அவ்வளவு நேரமும் அவன் இத்தனை துன்பங்களையும் அனுபவிக்கத் தானும் பெரும் காரணம் என்று தவித்துக்கொண்டிருந்தவனை, அத்தனை துன்பத்திலிருந்து அவன் மீளவும் நீ சத்தியநாதனைக் கொன்றதுதான் காரணம் என்று சொல்லி, மிகப் பெரிய விடுதலையை அவனுக்குக் கொடுத்திருந்தாள் அவள்.
இதுதான் அவன் மனைவி. சூழ்நிலைகளைப் புரிந்து பேசுவதிலும் நடப்பதிலும் மிகுந்த கெட்டிக்காரி.
அவன் தான் அணிந்திருந்த டி ஷர்ட்டை கழற்ற முயல, வேகமாய் வந்து அதனைக் கழற்ற அவனுக்கு உதவினாள் ஆதினி.
“உடம்பு துடைக்கப் போறீங்களா?”
“இல்லாம படுக்கேலாது. நீ அகரனை வரச் சொல்லு!”
அவன் காயத்தில் ஈரம் படாமல் உடல் கழுவி, உடை மாற்றி வந்தபோது உணவுண்ண அழைத்தாள் சியாமளா.
பொறுக்கச் சொல்லிவிட்டு வந்து விறாந்தையில் அமர்ந்துகொண்டான் எல்லாளன். சின்னவர்கள் கதிரவனோடு விளையாடிவிட்டு, அவன் சாப்பிட்டுப் புறப்பட்டதும் இளந்திரையன், சாந்தி, கேதகியோடு மேலே சென்றிருந்தனர்.
பத்து நிமிடம் கழிந்திருக்கும். அவர்கள் வீட்டு வாசலில் நிழலாடிற்று. களைப்பாக இருக்கிறது என்று சொல்லி உடம்பு கழுவிக்கொண்டு வந்த கணவன், உணவை முடித்து மாத்திரைகளையும் போட்டுக்கொண்டு படுக்கப் போகாமல், இங்கே அமர்ந்து என்ன செய்கிறான் என்று, அவனின் புதிரான நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருந்த ஆதினி, திரும்பி வாசலைப் பார்த்தாள்.
பார்த்தவள் முகத்தில் பெரும் அதிர்வு. விழிகள் மெல்ல மெல்ல விரிந்துகொண்டே போக, அதனுள் நீர் சேர ஆரம்பித்தது.
இன்று கறுப்பு டெனிம் ஃபிட் ஜீனுக்கு ஆகாய நீலத்தில் இருந்த பிளேன் ஷேர்ட்டினை இன் பண்ணி, முழங்கை வரை மடித்துவிட்டிருந்தான். இருள் சூழ்ந்துவிட்ட பொழுது என்பதில் கூலர் இல்லை. தொப்பி அணிந்திருந்தான்.
யாழ் பல்கலையில் ஒரு பேராசிரியனாக மதிப்பும் மரியாதையுடனும் வலம் வந்தவன் ஒரு நிமிடம் கண் முன்னே வந்து நின்றுவிட்டதில் நிலைகுலைந்துபோனாள் ஆதினி.
அன்று அன்பும் அமைதியும் அவன் முகத்தில் தவழ்ந்தது என்றால் இன்று இறுக்கமும் திடகாத்திரமும் நிறைந்தவனாய் வாசலையே அடைத்தாற்போல் நின்றிருந்தான். வீட்டுப் பெண்ணாக எழுந்து போய் வரவேற்க வேண்டும் என்று கூட அவளுக்குத் தோன்றவில்லை.
அவன் தன் கணவனைக் கொல்ல வந்தான் என்பதோ, கத்தியால் குத்தியவன் என்பதோ, ஆசையாய்ச் சுமந்த தன் குழந்தையை இந்தப் பூமியில் கால் தடம் பாதிக்க விடாமல் செய்தவன் என்பதோ அவள் நினைவிலேயே இல்லை.
எத்தனையோ நாள் இதே வீட்டுக்கு அவனை அழைத்திருக்கிறாள். தன் குடும்பத்தினருக்கு அவனை அறிமுகப்படுத்த ஆசைப்பட்டிருக்கிறாள். அகரனின் திருமணத்தின் போது வருவான் என்று ஆவலாகக் காத்திருந்திருக்கிறாள். அப்போதெல்லாம் வராமல் இருந்து அவளை ஏமாற்றியவனை அவனின் கடைசிப் பயணத்தில்தான் அவள் வீட்டினருக்கு நேரிலேயே காட்டினாள்.
அப்படி இருக்க இன்று அவள் முன்னே அவள் வீட்டினுள் காலடி எடுத்து வைக்கிறான் அவன். உணர்வுகளின் பிழம்பாக வெடித்துச் சிதறிவிடுவோமோ என்கிற பயத்தில் பக்கத்தில் இருந்த எல்லாளனின் கையை இறுக்கிப் பற்றினாள்.
