ஆட்டநாயகன் 38.1

பிரேத பரிசோதனை செய்த வைத்தியரைச் சந்திக்க முதலே அவன் காண்டீபன்தான் என்பதில் எல்லாளனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அதே காண்டீபனை அழைத்துச் சென்று மிதிலா, அதிரன் முன்னே நிறுத்துவதற்குத் திடமான ஆதாரங்கள் தேவை என்று நினைத்தான்.

அவசரப்பட்டு அவர்கள் கண்ணில் இவனைக் காட்டிய பிறகு லட்சத்தில் ஒரு வாய்ப்பாக இவன் காண்டீபன் இல்லை என்று ஆகிவிட்டால்? நடக்காது என்று நினைக்க முடியவில்லை. இறந்தது காண்டீபன் என்று அவனே ஐயமற எண்ணியிருக்க அதே காண்டீபன் வந்து நிற்பது போன்று எதுவும் நடக்கலாமே.

இவனாலேயே இன்னொரு ஏமாற்றத்தைத் தாங்க முடியாது. அப்படியிருக்க நைந்துபோன உள்ளத்துக்குச் சொந்தக்காரியான மிதிலா என்னாவாள்? ஏதோ ஒரு வகையில் கணவனின் இழப்பை ஏற்று வாழப் பழகியிருக்கிறாள். அவளின் உணர்வுகளோடோ, தந்தை என்கிற ஒருவனின் பாசத்தையே அறியாமல் வளரும் சின்னவனின் உணர்வுகளோடோ விளையாட முடியாது.

அதனால்தான் அவன் காண்டீபன் என்று தெரிந்தும் அவசரப்பட்டு மிதிலாவிடம் சொல்லப் போகவில்லை. திருகோணமலை சென்று வந்த பிறகும் கதிரவன் மூலம் கிருபானந்தனிடமும், சப் ஜெயிலராக இருந்து ஓய்வு பெற்றவரிடமும் விசாரித்துத் தெரிந்துகொண்டிருந்தான்.

இனியும் சொல்லாமல் இருந்தால் அநாதரவாக நிற்கும் அன்னைக்கும் மகனுக்கும் பெரும் பாவம் இழைத்தவனாகிப்போவான். எப்படி இவனை அழைத்துப் போவது, எப்படி அவர்களிடம் சொல்லி இதை விளங்க வைப்பது என்கிற கேள்விகள் தந்த தடுமாற்றம் ஒரு புறம் என்றால் தயக்கம் மறுபுறம் இருந்தது.

அங்கே மிதிலா வீட்டுக்குக் காண்டீபனை அழைத்துச் சென்றால் காண்டீபன் சம்மந்தரின் புகைப்படத்தைப் பார்ப்பான். அவர் தன் தந்தை என்பதை அறிவான். அது மட்டுமல்லாமல் அவரைக் கொன்றது தான் என்பதையும் அறிவான்.

அவன் பட்ட வேதனைகள் துன்ப துயரங்கள் போதாது என்று இதுவும் சேரும். பெற்ற தகப்பனையே கொன்றிருக்கிறோமே, நான் எல்லாம் என்ன மனிதன் என்று துடித்துப்போவான். அவனாலேயே அவனை மன்னிக்க இயலாமல் போகும். அவன் அறிந்தவரை இன்று தோற்றத்தில் மட்டுமல்லாமல் குணநலனிலும் மாறிப்போய் நிற்கிற காண்டீபன் உண்மையான கெட்டவன் அல்லன்.

அவனறியாமலேயே அவன் சுயத்தை மறக்க வைத்து, அவனைத் தவறான பாதையில் செலுத்தியிருக்கின்றனர். அதனால்தான் தவறாகிப்போய் நிற்கிறான். மற்றும்படி இயல்பில் நல்லவன்.

அப்படியிருக்க இதை எப்படிக் கையாளப்போகிறோம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில்தான் மிதிலாவின் வருகை. ஒரு பக்கம் ஆசுவாசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் உள்ளம் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.

