ஆட்டநாயகன் 32.2

“நீ ஏன் எடுத்தனி?”

“கொன்றுவன் ராஸ்கல்! நேற்று உன்னை அனுப்பவே எனக்கு மனமில்லை. எல்லாம் சரியாகிற வரைக்கும் பொறுப்பம் எண்டுதான் அனுப்பி வச்சனான். இப்ப என்ன செய்றாய் எண்டு கேக்க எடுத்தா, ஏன் எடுத்தனி எண்டு கேக்கிறாய் என்ன? இனியும் எடுப்பன். எடுக்கிற நேரமெல்லாம் நீயும் கதைக்கிறாய்.”

“இல்லாட்டி?” மொட்டை மாடித் தரையிலேயே எழுந்து அமர்ந்து ஒரு சிகாரை வாயில் பொருத்தியபடியே வினவினான்.

இந்தப் பக்கம் இருந்த எல்லாளனுக்கு அது தெரியச் சாத்தியம் இல்லாததால், “இல்லாட்டி கட்டிப்பிடிச்சு உம்மா தருவன். ஒழுங்கா போலீஸ் ஸ்டேஷன் போயிற்று வந்து எனக்கு எடு. உன்னை நாலு பேர் பின் தொடருவினம். அவங்களை ஏதும் செய்துபோடாத. இப்ப வை ஃபோனை!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அதற்காகவே காத்திருந்தாற்போல் அழைத்தார் சிவநாதர்.

“என்ர பேரனை தந்தாத்தான் எல்லாத்தையும் நான் முடிப்பன்.” என்றார் அவனிடம்.

“நீ ஒண்டுமே கிழிக்க வேணாம். பாக்கிற வேலையப் பார். உன்ர பேரனை மொத்தமா முடிச்சுப்போட்டு அவனை நானே வெளில எடுக்கிறன்.” என்றதும் அவரிடமிருந்து சத்தமில்லாமல் போயிற்று.

“அவனுக்கு எண்டு ஆரும் இல்லாம இருந்த வரைக்கும்தான் அவனை வெளில எடுக்க ஆக்கள் இல்ல. இப்ப நான் இருக்கிறன். எந்த கேஸையும் ஒண்டுமில்லாம ஆக்க என்ர வைஃப் இருக்கிறா. நாங்களே அவனுக்குப் போதும். நீ ஃபோன வை!” என்றதும், “இல்ல இல்ல. நானே எல்லாத்தையும் முடிக்கிறன். அதுக்குப் பிறகும் நீ பேரனைத் தராட்டி? உன்னை எப்பிடி நம்புறது?” என்று அவசரமாக இடையிட்டுக் கேட்டார் சிவநாதர்.

“நீ நம்பு, நம்பாம போ. நாளைக்கு விடிய அவன்ர பெயர்ல எந்த கேஸும் இருக்கக் கூடாது. இருந்ததோ நாளைக்கு மத்தியானத்துக்குப் பிறகு உனக்குப் பேரனும் இல்லை.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அவரிடம் சொன்னது போன்று வாசுசேனனை அந்த வழக்குகளில் இருந்து அவனாலேயே வெளியே எடுத்துவிட முடியும். அந்தளவில் அவன் மீது பதியப்பட்டிருக்கும் குற்றங்களுக்கு மேலான காலத்தை அவன் சிறையில் கழித்துவிட்டான். என்ன, நேர் வழியில் வழக்குகளை எல்லாம் நகர்த்தி, ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்குச் சில பல மாதங்கள் ஆகும்.

அப்படி, திரும்ப அவனைச் சிறைக்கு அனுப்ப விரும்பாமல்தான் அவரைச் செய்யத் தூண்டினான். கூடவே, கட்டிவைத்து அடித்தால் எப்படி இருக்கும் என்று அவரும் கொஞ்சம் அனுபவிக்கட்டுமே.

நேற்றைய நாளை விடவும் இன்றுதான் அவனுக்குக் கத்திக் குத்து விழுந்த இடத்தில் சுள் சுள் என்று இழுத்து இழுத்து வலித்தது. காய்ச்சலும் விட்டபாடாக இல்லை. தனக்கு இப்போது தேவையானது ஓய்வு என்று அவனுக்கே புரிந்தது. ஆனால் அவனால் அப்படி ஓய்விலிருக்க முடியாது.

அகரனின் துணையோடு மாடிக்குச் சென்று, காக்கி உடை அணியாமல் ஜொக்கிங் காற்சட்டையும், தொளதொளப்பான டி ஷார்ட்டும் அணிந்து தயாராகி நின்றவனைத் தடுக்க முடியாத இயலாமையுடன் பார்த்தாள் ஆதினி.

அவளிடம் வந்து நெற்றியில் முத்தமிட்டு, “கவனமாத்தான் இருப்பன். கவலைப்படக் கூடாது, சரியா!” என்று அவள் கன்னம் தட்டிச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

“எனக்கு அண்ணாவப் பாக்கோணும்.” என்று அவனைத் தடுத்து நிறுத்தியது அவளின் அடைத்த குரல்.

