ஏதோ ஒரு வகையில் காலம் போடுகிற கணக்கோடு சேர்த்து அவர் போடுகிற கணக்குகளும் ஒரு புள்ளியில் வந்து இணைவது போலிருக்க, “ஓகே!” என்று முடித்துக்கொண்டார்.
*****
முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினால் உருப்படியாக எந்த விபரங்களையும் சேகரிக்க முடியவில்லை. சந்தேக நபர்கள் என்றுகூட யாரையும் கைதுசெய்ய முடியவில்லை.
சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கு நம்பர் பிளேட் மறைக்கப்பட்ட வாகனத்தில் வந்த கும்பல், முற்று முழுதாக மிக்கிமவுஸ், மினி என்று கார்ட்டூன் உடைகள் அணிந்து, முகத்தையும் கார்ட்டூன் முகங்களால் மறைத்திருந்தனர். அதில் அந்த வீதிகளில் இருந்து சிசிடிவி வீடியோக்களைக் கைப்பற்றியும் கூட ஆட்களை இனம்காண முடியவில்லை.
தப்பிய மூன்று பிள்ளைகளிடமும் வாக்குமூலம் பெறலாம் என்றால் அவர்கள் பேசும் நிலையில் இல்லை. கூடவே அடுத்தடுத்த நாள்களில் ஒவ்வொருவராக உயிரை விட்டிருந்தனர்.
அடுத்தகட்டமாக தயாநிதி, மகேந்திரன், சோபனா, மாலினி குடும்பத்தவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள். அதன்போதுதான் தயாநிதியின் முறையான குடும்பம் பற்றிய விபரம் தெரியவந்தது.
கொழும்பு காவல்துறை அவர்களை விசாரிக்க முயன்றபோது, கேதகி அங்கிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்த செய்தியும், அவள் அன்னை சில வருடங்களுக்கு முதலே இறந்துவிட்டதும் தெரியவந்தன. அவளை அறிந்தவர்களிடமிருந்து அவள் புகைப்படத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
உடனேயே இங்கே யாழ்ப்பாணப் புகையிரத நிலைய சிசிடிவிகளை பார்வையிட்டனர். அன்று மாலை அவள் இங்கு வந்து இறங்கி, தயாநிதியின் ஆட்களோடு காரில் செல்வது வரை பதிவாகியிருந்தது.
அதில் அவள் தயாநிதியிடம்தான் வந்தாள் என்று உறுதியாயிற்று. அப்படியானால் எங்கே அவள்? காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த தயாநிதியின் வீடு திரும்பவும் ஆராயப்பட்டபோதிலும் அவள் தடயங்கள் எதையும் அவர்களால் திரட்ட முடியவில்லை.
கடைசியில் சந்தேகத்தின் அடிப்படையில் அவள் பெயரில் எப்ஐஆர் போடப்பட்டு, காவல்துறையினால் தேடப்படும் குற்றவாளியாக மாற்றப்பட்டாள் கேதகி.
*****
சிவநாதசுப்ரமணியன் கைமாற்றும் போதைப்பொருள்கள், ஆயுதங்கள் கொண்டுவரும் கப்பல் வங்கக்கடல் வழியாக வரும். அந்தக் கப்பலை நடுக்கடலில் நிறுத்திவிட்டு, அதிவிரைவுப் படகுகளில் போய், பொருள்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி வருவார்கள். இப்படித்தான் தயாநிதி பொருள்களைக் கைமாற்றுவார்.
கடற்படை, விமானப்படைகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இப்படிச் செய்வது அவ்வளவு எளிதான வேலை கிடையாது. பலமுறை கடற்படையின் கண்ணில் பட்டு, அவர்களின் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகிப் பலர் உயிரை விட்டிருக்கிறார்கள். இது எதை எப்படிக் கையாள வேண்டும் என்று மிக நன்றாகத் தெரிந்த தயாநிதிக்கே நடப்பது. அப்படியிருக்க இதில் அனுபவமே இல்லாத வாசுசேனனை இறக்கிவிட்டிருப்பது?
தப்பித்தவறி அவனோ கப்பலோ அகப்பட்டால் பல லட்சம் கோடிகளை இழப்பார். விசாரணை என்கிற பெயரில் மிகப்பெரும் நெருக்கடிகளைச் சந்திப்பார். அவரின் அரசியல் வாழ்க்கை எந்தளவுக்கு ஆட்டம் காணும் என்று அவராலேயே கணிக்க முடியாது.
