சத்தியநாதன் இறந்த ஒரு சில மாதங்களிலேயே வேந்தனை இங்கே வரவழைத்திருந்தார் சிவநாதர். கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கும் மேலாகக் கூடவே வைத்திருந்த போதிலும் அவருக்குக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் அவனுக்குக் கிடைப்பதில்லை. கிடைப்பதற்கான எந்தக் காரியங்களையும் அவர் செய்ததில்லை. அவனை மதிப்பான ஒரு இடத்தில் நிறுத்தியதும் இல்லை.
சத்தியநாதனைச் சிங்கம்போல் வைத்திருந்தார். பல இடங்களில் அவரைக் காட்டிலும் அதிகாரம் மிக்கவனாக அவன் இருந்திருக்கிறான். அவனுக்கு அரசியலில் ஆர்வம் இல்லாதபோதிலும் எப்படியாவது அவனை அதற்குள் கொண்டுவந்துவிட வேண்டு என்பதில் குறியாக இருந்தார்.
அப்படியிருக்க இப்போது எஞ்சியிருக்கும் ஒற்றை மகனான வேந்தனை அரசியலுக்குள்ளும் அவர் கொண்டுவரவில்லை. அவனுக்கான அங்கீகாரத்தை வாங்கிக் கொடுக்கவும் நினைக்கவில்லை. இன்னுமே சொல்லப்போனால் எடுபிடியாகத்தான் வைத்திருந்தார். அதுதான் எல்லாளனுக்குச் சந்தேகத்தை உண்டாக்கிற்று.
உனக்குத் தெரியாத நிறைய விடயங்கள் எனக்குத் தெரியும் என்ற சத்தியநாதனின் வார்த்தைகளைப் பின்தொடர்ந்து சென்று வாசு பற்றிய உண்மையை அறிந்தவன் அவன். அப்படியிருக்க தமயந்திக்குப் பிள்ளை கிடைக்காவிட்டால் எனக்குப் பிள்ளை பிறக்காதா என்கிற அவன் கேள்வியை எப்படிச் சும்மா விடுவான்?
தேடாத வரைக்கும்தான் எதுவும் கிடைக்காது. தேடினான். லட்டுப் போல் அவன் மகன் பற்றிய விபரம் கிடைத்தது.
இதற்குள் கதிரவன் அழைத்து அனைத்தையும் கச்சிதமாக முடித்துவிட்டதைச் சொன்னான். கூடவே, “சேர், உங்கட கத்திக் குத்து கேஸ் தேவன் சேரிட்ட போயிருக்கு. உங்களை விசாரிக்க வரலாமா எண்டு கேட்டவர்.” என்று தகவல் சொன்னான்.
“அவனுக்கு முதல் நீங்க இஞ்ச வாங்க கதிரவன்.” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் எல்லாளன்.
வாசுசேனன் புறம் திரும்பி, “கேதகி எங்க?” என்று கேட்டான்.
பதில் சொல்லாமல் அவனைப் பார்த்தான் வாசுசேனன். அவனிடம் உன்னை முழுவதுமாகக் ஒப்புக்கொடுத்துவிடு என்று அவன் ஆழ்மனம் அழுத்திச் சொல்லாமல் இல்லை. ஆனாலும் இத்தனை காலமும் தனக்கானவற்றைத் தான் மட்டுமே பார்த்துக்கொண்டு, மிக மிக இறுக்கமான வேலி ஒன்றைத் தன்னைச் சுற்றிப் போட்டுக்கொண்டு வாழ்ந்துவிட்ட வாசுசேனனால் இலகுவாய் எல்லாளனிடம் மனம் திறக்க முடியவில்லை.
தான் வாசுசேனனா காண்டீபனா என்கிற கேள்வி, காண்டீபனாக இருந்தால் அடுத்து என்ன என்று விளங்காத நிலை, இதெல்லாம் ஏன் நடந்தது, தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் வலை என்ன, எல்லாளன் அவனுக்காகத் துடிக்கும் துடிப்பு, அவன் அருகில் வந்தாலே இவனுக்குள் உருவாகும் மாற்றங்கள் என்று நிறையக் கேள்விகளும் குழப்பங்களும். வாசுசேனன் இன்னுமே ஒரு நிலைக்கு வந்திருக்கவில்லை.