அதைவிட ஆனந்தமும் அதிர்ச்சியும் கலந்த நிகழ்வு அவனை விடவும் வேகமாய்ச் சென்று காண்டீபன் அவளைத் தாங்கிக்கொண்டது.

என்னதான் இரு ஆண்களும் சம பலம் கொண்டவர்கள் என்றாலும் எல்லாளன் காயப்பட்டிருப்பவன். அவனால் வழமையான வேகத்துடன் இயங்க முடியவில்லை. அது நல்லதற்கே என்பதுபோல் அனைத்தும் கண்ணுக்கு நிறைவாய் நடந்திருந்தன.

காண்டீபன் மிதிலாவைத் தாங்கியதும் சின்னவனைத் தன்னிடம் இழுத்துக்கொண்ட எல்லாளன் தள்ளி நின்றுகொண்டான்.

*****

மிதிலா மகனோடு வரும்போதே காண்டீபன் கண்டுவிட்டான். இணையத்தில் அவனைப் பற்றி அவனே தேடியபோதெல்லாம் அவள் புகைப்படமும் சேர்ந்துதான் வந்திருந்தது. அப்படியிருக்க அவள்தான் காண்டீபன் என்கிறவனின் மனைவி என்று தோன்றியதும் அவனுள் ஒரு படபடப்பு.

அதைவிட யாரும் எதுவும் சொல்லும் அவசியமே இல்லாமல், இணையத்தில் பார்த்த காண்டீபனின் மகன்தான் நான் என்று சொல்லிக்கொண்டு வந்த சின்னவனைக் கண்டு அவன் உயிரே ஒரு கணம் துடித்தது. தானாடாவிட்டாலும் தசையாடுமாமே. அவனுக்கு நினைவுகள் மீளாதபோதும் அவர்களைக் கண்டு அவன் இரத்த ஓட்டம் அதிகரித்துப் போயிற்று. மூச்சின் வேகமும் கூடிப்போயிற்று. இமைக்கவும் விரும்பாமல் அவர்களையே பார்த்திருந்தான்.

சாதாரணமாக உள்ளே வந்த மிதிலா அவனைக் கண்டுவிட்டு அதிர்ந்து நின்றாள். நமபவே முடியாதவள் போன்று பார்த்தாள். நிற்க முடியாமல் தள்ளாடினாள். என்னவோ கடவுளையே நேரில் கண்டுவிட்டவள் போன்று அவள் முகம் நொடி நேரத்தில் ஆயிரம் பாவங்களைக் காட்டின.

நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் நடுவில் நின்று போராடினாள். கண்ணீர் ஆறாகப் பெருகி வழிந்தது. பயம் பாதி பரிதவிப்பு மீதியாக நிலைகுலைந்தாள். ஐயோ என் கணவன் உயிருடன் இருக்கிறான் என்று ஓடி வரவும் முடியாமல், இல்லை, இவன் என் கணவனில்லை என்று தூக்கி எறிந்துவிட்டு ஓடவும் முடியாமல், வேடனின் அம்பில் சிக்கிக்கொண்ட புறாவாக அவள் துடித்த துடிப்பைக் கண்டு இவன் நெஞ்சம் உறைந்துபோயிற்று.

அவளைப் போட்டுச் சுழற்றியடிக்கும் அந்தக் உணர்வுக் குவியல்களைச் சமாளிக்க முடியாமல் வந்தவள் வந்ததை விடவும் வேகமாய்த் திரும்புகையிலேயே போகாதே என்று அவன் உள்ளத்தின் அடியாழத்தில் இருந்து ஒரு அலறல். இதில் அவள் மயங்கிச் சரியவும் தன்னை மறந்து ஒரே எட்டில் அவளைத் தாங்கியிருந்தான்.