இத்தனை ஆபத்துகள் இருப்பது தெரிந்தும், தேவையில்லாத வேலை பார்த்துவிட்டோமோ என்று அடிக்கடி தோன்றியும் கூட அவர் மனத்தில் ஒரு ஆங்காரம். அவன் எப்படியானவன், எந்தளவு தூரத்திற்கு இறங்குவான் என்று அவருக்கு அறியவேண்டியிருந்தது. அதில்தான் துணிந்து இறங்கிவிட்டார்.
அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அவராலும் என்ன செய்கிறாய் என்று அழைத்துக் கேட்க முடியாது. நேராக இவர் நெற்றிப்பொட்டில் எதையும் இறக்கக்கூடியவன்.
அவரால்தான் இன்னுமே உயிரோடு இருக்கிறோம் என்பதாலும், அனுபவிக்கிற வசதி வாய்ப்புகளாலும் அவர் கேட்பதைச் செய்து கொடுப்பான். அதற்கென்று அவனை அவர் நினைப்பது போலெல்லாம் ஆட்டுவித்துவிட முடியாது. அதில் அவனாக அழைக்கும் வரையில், அல்லது இப்படியாகிவிட்டது என்கிற செய்தி காதுக்கு எட்டுகிற வரையில் பொறுக்கத்தான் வேண்டும் என்று பொறுத்திருந்தார்.
இப்படி இருக்கையில்தான் திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து யாழ்ப்பாணத்தின் காரைத்தீவுப் பகுதிக்கு, 150 கும் மேற்பட்ட பயணிகள் அடங்கிய கப்பல் ஒன்று வந்துகொண்டிருந்தது. திடீரென்று சிறு படகுகள் பல வந்து அந்தக் கப்பலைச் சூழ்ந்துகொண்டன.
அதிலிருந்தவர்கள் கூரிய ஆயுதங்களுடனும் துப்பாக்கிகளுடனும் கப்பலில் ஏறினார்கள். கப்பல் அலுவலர்களை மிரட்டி, கப்பலை அதன் போக்குக்குக் கடலில் வழிந்து செல்லும்படி செய்தனர். இதையறிந்த கடற்படையின் கவனம் அந்தப் பக்கம் திரும்பியது.
அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இந்தப் பக்கம் சீறிப் பாய்ந்த அதி விரைவுப் படகு ஒன்று, நடுக்கடலில் தரித்துநின்ற கப்பலுக்குச் சென்று, படகு நிறையப் பொருள்களையும் ஆயுதங்களையும் சுமந்துவந்து கரையில் சேர்த்தது.
அன்று முழுக்க போதையற்ற இளைய சமுதாயத்தை உருவாக்குவோம் என்கிற தலைப்பின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்ட மாநாட்டில் பேசிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார் சிவநாதசுப்பிரமணியன். அப்போது அவருக்கு அழைத்தான் வாசுசேனன்.
“வாசு?”
“பொருளை எல்லாம் எங்க கொண்டுவாறது?”
“என்ன?” அவரால் நம்பவே முடியவில்லை. அவருக்கான பாதுகாப்பு வாகனத்தில் அமர்ந்திருந்தவர் எம்பிக் குதிக்கப் பார்த்தார்.
“நீங்க கேட்ட பொருளை எல்லாம் கரைக்குக் கொண்டுவந்தாச்சு. இனி என்ன செய்யோணும்?” என்றான் அவன் நிதானமாய்.
“வாசு வாசு வாசு! நீதான்டா என்ர சிங்கக்குட்டி!” என்று துள்ளிக்குதித்த சிவநாதசுப்ரமணியன், இடத்தைச் சொல்லிவிட்டு வைத்தார்.
அவர் முகம் பூரித்து மலர்ந்திருந்தது. என்னவோ உடல் முழுக்க புது இரத்தம் பாய்ந்த உணர்வு. ‘எல்லாளா! எல்லா காலமும் காத்து உன்ர பக்கமே வீசாதடா! அடுத்ததா உனக்கு வைக்கிறன் வேட்டு!’ என்று மனத்தில் கருவியவர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி எல்லாளனுக்கு யாழ்ப்பாணத்துக்கே திரும்பவும் மாற்றல் வரும்படி செய்தார்.