அவனின் பதில் இல்லா நிலையைக் கண்டுவிட்டு, “என்ன நம்பேல்லையா மச்சான் நீ?” என்றான் எல்லாளன். “ஏற்கனவே நம்பி வந்த நேரம் விட்டுட்டான். இப்ப மட்டும் என்ன செய்யப்போறான் எண்டு யோசிக்கிறியோ?” என்றான் வேதனையோடு.
அப்போதும் அவன் பதிலற்று நிற்க, அவனை நெருங்கி வந்து நின்றான். “நீ இல்லாத இத்தனை வருசமும் நான் வாழாம இல்ல மச்சான். ஆனா, உன்னை அநியாயமா குடுத்திட்டனே எண்டுற அந்த வேதனை இருக்கே. அது செல்லரிக்கிற மாதிரிக் கொஞ்சம் கொஞ்சமா என்னை திண்டுகொண்டே இருக்கும். அதுல இருந்து நான் வெளில வரோணும். அதுக்கு உன்னைச் சுத்தி இருக்கிற அத்தனை பிரச்சனைல இருந்தும் உன்னை வெளில கொண்டு வரோணும். என்னால முடிஞ்ச எல்லாத்தையும் உனக்குத் திருப்பித் தரோணும். நீ சந்தோசமா வாழுறத நான் பாக்கோணும்டா.” என்று கண்ணீர் படலத்துடன் சொன்னவனையே சில கணங்களுக்கு இமைக்காது பார்த்துவிட்டு, “இப்ப என்ன வேணும் உனக்கு?” என்றான் வாசுசேனன்.
“கேதகி.” என்றான் எல்லாளன். “முதல் நான் தயாநிதி கேஸ் முடிக்கோணும். அதுக்கு கேதகிய விசாரிக்கோணும். அப்பதான் வேந்தனை என்ன செய்யலாம் எண்டு தெரிய வரும்.” என்று விளக்கிச் சொன்னான்.
அவன் புறப்பட ஆயத்தமாக, “நில்லு, தனியா போகாத!” என்று அவன் கரம் பற்றி நிறுத்தினான்.
இந்த முறை வாசுசேனன் அவன் கரத்தை எடுத்துவிடவில்லை. தன்னை அவனிடம் கொடுத்துவிட்டு நின்றான்.
“இனி நீ எந்தப் பிரச்சினைக்கும் போகாத. சிவநாதர் ஏதாவது வழில உன்னைத் தூண்டப் பாப்பார். என்ன எண்டாலும் எனக்குச் சொல்லாம செய்யாத. நாளைக்கு நேரா போய் ஸ்டேஷன்ல கையெழுத்துப் போடு. இப்ப கதிரவன் வருவான். அவன் உனக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வான்.” என்று சொன்னான் எல்லாளன்.
“எனக்கு நானே போதும்.”
“உனக்கு நீ போதும்தான். ஆனா, எந்த வீண் பிரச்சினையும் உன்னட்ட வர வேண்டாம்.” என்று இவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே ஆதினி விழித்துவிட்ட அரவம் கேட்டது.
“உன்ர தங்கச்சி எழும்பிட்டாள். அவளின்ர கண்ணில படாம இந்தப் பக்கம் வா.” என்று, அவள் அறையில் இருந்து பார்த்தால் தெரியாத அளவுக்கு அவனை ஒரு பக்கமாக இழுத்து வந்தான் எல்லாளன்.
அப்படி அவள் பார்த்தால் என்ன? வாசுசேனனுக்குப் புரியவில்லை.
அதை உணர்ந்து, “உன்னைப் பாத்தா திரும்ப அழுவாள். அவளின்ர உடம்பு இருக்கிற இந்த நிலைல அவள் அழ வேண்டாம்.” என்றான் அவன்.
இதற்குள் கதிரவன் வேக நடையில் வந்தான். அங்கே எல்லாளனோடு வாசுசேனன் நிற்பான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. எல்லாளனைக் கத்தியால் குத்தியவன் என்பதையும் மீறி எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு கண்ட காண்டீபனைக் கண்டு அவனுக்குப் பேச்சே வரவில்லை. ஒருவிதல அதிர்வு தாக்க அவனையே பார்த்தான்.