“அவனைப் பாத்தா அழமாட்டன் எண்டு சொல்லு, பாக்கலாம்.” என்றான் அவன்.

அப்படி எப்படி அவனைக் கண்டு அழாமல் இருப்பாள்? ஒரு நாள் அவளைப் பார்க்காததற்கே அவள் குழந்தைகள் எப்படி அழுதார்கள்? அவள் கிட்டத்தட்ட எட்டு வருடங்களாகப் பார்க்கவில்லை. இனிப் பார்க்கவே போவதில்லை என்று நினைத்த ஒருவன். அப்படியானவனைத் திரும்பக் காண்கையில் அழாமல் இருக்க வேண்டும் என்றால் எப்படி? இதோ இப்போது அதை நினைக்கையிலேயே கண்களில் நீர் பெருகிற்று.

“ரெண்டு நாள் தா. எனக்கு அவன்தான் எண்டு தெரியும். எண்டாலும் நாலு பேருக்கு முன்னால அவனை காண்டீபன் எண்டு நிப்பாட்டுறதுக்கு ஆதாரம் வேணும். அதையெல்லாம் கண்டுபிடிச்சிட்டுக் கூட்டிக்கொண்டு வாறன். அதுக்குள்ள நீயும் உன்னைக் கொஞ்சம் தெம்பாக்கோணும்.” என்றுவிட்டுப் போனான் அவன்.

ஒரு பக்கம் வாசுசேனன் காவல் நிலையம் சென்று கையொப்பமிட்டுவிட்டு எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல் அவன் இடம் திரும்பினான். இன்னொரு பக்கம் காண்டீபனுக்குப் பிரேத பரிசோதனை செய்த வைத்தியரின் முன்னே அமர்ந்திருந்தான் எல்லாளன்.

பல வருடங்களுக்கு முதல் நடந்திருந்தாலும் எல்லாளனைக் கண்டதும் அவரிடத்தில் மெல்லிய தடுமாற்றம். அவரின் அந்தத் தடுமாற்றத்தை அன்று கவனிக்காமல் போனோமே என்று நொந்தபடி, “ஏன் வந்திருக்கிறன் எண்டு தெரியும் போல இருக்கே டொக்டர்.” என்றான் எல்லாளன்.

“இல்…லையே எல்லாளன். எனக்குத் தெரியேல்லையே…” என்று தடுமாறினார் அவர்.

“தெரியாமத்தான் இந்தத் தடுமாற்றமா?”

“எல்லாளன்?”

“நான் போலீசா உங்களிட்ட வரேல்ல டொக்டர். திரும்ப அதையெல்லாம் கிண்டிக் கிளறி கேஸ் நடத்திற ஐடியாவும் இல்ல. காண்டீபன் உயிரோட இருக்கிறான், செத்தது வாசு எண்டு எனக்குத் தெரிஞ்சிட்டுது. ஆனா இதை நான் அவன்ர மனுசி பிள்ளையிட்ட, அவனை உண்மையா நேசிக்கிற நாலு மனுசரிட்ட சொல்லுறதுக்கு ஆதாரம் வேணும். அதுக்குத்தான் வந்திருக்கிறன். தயவுசெய்து எனக்கு உண்மையச் சொல்லுங்க. சொல்லாதவரைக்கும் உங்களை நான் சும்மா விடப்போறதும் இல்ல.” என்றுவிட்டு நடந்தவற்றை எல்லாம் சொல்லி, வாசுவைப் பற்றி அறியப் போய், காண்டீபனைக் கண்டுபிடித்ததைச் சொன்னான்.

அதற்குமேல் அவர் மறைக்க முயலவில்லை. தன் மேல் எந்தப் பிரச்சனைகளும் வந்துவிடாதபடிக்குப் பார்த்துக்கொள்ளும்படி அவனிடம் தயவாகக் கேட்டுவிட்டு நடந்ததைச் சொன்னார்.

“செத்தது வாசுசேனன்தான் எல்லாளன். நான் முதல் மாட்டன் எண்டுதான் சொன்னனான். அப்பிடிச் சொல்லுவன் எண்டு தெரிஞ்சாக்கும் அந்த நேரம் என்ர மகளைக் கடத்திட்டாங்கள். எனக்கும் வேறு வழியில்ல. ஆனா ஜெயில்ல என்ன நடந்தது எண்டு எனக்குத் தெரியாது. நான் பாத்த நேரம் காண்டீபன் சுய நினைவில இல்ல. காயப்பட்டு, கண்ணால பாக்கவே ஏலாத நிலைல மயக்கத்திலயே வச்சிருந்தவங்கள். வாசுவை அவர் எண்டு காட்டுறதுக்குத் தேவையான ஃபோட்டோஸ், ரெத்த மாதிரி, முக்கியமான அடையாளங்கள எல்லாம் அவரின்ர உடம்பில இருந்து எடுத்தனாங்க. மிச்சம் எல்லாம் வாசு.”

