ஆட்டநாயகன் 34

அத்தியாயம் 34

பழைய ஜெயிலர் உண்மையைச் சொல்வதற்கு இலகுவில் ஒத்துக்கொள்ளவில்லை. எல்லாளனிடம் மாட்டிக்கொண்டால் என்னாகும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதே நேரத்தில் அத்தனை சான்றுகளோடும் வந்து நின்று, நீ உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று உறுமியவனை அவரால் சமாளிக்க முடியாது போயிற்று. எந்த ஆதாரங்களும் இல்லாதுபோனாலும் சத்தியநாதன் இறந்துபோன விதமும், அதற்கு யார் காரணம் என்பதும் அவருக்குத் தெரியுமே.

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, “சேர் ப்ளீஸ், எனக்கும் மேல இருக்கிற ஆக்கள் சொல்லுறதைக் கேக்கிற இடத்தில இருக்கிறவன் நான். என்னால எதுவுமே செய்யேலாம போயிற்று.” என்றவர் சொல்லி முடிக்க முதலே, “சீ! மூடு வாய!” என்று சீறினான் எல்லாளன்.

அவன் தேகம் இன்னுமே நடுங்கிக்கொண்டிருந்தது. என்னவோ அத்தனையும் தனக்கு நடந்ததுபோன்ற அதிர்விலிருந்து வெளியே வர இயலாமல் நின்றான். வயிற்றின் அடியாழத்திலிருந்து பெருங்குரலெடுத்துக் கத்தினால் கூட அவனுக்குள் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பு அணையாது போலும். அந்தளவில் காண்டீபனுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்கள் அவனைப் பந்தாடின.

“உனக்கு ஒரு மகன் இருந்து, அவன் இப்பிடி மாட்டி இருந்து, அவனுக்கும் இதே மாதிரிக் கொடுமை நடந்திருந்தாலும் இதே பதில்தான் உன்னட்ட இருந்து வருமா? இல்ல இதே மாதிரி உன்ர மேலதிகாரி சொன்னதை அவனுக்கும் செய்து இருப்பியா?”

முகம் தாடை எல்லாம் இறுகிக் கோபத்தில் கொதிக்க, வார்த்தைகள் ஒவ்வொன்றையும் கடித்துத் துப்பியவனின் சினத்தில் நடுங்கிப்போய் அமர்ந்திருந்தார் மனிதர்.

“உனக்கும் ஒரு குடும்பம் வெளில இருக்கு என்ன?” என்று கேட்டு ஒரு விதமாய் அவன் தலையை ஆட்டிய விதத்தில் ஆடிப்போனார் அவர்.

“சேர் ப்ளீஸ் சேர். சேர் ப்ளீஸ் சேர். எதுவும் செய்து போடாதீங்க. நான் செய்தது பிழைதான். ஆனா என்ர குடும்பம் எந்தப் பாவமும் செய்யேல்ல.” என்று அவன் கையைப் பற்றிக்கொண்டு கெஞ்சினார்.

“சீ விடு!” என்று ஒரே உதறலில் அவர் கையை உதறித் தள்ளிய அடுத்த நிமிடமே அவர் கழுத்தைப் பற்றி நெரித்தான். “காண்டீபன் என்னடா பாவம் செய்தவன்? இவ்வளவு அநியாயத்தையும் அனுபவிக்கிற அளவுக்கு என்ன செய்தவன்? என்ன வேலை எல்லாம் பாத்திருக்கிறீங்க? நீயும் ஜெயில்லதானே இருக்கிறாய். உனக்கும் திறப்பு விழா கொண்டாடவா? எப்பிடி இருக்கு எண்டு பாக்கிறியா?” என்று வெறி வந்து நின்றவனை ஓடி வந்து பிரித்துவிட்டான் கதிரவன்.

“சேர் ப்ளீஸ், நாங்க நிக்கிற இடம் வேற.” என்று அவனை அமைதிப்படுத்த முயன்றான்.

“எங்க நிண்டா என்ன கதிரவன்? என்னால யோசிக்கவே ஏலாம இருக்கே. அனுபவிச்ச அவனுக்கு எப்பிடி இருந்திருக்கும்?சீ!” என்றான் அவர் முகத்திலேயே உமிழ்கிறவன் போன்று.

கூனிக் குறுகி, முகம் கன்றி அவனை நிமிர்ந்து பார்க்கவே தைரியம் இல்லாது நின்றார் அவர்.

