இரவு எல்லாளன் அவனைத் தனியாக உறங்க விடவில்லை. அந்த அறையில் தானும் இருப்பதை அவன் பெரிதாக விரும்பவில்லை என்று தெரிந்தும் காட்டிக்கொள்ளாமல் அவனருகிலேயே சரிந்துகொண்டான்.
வெளியில் காட்டிக்கொள்ள முடியவில்லையே தவிர அவனைத் தன் கண் முன்னேயே வைத்திருக்க வேண்டும் போலொரு உந்துதல். கண்ணை விட்டு மறைந்தால் காணாமலேயே போய்விடுவானோ என்று அர்த்தமற்றுப் பயந்தான்.
காண்டீபன் மிகுந்த இறுக்கத்துடனேயே படுத்திருந்தான். “என்னைத் தனியா விடு!” என்று சீறிப் பாய்ந்தும் காதில் விழவில்லை என்பதுபோல் படுத்துக் கிடக்கிறவனை என்னதான் செய்ய? முடிந்தவரை அவனிடமிருந்து தள்ளிப் படுத்திருந்தான்.
காலையில் கண் விழித்த எல்லாளன் கண்டது தரையில் தலைக்குக் கைகளைக் கொடுத்து மல்லாந்து படுத்திருந்த காண்டீபனைத்தான். அன்று ஜெயிலில் தான் இறுக்கமாக இருக்கிறோம் என்று தெரிந்தும் பொருட்டில் கொள்ளாமல் தன் மடியில் தலை வைத்துப் படுத்த நண்பன் கண்ணுக்குள் வந்து நின்றான்.
இன்று அத்தனை பேரும் அவனை அரவணைத்துக்கொள்ளத் தயாராக இருந்தும், எதுவும் வேண்டாம் என்று தள்ளி தள்ளிப் போகிறவனைப் பார்க்க மனத்தில் பெரும் வேதனை மண்டியது.
ஒரு நெடிய மூச்சுடன் அவன் மெதுவாக எழுந்து அமரவும் படக்கென்று விழிகளைத் திறந்து பார்த்தான் காண்டீபன். எல்லாளனே ஒரு கணம் திடுக்குற்றுப் போனான். அவ்வளவில் அவன் விழிகள் இரண்டும் சிவந்து கொதித்துக்கொண்டிருந்தன.
“இரவிரவா படுக்கவே இல்லையா நீ?” என்றான் அதிர்ச்சி நீங்காமல். அடித்த காய்ச்சல், விழுங்கிய மாத்திரைகள், முதல் நாள் அலைந்த அலைச்சல், தையல் போட்ட இடத்தின் வலி எல்லாமாகச் சேர்ந்து அடித்துப் போட்டது போன்று உறங்கியிருந்தான் அவன்.
அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் எழுந்து அமர்ந்துகொண்டு, “வாசு எப்பிடி ஜெயிலுக்கு வந்தவன்? காண்டீபனும் வாசுவும் ஏன் பிரிஞ்சு இருந்தவே? எனக்குப் பழைய நினைவை எல்லாம் மறக்க வைக்க என்ன செய்தவங்கள்? ஜெயில்ல எனக்கு நடந்த கொடுமை என்ன? செய்தது ஆர்? சிவநாதனா? அந்தச் சத்தியநாதன ஆரோ கொடூரமா கொலை செய்திருக்கிறாங்கள் எண்டு வாசிச்சனான். உன்ர இத்தின வருஷ போலீஸ் சர்வீஸ்ல எல்லா கேஸையும் கண்டுபிடிச்ச நீ, அவன்ர கேஸ மட்டும் கண்டுபிடிக்கேல்லையாம். அதச் செய்ததே நீயா இருக்கும் எண்டு சந்தேகம் இருக்கு எண்டும் படிச்சனான். நீதான் அவனைக் கொன்றியா? இந்தக் கேள்வி எல்லாத்துக்கும் பதில் வேணும் எல்லாளன்.” என்றவனின் பேச்சில் அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தான் எல்லாளன்.
