“என்னய்யா இதெல்லாம்? இவனை எல்லாம் என்னத்துக்கு வீட்டுக்க எடுக்கிறீங்க?” என்று ஆத்திரப்பட்டான் வேந்தன்.
“கத்தாத! முதல் இந்தக் குப்பையைத் தூக்கி எங்கயாவது போடு!” விழிகள் எங்கோ பிதுங்கிக்கிடக்க, உயிரற்ற உடலாகத் தரையில் கிடந்தவனைக் காட்டிச் சீறினார் சிவநாதசுப்ரமணியன். அவருக்கே நடந்தது மிகப் பெரிய அதிர்ச்சிதான். அதற்கென்று கத்தி ஊரையா கூட்ட முடியும்?
“என்னய்யா சொல்லுறீங்க? அவன் எங்கட ஆள். உங்களுக்கு முன்னாலேயே அவன்ர கழுத்த பிளேட்டால அறுத்திருக்கிறான். அவனை ஒண்டும் செய்யாம விட்டுட்டு இவனைத் தூக்கிப் போடச் சொல்லுறீங்க?” வாசுசேனன் என்று வந்தாலே தன் தகப்பன் வேறாக நிற்பது வேந்தனுக்கு எப்போதுமே பிடிக்காது.
“வேற என்ன செய்யச் சொல்லுறாய்? முதல் அவனுக்குக் கோபம் வாற மாதிரி இவன் என்ன செய்தவன்?” என்றதும் சட்டென்று வாயை இறுக்கி மூடிக்கொண்டான் வேந்தன்.
“அவன் எப்பிடியானவன் எண்டு தெரியுமா உனக்கு?
“என்ன பெரிய இவன்? பத்து வருசத்துக்கும் மேல ஜெயிலுக்க கிடக்கிறவன் எல்லாம் ஒரு ஆளா? அவனை நான் சும்மா விட மாட்டன்!” என்று சூளுரைத்தான்.
அவனையே சில கணங்களுக்கு அற்பமாக நோக்கிவிட்டு, “உன்னால என்ன செய்யேலும்?” என்றார் எள்ளலாக.
அது அவனைச் சீண்டிற்று. மிகுந்த அவமானமாய் உணர்ந்தான். தயாநிதி குடும்பத்தையே தைரியமாக இறங்கிக் கருவறுத்துவிட்டு வந்து நிற்கிறவனிடம் இப்படி ஒரு கேள்வி கேட்பாரா? “அப்பா!” என்றான் அதட்டலாக.
“சும்மா குரலை உயத்தினா காணாது. உன்னால அவன்ர நிகத்தைக்(நகம்) கூடத் தொடேலாது.”
“பெயில்ல வந்திருக்கிறவன் எல்லாம் அவ்வளவு பெரிய இவனா? நீங்க நினைச்சாத்தான் அவனுக்கு வாழ்க்கையே. இல்ல சாவும் அங்கதான்.” அவருக்கும் மேல் எள்ளலாய்ச் சொன்னான் அவன்.
உண்மையில் இவன் இத்தனை முட்டாளா என்று பார்த்தார் மனிதர்.
“நடுக்கடல்ல நிக்கிற கப்பல்ல இருந்து உன்னால பொருளைக் கரைக்குக் கொண்டுவரேலுமா?” கண்கள் பளபளக்க வினவினார்.
“நான் கொண்டுவாறன் எண்டுதானே சொல்லுறன்.”
“ஆக்களை வச்சுச் செய்யக் கூடாது. நீயே போகோணும்.”
“விசரா உங்களுக்கு?” அதிர்ந்தான் அவன். அது நடக்கிற காரியமா என்ன? கடற்படை வீரர்களிடம் மாட்டினால் அவன் மீன்களுக்கு உணவாகிவிடமாட்டானா?
“சொல்லு! உன்னால கொண்டுவரேலுமா? ஆனா அவன் கொண்டு வருவான்!”
“கிழிப்பான். செத்துப் பிணமா கடல்ல மிதப்பான்!”
“இந்தளவுதான் நீ!” என்றுவிட்டு அவனுக்கு அழைக்கப்போனார் அவர்.
அதற்கு விடாமல் தடுத்து, “அப்பா, தயாநிதி என்ன அவரே இறங்கிச் செய்தவரா? ஆக்கள வச்சுத்தானே செய்தவர். அப்பிடியே நானும் செய்றன்!” என்று நெஞ்சை நிமிர்த்தினான் அவன்.