அவளுக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் எல்லாளனும் இல்லை. அவனைக் கண்ட கணத்தில் அவன் அனுபவித்த நரக வேதனைகள் அத்தனையும் கண்முன்னே வந்து நின்றன. ஓடிப்போய் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு உனக்கு எதுவுமில்லை, இன்று நீ நன்றாக இருக்கிறாய் என்று சொல்லத் துடித்தான்.
வீட்டினர் முன்னே அவனால் அதிகப்படியாக நடந்துவிட முடியவில்லை. பிறகு அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி வரும். தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்துபோய் வரவேற்பாக அணைத்தவனின் அணைப்பில் இருந்த இறுக்கத்திலும் நடுக்கத்திலும் அவனைப் புரியாமல் பார்த்தான் காண்டீபன்.
“ஒண்டும் இல்ல மச்சான். நீ வரமாட்டியோ எண்டு நினைச்சன்.” என்றவனின் விழிகள் பனித்திருந்தன.
அவனையே பார்த்தான். அந்தத் துன்பங்களை எல்லாம் எப்படிக் கடந்தான் என்று உள்ளே ஓடிற்று. தன்னைத் தானே மாய்த்துக்கொள்ள முயலாமல் இன்று அவன் உயிருடன் இருப்பதே இமாலயச் சாதனை என்று நினைத்தான். ‘இனியாவது நீ நல்லாருக்கோணும்டா’ என்று உளமாற எண்ணியவன், “சொறி மச்சான்!” என்றான் தன்னை மீறி.
காண்டீபனின் புருவங்கள் சுருங்கி ஏன் என்று கேள்வியெழுப்பின. அதற்குப் பதில் சொல்லாது, “வா!” என்று அவன் கரம் பற்றி அழைத்து வந்து, ஆதினியின் முன்னே நிறுத்தினான்.
“உன்ர அண்ணா காண்டீபன்.”
அவ்வளவுதான். ஒரு கணம் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள் கைகளில் முகம் புதைத்து உடைந்து அழுதாள். ஏன் இந்த வெடிப்பு என்று அவளுக்குத் தெரியவேயில்லை. அவளின் அழுகைச் சத்தத்தில் அகரனும் இளந்திரையனும் உள்ளிருந்து ஓடி வந்தார்கள். அங்கே நின்றிருந்த காண்டீபனைக் கண்டதும் எல்லாம் புரிந்து போயிற்று.
எல்லாளன் அதட்டியே அவள் கண்ணீர் நிற்கவில்லை என்கையில் இளந்திரையன், அகரன், சியாமளா என்று மற்றவர்கள் தேற்றியா நிற்கும்?
அவள் கண்ணீரைக் காண முடியாமல் நின்றான் காண்டீபன். நல்ல காலம் பிள்ளைகள் மேலே மொட்டைமாடியில் என்பதில் அவர்களுக்குக் கேட்கவில்லை.
சங்கடப்பட்டுப்போன காண்டீபனை எது உந்தியதோ? அவள் தலையை வருடி, “ஆதினி, ஏன் அழுறீங்க?” என்று கேட்டான்.
மொத்தமாக நிலைகுலைந்துபோனாள் ஆதினி. காற்றில் கரைந்துபோன அந்தக் கரம் மீண்டும் அவள் தலையைக் கலைத்துவிட்டிருக்கிறது. எப்படிச் சமாளிப்பாள்? சரக்கென்று கண்ணீர் நிறைந்த விழிகளால் நிமிர்ந்து பார்த்தவள் என்றைக்கு அவனை ஆணாகப் பார்த்தாள்? தாயாகத்தானே பார்த்தாள். சட்டென்று அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு வயிற்றில் முகம் புதைத்துக் கதறித் தீர்த்திருந்தாள்.
ஆடிப்போனான் காண்டீபன். அவனுக்குள் இனம் தெரியாத உணர்வுகள் எல்லாம் பொங்கிப் பெருகிப் பிரவாகமாக எழுந்தன. இது என்ன விதமான அன்பு என்று அவனால் அறியவே முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாது எல்லாளனைத் திரும்பிப் பார்த்தான். அவன் விழிகளும் சிவந்துதான் இருந்தன. “அவளுக்கு நீ எண்டா உயிர்.” என்றான் அவனும் உடைந்து கரகரத்த குரலில்.
“ஆதினி அழாதீங்கோ.” என்று அவளைத் தேற்ற முயன்றான் காண்டீபன்.
எல்லாளனுக்கு அவளை அப்படிப் பார்க்க முடியவில்லை. ஆனால், இந்த வெடிப்பு ஒரு முறை நிகழ்ந்துவிட்டால் பிறகு ஆசுவாசமாகிவிடுவாள் என்பதில் விட்டுவிட்டான். சியாமளா ஓடிப்போய்த் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
“ஆதி போதும் அழுதது. நிமிரு!” என்று அவளை வலுக்கட்டாயமாக நிமிர்த்தி, முகம் துடைத்து, தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினான் எல்லாளன்.
அப்போதும் காண்டீபனையே கண்ணெடுக்காது பார்த்தவள் விழிகள் கசிந்துகொண்டேயிருந்தன.