இரவிரவாக உறங்காமல் இதைத்தான் யோசித்துக்கொண்டிருந்தானா? அதைவிட அவன் கால்கள் இரண்டையும் மடித்து சப்பாணி(சம்மணம்) கட்டி அமர்ந்திருந்தான். இந்தளவிற்கு அவன் கால் ஒத்துழைக்கிறது என்றால் எந்தளவுக்குத் தன்னைச் சிரமப்படுத்தியிருப்பான்? எந்தளவிற்கு வலி தாங்கியிருப்பான்?
“பதில் சொல்லு எல்லாளன்?”
“முதல் போய் முகம் கழுவிக்கொண்டு வாடா!” என்றுவிட்டு தப்பித்து வெளியே வந்தான் எல்லாளன்.
சிறையில் நடந்த கொடுமைகளைத் தவிர்த்து அவனிடம் வேறு எதையும் மறைக்கும் எண்ணம் எல்லாளனுக்கும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எல்லாவற்றையும் சொல்லி, என்னவெல்லாம் நடந்தது என்று அவனிடம் விசாரிக்க வேண்டும். அவனே அறியாமல் அவனை இன்னும் வேறு எதிலெல்லாம் சிவநாதர் மாட்டி வைத்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால் என்ன இப்படித் திடீரென்று ஆரம்பிக்க முடியவில்லை. மனைவி பிள்ளைகள் இருந்த அறைக்கு வந்தான். சின்னவர்கள் இன்னும் உறக்கத்தில் இருந்தார்கள். ஆதினி முகம் கழுவித் துடைத்துக்கொண்டு குளியலறைக் கதவைத் திறந்துகொண்டு வந்தாள்.
இவனைக் கண்டதும் அவள் முகம் பளிச்சென்று மலர்ந்தது. விரைந்து வந்து அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு வெற்று மார்பில் தன் இதழ்களை அழுத்தமாய்ப் பதித்தாள்.
அவன் கைகளும் அவளைத் தானாக அணைத்துக்கொள்ள, “என்னம்மா?” என்றான் கனிவுடன்.
“அண்ணாவைக் கூட்டிக்கொண்டு வந்ததுக்கு தேங்க்ஸ்.” என்றாள் அவன் முகம் பார்த்து.
“ம்ஹூம்?” என்றான் அவள் நெற்றியில் முத்தமிட்டபடி.
அவள் உதட்டில் சிரிப்பு மலர்ந்தது. ஆனாலும் அணைப்பை விலக்காமல் அவன் மார்பில் சாய்ந்தே இருந்தாள்.
இரவு அவளோடு உறங்காத குறையைத் தீர்க்க முனைகிறாள். சிறிதாய் முறுவல் அரும்ப, “நீ ஓகேயா?” என்றான் தெளிவாய் இருந்த அவள் முகத்தைப் பார்வையால் வருடியபடி.
ஆம் என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “ரெண்டு நாளைக்கு லீவு போடுங்களன். அதான் அண்ணா எங்களிட்ட வந்திட்டாரே. இனி என்ன எண்டாலும் உடம்பத் தேத்திக்கொண்டு பாருங்கோ. இண்டைக்கு உங்கட முகம் இன்னும் வீங்கி இருக்கு. நாளுக்கு நாள் சோர்ந்து தெரியிறீங்க.” என்று அக்கறை உள்ள மனைவியாக அவன் கன்னம் வருடிச் சொன்னாள்.
அவனுக்கும் அப்படித்தான் தோன்றிற்று. எங்கும் நகர முடியும் போலில்லை. அவ்வளவில் மொத்த உடலும் சக்தியே இல்லாததுபோல் ஒரு நிலை.
காலைக்கடன்களை முடித்து வந்தவர்களைச் சியாமளாவின் துணையோடு தடல்புடலான காலை உணவுடன் வரவேற்றாள் ஆதினி. அகரன் வேலைக்குப் புறப்பட்டிருக்க இளந்திரையன் அன்று ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தார்.
