அன்றைய நாள் காண்டீபனுக்கு மரண வலியைக் கொடுப்பதற்கு என்றே விடியக் காத்திருந்தது. அதை ஏதோ ஒரு வகையில் அவனும் உணர்ந்தான். அதனாலேயே இயல்பான மனத்தின் தைரியத்தைத் தாண்டி நெஞ்சு படபடத்துக்கொண்டேயிருந்தது.
அன்று காலையில் யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட நொடியிலிருந்து அவனைப் பார்த்தவர்களின் பார்வையில் வேறு எதுவோ ஒன்று இருப்பதாக அவன் உள்ளுணர்வு உணர்த்திற்று.
எதையோ மறைத்தார்கள். அவனுக்கு மறைத்துக் கண் சாடையில் பேசிக்கொண்டார்கள். அனைவர் முகங்களிலும் ஏதோ ஒரு கவனமும் கூடவே பதற்றமும் இருந்தன. அவன் முதுகுக்குப் பின்னே வேறு என்னவோ நடந்தது. சிறை என்றாலே இப்படித் தோன்றுமா, இல்லை தனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறதா என்று தெரியாதபோதும் அது ஏதோ ஒரு வகையில் அச்சமூட்டிற்று.
இதற்கெல்லாம் கரணம் சத்தியநாதனாகத்தான் இருப்பான் என்று நம்பினான். அப்படியானால் எல்லாளனின் மூலம் கைது செய்து, தன்னை இங்கே கொண்டு வந்ததும் அவனோ என்று தோன்றிற்று.
அவன் காவல்துறையில் பணிபுரியாமல் இருக்கலாம். அதற்குத் தகுதியற்றவனாக மாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், எல்லாளனின் சிந்தனைகளுக்குள் ஆழமாக ஊடுருவி, அவனை ஒரு காவல்துறை அதிகாரியாக மாற்றுமளவுக்குக் காவல்துறை மீதான அவன் ஈடுபாடும் பேச்சுகளும் இருந்திருக்கின்றன. அப்படி இருக்கையில் காவல்துறையின் நடைமுறைகள் எதற்காக எப்படி மாறும் என்று அவனால் கணிக்க முடியாதா என்ன?
முதல் நாள் இரவு கைது செய்யப்பட்டவன் அடுத்த நாளே பத்திரிகை, தொலைக்காட்சி, இணையம் முழுவதிலும் பேசுபொருளானது, பல்கலை மாணவர் போராட்டம், அதிரடியாக சிஐடி கையில் ஒப்படைக்கப்பட்டது எல்லாமே அசாதாரண வேகத்தில் நடக்கிறது என்றால், அதன் பின்னணி என்னவாக இருக்கும் என்பதை இலகுவாகவே கண்டுகொண்டான்.
இருள் மட்டுமே குடியிருக்கும் ஒடுக்கமான சிறை, தனிமை, தாறுமாறாய்த் துடிக்கும் இதயம், எதிர்மறை உணர்வுகள் மட்டுமே அவனைச் சூழ்ந்திருந்த வேளையில்தான் தனக்கு ஒன்று நடந்துவிட்டால் தன் குடும்பம் என்னாகும் என்று பதைபதைக்க ஆரம்பித்தான்.
எல்லாளனின் கைகளால் கைது செய்யப்பட்ட போது கூட மனைவியையும் வீட்டையும் எண்ணிக் கலங்கினானே தவிர்த்து, தான் கைதானதை எண்ணிக் கவலை கொள்ளவே இல்லை. காரணம் பக்கத்தில் இருப்பவன் அவன் உயிர். அவன் அவனை விட்டுவிடுவானா என்ன? தண்டனையை வாங்கித் தந்தாலும் காலத்துக்கும் தோளோடு தோள் கொடுப்பான் என்கிற எண்ணம் திட்டமாகவே அத்தனையையும் எதிர்கொள்ள வைத்தது.
அவன் விசாரணையின் போதாகிலும் சரி, காவல்நிலையச் சிறைக் கம்பிகளுக்குள் அடைக்கப்பட்ட போதும் சரி கலங்கவில்லை. நண்பனின் பார்வைக்கு வந்துவிட்டோம் என்பது மலையளவு தைரியத்தைத் தந்திருந்தது.
ஆனால் இப்போது… இப்போதும் தைரியத்திற்குக் குறைவில்லைதான். ஆனால் கலக்கம் அவனைச் சூழ்ந்திருந்தது. மனைவி, பிறக்கப்போகிற குழந்தை, முடங்கிப்போன அப்பா, தன்னையே மறந்த நிலையிலிருக்கும் மாமி அத்தனை பேருக்கும் தான் எவ்வளவு முக்கியம் என்பதும், அதை யோசிக்காமல் பார்த்த வேலை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதையும் நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை. சட்டென்று விழிகள் கலங்கிப்போயின.
நாட்டு யுத்தத்தில் இழந்த அன்னை, சகோதரன் நினைவு திடீரென்று வந்தது. அவர்களிடம் நானும் போய்ச் சேர்ந்துவிடுவேனோ என்று நினைத்த கணத்தில் ஆடிப்போனான்.