“இன்னும் வேற என்னவெல்லாம் நடந்தது?”

“சேர்”

“சொல்லு! முழுசா எனக்குத் தெரியோணும்.”

“சேர் ப்ளீஸ். அங்க நடந்த எதுவும் சொல்லுற மாதிரி இல்ல. அவ்வளவு கொடுமைகள். சத்தியநாதன் சாகிற வரைக்கும் உங்களில் இருக்கிற ஆத்திரம், வன்மம் எல்லாத்தையும் தீர்த்தது காண்டீபனிலதான்.” என்றதும் நெஞ்சடைக்க எழுந்துவிட்டான் எல்லாளன்.

எப்படி இருந்தாலும் காண்டீபனின் கைது நிகழ்ந்துதான் இருக்கும் என்று அறிவுக்குப் புரிந்தாலும் கூட, தான் கைது செய்யப்போய்த்தான் இத்தனையுமோ என்று இன்றுவரை கலங்கிக்கொண்டிருப்பவன் அவன். அப்படியிருக்க அவன் அனுபவித்த அத்தனை அட்டூழியங்களுக்குக் காரணமும் அவன் என்றால்…

சூட்டுகோலினால் யாரோ அவன் இதயத்திலே கீறியது போன்று துடித்துப்போனான். இடுப்பில் இருக்கும் காயத்திலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்திருந்த போதிலும் வலிக்கவேயில்லை. அதைவிட அதிகமாய் அனலில் விழுந்த புழுவாய் அவன் நெஞ்சம் அலறியது. எழுந்துபோய் எங்கோ பார்த்துக்கொண்டு நின்றான். வேகமாய்ச் சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான் கதிரவன்.

அதை வாங்கிப் பருகிவிட்டு, “அந்த நேரத்தில எப்பிடிச் சரியா வாசு அங்க வந்தவன்?” என்று விசாரித்தான்.

“அடிக்கடி வந்து அங்க இருக்கிற வார்டானோட நல்ல பழக்கமாம் அவனுக்கு. நேரத்துக்கே வந்து குளிச்சிட்டுப் போக இருந்திருக்கிறான். அதுக்குப் பதிலா பீடி குடுப்பான் போல. அவன்ர கெட்ட நேரம் அண்டைக்குக் குளிக்க வந்திருக்கிறான்.” இதற்கும் ஏதாவது செய்வானோ என்கிற பயத்துடன் பதில் சொன்னார் அவர்.

ஏன் இறந்தோம் என்று கூடத் தெரியாமல் ஒருவன் இறந்துவிட, ஏன் உயிருடன் இருக்கிறோம் என்று தெரியாமல் இன்னொருவன் வாழ்ந்திருக்கிறான்.

சத்தியநாதனைத் தான் கொல்லாமல் இருந்திருந்தால் இன்றுவரை அவன் நண்பன் இதையெல்லாம் அனுபவித்திருப்பானோ? அல்லது இந்தத் துன்பங்களை எல்லாம் தாங்க முடியாமல் அவன் உயிரும் போயிருக்குமோ?

சட்டென்று வெளியே வந்துவிட்டவனுக்கு அந்த நொடியே காண்டீபனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. இத்தனை நாள்களும் தன்னைத் தொலைத்துவிட்டு நிற்கிறானே என்று அழுதான். இன்று இறந்த காலம் அவன் வாழ்வில் இனி இல்லாத காலமாகவே இருக்கட்டும் என்று கடவுளை வேண்டினான்.

காதால் கேட்டதற்கே அவன் தேகமும் உள்ளமும் இன்னும் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாமல் நடுங்குகிறதே. அனுபவித்தவன் நிலை?

உடனேயே அவனுக்கு அழைத்தான்.

“எங்க மச்சான் நிக்கிறாய்?”

“ஏன்?”

“இப்பிடி ஆரோ மாதிரியே கதைக்காத காண்டீபா. எனக்கு இப்பவே உன்னைப் பாக்கோணும்.” எனும்போதே அவன் குரல் உடைந்து கரகரத்தது.

“என்ன பிரச்சினை உனக்கு?” கோபம் போன்று வினவினாலும் எல்லாளனின் குரலில் தெரிந்த நடுக்கம் காண்டீபன் நெஞ்சிலும் என்னவோ என்கிற யோசனையை விதைத்தது.