இன்றும் அவள் விழிகள் அவள் கட்டுப்பாட்டையும் மீறிக் காண்டீபனை மொய்க்காமல் இல்லை. எவ்வளவுதான் அவனைக் கண்ணுக்குள் நிறைத்துக்கொண்டாலும் மனம் நிறையவே மாட்டேன் என்றது.
ஆனாலும் நேற்றுப் போன்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து அவனைத் தொந்தரவு செய்யப் போகவில்லை. நேற்று மொத்தமாக வெடித்துச் சிதறியதில் உள்ளத்தில் இருந்த பாரமெல்லாம் கரைந்திருந்தது.
அவன் மொத்தமாய் இறந்த காலத்தை மறந்துவிட்டு நிற்கிறான் என்று புரிந்துகொண்டு இதமாகவே நடந்துகொண்டாள்.
“உங்களுக்கு என்ன?” என்றான் இன்று அவனாகவே.
“எனக்கு என்ன?” கேள்வி விளங்காமல் கேட்டுவிட்டு, “வா போ எண்டே சொல்லுங்க அண்ணா.” என்றாள் சிரித்த முகமாய்.
“இல்ல, நேற்று நீங்களும்… நீயும் ஆஸ்பத்திரில இருந்தியே. அதக் கேக்கிறன்.” என்றதும் மின்னலாகக் கணவனிடம் பார்வை சென்று வர, “அது கோயில்ல விழுந்ததில தலைல அடி பட்டுட்டுது. அதான்.” என்று சமாளித்தாள்.
“ஓ… சொறி!” என்றான் அவன்.
அவளுக்குச் சட்டென்று விழிகள் கலங்கிப்போயின. “நீங்க ஒண்டும் வேணுமெண்டு செய்யேல்லையே. அதெல்லாம் ஒண்டுமில்ல அண்ணா.” என்றாள் தழுதழுத்த குரலில்.
“இல்ல… அது நான்…” என்றவனை இடையிட்டு, “என்னைக் கத்தியாலயே குத்தியிருக்கிறாய். அதுக்கு ஒரு மன்னிப்புக் கேக்கேல்லை. சும்மா விழுந்தவளிட்டப் போய் மன்னிப்புக் கேக்கிறாய். என்னட்டயும் கேளடா!” என்று சண்டைக்கு வந்தான் எல்லாளன்.
“உனக்கு வயித்தில இறக்கி இருக்கக் கூடாது. வாயில இறக்கி இருக்கோணும். விட்டுட்டன்.” என்றான் அவன்.
அவர்கள் உணவை முடிக்கும் நேரத்தில் சிவநாதர் எல்லாளனுக்கு அழைத்தார்.
“சிவநாதர்” என்று அவனிடம் சொல்லிவிட்டு எழுந்துபோய்க் கையைக் கழுவிவிட்டுத் தனியாகச் சென்று அழைப்பை ஏற்றான் எல்லாளன்.
“நீ சொன்ன மாதிரி அவனை எல்லா கேஸ்ல இருந்தும் விடுவிச்சிட்டன். என்ர பேரன் எங்க?” வேறு பேசாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டு போன்ற குரலில் வினவினார் அவர்.
அதற்குப் பதில் சொல்லாமல் அவரின் அழைப்பைத் துண்டித்துவிட்டுக் கிருபானந்தத்திற்கு அழைத்து விசாரித்தான். அவரும் அதை உறுதிப்படுத்தினார். அவன்தான் அதைச் செய்ய வைத்தான். ஆனாலும் ஒரு நாட்டின் சட்ட திட்டங்களை ஏமாற்றி, அதிகாரிகளைத் தன் கைக்குள் வைத்துக்கொண்டு, எதையெல்லாம் இந்தச் சிவநாதரினால் செய்ய முடிகிறது என்று எண்ணிக் கொதித்துப்போனான்.