வாசுசேனனுக்கு அழைக்கப்போன சிவநாதசுப்ரமணியன் புருவங்களைச் சுருக்கி அவனைப் பார்த்தார். சாதாரணமாய் வெட்டிவிட்டு வா என்று அனுப்பியதற்கே பெரிய தலையிடியைத் தேடித் தந்திருக்கிறான். இதில் ஆட்களை வைத்துப் பொருள்களைக் கொண்டுவரப் போகிறானாம் என்று ஓடுகையிலேயே அவர் விழிகள் சினத்தில் சிவந்து வெறுப்பை உமிழ்ந்து அவனை எரித்தன.
“ஆக காசு பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த வேலை பாத்திருக்கிறாய் என்ன? அப்ப எதையும் நீ தெரியாமச் செய்யேல்ல.”
தான் மாட்டிக்கொண்டதில் ஒரு கணம் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றாலும், “அது மட்டும் காரணமில்ல. அவன் உங்களை அடக்கியாழ நினைச்சவன்.” என்று சொன்னான்.
“முட்டாள் முட்டாள் முட்டாள்! உன்னையெல்லாம்…” என்று பல்லைக் கடித்து வார்த்தைகளைத் துப்பியவர் தன் தலையில் தானே அடித்துக்கொண்டார். “இந்தத் தொழில் அப்பிடித்தான்டா மடையா. அவன்ர பிடி என்னட்ட இருக்கும். என்ர பிடி அவனிட்ட இருக்கும். சான்ஸ் கிடைக்கிற நேரம் ஒருத்தன் இன்னொருத்தனை அடக்குவான். அதையெல்லாம் சமாளிச்சுப் போறதுக்குப் பெயர்தான் கெட்டித்தனம். அதுதான் வியாபாரம். இது தெரியாம…” என்றவருக்கு அவன் மீதான வெறுப்பு இன்னுமின்னும் அதிகமாயிற்றே தவிரக் குறையவில்லை.
அதில் அவனோடு பேசுவதை விட்டுவிட்டு வாசுசேனனுக்கு அழைத்து விடயத்தைச் சொன்னார்.
காரில் பயணித்துக்கொண்டிருந்தவன் பெரு விரலாலும் ஆட்காட்டி விரலாலும் சில முறைகள் தன் அடர்ந்த மீசையை நீவிவிட்டுக்கொண்டான்.
“எப்ப வேணும்?”
இவனை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, “முடிஞ்சவரைக்கும் கெதியா.” என்றார் அவர்.
“ஓகே! வந்ததும் சொல்லுறன். இதால எனக்கென்ன லாபம்?”
இதை அவர் எதிர்பார்க்கவில்லை. இப்படி அவன் இதுவரையில் கேட்டதே இல்லை. அவன் உயிர் என்றோ போயிருக்க வேண்டியது. அவரால்தான் வாழ்கிறான். பிணையில் வந்திருக்கும் அவன் அவர் தயவினால்தான் இத்தனை சுதந்திரமாக நடமாடுவதே. சிறையில் வசதி வாய்ப்புடன் இருப்பதற்கும் அவர்தான் காரணம். அப்படியிருக்க இப்படிக் கேட்பானா?
“என்ன வாசு, பேச்செல்லாம் புதுசா இருக்கு?” என்றார் எச்சரிப்பை உள்ளடக்கிய குரலில்.
“அதுக்கு நீ பொய் சொல்லியிருக்கக் கூடாது சிவநாதா!”
ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டார் சிவநாதசுப்ரமணியன். எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டுதான் அவரைப் பேசவிட்டு வேடிக்கை பார்த்தானா? அவனை அவரே குறைத்து மதிப்பிட்டதற்கான தண்டனை இது.
அதைவிட அந்தத் தொனியில் அவன் பேசினால் அதற்குமேல் பேசப்போகக் கூடாது என்பது அவனைத் தெரிந்த எல்லோருக்கும் தெரியும்.
“என்ன வேணும்?” உள்ளே பல்லைக் கடித்தாலும் இறங்கி வந்தார்.
“நிரந்தர விடுதலை.”
சட்டென்று அமைதியானார் சிவநாதசுப்ரமணியன். சிகாரை நன்றாக இழுத்து, கீழுதட்டைக் கோணலாக்கி, ஒரு பக்கமாய்ப் புகையை ஊதித் தள்ளியபடி அவர் பதிலுக்காகக் காத்திருந்தான் அவன்.