அந்த இரவு முழுக்க அவன் உறங்கவேயில்லை. இப்படி இருக்கையில்தான் அடுத்த நாளின் தொடக்கத்தில், இருள் பிரியும் நேரத்தில் அவசர நிலையை உணர்த்துவதற்கு ஒலிக்கும் சிறைச்சாலையின் மணி ஏதோ ஆபத்தைச் சொல்லி விடாமல் ஒலித்தது.
பதறி எழுந்து அமர்ந்தான். என்ன நடக்கிறது என்று அவன் கிரகிக்க முதலே அந்த இடமே அல்லோலகல்லோலப்பட்டது. மனம் காரணமற்றுக் கலங்க எழுந்து வந்து சிறைக்கம்பிகளினூடு பார்த்தான். கைதிகளும் காவலுக்கு இருந்த காவலர்களும் அங்குமிங்கும் ஓட்டுப்பட்டார்கள். கைதிகளுக்குச் சராமாரியாக அடிகளும் விழுந்தன.
சிலரிடம் என்னாயிற்று என்று கேட்டான். நின்று விளக்கம் சொல்லு நிலையில் யாரும் இல்லை. திகில் பரவிய உணர்வுடன் அப்படியே அமர்ந்திருந்தான். மெய்யாகவே அந்த நேரத்தில் அவன் தைரியமெல்லாம் எங்கோ ஓடி மறைந்திருந்தது. மனம் மட்டும் எல்லாளா எல்லாளா என்று அவன் பெயரையே ஒற்றை நம்பிக்கையாக ஜெபித்தது.
என்னவோ நடக்கப்போகிறது. அவன் இதயம் வந்து தொண்டைக் குழியில் துடிக்க ஆரம்பித்தது.
*****
அன்று நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதத்தைப் பற்றி அந்த நேரத்தில் சிறைச்சாலையில் பணியில் இருந்த காவலர்கள், சிறைக்காவல் அதிகாரிகள் அனைவருக்கும் ஏற்கனவே தெரியும். எல்லோர் முகங்களிலும் பதற்றம். பயத்தை மறைக்கும் இறுக்கம். நெஞ்சு டமார் டமார் என்று அடித்துக்கொண்டே இருந்தது.
அவர்களால் குறிக்கப்பட்ட நேரத்திற்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. எல்லோரும் முதலே பேசி வைத்துக்கொண்டதற்கு இணங்க காரியங்களைச் செய்வதற்குத் தயாராக இருந்தனர்.
இப்படி இருக்கையில்தான் திடீரென்று டுமீல் என்று ஒரு சத்தம். அத்தனை பேரும் பதறிப்போனார்கள். இது நடப்பதற்கு இன்னும் இருப்பது நிமிடங்கள் உண்டே! பிறகு எப்படி இந்தச் சத்தம் இப்போது கேட்டது? சட்டென்று எல்லோரும் அந்தச் சத்தம் கேட்ட இடத்தை நோக்கி விரைந்தார்கள்.
அங்கே வைரவனும் அவன் கூட்டாளிகளும் சொன்னதைச் சரியாகச் செய்துவிட்ட மிதப்போடு காத்திருந்தார்கள். அவர்கள் முன்னே ஒரு உடல் விழுந்து கிடந்தது.
சிறைக்காவல் அதிகாரி நடுங்கிப்போனார். வியர்த்து விறுவிறுக்க ஓடிப்போய்ப் பார்த்தார். காண்டீபனேதான். ஆனால், எப்படி? அவர்கள் இன்னும் அவன் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கம்பிகளைத் திறந்துவிடவில்லையே. அப்போதுதான் கவனித்தார். இறந்து கிடப்பவன் ஒரு தண்டனைக் கைதி. அதை அவன் அணிந்திருந்த ஆடை சொல்லிற்று.
ஆனால், காண்டீபன் விசாரணைக் கைதி.
எப்படி அப்படி ஒருவனே தண்டனைக் கைதியாகவும் விசாரணைக் கைதியாகவும் இருக்க முடியும்? இறந்தவனின் ஆடையில் இருந்த அடையாள இலக்கத்தைக் கவனித்து, தண்டனைக் கைதிகள் பகுதிக்கு ஓடினார்கள். அங்கு ஆராய்ந்தபோதுதான் இறந்தது வாசுசேனன் என்பதும், அவனின் இரட்டைச் சகோதரன்தான் காண்டீபன் என்றும் தெரியவந்தன.
ஆடிப்போனார்கள். ஒரே வளாகத்தில் இருந்தாலும் தண்டனைக் கைதிகளுக்கான பகுதியும் விசாரணைக் கைதிகளுக்கான பகுதியும் வேறு வேறு பிரிவு. அவற்றிற்கான பொறுப்பில் இருப்பவர்களும் வேறு வேறு ஆட்கள். முதல் நாள் வந்த காண்டீபனின் விபரங்கள் கோப்பில் குறித்திருந்தார்களே தவிர்த்து இன்னும் கணனியில் ஏற்றாததும் சேர்ந்து அதை அவர்களால் முதலே கண்டுபிடிக்க இயலாமல் போயிற்று.