“அது… ஒண்டுமில்ல. நீ போய் சைன் வச்சனியா?” அவன் போய்க் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்த செய்தி அவனுக்கு எப்போதோ வந்துவிட்டது. இப்போது அவனுக்குக் காண்டீபனோடு பேச வேண்டும். அவன் குரலைக் கேட்க வேண்டும். அத்தனை நரகத்தையும் கடந்து அவன் வந்துவிட்டான் என்று உணர வேண்டும். அதற்குச் சும்மா பேச்சுக் கொடுத்தான்.

“ஓம்.”

“அந்தக் கேடு கேட்ட கிழவன் ஒரு பிரச்சினையும் செய்யேல்லதானே?”

“உன்ர ஆக்கள் உனக்கு ஒண்டும் சொல்லேல்ல?” என்றவனின் முறைப்பான கேள்வியில் இலேசான கண்ணீர் படலத்துடன் சிறு புன்னகையும் அரும்பிற்று எல்லாளனுக்கு.

“அவே சொல்லிச்சினம் சொல்லேல்ல அது வேற. நீ சொல்லு.”

அவன் பட்டென்று அழைப்பைத் துண்டித்தான். இவன் விடவில்லை. திரும்பவும் அவனுக்கு அழைத்தான்.

“பக்கத்தில நிண்டாய் எண்டு வை. கத்திய உன்ர வாய்க்கையே இறக்குவன்.” அழைப்பை ஏற்றதும் சீறினான் காண்டீபன்.

“தைரியம் இருந்தா வந்து இறக்கிப்போட்டுப் போடா!”

அங்கே அவன் பற்கள் கடிபடும் சத்தம் இவனுக்குக் கேட்டது.

“வீட்டை வாறியா?”

“…”

“காண்டீ”

“…”

“இனி நீ தனியா இருக்க வேண்டாம். வா வீட்டை. உன்ர தங்கச்சிக்கு உன்னைப் பாக்கோணுமாம்.” என்றதும் அண்ணா அண்ணா என்று அழுத பெண்ணின் நினைவு வந்தது.

அந்தப் பக்கத்தில் அவன் அமைதியாக இருக்கவும், “ஆனா பின்னேரமா வா. நான் இப்ப திருகோணமலைல நிக்கிறன். அங்க வீட்டை வந்ததும் மெசேஜ் பண்ணுறன். அதுக்குப் பிறகு வெளிக்கிட்டு வா.” என்று சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பாராமல், தம் வீட்டு விலாசத்தை அவனுக்கு அனுப்பிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் யாழ்ப்பாணத்தை நோக்கிப் புறப்பட்டான்.

“சேர், இஞ்ச எங்கயாவது உங்கட காயத்தைக் காட்டிக்கொண்டு போவமா?” அவனுக்கு காய்ச்சலும் நின்றபாடில்லை. தையல் போட்ட இடத்தில் இரத்தக் கசிவு வேறு. போதாக்குறைக்கு முகமெல்லாம் காய்ந்து, கண்கள் சிவந்து, உதடுகள் வறண்டு, உடல் சோர்ந்து, நடக்கவே சிரமப்பட்டான்.

என்ன செய்து அவன் காயத்தின் வலியைக் குறைப்பது என்று தெரியாது நின்றான் கதிரவன். ஜீப்பில் முடிந்தவரை சீட்டை நன்றாகப் பின்னுக்குச் சாய்த்து, அவனுக்கு வசதி செய்து கொடுத்து, அளவான வேகத்தில் கவனமாகத்தான் அழைத்து வந்தான்.

தன் நிலை நேரமாக நேரமாக மோசமாக்கிக்கொண்டு போவதை எல்லாளனும் உணர்ந்தான்தான். அதுவும் கிட்டத்தட்ட நான்கு மணி நேரப் பயணம். வந்தது போதாதது என்று உடனேயே திரும்பவும் போகிறான்.

இத்தனைக்கு மத்தியிலும், “இல்ல கதிரவன். எனக்கு அவனைப் பாக்கோணும். என்னால முடிஞ்ச வரைக்கும் இறுக்கமா கட்டிப் பிடிக்கோணும். அவனுக்கு ஒண்டுமில்ல. எல்லாம் முடிஞ்சு எண்டு அவனைப் பாத்துத் தெளியோணும். அப்பதான் என்னால நிம்மதியா இருக்கலாம்.” என்றுவிட்டுச் சிரமப்பட்டு ஏறி ஜீப்பில் அமர்ந்தான்.

error: Alert: Content selection is disabled!!