அவன் தாங்கிய அந்தக் கணத்தில் அவள் உடல் ஒருமுறை தூக்கிப் போட்டது. மயக்கத்துக்குச் சென்றுகொண்டிருந்தவள் அவன் நெஞ்சுச் சட்டையைப் பற்றிக்கொண்டு படக்கென்று விழிகளைத் திறந்து பார்த்தாள்.

அந்தப் பார்வையின் வீச்சில் ஒரு நொடி ஸ்தம்பித்துப் போனான் காண்டீபன். கண்ணீரோடு தவித்துத் தள்ளாடும் அந்த மீன் விழிகள் நீ என் தீபன்தானா என்று கேட்ட கேள்வியில் சில்லுச் சில்லாய் நொறுங்கிப்போனான். தன்னையறியாது மார்போடு சேர்த்து அவளை அணைத்துக்கொண்டான்.

என்னவோ காடு மேடெல்லாலாம் அலைந்து வந்தவன் மர நிழலைக் கண்டது போன்ற ஆசுவாசத்தை அப்போதுதான் உணர்ந்தான். விட்டுவிடாதே, உன் உயிர் இதுதான், இத்தனை வருடங்களும் இருளுக்குள் நீ துலாவித் திரிந்த வெளிச்சப்புள்ளி இவள்தான் என்று அவன் ஆன்மா கூவிற்று.

எதையும் தடுக்கும் நிலையில் மிதிலா இல்லை. இமைக்கவும் மறந்து அவனையே பார்த்திருந்தவள் விழிப்புக்கும் மயக்கத்துக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் சிக்கியிருந்தாள்.

அவன் அணைப்பு இறுகி, அவள் முகம் அவன் மார்பில் சென்று சேர்ந்து, அவன் இதயத்தின் துடிப்பை அவள் உணர்ந்த அந்தக் கணத்தில், மண்ணை முட்டி மோதி முளைக்கும் விதையினைப் போன்று, அவளுள் புதையுண்டு போயிருந்த பல ஞாபகங்கள், அவன் அணைப்பில் நெஞ்சை முட்டி மோதிக்கொண்டு வெளிக்கிளம்பியதில் வெடித்து அழுதாள்.

அடுத்த கணமே வலையிலிருந்து தப்பித்து ஓடும் மானாக அவனிடமிருந்து துள்ளி விலகி, “நீ… நீங்க ஆரு? ஆரு நீங்க? என்ர தீபனா? இல்ல, நான் நம்ப மாட்டன். நீங்க வாசு. வாசுதானே?” என்று தவித்தவள் வேகமாய் எல்லாளனிடம் ஓடி வந்தாள்.

“இவர் வாசுதானே? எனக்குத் தெரியும். இவர் வாசுதான். நீங்க அண்டைக்கு வாசுவைப் பற்றி கேட்டனீங்க எல்லா?” அவன் அணைத்தபோது தன் உணர்வுகள் சொன்ன உண்மையையும், மூளை பறைசாற்றும் மெய்யையும் பிரித்துணர முடியாமல் சித்தம் கலங்கியவள் போல் அல்லாடினாள்.

“சொல்லுங்க! என்னையும் என்ர பிள்ளையையும் ஏமாத்தப் பாக்கிறீங்களா? அவரை மாதிரி ஒருத்தரைக் கொண்டுவந்து காட்டினா நான் நம்பிடுவனா? எனக்கு என்ர தீபனத் தெரியாதா? அவர் இல்லை எண்டதும் ஆளாளுக்கு என்னோட விளையாடுறீங்க என்ன? சொல்லுங்க, என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க என்னைப் பற்றி?” என்ன செய்கிறோம் என்று தெரியாது எல்லாளனைப் போட்டு உலுக்கினாள்.

வீட்டினுள் எழுந்துவிட்ட பிள்ளைகளைக் கவனித்துக்கொண்டிருந்த ஆதினியும் சியாமளாவும் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். மிதிலாவைக் கண்டு கண நேரம் திகைத்தாலும், “மிதிலாக்கா!” என்று அவளிடம் விரைந்தாள் ஆதினி.

