவன் போராட்டத்தைக் காட்டிலும் மாத்திரைகளின் வீரியம் அதிகம் போலும். அவனை அறியாமலேயே உறங்கிப்போனான்.
நல்ல உறக்கத்தில் இருந்த எல்லாளனை என்னவோ தொந்தரவு செய்தது. ஏதோ ஒன்று அவனைக் குத்தும் உணர்வு. புருவங்களைச் சுருக்கினான். இலேசாக முகம் திருப்பி உறங்க முயன்றான். அப்போதும் அந்த உணர்வு அகலுவதாக இல்லை. மெல்ல விழிகளைத் திறக்க முயன்றான். முடியாமல் எரிந்தன. அதுவே இன்னும் காய்ச்சல் விடவில்லை என்று சொல்லிற்று. சிரமப்பட்டு விழிகளைத் திறந்தவன் ஒரு வினாடி அதிர்ந்துபோனான்.
அவனருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து, தொடைகளில் கைகளை ஊன்றி, கரங்களைக் கோர்த்தபடி அவனையே பார்த்திருந்தான் வாசுசேனன். ஒரு கணம் திகைத்துப்போனான். அடுத்த நொடியே நெஞ்சில் ஓர் ஆனந்தம். மறுபடியும் அவனைத் தேடி வந்துவிட்டானே.
இமைக்கவும் மறந்து அவனையே பார்த்தான். கற்பூரமாய்க் கரைந்து காற்றோடு காற்றாகக் கலந்துபோய்விட்டான் என்று எண்ணியிருந்தவன் உயிரோடு. அவன் உயிரின் மறு வடிவம். காலம் முழுக்க அவர்கள் சேர்ந்து இருந்திருந்தால் கூட இப்படி ஒரு ஆழமான நட்பு அவர்களுக்குள் வேரூன்றியிருக்குமா தெரியாது. கொடூரமான பிரிவு பிரிக்கவே முடியா பிணைப்பை உருவாக்கியிருந்தது.
காலையிலும் பார்த்தான்தான். கண்ணும் மனமும் நிறையுமளவுக்குப் பார்த்து முடிக்க முதலே கண்ணை விட்டு மறைந்துவிட்டானே.
அணிந்திருந்த தொப்பி, வெள்ளை நிற சேர்ட், முழங்கை வரை மடிக்கப்பட்டிருந்த அதன் கை, சேர்ட்டின் கழுத்துப்பகுதியில் மாட்டப்பட்டிருந்த கூலர் என்று அவன் தோற்றம் அன்று பல்கலை வாசலில் பார்த்தவனுக்கு ஒப்பாய் இருக்கவும் சட்டென்று நிலைகுலைந்துபோனான் எல்லாளன்.
அந்த நிமிடமே பாய்ந்து அவனை அணைக்கத் துடித்தான். தன் நிலையும் அவன் நிலையும் அதற்கு இடம் தராது என்று தெரிந்து விழிகளைச் சிமிட்டக்கூட விரும்பாமல் அவனையே பார்த்தான்.
அந்தப் பார்வை வாசுசேனனின் மனக்கிடங்கின் அடியாழத்தில் பெரும் பூகம்பத்தையே கிளப்புவது போலிருக்க, “ஆர்ரா நீ?” என்றான் சினம் நிறைந்த குரலில்.
எல்லாளனின் உதட்டோரம் சிறிதாய் முறுவல் அரும்பிற்று. “இஞ்ச கேளு, சொல்லும்!” என்றான் வாசுசேனனின் நெஞ்சைத் தட்டிக் காட்டி.
பட்டென்று அவன் கையைத் தட்டி விட்டுவிட்டு, “தொட்டியோ கொன்றுவன் உன்னை!” என்று விரல் நீட்டி எச்சரித்தான் வாசுசேனன்.
“நான் என்னை பொம்பிளையா, உன்னைத் தொட்டதும் உனக்குள்ள என்னென்னவோ எல்லாம் நடக்கிறதுக்கு?” நண்பன் இல்லையா? அந்த நிலையிலும் கிண்டலும் கேலியும் இலகுவாய் வந்தன.
“நீ ஆர் எண்டு கேட்டனான்?”
“என்னை முதல் எழுப்பி விடு.” என்று அவன் கையைப் பற்றினான் எல்லாளன்.
“தொடாத எண்டு சொல்லுறது விளங்கேல்லையா உனக்கு?” ஆத்திரத்தில் அவன் கையை முறுக்கினான்.
“அடேய்! நீ குத்தின இடம் வலிக்குது மச்சான். விடு!”
“முதல் நீ நான் கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லு!” தன்னை மீறி உறுமினான் வாசுசேனன்.
“அங்க படுத்திருக்கிறாள் பார் உன்ர தங்கச்சி. அவளுக்கும் உடம்பு சரியில்ல. நீ கத்தி அவளை எழுப்பினியோ அதுக்குப் பிறகு தெரியும். மரியாதையா என்னை வெளில கூட்டிக்கொண்டு போ!” என்றான் எல்லாளன் உத்தரவாக.
அவனை முறைத்துவிட்டு அவன் கரம் பற்றி இழுத்தான்.
“டேய் மெல்லடா!” என்று அவன் முகம் சுளிக்க இவனுக்குச் சுளீர் என்றது. தன்னை அறியாது அவன் தோளிலும் பற்றி எழுப்பி வெளியே அழைத்து வந்தான்.
எல்லாளனுக்கு அந்த ஒற்றைக் கரிசனை போதுமாயிற்று. தன் உடல் நிலையை மறந்து அவனை ஆறத் தழுவிக்கொண்டான். தன் கையாலேயே கொல்லி வைத்து, தீக்கு இரையாக்கிவிட்டோம் என்று எண்ணியிருந்த நண்பனின் தேகமும் அதன் கதகதப்பும் அவனை முற்றிலுமாக உடைக்க, கண்ணை நனைத்தது கண்ணீர்.
வாசுசேனன் ஆடிப்போனான். ஒற்றை உதறலில் அவனால் இவன் அணைப்பிலிருந்து வெளியே வர முடியும். ஆனால் முடியவிலை. சுண்டு விரலைக் கூட அசைக்கும் வல்லமையற்றவனாக உறைந்து நின்றான்.