அவன் ஊகித்ததுதான். என்றாலும் உள்ளே ஒரு வகையான ஆத்திரமும் வலியும் உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை. “அண்டைய(அன்றைய) உங்கட சூழ்நிலை விளங்குது. அதுக்காக நீங்க செய்தது சரியே கிடையாது டொக்டர். மிதிலாவும் உங்கட மகள் மாதிரித்தான். வயித்தில பிள்ளையையும் வச்சுக்கொண்டு என்ன பாடுபட்டிருப்பாள்? குறைஞ்சது என்னைத் தனியா பாத்துச் சொல்லியிருக்கலாமே. இல்ல எல்லாம் முடிஞ்ச பிறகாவது அவன் உயிரோட இருக்கிறதைச் சொல்லி இருக்கலாமே?” என்றவனின் எந்தக் கேள்விக்கும் அவரிடம் பதில் இல்லை.

அப்படி அவர் சொல்லி, அவனுக்குத் தெரிய வந்து, அவன் எந்தக் காலத்தில் காண்டீபனைத் தேடி வந்தாலும் அவரின் மொத்தக் குடும்பத்தையும் கருவறுத்துவிடுவோம் என்று மிரட்டியிருந்தார்கள். அதில் பயந்துதான் வாயை மூடிக்கொண்டார். சத்தியநாதன் இறந்த நேரம் சொல்லலாமா என்று நினைத்தார்தான். என்றாலும் சிவநாதர் இருக்கிறாரே. அதையெல்லாம் அவர் சொன்னபோது அவன் பார்வையில் முற்றிலுமாக மதிப்பற்றுப் போனார் அவர்.

“ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல. எட்டு வருசம். அவனுக்கு ஜெயில் வாழ்க்கை எண்டா அவன்ர மனுசி மகனையும் வச்சுக்கொண்டு எவ்வளவு துன்பத்தை அனுபவிச்சிருப்பாள்? இதுக்க நாங்க அவளுக்கு இன்னொரு கலியாணத்தைச் செய்து வைக்கப் படாத பாடெல்லாம் பட்டோம். தப்பித்தவறி அப்பிடி ஒரு கலியாணம் நடந்த பிறகு இப்பிடிக் காண்டீபன் வந்திருந்தா எத்தினை பேரின்ர வாழ்க்கை நாசமாகியிருக்கும் எண்டு சொல்லுங்க?”

“வாசு என்ன பாவம் செய்தவன்? அநியாயமா செத்திட்டானே. காண்டீபன் தன்னையே துலச்சுப்போட்டு நிக்கிறான். இதுக்கு எல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க?” என்றவனின் சீற்றத்தில், “சொறி எல்லாளன்.” என்று சொன்னார் அவர்.

அவர் மன்னிப்பை வைத்து அவன் என்ன செய்ய? கோபத்துடன் எழுந்து வந்துவிட்டான்.

“எப்பிடி சேர் இவ்வளவு பெரிய விசயத்தக் கவனிக்காம விட்டம்? நாங்க கவனிச்சிருந்தாலாவது காண்டீபன் சேரை எப்பயோ வெளில கொண்டு வந்திருக்கலாம்.” வருகிற வழியில் ஜீப்பை செலுத்தியபடியே வினவினான் கதிரவன்.

“வாசு எண்டுற ஒருத்தன் உயிரோட இருக்கிறதே எங்களுக்குத் தெரியாது கதிரவன். அதால செத்தது காண்டீபனா எண்டுற சந்தேகமே எங்களுக்கு இல்ல. அதே மாதிரி வந்த ரிப்போர்ட்ல அவன்ர உடம்பில அந்த மச்சம், கை கால்ல கம்பி வச்ச அடையாளம் எல்லாம் இருக்கா எண்டுதான் செக் பண்ணினானே தவிர, அதெல்லாம் அவன்ர உடம்பில இருக்கா எண்டு நான் ஏன் கதிரவன் செக் பண்ணப் போறன்?” என்று கதிரவனுக்குப் பதில் சொன்னாலும் அவனுக்கு மனம் ஆறவேயில்லை.

வாசு இறந்த நேரம் காண்டீபன் முழு மயக்கத்தில் இருந்தான் என்றால் அவனை என்ன செய்தார்கள் என்று அந்த நிமிடமே அறிந்துவிடத் துடித்தான்.

“ஜீப்பை திருகோணமலைக்கு விடுங்க கதிரவன்.” என்றுவிட்டு சீட்டில் தலை சாய்த்தவனுக்குக் கத்திக் குத்து விழுந்த இடத்தில் விண் விண் என்று தெறிக்கும் வலியைக் காட்டிலும் அதிகமாய் நெஞ்சம் வலித்தது.

error: Alert: Content selection is disabled!!