அதுவரை நேரம் இருளில் மூச்சடைத்துக் கிடந்தவளுக்கு வெளிச்சம் கிடைத்தது போலும். “நீ சொல்லு ஆதினி. இவர் உன்ர அண்ணா இல்லை எல்லா? அவரின்ர சகோதரம் வாசுதானே?” என்று துடித்தவளை அணைத்துப் பிடித்துக்கொண்ட ஆதினியின் விழிகளிலும் கண்ணீர்.

அவளே அவனைக் கண்டுவிட்டு என்ன பாடுபட்டாள்? அப்படியிருக்க அவனையே ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்த பெண்ணின் நிலை எப்படி இருக்கும்? “அவர் அண்ணாதான் மிதிலாக்கா. செத்ததுதான் வாசு அண்ணா. இவ்வளவு காலமும் எங்களுக்குத் தெரியாம போச்சு.” என்றவள் பேச்சில் அவளின் அத்தனை நேரத்துப் போராட்டமும் அப்படியே நின்றுபோயிற்று.

“என்ன?” திகைத்தவளால் இன்னுமே நம்ப முடியவில்லை. ஆதினியின் கைகளுக்குள் நின்றவாறே திரும்பிக் காண்டீபனைப் பார்த்தாள். பார்த்துக்கொண்டே இருந்தாள். கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென்று வழிந்துகொண்டேயிருந்தது.

அவளின் தீபனா? அவன் எப்படி? அவனைத்தான்… இதற்கு மேலே அவள் சிந்தனை ஓட்டம் செல்ல மறுத்தது. காண்டீபன் என்கிற பெருமரத்தின் நிழலில் வாழ்ந்த சிறு செடி அவள். சுயமாய் இந்த உலகத்தைப் பார்க்கத் தெரியாதவள். அவன் கண்கொண்டுதான் இந்த உலகத்தையே பார்த்தவள். அவன் கைப்பிடியில்தான் இவ்வுலகில் வாழ்ந்தவள்.

அப்படியிருக்க ஒரு நாள் அவன் இல்லாமல் போனான். அவள் உலகம் மொத்தமாய் இருண்டு போயிற்று. தனக்குள் போராடி, ஒரு வழியாக அவன் இழப்பை ஏற்று, இனி அவன் வரவே போவதில்லை என்று உள்ளத்தில் ஆழமாய்ப் பதித்து இத்தனை வருடங்களும் வாழ்ந்துவிட்டவளால் அவன் வந்துவிட்டான் என்பதை ஆயிரம் பேர் சுற்றி நின்று சொன்னாலும் நம்ப முடியும் போலில்லை.

“அக்கா, வாங்க, வந்து முதல் இருங்க.” என்று முதல் வேலையாக அவளை அழைத்துப்போய் சோபாவில் அமர்த்தினாள் ஆதினி. சியாமளா ஓடிப்போய் அருந்தக் கொண்டுவந்து கொடுத்தாள்.

செத்தது வாசுவா? அவள் கணவனா இவன்? பிறகு எப்படி அவள் நெருப்பில் விழுந்த புழுவாகத் துடிப்பதைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான்? தனக்குள் போராடிக்கொண்டிருந்தவள் மகனைக் கூட மறந்துபோனாள்.

ஆனால், அவ்வளவு நேரமும் நடப்பவற்றை உள்வாங்கவும் முடியாமல், கண் முன்னே நிற்பவனை நம்பவும் முடியாமல், அன்னை படும் பாட்டைக் கண்டு பயந்து நடுங்கி மாமனை இடுப்போடு கட்டிக்கொண்டு நின்றவனுக்கு ஆதினி சொன்னதிலிருந்து என்ன புரிந்ததோ? எல்லாளனை நிமிர்ந்து பார்த்து, “அப்பாவா மாமா?” என்று கண்களில் கண்ணீரைத் தேக்கிக்கொண்டு ஒற்றைக் கேள்விதான் கேட்டான்.

error: Alert: Content selection is disabled!!